செம்பருத்தி 29- 2

“அட கடைசில நீ தான் காவியாவா?’ என்ற குரலைக் கேட்டு திடுக்கிட்டு நிமிர்த்தாள்

“நீ… நீ… அந்த…” என்று தடுமாறியளிடம்

“நானேதான் பாட்னர். அப்புறம், நிதி நிறுவனம் நடத்தி சுருட்டிட்டு போன பணமெல்லாம் என்ன ஆச்சு?” மாட்டிக்கிட்டியா என்று குதூகலம் குரலில் தாண்டவமாடியது. 

“ஷ்… “ என்றாள். 

“ஓ, இதெல்லாம் இந்த வீட்டுக்குத் தெரியாதா?” என்றான் ரகசியக் குரலில் 

காவ்யா பிசினெஸ் பண்ணுகிறேன் என்று சொல்லி தனது நண்பர்களுடன் சேர்ந்து ஆரம்பித்ததுதான் அந்த நிறுவனம்.  வேலை செய்ய சிலரைத் தற்காலிகமாக தேர்ந்தெடுத்து இருந்தார்கள். அதில் இவனும் ஒருவன். மூடுவதற்கு முன் தாராளமாகப் பணம் கொடுத்துத்தான் இவனை அனுப்பி இருந்தார்கள். இப்போது எங்கிருந்து இவன் முளைத்தான்?

“நீதான் செம்பருத்தியோட சொந்தக்காரனா?”

“அது நானேதான்… “

குரலைத் தணித்தாள் 

“செம்பருத்தியைக் கையோட கூப்பிட்டுட்டு கிளம்பாம இன்னும் எதுக்கு இங்க நிக்கிற. உனக்கு சேர வேண்டிய பணத்தை கேஷா இப்பவே கொடுத்துடுறேன். எடுத்துட்டு இன்னும் பத்து நிமிஷத்தில் கிளம்புற”

“அட, தங்க முட்டை போடுற வாத்தை எப்படி உடனே வெட்ட முடியும். கொஞ்சம் மெதுவா தங்கி ரிலாக்ஸ் பண்ணிட்டு போறேன்” அமைதிப்படை அமாவாசை ஸ்டைலில் சொன்னான். 

“மெதுவா எல்லாம் கிளம்ப முடியாது. ஒரு லட்சத்தை ரெண்டு லட்சமாக்கித் தரேன். வாங்கிட்டு திரும்பிப் பாக்காம ஓடிப் போற, அவளையும் இழுத்துட்டு” என்றாள் காட்டமாக. 

“எனக்கு செம்பருத்தியைக் கல்யாணம் பண்ணிக்கணும். நாளைக்கே கல்யாணம் செஞ்சு எங்களை வாழ்த்தி, எனக்கு ஒரு வேலையோட, கல்யாணப்பரிசா  கையில் ஒரு பத்து லட்சத்தைத் தந்து அனுப்பினாலும் ஒகே. இல்லை பத்து லட்சத்தைப் புரட்ட ஒரு வாரம் பத்து நாளாகும்னு சொன்னா கூட மெதுவா தங்கி வாங்கிட்டே கிளம்புறேன்” வில்லச் சிரிப்புடன். 

“இவரு உங்களுக்கு ஏற்கனவே தெரிஞ்சவராம்மா?” என்று கேட்டபடி பாலன் வர, 

“அதெல்லாம் இல்ல. இவன் யாருன்னே எனக்குத் தெரியாது. இங்க சுத்திப் பாக்க எந்த இடம் நல்லாருக்குன்னு கேட்டுட்டு இருந்தான்”

“அவினாஷ் அய்யா உங்களை ஆபிஸ் ரூமுக்கு வரச் சொன்னாரும்மா” என்று சொல்லிவிட்டு 

சமயலறைக்கு சென்று “சேச்சி உங்களை அபிராம் அய்யா உடனே வரச் சொன்னார்” என்று சொன்னதைக் கேட்டபடி வாஷ்பேஸினில் கை கழுவிய காவ்யாவுக்கு 

அபிராம் எதற்காக சேச்சியை வரச் சொல்கிறான்? சேச்சியிடம் பழைய விவரங்களைக் கிளறுவானோ? விடக் கூடாதே… சீக்கிரம் அவினாஷிடம் பேசிவிட்டு அபிராமை சந்திக்க வேண்டும். 

