உயிரைத் திருடும் அழகியே 17 – 2

கடவுளே…! இது எல்லாம் அப்பா காதுக்கு எட்டியிருந்தால் என்ன பாடு படுவார்? இல்லையில்லை! எட்டி இருக்கிறது. இல்லாமல் அவள் அழைப்பாள் என்று தெரிந்து எடுக்காமல் இருக்கமாட்டார். நிச்சயமாக! அதுவும் அவளை அப்படி அம்போ என்று விட்டுவிட்டு இருக்க அவரால் முடியாது! மனம் அடித்துச் சொன்னது.

 

வேலைக்குப்போன பொழுதுகளில் யார் அழைத்திருக்கிறார்கள் என்று அவளைக்கொண்டோ தம்பி தங்கையைக்கொண்டோ தினமும் ஃபோனை செக் செய்வது அம்மாவின் வழக்கம்.

 

“ஆத்திரம் அவசரத்துக்கு யாரும் அழைத்து, நாம கவனமில்லாம இருந்து பெரிய பிழை செய்யக்கூடாது.” என்று அதற்கு ஒரு காரணமும் சொல்லுவார். ஆக, அவள் அழைத்தது தெரியாமல் இருக்கப் போவது இல்லை. இருந்தும் திருப்பி அழைக்கவில்லை. அப்போ எல்லாம் தெரிந்திருக்கிறது.

 

முதன் முதலாக முற்றிலும் உடைந்து அழுதாள் பிருந்தா. இந்தப் ஃபோட்டோக்களை பார்த்து அவளே துடித்துப்போனாளே… அப்போ அப்பா?

 

‘ஐயோ அப்பா.. இதுல இருக்கிறதுல அரைவாசை கூட உண்மை இல்லப்பா..’ மனம் அரற்றியது.

 

எத்தனை இலகுவாக ஒரு பெண்ணை கேவலப்படுத்திவிட்டது இந்தச்சமூகம். அவள் தவறானவளாகவே இருந்தாலும் அவளின் குடும்பத்தைப் பற்றியாவது யோசித்து இருக்க வேண்டாமா?

 

‘ஆனாப்பா.. என்ன நடந்தது எண்டு ஒரு வார்த்தை கேக்க மாட்டீங்களாப்பா?’ இப்போதே அப்பாவிடம் இறைஞ்சத் தொடங்கியிருந்தது அவளிதயம்.

 

இதற்குப் பயந்துதானே போகாதே போகாதே என்று சொன்னார். ஐயோ அப்பா… மனம் துடியாய்த் துடித்தது. காற்றோடு காற்றாகப் பறந்துபோய் அப்பாவின் காலடியில் விழுந்து இந்த அளவுக்கெல்லாம் உண்மை இல்லப்பா என்று சொல்லத் துடித்தாள்.

 

மீண்டும் மீண்டும் அவருக்கு அழைத்து அழைத்து ஓய்ந்துபோனாள் பிருந்தா.

 

மற்ற மற்ற எபிசோட்களையும் போட்டுப் போட்டுப் பார்த்தாள். அருகில் இருந்த அவள் அறியாத அவர்களின் அத்தனை முகங்களையும் வெளியுலகம் மொத்தமும் அறிந்து வைத்திருக்கிறது.

 

தனக்குப் பின்னால் அவர்கள் பேசிக்கொண்டவை, அஜய்யின் காதல் நடிப்பு, ஷியாமிடம் அவளைக் குறித்து அவன் பேசியது, ராகவனின் பாச நடிப்பு.. கடவுளே நம்ப முடியவில்லை அவளால்.

 

வீடியோக்களைப் பார்க்கப் பார்க்கத்தான் அவளுக்குப் புரிந்தது, நட்பு என்கிற வார்த்தைக்கு ரிலேஷன்ஸ்ஷிப் என்கிற பெயரைக் கொடுத்து, முதன் முதலாக அவளை அந்தப் பாதையை நோக்கி நகரச் செய்ததே ராகவன் தான் என்று.

