ஜேகேக்கு புரிந்தது, தான் நடித்த காட்சியை வைத்தே தன்னைத் தாக்குகிறாள் என்று. வாயை மூடிக்கொண்டு அவன் அமர்ந்திருக்க, “ஹல்லோ மேடம்! எங்க பாஸ நாய்ன்னு சொல்லாதீங்க. அவருக்குக் கோபம் வந்திடும்!” என்றான் விமல்.
தலையில் அடித்துக்கொள்ளலாம் போலிருந்தது ஜேகேக்கு.
‘அவ சும்மாவே ஆடுவா. இவன் எடுத்துவேற குடுக்கறான்.’
“எங்க கோபம் வரல? கோபப்பட சொல்லுங்க. தில் இருந்தா என் கூட சண்டை பிடிக்கச் சொல்லுங்க. ஒத்தைக்கு ஒத்தை நிக்க சொல்லுங்க. செய்யமாட்டார். ஏன்னா என்னைக் கண்டா அவ்வளவு பயம். நடுங்குவார். காச்சட்டையோட உச்சா போயிடுவார் தெரியுமா?” அவள் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே சட்டென்று அங்கிருந்து எழுந்துபோனான் ஜேகே.
அவனால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. காச்சட்டையோட உச்ச போவேனாம்.. ஹாஹா! இவளை… ஒரு கைக்கு அடங்குவாளா? பயந்து நடுங்கி பூனை மாதிரி இருந்தவ என்ன பேச்சு பேசுறா!
இதுக்கெல்லாம் காரணம் நீ குடுக்கிற இடம் தான்டா என்று உச்சி மண்டையிலேயே போட்டது மனச்சாட்சி!
என்ன செய்ய? அவளின் முன்னால் அவன் தன்பலம் இழந்துகொண்டுதான் போகிறான். சின்ன வெட்கம் முளைக்க, கேசம் கோதிக்கொண்டு சிரித்தான் ஜேகே!
அவளைத் திரும்பிப் பார்த்தான். விமலும் அவளும் மும்முரமாகச் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். ‘இவன் வேற அவ வாயக் கிண்டி விட்டு என்ன நல்லாவே டாமேஜ் பண்ண வைக்கிறது. பிறகு பாஸ் உங்களை அப்படிச் சொல்லுறாங்க இப்படிச் சொல்லுறாங்க என்று உசுப்பேத்துறது!’
“விமல்!” என்று இங்கிருந்தே சத்தமாக அழைத்தான்.
அவன் சண்டையை இடையில் விட்டுவிட்டுத் திரும்பிப் பார்க்க, “அந்தப் புள்ளபூச்சிய நசுக்கிட்டு இங்க வா!” என்று சொல்லிவிட்டுப் பக்கென்று முகத்தைத் திருப்பிக்கொண்டான்.
இல்லாவிட்டால் அவளின் முறைப்பைச் சிரிக்காமல் கொள்ளாமல் எதிர்கொள்ள வேண்டுமே!
விறுவிறு என்று வந்த விமல், “எவ்வளவு மோசமா உங்களைப்பத்தி பேசுறாங்க பாத்தீங்களா பாஸ்?” என்றான்.
“நீ ஏன்டா அவ பேசுறதுக்கு எல்லாம் காது குடுக்கிற. பாக்கிற வேலையை பார்!” என்றான் ஜேகே.
அவளைத் திட்டாமல் தன்னைத் திட்டுகிறான் என்று முகத்தைச் சுருக்கினான் விமல்.
“வரவர அவங்களுக்கு நீங்க ரொம்பவே இடம் குடுக்கிறீங்க பாஸ்!”
“சீக்கிரமா கண்டு பிடிச்சிட்ட!” நக்கலாகச் சொன்னான் ஜேகே.
‘நான் புள்ளபூச்சியாடா உனக்கு? உன்ன என்ன செய்யிறேன் பாரு!’ என்று ஜேகேயிடம் சண்டையிட வந்துகொண்டிருந்தவளின் கண்களில் பட்டான் அர்ஜுன். அத்தனை துள்ளலும் வடிந்தது. அப்படியே நின்றுவிட்டாள். எல்லாம் முடிந்தது என்று பார்த்தால்… இவன் வேற!
மனம் சலித்துப்போயிற்று! முடிந்தவரை தூரத்தள்ளி வைத்துவிட்டாள். பிறகும் விடாமல் பின்னால் வருகிறவனை என்ன செய்வது?
