சதிராடும் சித்திரமே 20 – 2

“என்ன சத்தத்தைக் காணோம். உன் வலைக்குள்ள அவளை விழ வைக்கப் பார்க்கறியா? நடக்காது. கொஞ்ச நாளா அவ எனக்கு ஃபோன் கூட ஒழுங்காப் பண்ணறதில்லை. ஏன்னு கண்டுபிடிச்சுட்டேன். அவளுக்கு முத்தம் தந்தாயாமே” என சந்தோஷ் பேசவும் மித்ரனுக்குத் தூக்கிவாரிப் போட்டது.

 

அவனுக்கும் அவளுக்கும் இடையில் நடந்த முத்தப் பரிமாற்றம். யாருக்கும் தெரியாத ரகசியப் பரிமாற்றம். அதைப் போய் இவனிடம் சொல்லியிருக்கிறாளே. மனப்பெட்டகத்தில் வைத்து இரசித்துப் பூரித்துப் போக வேண்டிய விஷயத்தைப் போய் வெட்ட வெளியில் வேற்றாளிடம் பகிர்ந்து கொண்டாளே.

 

“ஒழுங்கு மரியாதையா அவகிட்டே இருந்து தள்ளியே நில்லு. உன் பணத்தைக் காட்டி இழுக்க முயற்சி செய்யாத. அப்புறம் நான் சும்மா இருக்க மாட்டேன்” எனச் சரமாரியாக அவனைத் திட்டிவிட்டு அழைப்பை வைத்தான் சந்தோஷ்.

 

இப்போது என்ன நடந்தது எனப் பிரமை பிடித்ததை போல் மித்ரன் தன் படுக்கையில் அமர்ந்து தலையைப் பிடித்துக் கொண்டான்.

 

கடைசி முயற்சியாக திவ்யதர்ஷினியின எண்ணை அழுத்த, ‘அந்த வாடிக்கையாளரின் எண் உபயோகத்தில் இல்லை’ எனப் பதிவு செய்யப்பட்டிருந்த செய்தி அவன் செவிகளை எட்டியது.

 

வந்த ஆத்திரத்தில் அவன் தன் அலைபேசியைத் தூக்கி தூர வீசிவிட்டு குளியலறைக்குள் புகுந்து கொண்டான். ‘நாளைக்கு அவள் வரட்டும் உண்டு இல்லை என்று பண்ணிவிடுகிறேன்’ எனக் கோபத்தை இழுத்துப் பிடித்துக் கொண்டு மறுநாள் வரும் திவ்யதர்ஷினிக்காகக் காத்திருந்தான்.

 

அன்றிரவு அவனின் சீற்றம் விழிகளில் உறக்கத்தை அண்ட விடாமல் வெறித்தனமாகத் தட்டி விட்டுக் கொண்டிருந்தது.

 

****

மறுநாள் எப்போதும் போல் வேலைக்கு வந்த திவ்யதர்ஷினியைத் தன் நிறுவனத்திற்குச் செல்லாமல் காத்திருந்த மித்ரனே வரவேற்றான். ஓர் இரவில் அவனுக்குள் நடந்த மாற்றத்தை அறியாதவள் அவனைப் புன்னகையுடன் ஏறெடுத்துப் பார்க்க, அவளை மேலும் கீழும் பார்வையால் அளந்தான்.

 

மீனாட்சி அருகிலில்லை என்பதை ஊர்ஜிதப்படுத்திக் கொண்ட மித்ரன், அவள் கரம் பற்றித் தரதரவென்று அவளை இழுத்துக் கொண்டு பக்கத்தில் இருந்த அலுவலக அறைக்குள் சென்று கதவடைத்தான்.

 

‘என்ன செய்யப் போகிறான்?’ எனப் பயந்து போனவள், “ஐயோ மித்ரன், விடுங்க யாராவது வந்துடப் போறாங்க?” என அப்போதும் அவள் அவனைத் தவறாக எண்ணவில்லை.

 

அவன் கொடுத்த முத்தத்தின் ஈரம் கூட இன்னும் காயவில்லை. அது அவளுக்கு மறந்து போகுமா என்ன? அதற்குள் இவனுக்கு என்ன அவசரம்?

 

அவள் கையைப் பட்டென உதறியவன், “நேத்து நிறையத் தடவை உனக்கு ஃபோன் செஞ்சேன். ஏன் எடுக்கலை?” எனக் மிதமிஞ்சிய கோபத்துடன் வினவினான் மித்ரன்.

 

அலைபேசியை எடுக்காததில் கோபமாக இருக்கிறான் என நினைத்த திவ்யதர்ஷினி, “ஓ அதுவா?” என ஆரம்பித்து அவள் ரயில் நிலையத்திற்குச் சென்ற விவரங்களை பற்றிச் சொன்னாள்.

 

பின்னர் அவர்கள் திரும்பி வருகையில் எப்படியோ அவளது அலைபேசியை ‘பிக்பாக்கெட்’காரன் ஒருவன் திருடிவிட்டான் என்று சொன்னாள்.

