அத்தியாயம் – 21
சந்தோஷ் பேசுவதைக் கேட்ட மித்ரனுக்குக் கை காலெல்லாம் சினத்தில் உதறலெடுக்க ஆரம்பித்தது. அவனின் கைமுஷ்டி இறுகியது. மனதில் ஏற்கனவே விழுந்திருந்த நெருப்புத் துண்டமொன்று திகுதிகுவென்று பற்றி கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது.
அவன் சொல்வது உண்மையா? கிஷோர் சொன்னதைப் போல் இவளும் தன்னிடம் உண்மையாகப் பழகவில்லையா? பணத்திற்காக, அல்லது, வாய்ப்புக்காக, சந்தர்ப்பவாதியாக மாறிவிட்டாளா? அவன் மனம் துடியாய்த் துடித்தது. உள்ளுக்குள் இரத்தம் கொதித்தது.
அவளைப் பார்த்ததும் அவள் மேல் ஈர்ப்பு தோன்றி படிப்படியாக அவள் மேல் அன்பு வைத்து காதலையும் வளர்த்தானே. அவளிடம் தன் மனத்தை திறந்து காட்டினால் இப்படிச் சம்மட்டியை வைத்து ஒரே அடியாகத் தாக்கிவிட்டாளே.
அவனுக்கு மட்டும் ஏன் இப்படியே தொடர்ந்து நடக்கிறது? வத்சனும் உண்மையாகப் பழகவில்லை. அவன் பாட்டியும் தன் அன்னையின் மேல் இருக்கும் வன்மத்தில் போலியாக நடந்து கொண்டார். இதனால் அவன் மனம் உடையும் என்று கொஞ்சமாவது நினைத்தார்களா? ஆற்றாமையில் அழுதது ஊமை நெஞ்சம்.
இப்போது தான் உயிராய் நினைத்தவளும் இப்படித் தன்னை ஏமாற்றத்தில் தள்ளிவிட்டாளே. அவன் மனம் வேதனையிலும் வலியிலும் மூழ்கித் தத்தளித்தது. பொங்கிய ஆற்றாமையைக் கட்டுப்படுத்த மிகவுமே பிரயாசைப்பட்டுப் போனான்.
“தொழில்ல முன்னேறணும்னா உன்னோட உழைப்பையும் அறிவையும் வச்சு முன்னேறு திவ்யதர்ஷினி. எதுக்காக நாடகமாடி என் வீட்டுக்குள்ள வந்த? என்னோட தொழில் இரகசியத்தைத் திருடலாம்னு வந்தியா? நீ என் அறைக்குள்ள போனப்பவே எனக்குச் சந்தேகம் வந்திருக்கணும்.”
ஆத்திரத்தைக் கட்டுப்படுத்த இயலாமல் மித்ரன் திடீரென்று சீற, திவ்யதர்ஷினி பேச்சற்று நின்றாள். குரல் வந்து விழுந்த வேகத்திலும், முழுப்பெயரை உச்சரித்த அழுத்தத்திலும் அவனின் பிடித்தமின்மை வெளிப்பட்டது.
அதுவே அவனை விட்டுத் தூரம் தள்ளி நிறுத்தப் போதுமானதாக இருந்தது. அப்படியிருக்கையில் வார்த்தைகளில் விஷத்தைத் தடவி வேறு கக்குகிறானே. இவனுக்கு என்ன ஆகிவிட்டது?
அத்தோடு நிறுத்தவில்லை அவன். தொடர்ந்து இடியை இறக்கினான். “உன் காதல் நாடகத்திற்கு வேற யாரும் கிடைக்கலையா திவ்யதர்ஷினி? நான் தான் கிடைச்சேனா?” கட்டி வைத்தக் கோபமனைத்தும் வேங்கையாய்ச் சீறியது.
சுதாரித்து, “மித்ரன், நான் இதுவரைக்கும் உங்ககிட்ட காதல் அது இதுன்னு ஒரு வார்த்தைக் கூடப் பேசினதில்லை. நீங்க தான்…” என அவள் முடிக்கும் முன்னரே,
“ஆமா, முட்டாள் மாதிரி நான் தான் வந்தேன். தப்பு என் மேலே தான். ஆனா நல்லவ மாதிரி நாடகமாடி, என்னை உன்கிட்ட வர வச்சது நீ. நீ சும்மா இருந்திருந்தா நான் பாட்டுக்கு என் வேலையைப் பார்த்துட்டுப் போயிருப்பேன்.
‘உன்கிட்டே பணம் பறிச்சு சாப்பிட்டு நான் உயிர் வாழணும் என்கிற நிலை வந்தாலும் போய்ச் சாவேனே தவிர, உன்கிட்டே வாங்கிச் சாப்பிடமாட்டே’ன்னு பெருசா டயலாக் எல்லாம் விட்ட இல்ல. எல்லாமே என்னைக் கவர்ந்திழுக்க நீ போட்ட நாடகம் இல்லையா?
