8
வார இறுதி நாட்களில், அநேகமாகக் காலை வேளையிலோ அல்லது மாலையிலோ, ‘ஹெய்லோ’ என்ற இடத்தில் அமைந்திருக்கும் மாதாவின் ஆலயத்துக்குப் போகும் வழக்கம், இங்கு வாழும் தமிழ் மக்களிடையே இருப்பது போலவே ரஞ்சன், வசி குடும்பங்களுக்கும் உண்டு.
அன்று சனிக்கிழமை! மதிய உணவின் பின் ஆலயம் சென்றுவிட்டு, திரும்பி வரும் வழியில் சுமியின் வீட்டுக்கும் போய் வரலாம் எனத் திட்டமிட்ட இந்திரன் குடும்பத்தோடு, அன்று வேலையில்லாததால் நிதியும் இணைந்து கொண்டாள்.
காரில் செல்வதானால், அவர்கள் இடத்தில் இருந்து கிட்டத்தட்ட ஒருமணிக்கும் மேல் வேண்டும், அத்தேவாலயத்தை சென்றடைவதற்கு.
சுற்றிலும் ஓங்கி வளர்ந்த மரங்களைக் கொண்டு பராமரிக்கப்பட்டு வரும் காடு போன்ற பரந்த நிலப்பரப்பில், பெரிதும் சிறிதுமாய் இருமாதா ஆலயங்கள் அமைந்துள்ளன.
எக்குழம்பிய மன நிலையையும், அவ்வாலயத்தின் அமைதியும் அந்த இடத்தின் பசுமையான சுழலும் நிச்சயமாய் விரட்டிவிடும் என்பதால் தான், வேறெங்கும் போகாவிடினும் இங்கு செல்லக் கிடைக்கும் சந்தர்ப்பங்களை இவள் ஒரு போதும் தவற விடுவதில்லை.
பனிப்பொழிவு நின்றிருந்தாலும், ஊசியாய்க் குத்தியது குளிர். அதுவும் வேகமாக வீசும் காற்று, குளிரை இன்னும் அதிகமாக உணரச் செய்துகொண்டிருக்க, காரை இந்திரன் ஓட்ட அவரருகில் புவனியும் பின் பக்கத்தில் ரஞ்சன், ரதீஷ், நிதியும் அமர்ந்து ஆலயத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.
ரஞ்சனும் ரதீஷும் தங்கள் கைபேசியில் எதையோ தட்டிக் கொண்டிருக்க, வெளியே பார்த்துக்கொண்டு வந்த நிதிக்குச் சென்ற ஞாயிறு மாலை வீட்டில் நடந்ததே மீண்டும் மீண்டும் நினைவில் வலம் வந்தது.
இந்த ஒரு கிழமையில், பலதடவைகள் அன்று நடந்தவையுடன் மனதில் வலம் வந்து விட்டாள் அவள்.
காரணம்…வசி! அவன், அவள் மீது காட்டும் அக்கறை! அவளுக்காக அவள் மீதே கோபம் கொள்ளும் அவன் குணம்!
எல்லாவற்றுக்கும் மேலாக ‘உனக்காக எதையும் செய்ய நான் இருக்கின்றேன்.’ என்ற வகையில் அவன் அவளிடம் நட்புக்கரம் நீட்டியதும், அதையே செயலிலும் காட்டுவதும் தான்.
தத்தளித்துக் கொண்டிருந்த அச்சின்னப்பெண்ணிற்கு இது பெரும் ஆறுதலாய், என்றுமில்லாதவாறு அவள் மனதில் மிகவும் இலேசாய் ஒரு நிம்மதியுணர்வு பரவ பேருதவி செய்தது.
தன் மனதில் உள்ளவற்றை, தன் பிரச்சனைகள் எதையுமே அவனிடம் தயங்காமல் கொட்டி விடலாம் என்ற நம்பிகையை அவன் தந்ததே இதற்கெல்லாம் மூலகாரணம் என்று நினைத்துக்கொண்டவள், அவன் நினைவு ஏற்படுத்திய சிறு முறுவலோடு அன்றைய நிகழ்வினுள் ஆழ்ந்தாள்.