வேகமாக அவினாஷ்  இருக்கும் அறைக்குச் சென்றாள். அந்த அறையில் இருவர் அமர்ந்திருக்க 

“இவங்க போலீஸ்காரங்க காவ்யா. இந்த ட்ரக் கேஸ் விஷயமா விசாரணைக்கு வந்திருக்காங்க. நீ தானே முதலில் சந்தேகப்பட்டது. அதனால உன்னைப் பாக்கணும்னு சொன்னாங்க”

“இந்த அறையிலேயே விசாரணை பண்ணலாமா சார்”

“தாராளமா… நான் இப்ப கிளம்பிடுவேன். பெல் அடிச்சு பாலனைக் கூப்பிட்டா அவன் ஒவ்வொருத்தரா இந்த அறைக்கு அழைச்சுட்டு வருவான்” என்றான். 

அதற்குள் அவளது அலைப்பேசி அடிக்க, சே இந்த ரமேஷ் தடியன். “ஒரு நிமிஷம் இந்த காலை அட்டென்ட் பண்ணிட்டு வந்துடுறேன். நீங்க ஸ்நாக்ஸ் சாப்பிடுங்க” என்றாள் காவலர்களிடம். 

 பக்கத்து அறைக்கு சென்று  கடுப்போடு அலைப்பேசியை எடுத்தாள் 

“நீ உன் எல்லையைத் தெரிஞ்சு நடந்துக்குறது நல்லது.அப்பறம் பேசுறேன்” என்றாள். 

“நீ இன்னும் பத்து லட்சத்துக்கு பதில் சொல்லவே இல்லையே”

“என்ன விளையாடுறியா?”

“உன்னால முடியாதுன்னு சொல்லாதே. ஏன்னா நீ செஞ்ச பிசினெஸ் எல்லாத்தையும் நேரில் பாத்த சாட்சி நான். போலீசுக்கு போனேன் நீ கம்பி எண்ணனும், எந்த மொழில எண்ணுவ தமிழ், மலையாளம் இல்லை இங்கிலிஷ்?”

“தரேன். ஆனா இனிமே என்னைத் தொந்தரவு பண்ணாம ஓடிப்போயிரணும்”

யானை தன் தலையில் தானே மண்ணை வாரி இறைத்துக் கொண்டதை போல இது வேறு புது பிரச்சனை. இந்த நிதி நிறுவனம் எல்லாம் இங்கு யாருக்கும் தெரியாது. தெரியவும் கூடாது. இவள் மாட்டிக் கொள்ள வழியில்லை. பின்னணியில் இவள் இருந்தது யாருக்கும் தெரியாது. ஒரே ஒரு நாள் அலுவலகத்திற்கு சென்றவளை எதேர்ச்சியாக பார்த்துவிட்டான் ரமேஷ். அதன் பலன்தான் இன்றைய நிகழ்வு. 

இவன் ருசி கண்டு விட்டால் அடிக்கடி பிளாக் மெயில் செய்ய ஆரம்பிப்பானே? எப்படி தவிர்க்கலாம். 

குழப்பத்தை முகத்தில் காட்டாமல் போலீஸ்காரர்கள் இருக்கும் இடத்திற்கு சென்றவள் “சொல்லுங்க சார். என்ன சந்தேகம் உங்களுக்கு?”

“எங்களுக்கு ரெண்டே கேள்விதான் உங்ககிட்ட கேட்க இருக்கு. ஒன்னு அந்த அசிஸ்டென்ட் பொண்ணுதான் குற்றவாளின்னு சொல்லிருக்கிங்க. ரெண்டாவது எப்படி மேடம் அந்த கூல் ட்ரிங்க்ஸ்லதான் ட்ரக் கலந்திருக்கும்னு உறுதியா சொன்னிங்க?”

“சிம்பிள் சார். இதுக்கு முன்னாடி வேலைல இருந்த அசிஸ்டென்ட் பொண்ணுதான் ட்ரக் தந்தது. இந்தப் பொண்ணு தினமும் கூல்ட்ரின்க்ஸ் வாங்கிட்டு வந்திருக்கு. இதெல்லாம் பார்த்தாலே உங்களுக்கு உண்மை தெளிவா தெரியலையா? 

அதுவும் இல்லாம இந்த செம்பருத்தி குடும்பமே இந்த மாதிரி போதை பொருள் சப்ளையர்ஸ் தான். சுவீட் கடைல வேலை பார்த்தப்ப சைட்ல வாடிக்கையாளர்களுக்கு போதை மருந்தை மாட்டிக்காம தந்துருவா. இவளுக்கு இந்த ட்ராக்ஸ் வாங்கிட்டு வர்றது இவளோட அத்தை குடும்பம். உங்க அதிர்ஷ்டம் அவங்க இங்கதான் தங்கி இருக்காங்க. மெதுவா விசாரிங்க உண்மை வெளிவரும்” என்றாள். 

