Skip to content
அதிர்ச்சியில் உறைந்து அப்படியே அபிராம் சிலையாய் உட்கார்ந்திருந்தான். இதுவரை யாரும் அபியின் சுண்டுவிரலைக் கூடத் தீண்டியதில்லை. இன்று லீலாம்மாவா அடித்தது. அதுவும் பல சமயங்களில் அந்த பிஞ்சு பருவத்தில் அவனின் பயம், அச்சம் எல்லாம் ஓட ஓட விரட்டிய தேவதையா இன்று கன்னத்தில் அறைந்தது.
பத்து வயது கூட நிரம்பாத அபிராம் தன்னை அடைத்து வைக்கப்பட்ட அறையிலிருந்து கத்துவான்.
“லீலாம்மா பயம்மாருக்கு. எங்க போன?” இருட்டு அறையில் இறைவனின் முன்னால் எறிந்த குத்துவிளக்கை சுற்றிலும் அறுக்கப்பட்ட கோழிகளையும், ரத்தத்தையும் பார்த்தவாறு அலறுவான்.
படார் படார் என்று கதவுகளைத் தட்டுவான்.
“அம்மா, அம்மா… ப்ளீஸ்மா எனக்கு பயக்குமாருக்கும்மா கதவைத் திறங்க, எனக்கு ரொம்ப பயம்மாருக்கு.” என்று கத்தி கத்தி குரல் வறண்டு பல நாட்கள் பயத்தில் அப்படியே மயங்கி உறங்கி இருக்கிறான்.
“அபி. அங்கேயே இரு. உன்னைப் பிடிச்ச பேய் அப்பத்தான் போகும். அந்த பொம்பளை உன் மேல சூனியம் போட்டிருக்கா… ரத்தக் காட்டேரி மந்திரம். அதனால ராத்திரி பூரா தனியா அந்த ரூமில்தான் தூங்கணும்” கடுமையான குரலில் சொல்வாள் மந்தாகினி.
பயத்தில் ஓவென்று அலறுவான் அந்த சிறுவன்.
சற்று நேரம் கழித்து அழுவதற்குத் தெம்பின்றி தேம்பிக் கொண்டிருக்கும் சிறுவன் இருக்கும் அந்தப் பழங்கால அறையின் உயரத்தில் இருந்த ஜன்னலில் இருந்து கயிற்றை போட்டு ஓசை எழுப்பாமல் மெதுவாக இறங்கும் ஒரு உருவம்.
“அபி, அபி மோனே, கரையாண்டாம். சத்தம் போடாதே… “ கிசு கிசுப்பாக சொல்லும்.
“லீலாம்மா” சத்தேமெழுப்பாமல் சொல்லிவிட்டுக் கட்டிக் கொள்வான்.
“நான் வந்துட்டேன்ல… பயப்படாம இருப்பியாம்”
அவளது மடியில் அமர்ந்து விசும்புவான்.
“அம்மாவுக்கு என்னமோ ஆயிருச்சு லீலாம்மா… பூஜை அது இதுன்னு இப்படி அடைச்சு வைக்கிறாங்க”
மந்தாகினிக்கு இப்போது தேவை ஒரு நல்ல வைத்தியர். அதை விட்டுவிட்டு மாயம் மந்திரம் என்று சுற்றுகிறாள். அவள் இப்படி கஷ்டப்படுவதற்கு அபியின் ஜாதக பலன்தான் காரணம் என்று யாரோ ஒரு அரைகுறை மந்திரவாதி சொன்னதின் பலன் இப்படி பயங்கரமான சோதனைகளுக்கு உட்படுத்துகிறாள்.
“அம்மாவுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை மோனே. நீ எதுக்கும் பயப்படாதே. இப்படி பூஜை ஏதாவது இருந்தா கொஞ்ச நேரம் பொறுத்துக்கோ லீலாம்மா ஓடி வந்து என் அபி கிட்ட துணைக்கு உக்காந்துக்குவேன். அம்மா பாக்குறதுக்குள்ள காலைல எந்திருச்சு ஓடிடுவேன். இதை அம்மாகிட்ட சொல்ல வேணாம். நம்ம சீக்ரெட்டா வச்சுக்கலாம்”
“நீ பக்கத்தில் இருந்தா எனக்கு பயம்மே இல்ல லீலாம்மா. உன் மடியில் படுத்துக்கவா”
“படுத்துக்கோ மோனே”
“லீலாம்மா எனக்காக எவ்வளவு கஷ்டப்பட்டு கயிறெல்லாம் கட்டி இறங்கி வந்திருக்க. நீயும் என் அம்மாதான்”
கண்கள் பனிக்க அவனைக் கட்டிக் கொள்வாள்.
“நன்றி பெரியய்யா” சற்று சத்தமாகவே ஒரு முறை சொல்லிவிட்டாள்.
“அப்பாவுக்கு ஏன் தாங்க்ஸ் சொல்ற”
“எனக்கு ரெண்டு பெறாத மகன்களைத் தந்திருக்காரே. அதுதான்.. “
“லீலாம்மா இன்னொரு மகன் யாரு?”
