‘என்ன கேட்கிறான் இவன்?’ புரியாமல் அவனையே பார்க்க, “பைனாப்பிள் கேசரி ரொம்ப டேஸ்டா இருந்ததோ?” என மீண்டும் கடுப்பாக வார்த்தைகள் வெளிவந்தன.
திடீரென்று வந்து ஏன் இப்படிக் கேட்கிறான் எனப் புரியாமல் திகைத்த திவ்யதர்ஷினி, எதுவும் சொல்லாமல் அவனையே பார்கக, “என்ன முழிக்கிற? நான் தான் அவனோட அதிகமா வச்சுக்காதன்னு சொன்னேன் இல்லையா?” என உரிமையுடன் அதட்டினான்.
‘என்னை விட ரொம்பவும் நல்லவன். அதனால் அவன்கிட்ட தூரமா விலகியே இரு’ என்று அன்று சொன்னானே. ஒருவேளை இவனுக்குத் தன்னைப் பிடித்திருக்கிறதோ?
அன்றும் அப்படி நினைத்தாள் . ஆனால் அடுத்த கணமே, ‘இவனாவது தன்னை விரும்புவதாவது’ என அந்த எண்ணத்தை அழித்துவிட்டாள். இப்பொழுது மீண்டும் அந்த எண்ணம் தோன்ற அவள் இதய துடிப்பு அதிகரிக்க ஆரம்பித்தது.
ஒருவித படபடப்புடன் கண்ணிமைக்காது அவனையே நோக்கியிருந்தாள்.
“சொல்லு, கேசரி டேஸ்ட்டா இருந்ததா?” எனக் கோபத்துடன் வினவினான் மித்ரன்.
“அது… ம்ம்… நல்லா… ” என அவள் மேற்கொண்டு பேசும் முன்னர், “நானே டேஸ்ட் பண்ணிக்கிறேன்” எனச் சொல்லிப் பட்டென்று குனிந்து அவள் இதழ்களை முற்றுகையிட்டான்.
இதைச் சற்றும் எதிர்பார்க்காத திவ்யதர்ஷினி சில கணங்கள் அதிர்ந்து போய் அப்படியே சிலையென நின்றுவிட்டாள். முன்பு போல் அவன் அவளைக் கோபத்துடன் பார்க்கவுமில்லை… பேசவுமில்லை…
அதுவும் அன்று அவன் அலுவலகத்தில் மின்தூக்கியில் சிக்கி மயங்கிய பின்னர் அவனின் சுபாவம் முற்றிலும் மாறிவிட்டது. மிகவும் அனுசரணையாகவே நடந்து கொண்டான்.
அதன்பின்னர் அவன் வீட்டுக்கே அவள் வேலைக்கு வந்ததும், அவள் அவனிடம் உதவியை நாடியதும் என அவர்களுக்குள் இருந்த உறவு சுமூகமாகவே சென்றது. அவனின் சுபாவமும் முற்றிலும் மாறிவிட்டது.
பார்த்தால் இதமான புன்னகை, அக்கறையான விசாரிப்பு என அவளிடம் தன்மையாகவே நடந்து கொண்டான். அது மட்டுமல்லாது அவனைப் பற்றி அவள் எண்ணியிருந்த விஷயங்களும் அவனைப் பற்றி அவள் வடித்து வைத்திருந்த பிம்பமும் முற்றிலும் மாறிவிட்டது.
அவன் மீனாட்சியின் மகன் என்று தெரிந்ததுமே அவளின் அபிப்பிராயம் வேறு மாதிரியாக இருந்தது. ஆனால் அவன் தன்னைத் திடீரென்று இப்படி அணைத்து முத்தமிடுவான் என்று அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
அதுவும் எந்த அர்த்தத்தில் இதைச் செய்கிறான் என அவள் மூளை சித்தம் கலங்கிப் போனது.
உடனே சுதாரித்து அவனைத் தள்ள முயன்றாள். ஆனால் அவனின் உடும்புப் பிடிக்கு முன்னால் அவள் பலவீனமானாள். எதற்காக அவன் இப்படிச் செய்கிறான் என வெறி கிளம்ப, காலை உயர்த்தி அவன் கால்களில் ஓங்கி ஓர் உதைவிட்டாள்.
“ஆவ்..” என அலறிய மித்ரன், “ஏன் இப்படி வயலென்ட்டா இருக்க? வேண்டாமே” என அவளை விட்டு நகர்ந்து போய் நின்று அவள் முகத்தை மீண்டும் பார்த்தான்.
“உங்களுக்கு இப்ப என்ன வேணும்? ஏன் இப்படி எல்லாம் செய்யறீங்க? கத்தி ஊரைக் கூட்டிடுவேன்” என அவள் கோபத்தில் அதரங்கள் துடிக்க அவனைப் பார்த்துக் கத்தினாள்.
“கத்து… எல்லோருக்கும் தெரியட்டும்” என்றவன், “முதல்ல உனக்குத் தெரியப்படுத்தலாம்ன்னு நினைச்சேன். உனக்கு எதுவும் புரியலையா திவி?” எனக் கேட்டான் மித்ரன்.
