செம்பருத்தி 26 – 2

“ஒரு லட்சத்தை வச்சுக்கிட்டு, இந்த செம்பருத்தியை வேற கூட்டிக்கிட்டு இதென்னடா பிளான். அவ பாட்டுக்கு ஸ்வீட்டு கடையோ சிப்ஸ் கடையோ வேலை செஞ்சு சோறு தின்னுட்டு இருக்கா. அவளைக் கூட்டிட்டு வந்து அவளுக்கும் சோறு போடணுமே. எப்படிடா  புது வாழ்க்கை?”

 

“உன்னை எதுக்காக வக்கீல் வீட்டுக்கு போயி மானம் போகக் கத்தி செம்பருத்தி அட்ரெஸை வாங்கச் சொன்னேன்”

 

“ஏதோ அவ பேரில் பணம் இருக்கிறதா சொன்ன… அப்பறம் என்ன ஒரு ஓட்டை வீடு இருக்கு. அந்த வாடகையை நம்ம வாங்கிக்கலாமா?”

 

“கடனில்லாத ஓட்டை வீடு” திருத்தினாள் மகள். 

 

“இப்ப கவிதா கூட காம்ப்ரமைஸ்கு போனா நம்ம குடி இருக்குற வீடு, கொஞ்ச நஞ்சம் இருக்குற பணம் எல்லாம் புடிங்கிக்குவா… “ என்றாள் மகள்.

 

“அடி ஆத்தி… அந்தக் கழுதைக்கு எதுக்குடி நம்ம வீட்டைத் தரணும்?”

 

“அப்படித்தான்… நம்ம கஷ்டப்பட்டு சம்பாரிச்சு சேர்த்த சொத்தா இதெல்லாம். மாமாவோட பணத்தை எல்லாம் நம்ம சொத்தா மாத்திக்கிட்டோம். அதெல்லாம் வந்த மேனிக்கு இப்ப கவிதாவுக்குப் போகும்”

 

“இதெல்லாம் உனக்கு எப்படிடி தெரியும்”

 

“நீங்க அடிச்சு விரட்டினப்ப அவ வீட்டு வாசலில் நின்னு என் பணம் நகை எல்லாம் புடுங்கிட்டு தெருவில் விரட்டி விட்டிருக்கீங்களா இதே மாதிரி உங்க சொத்தை எல்லாம் புடுங்கிட்டு நாய் மாதிரி நடுத்தெருவில் விடுறேன் பாருன்னு சபதம் போட்டுட்டுத் தான் போனா”

 

“அடக்கடவுளே… கோவத்தில் மக்கள் இப்படி எல்லாம் கத்துவாங்க தான். ஆனா பாதி பேரு புள்ளப் பூச்சிங்க. எதிர்த்து நிக்க தைரியம் இல்லாதவங்க. அதுவும் பொட்டப் புள்ளைய பெத்தவங்களுக்கு தைரியமே இருக்காது. பொறந்த வீட்டுக்கு நிரந்தரமா அனுப்பிட்டா? பொண்ணு வாழவெட்டியா வந்திருந்தா குடும்பத்துக்குப் பெருமையா?”

 

“ஏம்மா இதெல்லாம் உனக்கு இல்லையா… நீ மட்டும் ஒரு சீரும் சரியா செய்ய மாட்டிங்கிற, ஏதாவது கேட்டா சொந்தக்காரங்க முன்னாடி பேயாட்டம் ஆடுற”

 

“உன்னை கட்டிக் கொடுத்தாச்சுல்ல. இனிமே எதுக்கு உனக்கு செய்யணும். என்னைக்குத் தாலி கழுத்தில் ஏறுச்சோ இனிமே நல்லது கெட்டதெல்லாம் உன் பாடு. உன் வீட்டில் நீ சூதானமா குப்பை கொட்ட வேண்டியதுதான். காசு பணம்னு மனசால நினைச்சா கூட வீட்டில் சேர்க்க மாட்டோம்” 

 

“நீதான்மா நியாய தேவதை. உன் நியாயம் எல்லாம் பணம். அந்தப் பணம் உன்கிட்டயே இருக்கணும். அதுக்குத் தகுந்த மாதிரி நாக்கை வளைச்சு வளைச்சு பேசுவ”

 

“அதில் என்ன தப்பிருக்கு. பணம் இல்லாதவங்க பிணம்” என்றான் ரமேஷ். 

 

“இந்தக் குடும்பத்தில் பிறந்தத்துக்கு… எத்தனை ஜென்மம் பாவம் செஞ்சேனோ” 

 

“இவை கிடக்குறா… அடுத்த பிளான் என்ன கேரளா போறோமா?”