அன்று வசி கோபித்துக்கொண்டு செல்ல, அவனைத் தடுத்துக்கொண்டு ரஞ்சன் பின்னால் செல்ல, எதுவுமே பேசாமல் மேலே தன்னறைக்குள் சென்றவளுக்கு, அதுவரையிலும் பெரும்பாடுபட்டு அடக்கிக் கொண்டிருத்த கண்ணீர் சூடாய் வழிந்தது.
கையிலிருந்த கைப்பையை கட்டிலில் போட்டுவிட்டுக் குப்புறவிழுந்து தேற்றுவாரின்றி அழுதாள்.
ஒவ்வொருமுறையும் போல, இன்றும், அவள் மாமி சொன்ன ஒவ்வொரு சொல்லும் முள் அம்புகளாக அவள் மனத்தைத் தைக்கத் தவறவில்லை! அதன் வலி பழகியதொன்றாக இருந்தாலும், என்றும் போல் இப்போதும் வேதனையில் துடித்துப் போனவள், அதிலிருந்து மீள வழிதெரியாமல் சிறிது நேரம் அழுத வண்ணம் இருந்தாள்.
பிறகு, ‘‘அறைக்குள்ள இருந்து என்ன செய்யிற?’’ என அதற்கும் திட்டுக் கிடைக்கும் என்பதால், எழுந்து குளியலறை சென்று குளித்து வீட்டுடைக்கு மாறிக் கீழே சென்றாள்.
அப்போதும், சமையலறையில் அமர்ந்திருந்து ரஞ்சனும் வசியும் ஏதோ வாக்குவாதம் செய்து கொண்டிருந்தனர்.
அவர்கள் முகங்களே அவர்களின் மனநிலையை எடுத்துக் காட்ட, தன்னை வெகுவாய் தேற்றிக் கொண்டாள் இவள். எதுவுமே நடக்காத மாதிரிச் சென்று, ‘‘உங்களுக்கு டீ…காஃபி ஏதும் வேணுமா?’’ பொதுவாகக் கேட்டபடி, மேடையில் பிட்ஸா தயாரிக்கத் தயாராய் வைக்கப்பட்டிருந்த பொருட்களை பார்த்தவளுக்கு, எவ்வளவு அடக்கியும் கேளாமல் திரும்பவும் கண்கள் கலங்கின.
தன் மாமி திட்டுவதற்கெல்லாம் சேர்த்து, வட்டியும் முதலுமாக, ஏன் அதற்கும் மேலாக ரஞ்சன் தன் மேல் காட்டும் அக்கறையை, ஒவ்வொரு விடயத்தையும் பார்த்துப் பார்த்துச் செய்வதை எண்ணி வழிந்த விழிநீரை அவர்களுக்குக் காட்டாமல் மறைத்துக் கொண்டாள் அவள்.
‘இன்றைக்கு மாமிட கோவத்துக்கு இதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கும். இந்த ரஞ்சனுக்கோ எவ்வளவு சொன்னாலும் விளங்கிறதில்ல. எனக்கு உதவி செய்யிறன் என்று நினைச்சுக்கொண்டு இவர் செய்யிற வேலையால தேவையில்லாமல் பிரச்சனை.’ என்று நினைத்தவள், நேரமாகிவிட்டதால் பிட்ஸாவைத் தயாரிக்க ஆயத்தமானாள்.
தான் கேட்டதற்கு இருவருமே பதில் எதுவும் சொல்லாமல், தங்களுக்குள் தன்னைக் குறித்து வாதாடுவதைக் கேட்டவாறே கொஞ்சநேரம் பொறுத்துப் பார்த்தவள், அவர்கள் இருவருமே நிறுத்தும் எண்ணமின்றி வாக்குவாதப்படுவதைப் பார்த்து எரிச்சலடைந்தாள் என்று தான் சொல்ல வேண்டும்.