காவலர்கள் அதிர்ந்தார்கள் “தகவலுக்கு நன்றி மேடம். நாங்க இனிமே பாத்துக்குறோம்”

“அடுத்த ஸ்டெப்  செம்பருத்தியை அரெஸ்ட் பண்ணறது தானே”

“வீட்டு ஆளுங்களை எல்லாம் விசாரிச்சுட்டுத்தான் தீர்மானம் பண்ண முடியும்”

“இப்ப நான் போலாமா இன்ஸ்பெக்டர்”

“போலாம் மேடம்” என்று அவளை அனுப்பி வைத்தார். 

ஓட்டமும் நடையுமாக அபிராமின் அறைக்குள் அனுமதி கூடப் பெறாமல் படாரெனக் கதவைத் திறந்துக் கொண்டு புயலென நுழைந்தாள். 

அந்த அறையில் அமர்ந்திருந்த அபிராமும் ராதிகாவும் சேச்சியும் பதறி அடித்துக் கொண்டு எழுந்தார்கள். 

மூச்சு வாங்க நின்ற காவ்யா “ஓ… எங்க அத்தையை வில்லியாக்குற ஸ்டெப்  ஆரம்பமா? நான் விட மாட்டேன். நீங்க என்ன பேசினாலும் என் முன்னாடிதான் பேசணும்” என்றாள். 

“காவ்யா… “ என்று குறுக்கிட்ட ராதிகாவிடம். 

“நீ பேசாம இரு. இந்தக் கதை எங்க குடும்பக் கதை. தராசில் மங்கையற்கரசி பக்கம் ஸ்ட்ராங் ஆக்க எங்க மந்தாகினி அத்தையை தரக் குறைவா பேசுறதை ஒத்துக்கவே மாட்டேன்” என்று ஆவேசம் வந்தவளைப் போல கத்தினாள். 

“இங்க பாரு காவ்யா நான் எதுவும் பேசவே ஆரம்பிக்கல. யாரையும் நான் குறைக்கப் போறதும் இல்லை, புகழப் போறதும் இல்லை. நான் பார்த்ததை அப்படியே சொல்லப் போறேன். அவ்வளவுதான். 

அபி மோனே, நீ என்னைப் பத்தி ஒரு குற்றச்சாட்டை வச்ச, அதனால என்னோட கதைல இருந்து ஆரம்பிக்கலாம்னு நினைச்சேன். இந்தப் பெண்ணை வச்சுக்கிட்டு என் கதையை சொல்ல எனக்கு விருப்பமில்லை. அதனால உங்க வீட்டு கதையை மட்டும் சொல்றேன். அதுவும் ஒரு பார்வையாளராக இருந்து  மட்டும்”

“அது மட்டும் போதும் லீலாம்மா. உங்க கதையை நம்ம ரெண்டு பேரும் தனியா பேசிக்கலாம்” என்றான் அபிராம் கடுப்புடன். 

“அவினாஷைக் கூப்பிடு அபி” என்றார் சேச்சி அடுத்து. 

“அவினாஷ் எதுக்கு?” ஆட்சோபித்தாள் காவ்யா. அபிராமும் அதையே நினைத்தான். 

“இது நல்லாருக்கே. ரத்த பந்தமில்லாத நீயே உன் அத்தையை குறைவா காட்டிடக் கூடாதுன்னு ஆவேசப்படுற. அதே மாதிரி அவினாஷும் அவங்கம்மாவைப் பத்தி நினைப்பான் இல்லையா. கூப்பிடு”

அவினாஷ் வர, கதவை யாரோ தட்டி உள்ளே வர அனுமதி கேட்டார்கள். 

“பரவால்ல நாகரீகம் தெரிஞ்சவங்க” என்றாள் ராதிகா. 

உள்ளே கத்தை காகித பண்டில்களை எடுத்துக் கொண்டு வந்தாள் செம்பருத்தி. 

“இவ எதுக்கு இங்க?” என்று முகம் சுளித்தாள் காவ்யா. 

“இந்த டாக்குமெண்ட்ஸ் எல்லாம் பிரிண்ட் அவுட் எடுக்க சொல்லிருந்தேன். சொல்லப் போனா இதை எல்லாம் இவதான் உங்களுக்கு ப்ரூப்போட காமிக்கப் போறா” என்றார் சேச்சி. 

“செம்பருத்தி இருக்கலாம். இருக்கணும்” என்றான் அவினாஷ். 

காவ்யா மறுத்து பேச வழியின்றி அடங்கி அவளது நாற்காலியில் அமர்ந்தாள். 

error: Alert: Content selection is disabled!!