செம்பருத்தி 30- 2

ஓய்வெடுக்கும் போதே அங்கிருந்த நபர்களின் மூலம் மன்னர் குடும்பத்தின் கதையைப் பற்றி அறிந்து மன்னர் பூபதி மேல் மிகுந்த மதிப்பும் மரியாதையும் ஏற்பட்டது அவருக்கு.

பாகமங்கலம், நாகமங்கலம் இரண்டு சமஸ்தானங்களும் பல தலைமுறைகளாக பெண் கொடுத்து பெண் எடுத்து வருவது வழக்கம். அதன்படி தனது தங்கை, வடிவுக்கரசியை  நாகமங்கலம் மன்னர் குடும்பத்தில் திருமணம் செய்துத் தந்தார் பூபதி. 

தங்கைக்கு மூன்று மகன்கள் பிறந்தார்கள். ஆனால் தங்கையின் கணவன் கெட்ட பழக்கவழக்கங்களுக்கு அடிமையாகி தனது சொத்து சுகத்தை இழந்து தெருவில் நின்றதை அவரால் தடுத்து நிறுத்த முடியவில்லை. 

ஒருவழியாக தங்கை குடும்பத்துடன் பிறந்த வீட்டுக்கே வந்து சேர்ந்தார். பூபதிக்கும் இடைப்பட்ட காலத்தில் திருமணம் நடந்தது. அவரின் மனைவி கதைகளில் வர்ணிக்கும் இளவரசிகளைப் போல பேரழகி இல்லை. அது அவர்களது காதல் வாழ்க்கைக்குத் தடையாகவும் இல்லை. 

இருவரின் அன்புக்கு சாட்சியாகப் பிறந்தவர்தான் மங்கை. மங்கைக்குப் பிறகு அவர்களுக்கு ஆண் மகவு பிறக்கவும். இல்லை. 

மங்கை பிறந்து சில வருடங்களில் தாயும் கண் மூடினார். அவள் ஒரே பெண்ணாக வளர்ந்தாள். ஆண் பிள்ளைக்காக, உன் துணைக்காக என்று இரண்டாம் திருமணம் செய்யச் சொன்னவர்களிடம் என் தங்கையின் பிள்ளைகள்தான் எனது வாரிசுகள் என்று ஆணித்தரமாகச் சொல்லிவிட்டார். 

காலம் சென்றது. தங்கையின் மகன்கள் மகேந்திரன், நாகேந்திரன், யுகேந்திரன் மூவரும் வளர்ந்து கல்லூரி செல்லும் பருவத்தை நெருங்குகிறார்கள். மங்கையை கல்யாணம் செய்து கொடுத்து அவர்களில் ஒருவரைத் தனது வாரிசாக நியமிப்பதே பூபதி மட்டுமல்ல ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் ஆசை. அதற்காக அனைவரின் ஜாதகத்தையும் ஆறுதலாகத் தங்கிப் பார்த்துச் செல்லவே ஜோசியர் குடந்தையிலிருந்து அழைத்து வரப்பட்டிருந்தார். 

மங்கையின் ஜாதகத்தைப் பார்த்த ஜோதிடர். 

“அருமையான ஜாதகம் அய்யா. இந்த மாதிரி ஒரு அமைப்பு இருக்கும் கட்டங்களைப் பாத்து பல வருடங்களாச்சு. இந்தப் பொண்ணு பெரிய பரோபகாரி, இவ வாழ்க்கையில் என்ன நடந்தாலும் சரஸ்வதி இவ கூடவே இருப்பா. நிறைய படிப்பா… “

“அதுக்கெல்லாம் வாய்பில்லை. கல்லூரிக்கு அனுப்புறா வழக்கம் எங்க குடும்பத்தில் இல்லை. மங்கைக்கு பதினெட்டு வயசில் கல்யாணம் பண்ணி வைக்கிறதா தீர்மானம் பண்ணிட்டோம்” என்று குறுக்கிட்டாள் வடிவு. 

“தாராளமா பண்ணி வைங்க. இருந்தாலும் சரஸ்வதி இவளை அரவனைச்சுக்குறதைத் தடை போட முடியாது”

“நல்லது. அடுத்து புத்திர பாக்கியம், தாலி பாக்கியம், உடல் நலம் பத்தி சொல்லுங்க சாமி”

“அது எதுக்கும் குறைவில்லை.ஆனால் ஒரு பிரச்சனை என்னன்னா, இவங்க கல்யாணம் ஒரு பெரிய சஞ்சலத்துக்குப் பின்னாடிதான் நடக்கும். இறைவனை வணங்குங்க, நல்லதையே நினைங்க.  கடைசியில் எல்லாமே நன்மையில் முடியும். 

 புத்திர பாக்கியம் டாப் க்ளாஸா இருக்கு. அதுவும் இவங்க குழந்தை எப்படி இருப்பான்னு சொன்னா பொன்னியின் செல்வன்ல கல்கி சொல்ற வரிகள்தான் கட கடன்னு நினைவுக்கு வருது. 