இன்றோடு இதை முடித்துவிட வேண்டும். அப்பா சமாதானமாகி வந்திருக்கும் நேரத்தில் இவன் மீண்டும் ஆரம்பித்தால் இன்னுமொருமுறை பட அவளால் முடியாது.
அவள் கல்லாக இறுகிப்போன முகத்துடன் நிற்க, அவன் வெகு தீவிரமான முகபாவத்தோடு அவளை நெருங்கினான்.
“உன்கிட்ட பேசணும் அனு…”
பேசமுடியாது போடா! என்று துரத்திவிடத்தான் ஆசை. ஆனால், ஒரு காலத்தில் காதலித்துத் தொலைத்துவிட்டாளே.
“போ அர்ஜுன்! வரேன்!” அவனுடன் சேர்ந்து நடக்கக் கூடப் பிடிக்காமல் முன்னால் அனுப்பி வைத்தவளுக்கு, என்ன பேசுவானோ என்று தலைவலியாக இருந்தது.
மீண்டும் காதல் கீதல் என்று எதையாவது சொல்வானோ என்று நினைத்தாலே மனமெல்லாம் கூசியது. அவனைத் தனிமையில் சந்திக்க உண்மையிலேயே அஞ்சினாள். ஏடாகூடமாக எதையாவது கதைத்தால் அவளால் முடியாது! என்ன செய்யலாம்? இப்பவெல்லாம் அவளின் ஆபத்பாந்தவன் ஜேகே தானே? ஓடிப்போய் அவன் முன்னால் நின்றுகொண்டு, “அர்ஜுன் கதைக்கணுமாம். நீங்களும் என்னோட வாங்க ஜேகே.” என்று அழைத்தாள்.
“அதெல்லாம் முடியாது. தேவையான நேரமெல்லாம் எங்க பாஸ வச்சு வேலை வாங்குறது. பிறகு அவரையே கேலி பண்ணுறது. அவர் வந்தாலும் நான் விடமாட்டேன்.” என்றான் விமல்.
“இருக்கிற சினத்துக்கு ஏதாவது கதைச்சீங்க… இந்த மலைல இருந்து தள்ளி விட்டுடுவன். பேசாம இருங்க.” என்று அவனிடம் சீறிவிட்டு,
“அந்த லூசு தனியாப் பேசணுமாம். எனக்கு விசராக் கிடக்கு. நீங்க எதுவுமே கதைக்க வேண்டாம். துணையா என்னோட வந்து நில்லுங்க. நீங்க நின்னா மனசுக்குத் தைரியமா இருக்கும்; வாங்க ஜேகே. இன்றைக்கு அவனுக்கு ஒரு முடிவு கட்டணும்.” என்றாள் அவள்.
என்ன சொல்கிறோம் என்று புரிந்துதான் சொல்கிறாளா என்று பார்த்தான் ஜேகே. அவளோ அது எதையும் உணராமல், “வரச்சொன்னா வாங்க ஜேகே!” என்று அடம் பிடித்துக்கொண்டிருந்தாள்.
ஜேகேயோ, “லவ்வர்ஸ் பேசுற இடத்துல நமக்கு என்ன வேல?” என்றான் விமலிடம்.
“அதானே பாஸ். நீங்க போகாதீங்க.”
“இதுக்குமேல ஏதாவது சொன்னீங்க வாயிலையே குத்திடுவேன் ஜேகே. என்னைக்கோ தெரியாம என் தலைல நானே மண்ணை அள்ளிப் போட்டது. இன்னும் போகல. இன்னைக்குப் போக வைக்கணும். ஜேகே பிளீஸ் வாங்க.” கெஞ்சியவளின் கண்கள் மெல்லக் கலங்கிப் போயிற்று!
உலகமே பார்க்கும் ஷோவில் செய்யவேண்டிய முட்டாள் தனம் அனைத்தையும் துணிந்து தனியொருத்தியாக நிகழ்த்திவிட்டு, அதிலிருந்து வெளியே வருவதற்குத் துணை தேடுகிறாள். தேவையா இதெல்லாம்?
அவளையே பார்த்திருந்தவன் என்ன நினைத்தானோ, “வா!” என்று அவளுடன் நடந்தான்.
இதை எதிர்பாராத அர்ஜுன் முகத்தைச் சுளித்தான்.
“எதுக்கு இவரையும் கூட்டிட்டு வந்த?” சற்றுக் கோபமாகக் கேட்டான் அவன்.