‘திவியா?’ என அவள் புரியாத பார்வைப் பார்க்க, “இங்க பாரு, என்னைத் தவிர உன்னை யாரும் சொந்தம் கொண்டாட கூடாது. விடமாட்டேன். புரிஞ்சதா? எனக்கு நீ வேணும். நீ மட்டும் தான் கடைசி வரைக்கும் வேணும்” எனப் பட்டென்று சொன்னான்.
“என்ன? அப்படினா?” அவள் மலங்க மலங்க முழித்துக் கொண்டு நிற்க,
“அப்படினா அப்படித்தான். எனக்கு உன்னை ரொம்பப் பிடிச்சிருக்கு. இனிமேல் அவன் ஊட்டறான்னு வாயைத் திறந்த அப்புறம் இதே தண்டனையை உனக்குக் குடுப்பேன். வசதி எப்படி?” என அவளை எச்சரிக்க, ஆவென்று வாய்த் திறந்து பார்த்துக் கொண்டிருந்த வாயைப் பட்டென மூடிக் கொண்டாள் திவ்யதர்ஷினி.
ஒற்றை முத்தம் போதாது.மொத்த முத்தத்தையும் எதிர்ப்பேதுமின்றி குத்தகைக்கு என்னிடம் தந்துவிடு என மீண்டும் அவசரமாகக் குனிந்து அவள் இதழ்களில் முத்தமிட்டான்.
இம்முறை அவன் தாக்குதலை எதிர்பார்த்துக் காத்திருந்ததாலோ என்னவோ அதிர்ச்சியில் உறைந்து போகவில்லை. கையில் அப்பியிருந்த மருந்தைப் பற்றிப் பொருட்படுத்தாமல் அவன் மார்பின் மேலே கைகளை வைத்து ஒரே தள்ளாகத் தள்ளிவிட்டுக் கன்னத்தில் பளார் என்று அடித்தாள்.
“அன்பாப் பேசினா இப்படி அறையறியே… கணக்குல வச்சுக்கிறேன். நீ மட்டும் அன்னைக்கு உன் தம்பியைக் காணலைன்னு ஓடி வந்து என் தோள் மேலே சாய்ஞ்சு அழுதியே. அப்போ நான் ஏதாவது சொன்னேனா?
நீ என் மேலே உரிமை எடுத்துக்கறப்போ நான் மட்டும் ஏன் எடுத்துக்கக் கூடாது? உனக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா?” என அநியாயமாய்ப் பேசினான் மித்ரன்.
இப்படி அடாவடியாகப் பேசினால் அவள் எப்படி எதிர்வினையாற்றுவது? அவனை மிரண்ட விழிகளில் நோக்க, “சரி விடு, உனக்கு மெதுவா கிளாஸ் எடுக்கிறேன். பின்னால வட்டியோட வசூல் செஞ்சுக்கிறேன்” என அறைந்த அவள் கைகளை இறுகப் பற்றிக் கொண்டு பேசினான்.
“விடுங்க என்னை” என அவள் திமிற, “திவி, நான் சொன்னது ஞாபகமிருக்கட்டும். நீ எனக்கு மட்டும் தான் சொந்தம்” எனக் குளியலறைக் கதவை திறந்து கொண்டு வெளியே சென்றான்.
சூறாவளி வந்து தாக்கியதைப் போல் உணர்ந்தாள். இதிலிருந்து அவளுக்கு மீட்சி கிடைக்குமா? அவன் இப்போது என்ன செய்தான்? தன்னிடம் காதலைச் சொன்னானா என்ன?
முதலில் அவளிடம் இணக்கமாகப் பேசி நடந்து கொள்வதே அவளுக்கு எட்டாவது அதிசயமாக இருந்தது. அவனுக்கு அவளைப் பிடித்திருக்கிறது என அவன் சொல்லாமல் சொல்லிச் சென்றது வேற்று கிரகத்தில் கூட முதல் அதிசயமாகப் பட்டது.
மீண்டும் படக்கென்று கதவு திறக்க, குடுகுடுவென்று பின்னால் ஓடிப் போய் பக்கெட் தண்ணீரை எடுத்து வைத்துக் கொண்டு அவனைத் தாக்கத் தயாரானாள்.
உள்ளே எட்டிப் பார்த்த மித்ரனுக்கு அவள் நின்றிருந்த நிலை சிரிப்பை வரவழைக்க, “உனக்கு என் மேலே தண்ணி தெளிச்சு விளையாடறதே வேலையா போச்சு. ஐம் வெயிட்டிங்… இப்போ நேரமாச்சு. இன்னொரு நாள் விளையாடலாம்” எனக் கேலியாகச் சொன்னவன்,
“சொல்ல மறந்துட்டேன். கேசரி செம ஸ்வீட்டா இருந்தது” என அவள் இதழ்களைப் பார்த்துச் சொல்லிவிட்டுப் புன்னகைத்தவாறே அகன்றான்.
அவன் சென்றதும் கதவைத் தாளிட்டுக் கொண்டவள் தன் முகத்தைக் கண்ணாடியில் பார்த்தாள். அவளின் முகமெல்லாம் சிவந்து போய் வேர்த்து ஊற்றியது அவளுக்கு.
