Skip to content
தென்காசி பஸ்ஸ்டாண்ட்டில் இருட்டும் நேரத்தில் பஸ்ஸில் இருந்து ஒரு உருவம் இறங்கியது. மறைந்து மறைந்து இருட்டில் நடந்து யார் கண்ணிலும் படாதவாறு லாவகமாய் நழுவி ஒரு தெருவுக்குள் சென்றது. அந்தத் தெருவில் அனைவரும் உறங்க ஆரம்பித்ததை உறுதிப் படுத்திக் கொண்டு நீண்ட நாட்கள் யாரும் உபயோகப் படுத்தாமல் இருந்த வீட்டின் பின் பகுதியில் இருந்த கொட்டகைக்கு மறைந்து சென்றது. அங்கு அதற்கு முன்பே இருவர் அமர்ந்து காத்திருந்தனர்.
“திருநெல்வேலில இருந்து இங்க வர இவ்வளவு நேரமா?” கடுகடுத்தது ஒரு பெண்ணின் குரல்.
“சொல்லுவியே… எல்லாரு கண்ணுலையும் மண்ணைத் தூவிட்டு வர வேணாம்”
“போனா போன இடம் வந்தா வந்த இடம்னு இருந்தா எப்படி?”
“சூ… ரெண்டு பேரும் சண்டையை நிறுத்துங்க. பசில காதெல்லாம் அடைக்கு. கண்ணெல்லாம் இருட்டிக்கிட்டு வருது. ஏதாவது சாப்பிட வாங்கியாந்தியா டா?” அவ்வளவு நேரம் அமைதியாய் இருந்த மூன்றாவது பெண்ணின் குரல் ஆணையும் பெண்ணையும் அதட்டியது.
“டீக்கடைல பன்னு மட்டும்தான் கிடைச்சது”
“பன்னா கொண்டா கொண்டா… அவனது கையிலிருந்து பையைப் பிடுங்காத குறையாய் பறித்துக் கொண்டு அதிலிருந்த பன்னை நாய்கள் சண்டையிடுவதைப் போல அடித்துக் கொண்டு அப்படியே விழுங்கினர்”
அவர்கள் யாரென்று தெரிகிறதா செம்பருத்தியின் அத்தை, அத்தை மகன் மற்றும் மகள்தான்.
அம்மா தண்ணியில்லாமல் விக்கல் எடுக்க, பாட்டிலில் இருந்த நீரைத் தந்தான்.
“யம்மா பக்கத்து வீட்டுக்காரனுக்கு சத்தம் கேட்டுறப் போவுது. இந்தத் தண்ணியைக் குடி”
“இன்னும் எத்தனை நாளைக்கு இந்தப் பசியும் பட்டினியும்? என் வீட்டுக்காரன் எப்ப என்னை விரட்டி விட்டுட்டு ரெண்டாவது கல்யாணம் பண்ணப் போறானோ தெரியலையே” புலம்பினாள் இளையவள்.
“அப்படி மட்டும் செஞ்சிருவானா? சுளையா இருபது பவுனு போட்டு உன்னை அவனுக்குக் கல்யாணம் பண்ணித்தந்திருக்கேன். வரதட்சணை கேசில் தூக்கிப் போட்டுருவோம்” என்றாள் வயதான பெண்மணி.
“க்கும்… “ கழுத்தை நொடித்துக் காட்டினாள் சிறியவள் “முதல்ல நீயும் உன் மகனும் வரதட்சணை கேசில் இருந்து வெளிய வர வழியப் பாரும்மா.. அதுக்கப்பறம் என் புருசனைத் தூக்கி ஜெயிலில் போடலாம்”
“இதெல்லாம் பூ..ன்னு ஊதித் தள்ளிடலாம்” கான்பிடென்ட்டாய் பேசிய அண்ணனைப் பார்த்து முறைத்தாள்.
“நீ செஞ்சிருக்கிறது எவ்வளவு பெரிய குற்றம் தெரியுமா? “
“என்னடி என் மகன் பெருசா தப்பு செஞ்சுட்டான்? அவனோட மாமனாரு சொத்தில் பங்கு கேட்டான். கல்யாணம் பண்ணி வச்சதோட சரியா போச்சா? மாசா மாசம் அவளுக்கு சாப்பாடு போட யாரு பணம் தர்றது? ஒன்னு இவன் பொண்டாட்டி வேலைக்குப் போயி சம்பளப் பணத்தை எண்ணி வைக்கணும். அவ வேலைக்குப் போக மாட்டேன்னு சொல்லிட்டா. அப்ப அந்தக் காசை இவனோட மாமனார் தானே தரணும்?” அம்மாக்காரி நியாயம் பேசினாள்.