‘எந்த உரிமைல கோபப்படுறானாம்?’ பற்றிக்கொண்டு வந்தது அவளுக்கு. ஆனால், எல்லாம் சுமூகமாக முடிந்ததுபோல இவனையும் சமூகமாகவே வெட்டிக்கொள்ள விரும்பினாள். இனியாவது அவள் முழு நிம்மதியை அனுபவிக்க வேண்டும்.
ஜேகேயோ, ‘முடிஞ்சா என்னை அசைச்சுப்பாருடா!’ என்பதுபோல் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்துகொண்டு, தலைக்குப்பின்னே கைகள் இரண்டையும் கோர்த்தபடி கண்களை மூடிக்கொண்டான்.
“அவர் என்னோட வெல்விஷர். அவர் இருக்கிறதால ஒரு பிரச்சனையும் இல்ல. நீ சொல்ல வேண்டியதை சீக்கிரமா சொல்லு அர்ஜுன். எனக்கு நேரமில்லை.” ஜேகேயின் அருகில் நின்றுகொண்டு அவளும் இறுக்கமாகவே பேசினாள்.
“நம்ம எதிர்காலம் பத்திப் பேசலாம்னு வந்தா நீ நேரமில்லை என்று சொல்லுற.” தன் அதிருப்தியை வெளிக்காட்டினான் அர்ஜுன்.
“நம்ம எதிர்காலமா? இது என்ன புதுக்கதை?”
ஏளனமாகக் கேட்டவளின் கேள்வியில் அவன் கொஞ்சம் தழைந்தான்.
“உன் கோபம் எனக்குப் புரியுது அனு. ஆனா, என்னால உன்ன மறக்க முடியல. உனக்கும் அப்படித்தானே? இல்லனா இவ்வளவு காலமும் தனியா இருப்பியா?”
அவன் பேச்சில் அவளுக்குப் பற்றிக்கொண்டு வந்தது. ‘உன் மூஞ்சியப் பாக்கவே பிடிக்கலடா மாடு!’ என்று கத்தவேண்டும் போலிருந்தது. இதில் காதல் பார்வை பார்க்கிறானாம். அருவருத்தது அவளுக்கு.
“மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடாத அர்ஜுன். நான் ஒரு நடிகை. திருமணம் நடந்தா சான்ஸ் வர்றது கம்மி ஆகிடும். அது மட்டுமில்ல, கல்யாணம் பண்ணிக்கிற ஐடியா எனக்கு இல்ல. இதுதான் காரணமே தவிர நீ இல்ல.” தெளிவாக அவள் சொன்னாலும் கேட்பேனா என்று நின்றான் அவன்.
“ஐடியா ஏன் இல்லாம போச்சு? என்னைக் காதலிச்ச மனசால இன்னொருத்தனை நினைக்க முடியாமப் போனதால தானே?”
உண்மையோ? அவளாலும் சட்டென்று பதிலிருக்க முடியவில்லை. எல்லா பெண்களுக்கும் இருக்கும் திருமணம் மீதான ஈர்ப்பு, கனவெல்லாம் அவளுக்குள் இப்போது இல்லையே! ஆனால், ஒரு காலத்தில் இருந்ததே!
கால்மாற்றி அமர்ந்துகொண்டான் ஜேகே.
“அப்படினு உன்கிட்ட நான் சொன்னேனா அர்ஜுன்?” ஒருகணமேயென்றாலும் அவள் தயங்கிவிட்டுச் சொன்னதில் அவனுக்குச் சந்தோசமே!
“நீ சொல்லாட்டியும் எனக்குப் புரியும் அனு. ஏன்னா உன் மனசுக்க இருக்கிறது நான். நம்ம காதல் ஒன்னும் சாதாரணமானது இல்ல.” காதல் வசனத்தை மிகச் சிறப்பாகப் பேசினான் அவன்.
“ஓ.. நாம காதலிச்சோமா என்ன? இல்ல, என்னைக் காதலிக்க வச்சியா?” அவள் கேட்ட கேள்வியில் அதுவரை சிலைபோல அமர்ந்திருந்த ஜேகே நிமிர்ந்து அவளைப் பார்த்தான்.
அதுவரை நேரமும் கண்களை மூடிக்கொண்டு தியானத்தில் இருப்பவன் போன்று இருந்தவன் இப்போது எதற்குப் பார்க்கிறான்? முதலில் என்னமாதிரியான பார்வை இது?
அவன் கண்களில் இருந்து எதையுமே கண்டுபிடிக்க முடியவில்லை அவளால்.
ஒன்றை ஒன்று கவ்வி நின்ற அவர்களின் விழிகளைக் கண்டு உள்ளுக்குள் கொதித்தான் அர்ஜுன்.