 

அதைவிட, தினமும் ஒளிபரப்பட்ட எபிசோட்களைப் பார்த்து அதிர்ந்துபோனாள். நடந்த சம்பவங்கள்தான். ஆனால், அதன் தொகுப்பு வேறு அர்த்தங்களை கற்பித்திருந்தது. மடுவை மலையாக்குவது என்பார்களே. அப்படித்தான் ஒவ்வொரு விஷயத்தையும் காட்டி இருந்தார்கள்

 

எடிட்டிங் என்பது எத்தனை வலிமை மிக்கது என்று அன்றுதான் உணர்ந்தாள் பிருந்தா.

 

ஒரு வீடியோ அன்று காலைதான் பதிவேற்றப்பட்டிருந்தது. சாணக்கியர் என்று தலைப்பிட்டு இருக்க, அஜய்யும் ராகவனும் சிரித்துக்கொண்டு நின்றனர்.

 

எடுத்துப்பார்க்க, ராகவனின் ஆபீஸ் போலும், காரில் புறப்படத் தயாரானவரை மறித்துக் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தது ஒரு யூ டியூப் சானல்.

 

“உங்களுக்கும் பிருந்தாவுக்குமான உறவைச் சொல்லுங்க சார்?” மைக்கை அவர் முன்னே நீட்டிக் கேட்டாள் அந்தப்பெண்.

 

“அவ எனக்குப் பொண்ணு மாதிரித்தான் மா. அதில் மாற்றமில்லை. ஆனா, இது ஒரு ரியாலிட்டி ஷோ. அதைவிட ஒரு கேம். மனிதன் மனிதனோடு விளையாடுற கேம். சோ, ஒருத்தன் முன்னுக்கு வாரதுக்கு இன்னொருத்தன் தான் பகடை. அந்தப் பொண்ணுக்கு அப்பான்னா உயிர். எனக்கும் அவமேல பாசம் வந்தது உண்மை. அதுக்காக பாசப்பயிரு மட்டுமே வளர்க்க முடியாது இல்லையா? கேம்ல போகஸ் பண்ணனும். வின் பண்ணனும். அதுக்காகத்தான வெளியுலகத்தை விட்டுட்டு அந்த ஒரு வீட்டுக்கையே அடைஞ்சு கிடந்தோம். அங்கபோய் உணர்வுகளுக்கு முன்னுரிமை கொடுக்கிறது முட்டாள் தனம். அதே உணர்வுகளை கருவியாக்கி விளையாடி வெல்லுறது புத்திசாலித்தனம்.அவ முதலாவதை செய்தா. நான் ரெண்டாவது செய்தேன். அதனால வெற்றி எனக்கு.” என்று சிரித்தார் அவர்.

 

“எப்படி சேர் இதெல்லாம் கால்குலேட் பண்ணினீங்க?”

 

“சிம்பிள் மா! வயசுப்பசங்க ஒரு ஆணும் பொண்ணும் இருக்காங்க. அவங்களுக்குள்ள அழகான ஒரு ரிலேஷன்ஷிப் உருவாகுது. அப்போ அப்பா காரக்டர் உள்ள வந்தா என்னாகும்? பாக்கிற மக்களுக்கு டென்சன் ஆகிடும். சோ.. அவங்களாவே நம்மளை கவனிக்க ஆரம்பிச்சுடுவாங்க. அப்போ அப்பா காரக்டர் சரியா அங்க நிக்கணும். அப்போதான் அது ரியாலிட்டியா இருக்கும். அதைத்தான் நான் செய்தேன். அஜய் என்மேல கை வச்சது அவனுக்கே தெரியாம அவன் எனக்குச் செய்த ஹெல்ப். அப்போ, அவனைத் தட்டிக் கேக்காம பிருந்தா அழுதது அவ பண்ணின பெரிய தப்பு. அது அவங்களுக்குச் சரிவைக் கொடுத்துச்சு. அந்த கேப்ல நான் முன்னுக்கு வந்துட்டேன்.” என்றார் அவர்.