‘இவனுக்கு என்ன ஆகிவிட்டது? ஏன் இப்படி நடந்து கொள்கிறான்? உண்மையில் தன்னை விரும்புகிறானா?” என அவள் முகத்தையே கண்ணாடி வழியாகப் பார்த்துக் கொண்டு வெகுநேரம் அப்படியே நின்றிருந்தாள்.
அவள் நெஞ்சம் நடுக்கம் கொண்டது. பின்னே அவன் தந்த முத்தத்தில் அவள் உள்ளம் பித்து பிடித்ததைப் போல் ஆகிவிட்டதே. அவளையும் மிஞ்சி அவளுக்குள் ஏதேதோ மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டதே.
அப்படியென்றால் அவன் பால் அவள் உள்ளம் புரண்டு போக ஆரம்பித்துவிட்டதா? இதெல்லாம் சரிப்பட்டு வருமா?
வெளியிலிருந்து யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்க, “இதோ வந்திட்டேன்” என்றாள்.
“தெளிவாத் தான் இருக்கியா? நான் கொடுத்த பைனாப்பிள் கேசரி சாப்பிட்டு அதன் சுவையில மயங்கிட்டியோன்னு நினைச்சேன், இல்லை, அங்க நல்லா இருக்குன்னு சொல்லிட்டு இங்க வந்து யாருக்கும் தெரியாம வாந்தி எடுத்துட்டியா?” என்றான் வத்சன்.
“இதோ வர்றேன் மித்ரன்” என வாய் தவறிச் சொல்லிவிட்டு, உதட்டைக் கடித்துக் கொண்டாள்.
“என்னது, மித்ரனா? வத்சன்மா வத்சன் இது. அவனெல்லாம் உனக்கு பைனாபிள் கேசரி செஞ்சு கொடுப்பான்னு உனக்கு நினைப்பு வேறயா? அவன் பைனாப்பிளைக் கத்தி வச்சு வெட்டி உனக்குத் தந்தாலே அது பெரிய மெடிக்கல் மிராக்கிள். சீக்கிரம் வா சாப்பிடலாம். எனக்கு ரொம்பப் பசிக்குது” என்றான் வத்சன்.
“இதோ வரேன்” என நீண்ட பெருமூச்சுகளை எடுத்து வெளியிட்டாள். கையைக் கழுவிவிட்டு முகத்தில் தண்ணீரை அடித்துக் கழுவினாள். கன்னங்கள் சிவந்திருந்தது. மேலும் குளிர்ந்த நீரை வைத்துக் கழுவியவள் சற்றுநேரம் தன்னைச் சமன்படுத்திக் கொண்டு அங்கிருந்து வெளியேறினாள்.
சாப்பாட்டு மேஜையில் மித்ரன் ஏற்கனவே வந்து அமர்ந்திருந்தான். சற்றுமுன்னர் அணிந்திருந்த சட்டையை மாற்றி இருந்தான். அவள் சட்டையைப் பிடித்துத் தள்ளியதால் கையில் இருந்த மருந்து வாசனை அதில் பரவியிருக்கும் என்பதால் சட்டையை மாற்றியிருக்கிறான் என்று அவள் ஊகித்துக் கொண்டாள்.
மறந்தும் கூட அவன் கழுத்தைத் தாண்டி மேலே ஏறிட்டுப் பார்க்க அவள் துணியவில்லை.
ஆனால் மித்ரனின் பார்வையோ அவளையே துளைத்துக் கொண்டிருந்தது. அவள் கன்னச் சிவப்பில் அவன் முகம் மலர்ந்திருந்தது. எங்கே அவளுக்கு வத்சனைப் பிடித்துவிடுமோ என்று பயந்தான். அவள் சந்தோஷை விரும்பவில்லை என்று தெரிந்த பின்னரே அவனால் நிம்மதியாக இருக்க முடிந்தது.
அதற்குள் வத்சன் குறுக்கே புகுந்துவிடுவானோ என்ற பயம் வேறு சூழ்ந்து கொண்டது.
மித்ரன் சட்டை மாறியதை பார்த்த வத்சன், “ஏன்டா சினிமா பாட்டுல வர்ற ஹீரோ மாதிரி அடிக்கடி சட்டையை மாத்திக்கிற?” என நக்கலாகக் கேட்டான்.
“உன்னை விட அழகாத் தெரிய வேண்டாமா, அப்போ தான் நாலு பேர் என்னைப் பார்ப்பாங்க” என மித்ரன் சொல்ல, திவ்யதர்ஷினி விழியுயர்த்தி அவனை நோக்கினாள். அவளைப் பார்த்து மித்ரன் மென்மையாக முறுவலிக்க, உடனே அவன் விழிகளை நோக்காது குனிந்து கொண்டாள்.
“நீயா பேசியது, என் நண்பா நீயா பேசியது” என நாடகப் பாணியில் பாடினான் வத்சன்.
அந்தச் சமயத்தில் ரதிப்ரியா கையில் பரிசுத் தாள் சுற்றிய பெட்டியை எடுத்துக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தாள்.