 

“ஆமாம். இப்பவே கிளம்புறோம்”

 

“அந்த செம்பருத்தியால என்னடா நமக்குப் பலன்? அவ படிச்ச படிப்புக்கு பெருசா என்ன வேலை கிடைச்சுடப் போகுது? இங்க பலகாரக் கடைல வேலை பார்த்த மாதிரி அங்க சிப்ஸ் கடைல வேலைக்குப் போவா”

 

“இப்படி நெனைச்சுத்தானே அசால்ட்டா விட்டோம். அம்மா.. இங்க பாரு… இது என்ன இடம் தெரியுதா? “ செல்லில் இருந்த ஒரு இடத்தைக் காட்டினான். 

 

“என்னமோ பேக்டரி வருதுன்னு சொன்னாங்களே அந்த இடம்தானே… நம்ம கூட அரை கிரவுண்டு கேட்டதுக்கு யானை விலை சொன்னானே”

 

“அதே இடம்தான்…. அங்க ரெண்டு கிரவுண்டு கிடைச்சா எப்படி இருக்கும்?”

 

“கோடிக்கணக்கா பெறுமே டா” அத்தைக்காரியின் கண்களில் கனவு மிதந்தது. 

 

“ உன் தம்பி சும்மா போகல. செம்பருத்தி பேரில் ரெண்டு கிரவுண்டு வாங்கி கிரயம் பண்ணிட்டுத்தான் போயிருக்கார்”

 

“எனக்குத் தெரியாம சொத்து வாங்கினானா? எவ்வளவு தைரியம்? அப்பா வீட்டு சொத்தில் எனக்கு பங்கு இருக்கு. உடனே ஒரு வக்கிலைப் பாத்து கேஸ் போடுறேன்”

 

“ஒரு பிடி மண்ணைக் கூடப் பிடுங்க முடியாது. ஏன்னா அது செம்பருத்தி பேரில் இருக்கு. அவ சம்பாத்தியத்தில் வாங்கினது”

 

“அவளுக்கு ஏதுடா இவ்வளவு காசு? தப்பு வழில எதுவும் போயிருப்பாளோ?”

 

“நீங்க வேறம்மா அவ வாங்கினப்ப சில லட்சம் தான். இப்ப சமீபத்தில் பாக்டரி காரன் வந்து விலையை ஏத்தி விட்டுட்டான். கால் க்ரவுண்டு கூட நம்மால வாங்க முடியல”

 

செம்பருத்தியின் அதிர்ஷ்டத்தை நினைத்து வயிறெரியாமல் இருக்க முடியவில்லை அவர்களால். 

 

“பேசாம உன் பொண்டாட்டியத் துரத்தி விட்டுட்டு செம்பருத்தியை கட்டிக்கோ. அவ இருக்குற பக்கமாவே ஒரு வேலையைப் பாத்துகிட்டு போயிரலாம். அஞ்சாறு வருசம் கழிச்சு வந்து இந்த பூமியை வித்துட்டு போயிரலாம். இப்பயே கோடிக்கணக்கா இருந்தா அப்ப ஒரு அஞ்சாறு கோடிக்கு விக்கலாம்ல”

 

“நீங்க ரெண்டு பேரும் இப்படி கனவு கண்டுக்கிட்டே இருந்தா என்னோட வாழ்க்கை?”

 

“ஒன்னொன்னா பாக்கலாம். முதல்ல செம்பருத்தி. அவ எங்கேடா இருக்கா?”

 

“கொச்சி பக்கத்தில் ஏதோ ஒரு கிராமம்”

 

“உனக்கு அட்ரஸ் தெரியுமா?”

 

“அந்தப்  பொண்ணு வாய்ஸ் மெசேஜ்ல  அனுப்பி இருக்கு”

“போலீசா இருக்கப் போகுதுடா”

 

“இல்லம்மா… நான் அந்தப் பொண்ணுகிட்ட வாய்ஸ் மெசேஜ் மட்டும் அனுப்ப சொல்லிருக்கேன். உடனே கிளம்பி வர சொல்லுக்கு”

 

“யாருடா அந்த நல்லவ?”

 

“காவ்யான்னு சொன்ன நினைவு. ஆனால் அந்தப் பொண்ணை போட்டுத் தரக் கூடாதுன்னும் டீல்”

 

“சரி, கவிதாவால விட்டதைக் காவ்யாவால பிடிக்கலாம்”

 

மூவரும் சத்தம் போடாமல் அந்த இடத்தை விட்டுக் கிளம்பினர். அடுத்த ஐந்தாறு மணி நேரத்தில் கேரளாவின் கொச்சி செல்லும் பஸ்ஸில் தூக்கத்தில் சாமியாடியபடி மூவரின் பயணம் ஆரம்பித்தது. 

error: Alert: Content selection is disabled!!