 

நேற்றிரவு அவளது எண்ணை முடக்கி அதில் இணைத்து வைத்திருந்த வங்கிக் கணக்கு என அத்தனை கணக்குகளையும் முடக்கி வைத்துவிட்டுத் தூங்குவதற்கு நேரமாகிவிட்டது என்று சொன்னாள்.

 

“எனக்குக் கூப்பிட்டுச் சொல்லி இருக்கலாமே” என மித்ரன் இன்னுமே கோபத்தில் அவளிடம் கேட்க, அவன் உரிமையாய்க் கேட்கிறான் என்று தவறாக எண்ணிக் கொண்டாள் திவ்யதர்ஷினி.

 

முதலில் உரிமையுடன் அவனை அழைத்துப் பேசவே அவளுக்குத் தயக்கமாக இருந்தது. எங்கே அதிக உரிமை எடுத்துக் கொள்கிறாளோ என்று மித்ரன் தவறாக எண்ணிவிடக் கூடாது. அத்தோடு கடந்த இரண்டு நாட்களாக மட்டுமே மித்ரனின் மனதை அறிந்திருக்கிறாள்.

 

அவனிடம் மறுக்கவில்லை என்றாலும் இன்னும் அவள் தன் மனதை முழுவதுமாக அவனிடம் திறக்கவில்லையே. அப்படியிருக்கையில் எப்படி அவனை அழைத்து அவளது அலைபேசி காணாமல் போய்விட்டது என்பதைக் கூறுவாள்?

 

அதை இப்போது அவனிடம் சொன்னால் அவன் மனம் சங்கடப்படும் என்று நினைத்தாள் திவ்யதர்ஷினி. அது மட்டுமல்லாது மித்ரனின் கைப்பேசி எண் அவளுக்கு மனப்பாடமாகத் தெரியாது. பிறகு எப்படி அவனை அழைக்க முடியும்?

 

அந்தக் காரணத்தையே அவனிடம் சொல்லிவிடலாம் என எண்ணி, “எனக்கு உங்க நம்பர் மனப்பாடமாத் தெரியாதே மித்ரன்” என்றாள்.

 

அவள் நினைத்ததற்கு மாறாக மித்ரனின் கோபம் அந்த விண்ணைத் தாண்டி பயணித்தது. மித்ரன் தன் அலைபேசியை நீட்டி, “சந்தோஷூக்கு ஃபோன் பண்ணு” என்றான்.

 

அவனை எதற்காக இப்போது அழைக்கச் சொல்கிறான் எனத் திருதிருவென அவள் விழிக்க, “சொல்றேன் இல்லை. சந்தோஷூக்கு ஃபோன் செய்” என்றான் மித்ரன்.

 

எதற்காக இத்தனை கோபத்தில் இருக்கிறான் எனப் புரியாமல் மித்ரன் நீட்டியதை வாங்கி சந்தோஷின் எண்ணை அதில் அழுத்தினாள்.

 

மறுபக்கம் அழைப்புப் போய்க் கொண்டிருக்க, “என்னோட நம்பர் உனக்கு ஞாபகம் இல்ல. ஆனா சந்தோஷோட நம்பர் மட்டும் நல்லா ஞாபகமிருக்கு” என மித்ரன் கேட்கவும் அவளுக்கு ஐயோவென்று இருந்தது.

 

இவனுக்கு உரிமைப் போராட்டத்தில் கோபம் பொத்துக் கொண்டு வருகிறது என்று நினைத்தாள்.

 

“என்ன மித்ரன் இது? நானும் சந்தோஷூம் சின்ன வயசுல இருந்தே ஒண்ணாப் பழகிட்டு இருக்கோம்” என அவள் சொல்ல, “நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கப் போறதா ஊர்ல பேசிக்கிறாங்க” எனப் பட்டென்று போட்டு உடைத்தான் மித்ரன்.

 

சந்தோஷின் அன்னை ஊர் முழுக்க டமாரம் அடித்துக் கொண்டிருப்பது அவளுக்கும் தெரியும். ஒருவேளை அந்தச் செய்தி இவன் காதுகளுக்கும் எட்டிவிட்டதோ என்று கவலை கொண்டாள்.

 

சரி சந்தோஷை வைத்து நிலைமையை விளக்கச் சொல்லிவிடலாம். முதலில் இவன் கோபத்தைத் தணிக்கலாம் என்று எண்ணி சந்தோஷூக்குச் சென்ற அழைப்பைத் துண்டித்தாள்.

 

‘அது…” என அவள் வாய் திறந்து பேசும் முன்னர், “சரி அதை விடு.. உனக்குக் கட்டட நிறுவனம் ஒன்று தனியா தொடங்கறது பெரிய கனவுன்னு சொன்ன இல்லை?அதுக்கு எல்லா விதத்துலயும் நான் உதவறேன்” என ஒருமாதிரி குரலில் மித்ரன் சொல்லவும், ‘அப்பாடா, கோபம் தணிந்து விட்டான்’ என்றே எண்ணினாள் திவ்யதர்ஷினி.