 

தன் காதால் கேட்பதை நம்ப முடியாமல் அப்படியே அமர்ந்திருந்தாள் பிருந்தா. எத்தனை அழகாகத் திட்டம் போட்டு அவளைக் கவிழ்த்து இருக்கிறார். கண்ணை மூடிக்கொண்டு அப்பாவுக்குச் சமனாக நம்பினாளே.

 

நம்பிக்கைத் துரோகம்… உயிரைக் கொன்றது.

 

“செம்ம ஐடியா சேர்! பக்காவா பிளான் பண்ணி செய்து இருக்கீங்க! அவளின் படுபயங்கரமான தோல்வியை சானல் பெண் பாராட்டிக்கொண்டிருந்தாள். கண்ணீர் வழிய கேட்டுக்கொண்டிருந்தாள் பிருந்தா.

 

“வேற என்னம்மா செய்றது? நான் என்ன அவங்களை மாதிரி சின்னப்பையனா? டாஸ்க்லாம் செய்து திறமையைக் காட்ட? என் வழில நான் முயற்சி செய்தேன். வெற்றியும் கிடைச்சாச்சு.”

 

அவளின் கவனச் சிதறல் அவரின் உயர்வுக்கு வழிவகுக்க, சதுரங்க வேட்டையில் சாதுர்யமாகக் காய் நகர்த்தி வெற்றிக்கொடியை நாட்டியிருக்கிறார்.

 

“வெளில வந்து அவங்களை மீட் பண்ணலையா சேர்?”

 

“எங்கம்மா? மூணுமாதமா பாக்காத வேலை எல்லாம் தலைக்கு மேல இருக்கு. எல்லாத்தையும் முடிச்சிட்டு பாக்கணும்.” என்றவர் மேலும் கேள்வி கேட்க முற்பட்ட பெண்ணிடம், “சரிம்மா, நேரமாச்சு!” என்றுவிட்டு காரில் ஏறிப் போயிருந்தார்.

 

கண்களில் கண்ணீர் வழிய அசையவும் மறந்து அவள் பார்த்திருக்க, அப்படியே தொடர்ந்து அஜய்யிடமும் அதே பெண் கேள்வி கேட்கத் தொடங்கியிருந்தாள்.

 

“வணக்கம் காதல் மன்னா! எப்படி இருக்கீங்க?”

 

அப்படி அவள் சொன்னதுமே வாய்விட்டுப் பெரிதாகச் சிரித்தான் அவன்.

 

“சூப்பரா இருக்கேன். நீங்க?” என்று சிரித்துக்கொண்டே கேட்டான் அவன்.

 

“நாங்கல்லாம் சோகத்துல இருக்கோம் சார். இனி அஜய் வரமாட்டார். பிருந்தா வரமாட்டாங்க. அவங்களோட கியூட் லவ் வராது.” என்றவள், “அது.. நிஜ லவ்வா? இல்ல..” என்று அவள் கேட்டு முடிக்க முதலே மீண்டும் வாய்விட்டுச் சிரிக்கத் தொடங்கியிருந்தான் அவன்.

 

“ஏங்க, ஒரு அழகான பொண்ணைப் பாத்தா வயசுப் பையன் மயங்குவானா மாட்டானா? என்னங்க கேக்கறீங்க?” என்று சிரித்தான் அவன்.

 

“அப்போ மயங்கி இருக்கீங்க. சொல்லுங்க சார், அது இயல்பா வந்ததா இல்ல உங்க பிளானா?”

 

“பாத்ததுமே பிடிச்சது உண்மைதான். அவ அவ்வளவு கியூட்டா இருப்பா. சும்மா சைட் அடிச்சிட்டு இருந்தேன். ஏங்க இருபத்திநாலு மணிநேரமும் ஒரே வீட்டுல இருந்தா போரடிக்காதா? அதுக்காக எதையாவது பண்ணுறதுதான். அப்படி ஆரம்பத்துல விளையாட்டுக்குத்தான் செய்திட்டு இருந்தேன்…” என்று அவன் சொல்லி முடிக்க முதலே,

 

“அப்ப எப்போ சீரியஸா இறங்கினீங்க?” என்று அவசரமாகக் கேட்டாள் அவள். அவளுக்கு அதைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம். இவளுக்கு இங்கே உயிரே போனது. போரடிக்காமல் இருக்க அவள் மனதோடு விளையாடி இருக்கிறான்.