மகாவிஷ்ணுவின் அம்சத்துடன் இவள் வயிற்றில் ஒரு பிள்ளை பிறப்பான். இவளுடைய நாயகனுக்காவது பல இடைஞ்சல்கள், தடங்கல்கள், அபாயங்கள், கண்டங்கள் எல்லாம் உண்டு. ஆனால் இந்தப் பெண்ணின் வயிற்றில் அவதரிக்கப் போகும் குமாரனுக்குத் தடங்கல் என்பதே கிடையாது. அவன் நினைத்ததெல்லாம் கைகூடும்; எடுத்ததெல்லாம் நிறைவேறும், அவன் தொட்டதெல்லாம் பொன்னாகும்; அவன் கால் வைத்த இடமெல்லாம் அவனுடைய ஆட்சிக்கு உள்ளாகும்; அவன் கண்ணால் பார்த்த இடமெல்லாம் புலிக்கொடி பறக்கும்.தாயே! இவளுடைய குமாரன் நடத்திச் செல்லும் சைன்யங்கள் பொன்னி நதியின் புது வெள்ளத்தைப் போல் எங்கும் தங்குதடையின்றிச் செல்லும். ஜயலக்ஷ்மி அவனுக்குக் கைகட்டி நின்று சேவகம் புரிவாள். அவன் பிறந்த நாட்டின் புகழ் மூவுலகமும் பரவும். அவன் பிறந்த குலத்தின் கீர்த்தி உலகம் உள்ள அளவும் நின்று நிலவும்!…”

இதனைக் கேட்டு அனைவரின் மனமும் நிறைந்தது. 

சஞ்சலங்களும், சச்சரவுகளும் இல்லாத சுப நிகழ்ச்சி ஏது? எல்லாம் நல்லபடியாக முடிந்தால் நல்லது. அதனால் விரைவில் கல்யாணம் செஞ்சு வச்சுடலாம்.

மூத்தவன் மகேந்திரனுக்கு இயற்கையிலேயே பூஞ்சையான உடல். அடிக்கடி மருத்துவமனை சென்று வருபவன். அவனால் இந்த சுமையைத் தாங்கிட முடியுமா என்ற சந்தேகம் அவர்களுக்குள். அதனால் இரண்டாவது வாரிசான நாகேந்திரனுக்கு பட்டம் கட்டுவது என்று முடிவானது. 

“அப்ப மங்கையை நாகேந்திரனுக்குத்தான் கட்டித்தரணும் அண்ணா”

“செஞ்சுட்டாப் போச்சு” என்றார் பூபதி. 

இடையில் குறுக்கிட்டார் ஜோசியர் “அய்யாவுக்குத் தெரியாதது இல்லை. உங்க மகனா இல்லாத ஒருத்தர் வாரிசாகணும்னா ஒண்ணு அங்கயற்கண்ணி சொக்கநாதனைக் கட்டிக்கிட்டது மாதிரி  கல்யாணம் பண்ணிட்டு பட்டம் கட்டணும். ராணியைக் கட்டிக்கிட்டதால அவரும் வாரிசாயிடுவாரு”

“அது முடியாது ஜோசியரே. என் பொண்ணு ரொம்ப சின்னப் பொண்ணு. பால்ய விவாகம் பண்ணுற எண்ணம் எனக்கு இல்லை. அது மட்டும் இல்லாம அது சட்டப்படி குற்றமும் கூட. நானே சட்டத்தை மதிக்கலேன்னா நம்ம ஊரில் இருக்கிற மத்தவங்க எப்படி மதிப்பாங்க”

“இல்லைன்னா பேசாம உங்க மருமகனை மகனா தத்து எடுத்துக்கோங்க. மகளக் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு கூட அவசியமில்லை. என்ன நான் சொல்றது?” 

அவர் சொன்னது பூபதிக்குப் பிடித்ததோ இல்லையோ அவரது தங்கை வடிவுக்குப் பிடிக்கவே இல்லை. மருமகனாக நாகேந்திரன் சென்றால் இவள் உரிமையோடு அண்ணன் வீட்டிலேயே தங்கிவிடலாம். 

அவர்கள் பழக்கப்படி மகனாக தத்து கொடுத்து விட்டால், அவள் அந்த வீட்டை விட்டுவெகு தூரம் இருக்கும் வேறு ஒரு வீட்டிற்கு குடி பெயர்த்து செல்ல வேண்டும். மகனை தத்துபுத்திரனாக தந்ததற்கு ஈடாக, அவளுக்கு வீடும் நிலமும், ரொக்கமும்  கொஞ்சம் நஞ்சம் அல்ல ஏராளமாகவே அரசு குடும்பத்தினர், அதுவும் அவளது அண்ணன் தருவார்.

ஆனால் இவை அனைத்தும் இருந்தாலும் அவள் ஒரு சாதாரண பிரஜையாகி விடுவாளே! இப்போது இருப்பது போல ராஜாவின் தங்கை என்ற மதிப்போடு இந்த அரண்மனையில் தங்க இயலாதே.

இவர்கள் எல்லோரும் ஒரு கணக்குப் போட, அங்கு சென்னையில், விதி மந்தாகினி ரூபத்தில் வேறு ஒரு கணக்கு போட்டுக் கொண்டிருந்தது.

error: Alert: Content selection is disabled!!