 

அதைக் கேட்டதும் அவளுக்கு மகிழ்ச்சியில் தலைகால் புரியவில்லை. “நிஜமாவா சொல்றீங்க மித்ரன். ரொம்ப தேங்க்ஸ். இதுக்காக எவ்வளவு நாள் காத்திருந்தேன் தெரியுமா” என்றாள்.

 

அறையின் நிசப்தத்தைக் கிழித்துக் கொண்டு மித்ரனின் அலைபேசி சிணுங்கியது. மித்ரன் அழைப்பை ஏற்றான்.

 

“நான் சந்தோஷ் பேசறேன். நீங்க யாருங்க பேசுறது? மிஸ்டு கால் இருந்தது” எனச் சந்தோஷின் குரல் கேட்க, ஸ்பீக்கர் மோடில் போட்டவன், ‘பேசு’ என்பதைப் போல் மித்ரன் அவளிடம் சைகை காட்டினான்.

 

புருவம் சுருக்கி, அலைபேசியைப் பார்க்க, சந்தோஷ் அழைத்திருக்கிறான் என்று புரிந்தது.

 

“சந்தோஷ், நான் தர்ஷி பேசுறேன். என்னோட ஃபோன் தொலைஞ்சு போச்சு” அவள் சொன்னது தான் தாமதம், “தர்ஷி என்னை மறந்துட்ட இல்ல? இத்தனை நேரம் கூப்பிடவே இல்லைன்னதும் எனக்குக் கவலையாப் போச்சு” என்றான்.

 

“சந்தோஷ், நம்ம ரெண்டு பேரும் காதலிக்கிறதும் திருமணம் செய்யப் போறதும் எல்லாமே…” என அவள் முடிக்கும் முன்னரே,

 

“தர்ஷி, நானே அதைப் பத்தி சொல்லனும்னு இருந்தேன். ஒரு பத்து பதினைஞ்சு நாள்ல நான் சென்னைக்கு வர்றதா இருக்கேன். நம்ம நிச்சயத்தை அப்போ வச்சுக்கலாமா? நம்ம நிச்சய மோதிரம் கூட ரெடியா இருக்கு. அம்மாவும் நானும் போய் வாங்கினோம். உனக்கு ஃபோட்டோ அனுப்பி வைக்கிறேன் பார்க்கிறியா?

 

அப்புறம் உனக்காக நிறையப் பரிசு பொருட்கள் இங்க டெல்லில வாங்கி குவிச்சு வச்சிருக்கேன். சக்தி இருந்தா இப்போவே பறந்து வந்துருவேன்” என அவன் சொல்லவும், திவ்யதர்ஷினி திடுக்கிட்டுப் போனாள்.

 

‘இவனுக்கு மூளை பிசகிவிட்டதா என்ன? ஏன் இப்படிப் பேசுகிறான்?’ என அதிர்ந்தவள், “சந்தோஷ், விளையாடாம தெளிவாப் பேசு” என அதட்டினாள்.

 

“நான் விளையாடாம யாரு உன்கிட்டே விளையாடுவா தர்ஷி? கல்யாணத்துக்கு முன்னாடியே இப்படியெல்லாம் அதட்டறியே, இது நியாயமா? கல்யாணத்துக்கு அப்புறம் பார்த்துப் பதமா இதமா நடந்துக்கோ. எனக்கு இப்பவே பயமா இருக்கு. அம்மா வேற உனக்குத் தான் சப்போர்ட் பண்ணுவாங்க. எனக்குக் கண்ணெல்லாம் கட்டிட்டு வருது” என மீண்டும் கிண்டலாகப் பேசினான் சந்தோஷ்.

 

“சந்தோஷ்…” என அவள் மீண்டும் ஏதோ சொல்ல வரவும், “தர்ஷி நைட் மாமாவோட நம்பருக்குக் கூப்பிடறேன். எனக்கு இப்போ அவசரமாப் போகணும். பிளீஸ்டா கோவிச்சுக்காத” என முத்தம் ஒன்றைப் பதித்துவிட்டு அழைப்பை வைத்தான் சந்தோஷ்.

 

பேய் அறைந்ததைப் போல் அலைபேசியையே உறுத்து விழித்தாள் திவ்யதர்ஷினி. இவன் என்ன அப்படியே மாற்றிப் பேசுகிறான். ஒருவேளை அத்தை அருகில் இருப்பதால் அப்படிப் பேசுகிறானோ எனச் சந்தேகம் வர முகம் தெளிந்தாள்.

 

ஆனால் அடுத்த நொடியே அவளின் முகம் மீண்டும் கூம்பிப் போனது. பின்னே அவர் மட்டும் அருகில் இருந்திருந்தால் இப்படி முத்தமெல்லாம் அலைபேசியில் கொடுத்திருக்க வாய்ப்பே இல்லையே.

 

இவனுக்கு என்ன ஆகிவிட்டது என அப்படியே சமைந்து போய் நின்றிருந்தாள் திவ்யதர்ஷினி.

error: Alert: Content selection is disabled!!