“நாங்க என்ன அந்த மாதிரி மாசா மாசம் பணம் கேட்டுத் தொந்தரவு பண்ணுற அளவுக்கு ஈவு இரக்கம் இல்லாதவங்களா? ஏதோ நியாய தர்மப் படி நடக்குறதால அவங்க அப்பனோட தியேட்டரை மட்டும் இவன் பேரில் எழுதி வைக்கச் சொன்னோம்”
மகன் தொடர்ந்தான் “அவளைக் காதலிச்சதே தியேட்டர்காரனோட பொண்ணுனு இருக்குற ஒரே தகுதில தானே. அதுதான் நிலம் எல்லாம் அவங்கப்பனுக்கு இருக்கே. இதை எனக்கு எழுதி வைச்சா என்ன? மாட்டேன்னு சொன்னா அதுதான் லைட்டா தட்டினேன். போலீஸ்ல புகார் தந்துட்டா”
“லைட்டா தட்டுனியா? நீ அடிச்ச அடியில் அவளோட கர்ப்பமே கலைஞ்சு போயிருச்சு. நான் என்ன அம்மா மாதிரி நல்லா நாலு போடு போடுடா. நீ அடிக்கிற அடில அவங்கப்பன் அலறிக்கிட்டு வந்து சொத்தை ரெஜிஸ்டர் பண்ணிட்டு போகணும்னு உன்னைத் தூண்டி விட்டுட்டா இருந்தேன்.
புருசன் பொண்டாட்டி இன்னைக்கு அடிச்சுக்குடுவாங்க நாளைக்கு பிடுச்சுக்குடுவாங்கன்னு தடுக்காம உக்காந்து சிவனேன்னு மகராசி சீரியல் பாத்துக்கிட்டிருந்த பாவத்துக்கு கேசில் என்னையும் உன் பொண்டாட்டி தூக்கிப் போட்டுட்டா… அவ விளங்குவாளா?” சாபம் அளித்தாள் தங்கை.
செம்பருத்தியின் தகப்பனிடம் அடித்துப் பிடிங்கி, அதிகாரமாய் கேட்டு வாங்கி வாங்கி வாழ்க்கை நடத்தி, இப்படி அடுத்தவரின் உழைப்பை முழுவதும் எனக்குத் தா என்று உரிமையாய் கேட்கும் அளவுக்கு அந்தக் குடும்பத்தினரின் தராதரம் வளர்ந்திருந்தது.
ஒருவருக்கு ஒரு தரம் கை தூக்கி விடலாம். ஒரு வருடம் கூட ஸ்திரம் ஆகும் வரை உதவி செய்யலாம். அது கூட பாத்திரம் அறிந்து பிச்சை இடாமல் போனால் இப்படித்தான். ஏன் உன்கிட்டத்தான் காசு இருக்கே எனக்குத் தந்தா என்ன? என்று கேட்கும் அளவுக்குப் பணப் பேயாக வளர்ந்து உதவி செய்தவர்களின் ரத்தத்தையே உறுஞ்சிக் குடிக்க ஆரம்பித்து விடுவார்கள். இத்தகைய மூட்டை பூச்சிகளை நமது வீட்டில் அண்ட விடவே கூடாது.
“இப்ப என்ன பிளான். எவ்வளவு காலம் ஊருக்கு போயிருக்குற உன் பிரெண்டு வீட்டு கொல்லைல உக்காந்திருக்க முடியும்?”
“அதுக்குத் தான் நமக்கு சரியான வழி கிடைச்சிருக்கு” என்றான் ரமேஷ்.
“சொல்லு சொல்லு”
“அம்மா… உன்னை வக்கீல் வீட்டில் சண்டை போட்டு செம்பருத்தி இருக்குற அட்ரஸ் வாங்கச் சொன்னேனே”
“ஆமாண்டா… இப்ப அதுக்கு என்ன?”
“ஒரு பொண்ணு போன் பண்ணி, செம்பருத்தி விலாசத்தைத் தந்து என்னை உடனே வர சொல்லி இருக்கு”
“எங்க?”
“கேரளாவுக்கு… செம்பருத்தியை அவ வீட்டில இருந்து கூட்டிட்டு போயிரணும். அதுதான் நம்ம ஒப்பந்தம். அதுக்கு பதிலுக்கு ஒரு லட்சம் பணம் கூட தரேன்னு சொல்லிருக்கும்மா. பேசாம இங்கிருந்து தப்பிச்சு கேரளாவுக்கு போயிரலாம். அங்க போனா நமக்கு புது வாழ்க்கைதான்”
error: Alert: Content selection is disabled!!