‘இப்ப ஏன் இவர் இவ்வளவு கோவப்படுறார்? தேவையில்லாமல் மாமியோட கதைக்க…அதுக்கும் மாமி என்னட்டத்தான் கத்துவார். அதுதானே மாமா, ரஞ்சன் எல்லாரும் பேசாமல் இருக்கிறவை.’ என, வசியின் கோபம் பற்றி நினைத்தவள், பின் ஒரு முடிவுடன் அவர்களை நோக்கித் திரும்பினாள்.
‘‘ஹலோ! போதும் போதும் நிப்பாட்டுங்க! மேல அவையளே இந்தக் கதையை விட்டுட்டு வேற கதை கதைக்கீனம். நீங்க ரெண்டு பேரும் திரும்பவும் ஆரம்பிச்சு வைக்கப் போறீங்களா?’’ என்றபடி, வசியை வெட்டும் பார்வை பார்த்தாள்.
‘‘காஃபி வேணுமா என்று கேட்டன், பதிலே இல்லை.’’ என்றவளைக் கூர்ந்து பார்த்தான் வசி. அவள் கண்களின் சிவப்பே மேலே என்ன நடந்திருக்கும் என்று சொல்லிவிட, இப்போது எதுவுமே நடக்காத மாதிரிச் சாதாரணமாகக் கதைப்பதைப் பார்த்து மிகுந்த எரிச்சலே கொண்டான் அவன்.
’எல்லாம் இவளால தான். எவ்வளவு திட்டினாலும் எருமைமாடு மாதிரிக் கொஞ்சமும் எதிர்ப்புக் காட்டாமல் பேசாமல் இருக்கிறாளே! பிறகு எப்பிடி சித்தி நிப்பாட்ட நினைப்பார்? இவளுக்கு இப்பிடியே வருடக்கணக்காக இருந்திருந்து பழகீட்டுது. சித்தியின்ட ஏச்சுப் பேச்சு எல்லாம் சந்தோசமாப் பாராட்டுற மாதிரிக் கேட்குதாக்கும், சரியான…லூசு!’ மனத்தில் கோபத்துடன் நினைத்துக்கொண்டே அலுப்பாகத் தன் தலையில் தட்டிக் கொண்டான்.
‘‘என்ன, தலையில பூச்சி ஏதும் விழுந்திட்டுதா?’’ வசியின் செயலைப்பார்த்ததும் கேலி செய்து நிலைமையை இயல்பாக்க முனைந்தாள் அவள்.
அதில், அவன் எரிச்சலே அதிகமாகியது!
‘‘நீரும்…உம்மட சாப்பாடும் காஃபியும். எனக்கு ஒரு மண்ணும் வேணாம் ரஞ்சன். நான் போய்ட்டு வாறன்.’’ விருட்டென்று இருக்கையை விட்டு எழ, சட்டென்று அவன் முன்னே வந்து அவனை மறித்தவாறே நின்றுகொண்டாள் நிதி.
‘‘இங்க பாருங்க, நாங்க ஒன்றும் மண் சாப்பிடுற ஆட்கள் இல்லை. உங்களுக்குத் தான் அது சாப்பிடுற பழக்கம் போல! அதுசரி, உங்களுக்கு இப்ப என்ன தான் பிரச்சினை? வரேக்க நல்லாத்தானே வந்தீங்க?’’ அதட்டலாகக் கேட்டாள்.
‘‘ஏன் உமக்கு தெரியாதா? உம்மைப் போல சூடுசுரணை இல்லாமல் என்னால இருக்க முடியாது.’’ திருப்பி எகிறினான் அவன்.
ரஞ்சனோ, மலைப்பாக அவர்கள் இருவரும் போடும் சண்டையைப் பார்த்துக் கொண்டிருந்தவன், ‘என்னடா இது, இவையள் ரெண்டு பேரும் எப்போதும் இப்பிடிக் கதைச்சுக்கொள்ள மாட்டீனமே! அதுவும் நிதியோ…அண்ணா கதைச்சா பதில் சொல்லாமல் நழுவுவாள்; இன்றைக்கு என்ன மல்லுக்கு நிற்கிறாள்?’ என நினைத்தவாறே குறு குறுவென்று பார்த்தான்.