 

ஆயினும் தான் ஏமாந்த கதையை அந்தமும் ஆதியாக அறிந்துகொள்ள வேண்டியிருந்தது. கண்களை மறைத்த கண்ணீரோடு பார்த்திருந்தாள்.

 

“அப்பாவுக்காக யாரையுமே காதலிக்க மாட்டேன்னு சொன்னா இல்லையா, அப்போதான்.” என்று அவன் சொன்னபோது அதிர்ந்தாள் பிருந்தா.

 

ஆக, வேண்டுமென்றே அவளைப் பலியிட்டிருக்கிறான். அப்பா… மனம் அரற்றியது.

 

“அப்படியான பெண்ணைக் காதலிக்க வச்சா, அது மக்களிடையே எப்படி வைரலாக மாறும் என்கிற சின்ன கால்குலேஷன்தாங்க. அதோட, நம்ம மக்கள் பமிலி, லவ், பொண்ணுங்க சென்டிமென்ட் கூடினவங்க. சோ.. அவங்களை என் பக்கம் திருப்ப என்ன செய்யலாம்னு யோசிச்சப்போ இந்த யுக்தி வந்தது. ஒரு பெண்ணை நம்ம பின்னாடி சுத்த வைக்கிறது எப்பவுமே ஆணுக்கான மிகப்பெரிய சவால். அந்த சவாலை சந்தோசமாவே எடுத்துக்கிட்டேன். அதே நேரம் நான் ஹீரோ வெர்ஷிப் அவங்களுக்கு குடுக்கணும். அப்போதான் ஷோ முடியற வரைக்கும் மக்கள் என்னை வச்சிருப்பாங்க. எனக்கும் போரடிக்காம பொழுதும் போகும். நமக்கு பிடிச்ச விஷயத்தை… அதுதாங்க சைட் அடிக்கிறது அதையும் செய்ததும் ஆச்சு… அந்த கேம்ல நாம கடைசி வரைக்கும் இருந்ததும் ஆச்சு.” என்று அவன் சிரிக்க,

 

“ஆளாளுக்கு பக்காவா திட்டம் போட்டு செய்து இருக்கீங்க.”

 

“ஐயோ.. அப்படிலாம் பெருசா ஒண்ணுமில்ல. சும்மா ஜாலி தானே. அதைவிட, காதல்ன்னு பிருந்தாவோ நானோ சொன்னதே இல்லை. சோ.. இது அவ்வளவு சீரியஸான மேட்டரும் இல்ல. வாலிப வயசுல வாழ்க்கையை அனுபவிக்காம காதல் கல்யாணம்ன்னு போக முடியுமா சொல்லுங்க?” என்றவனின் பேட்டி அத்துடன் முடிந்திருந்தது.

 

துடித்துப்போனாள் பிருந்தா. இந்தளவுக்கு அவர்களின் பகடையாகிப் போனாளே. அவ்வளவு தூரத்துக்கா ஏமாந்தாள்? சிறு சந்தேகமே வரவில்லையே. அவ்வளவுக்கு முட்டாளா அவள்? அப்போ இவ்வளவு காலமாக அவளை வழி நடத்திய அந்த சாதுர்யம், புத்தி கூர்மை, தெளிந்த சிந்தனை எல்லாம் எங்கே போய் ஒளிந்துகொண்டது?

 

இதற்குமேலும் எதைப்பார்த்தும் விளங்கிக்கொள்ளும் சக்தியற்றுக் கண்ணீர் உகுத்தாள் பிருந்தா.

error: Alert: Content selection is disabled!!