“அதை ஒரு நாள் உன்கிட்ட சொல்லுவேன்”
“இப்பயே சொல்லேன்”
“உனக்கு அதைப் புரிஞ்சுக்குற அளவுக்கு முதிர்ச்சி இல்லை மோனே. ஒரு நாள் வரும். அப்ப நானே அந்தக் கதையை சொல்லுவேன். அன்னைக்கு என்னை நிறுத்த சொல்லாம கேட்கணும்”
“ஏன் நிறுத்த சொல்லுவேன்? அதெல்லாம் மாட்டேன்”
“ஏன்னா நீ உண்மைன்னு நினைச்சது எல்லாம் அன்னைக்கு பொய்யா தோணலாம். நல்லவங்க கெட்டவங்களாவும், கெட்டவங்க நல்லவங்களாவும் மாறலாம்”
“நீ நல்லவளா கெட்டவளா?”
“அதையும் நீதான் எனக்கு சொல்லணும். நீ நல்லவன்னு நினைச்சா நான் நல்லவ, கெட்டவன்னு நினைச்சா நான் கெட்டவ”
அப்பா வேறு வீட்டுக்கு வருவதில்லை.
“அம்மா…. அப்பா கூட இல்லாததால தான் அம்மா இப்படி உடம்பு சரியில்லாம போனாங்க”
“யாரு இதெல்லாம் உனக்கு சொன்னா?”
“சுகுமாரன் மாமா சொன்னார். அவரு பொண்ணு காவ்யாவும் அப்பா கெட்டவருன்னு சொன்னா”
இப்படி ஒரு பிஞ்சின் மனதில் குடும்பமே சேர்ந்து நஞ்சை விதைக்கலாமா?
“எனக்கு இங்க இருக்கவே பயம்மா இருக்கு லீலாம்மா”
“ஹாஸ்டெல்ல படிக்கிறியா?”
“நான் ஹாஸ்டெல் போனா அம்மாவை நீ பாத்துக்கிறியா?”
“பாத்துக்குறேன்”
“ப்ராமிஸ்”
“ப்ராமிஸ் அபி. என்னால முடிஞ்ச அளவுக்கு அவங்களைப் பாத்துக்குறேன்”
ஏதேதோ வேலைகள் செய்து மந்தாகினியின் மனதில் அபியை விடுதியில் சேர்க்கும் எண்ணத்தை ஏற்படுத்தினார்.
***
இன்று, அறையின் படுக்கையில் உடைந்து போன சிங்கமாய் பழைய நினைவுகளை அசை போட்டபடி அபிராம். ஜன்னலைப் பார்த்து வெளியே வெறித்தவண்ணம் காயம் பட்ட சிங்கமாய் அவினாஷ். யாருக்கு ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் இடையில் அலையில் சிக்கிய படகாய் செம்பருத்தி.
முக்கியமான சிலரைத் தவிர மற்றவர்கள் யாரும் அங்கில்லை.
“மோனே!! அழைத்தார் சேச்சி. அவனிடமிருந்து எதிரொலி இல்லை.
“மோனே அபி” நீண்ட நாட்களுக்குப் பின்னர் அப்படி அழைத்தார்.
“இதை மனசார சொல்றிங்களா லீலாம்மா?” அவன் குரலில் ஒரு விரக்தி.
“அதில் என்ன சந்தேகம் அபி”
“சந்தேகம்தான். இது வரைக்கும் வாரிசைப் பத்தி சொல்லாத நீங்க இன்னைக்கு அவினாஷுக்கு சப்போர்ட் பண்ணி என்னை அடிச்சுட்டிங்க. ஐ ஹேட் யூ”
“இல்ல மோனே, இல்லவே இல்லை… அவினாஷுக்கு சப்போர்ட் பண்ணல, ஆனா அவங்க அம்மாவைப் பத்தி நீ பேசின வார்த்தை தப்புத்தானே?”
“ஓ… அதுக்காக அடிப்பீங்களா?”
“நீ என் மகன்தானே அபி. என்னைப் பழிச்சுப் பேசினப்பக் கூட பொறுத்துக்கிட்டேன். ஆனா அந்த உத்தமியைப் பத்தி பேசினதும் என்னால தாங்க முடியல”
“அந்தம்மா உத்தமி, பத்தினி ஆனா கல்யாணம் ஆகி குழந்தை இருக்குற ஒரு நபரைப் பிரிச்சு ஒரு குடும்பத்தை சின்னா பின்ன மாக்கியிருக்காங்க. என் குழந்தை பருவத்தை அழிச்சிருக்காங்க. எங்கம்மா மனசு குழம்பி மந்திரம் மாயம் இப்படி போனதுக்கு என்ன காரணம் லீலாம்மா? முழு காரணமும் அந்தம்மா தான். அந்தம்மா குடும்பத்தை இழந்ததா? இல்லையே… ஆனா நான், நான்… அப்பா இல்லாம அம்மா மனசு பேதலிச்சு… “ விசும்பினான்.
error: Alert: Content selection is disabled!!