ரஞ்சனின் பார்வையைப் புரிந்து கொண்ட நிதி, மெல்லிய புன்னகையுடன், ‘‘என்னடா இவையள் ரெண்டு பேரும் ப்ரெண்ட்ஸ் போல அடிச்சுக் கொள்ளீனம் என்றா பார்க்கிறீங்க? பார்த்தீங்களா உங்களுக்குச் சொல்ல மறந்திட்டன்; போனாப் போகட்டும் என்று இன்றைக்குக் காலமையில இருந்து இவரைப் என்ர ஃப்ரெண்டா ஏற்றிருக்கிறன்; அதால தான் கொஞ்சம் துள்ளுறார்.‘’ திரும்பவும் கேலியாகவே சொன்னாள்.
அவள் ஒரு போதும் இப்படி இலகுவாகக் கதைப்பதைக் கண்டிராத இருவருமே, தங்கள் கோபத்தை விட்டுவிட்டு இலேசாக புன்னகைத்துக் கொண்டனர்.
‘‘நீர்…அதுவும் என்னை…போனாப் போகுது என்று…காலம்டா வசி உனக்கு! இப்படிச் சின்னன் பொன்னன் எல்லாம் கிண்டல் கேலி செய்யவேணும் என்று இருந்தால் அதை யாரால மாற்ற முடியும்? ம்ம்ம்.’’ விரிந்த முறுவலுடன் சொன்னான் வசி.
இதைக் கேட்டிருந்த ரஞ்சனோ, ‘‘அண்ணா நீங்க உண்மையாகவே லக்கி!’’ ஏக்கம் குரலில் தொனிக்கச் சொன்னவன், தான் சொன்னதும் தன் பார்வையைத் தவிர்க்கும் நிதியைச் சில கணங்கள் பார்த்திருந்துவிட்டு,
‘‘சரி நிதி…நீர் மூன்று பேருக்கும் காஃபி போடும்; நான் பிட்ஸாவுக்குத் தட்டுறன்.’’ என்று சொல்லி, அவள் பதிலை எதிர்பாராமலேயே பிட்ஸாத் தட்டை எடுத்து, மா உருண்டையைத் தட்டில் வைத்து மெல்லிதாகத் தட்டத் தொடங்கினான்.
அதைப் பார்த்த நிதி, ‘‘எல்லா வேலையும் நீங்களே செய்யிறீங்க, சொன்னாலும் கேட்காமல்….’’ என்றபடி காஃபியை ஊற்றத் தொடங்கினாள்.
திரும்பவும் சோஃபாவில் அமர்ந்து, அவர்கள் இருவரும் கதைத்துக் கொண்டு வேலை செய்வதையே பார்த்துக் கொண்டிருந்தான் வசி.
பின்னர் எல்லோரும் சாப்பிட்டு முடித்துக் கிளம்பிச் செல்லும் வரைக்கும் தன் சித்தியைத் தவிர்த்தான் வசி. அவன் பாராமுகத்தைக் கவனித்த புவனி, ‘ம்ம்ம்…இவளைப் பேசியதைக் கேட்டிருக்கிறான் போல. ரஞ்சனும் இவனும் ஏன் தான் இவளுக்காக இப்படி வக்காலத்து வேண்டுறான்களோ தெரியேல்ல!’ என மனதில் சலித்தாலும், ஓரிரு முறை வலியக் கதைத்ததற்கும் அவன் சரியாகப் பதில் சொல்லவில்லை.
அவர்கள் கிளம்பிச் சென்ற பின்னரும் நிதியை ஒரு மூச்சு ஆசை தீரத் திட்டித் தீர்த்தார் புவனி.
தன் அக்காவின் செல்லமகன், அவருக்கும் செல்லம்! அப்படிப்பட்டவன் நிதிக்காகத் தன்னுடன் முகம் திருப்பியது அவருக்குப் பெரும் சினத்தைக் கொடுத்தது.