அதை வசதியா மறந்துட்டு இப்போ என் பணத்துல தான் சாப்பிட்டுட்டு இருக்க” என அவள் பேசியதனைத்தையும் ஞாபகம் வைத்து அவளைத் துண்டு துண்டாக வெட்டி எறிந்தான்.
வேலைக்காக உழைத்து வாங்கும் ஊதியத்தைப் போய் இப்படிக் கேவலமாக பேசுகிறானே என அவனை வெறித்துப் பார்த்தாள். நல்லவேளையாக சம்பளத்தை இவனிடம் வாங்கவில்லை.
எப்போது மித்ரன் வீட்டில் வேலைக்கு வந்திருக்கிறாள் என்று தெரிந்து கொண்டாளோ அன்றே வத்சனிடம் போய் அவன் பணத்தில் தான் ஊதியம் தர வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தாள். ஏனென்று கேட்டவனிடம் அன்று காரை இடித்தபொழுது இவ்வாறு மித்ரனிடம் வீரவசனம் பேசிவிட்டு வந்ததை மறைக்காமல் சொன்னாள்.
அதைக் கேட்டு சிரித்த வத்சன், சரியென்று ஒத்துக் கொண்டான்.
“நீ வந்து என் மேலே அன்னைக்குக் கடற்கரையில மோதாம இருந்திருந்தா ரதிகிட்ட கல்யாணம் பண்ணச் சொல்லிக் கேட்டு மோதிரம் போட்டிருப்பேன். இந்நேரம் கல்யாணம் பண்ணிட்டும் போயிருப்பேன்” என வார்த்தைகள் வெளியில் வந்த பின்னரே அவன் அவசரப்பட்டு உரைத்தது அவனுக்கு உறைத்தது.
பூகம்பமாய் வெளிவந்த வார்த்தைகளின் அதிர்வில் பேச்சற்று போய் அவனையே வெறித்தாள். அவனின் கருவிழிகள் நெருப்புத் துண்டங்களாய் ஜொலித்தன. இரண்டடி அவனைவிட்டுப் பின்னால் நகர்ந்து போய் நின்றாள். அப்படியென்றால் அவள் ஆரம்பத்தில் தவறாக எதுவும் நினைக்கவில்லை.
ரதிப்ரியாவின் அண்ணன் கிஷோரும் அவளை வந்து மிரட்டியதில் எந்தத் தவறுமில்லை. அப்படி ரதிப்ரியா வேண்டுமென்றால் போயிருக்க வேண்டியது தானே? எதற்காகத் தன் பின்னே வந்தான்? எதற்காக அவள் மனதையும் கலைத்தான்? உள்ளம் துண்டு துண்டாக உடையலாயிற்று.
ஓவென்று கதறி அழவேண்டும் போலிருந்தது அவளுக்கு. கடிவாளம் கட்டிய குதிரையைப் போல ஒரே சீராகப் போய்க் கொண்டிருந்த அவளது வாழ்க்கையில் எங்கிருந்தோ வந்து பெரும் சூறாவளியைக் கிளப்பி விட்டான். இதிலிருந்து அவளால் அவ்வளவு எளிதாக மீண்டு வர முடியுமா? மீட்சி கிடைக்குமா?
நெஞ்சு வெடித்துவிடும் போலிருந்தது திவ்யதர்ஷினிக்கு. கனவுகள் மொத்தமும் கசக்கி எறியப்பட்டதைப் போல் துடித்தாள். மொத்த உணர்வுகளையும் உருக்குலைத்துப் போட்டுவிட்டானே. அவளது கட்டுப்பாடின்றி விழிகளிலிருந்து நீர் தளும்பி வழிந்தோடியது. இவன் செய்த தவறுக்கு அவளை ஏன் பலிகடாவாக்க வேண்டும்?
அவன் முன்னால் அவளின் சுயமரியாதையை விட்டு விடக்கூடாது எனக் கன்னங்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தவள், “நான் நாடகமாடினேன் என இப்போ தெரிஞ்சிடுச்சில்லை? போங்க… போய்ச் சந்தோசமா ரதியைக் கல்யாணம் பண்ணிக்கோங்க” எனச் சொல்லிவிட்டு அங்கிருந்து நகர முற்பட்டாள்.
அவளை நகர விடாமல் தோள்களைப் பற்றிக் கொண்ட மித்ரன், “கண்டிப்பா, அதைச் செய்யப் போறேன். ஆனா எனக்கு நீ உண்டாக்கின வலிக்கும் வேதனைக்கும் என்ன பதில் சொல்லப் போற?” என அவளை உலுக்கினான்.
தோள்கள் வலியெடுத்தாலும் அதைத் தாங்கிக் கொண்டு, “என்ன பதில் சொல்லணும்?” என அவனிடமே கேட்டு முறைத்து நின்றாள். அவனை ஒரேடியாக அவளால் வீழ்த்த முடியும். ஆனால் அவன் வீட்டில் வைத்து மீனாட்சி இருக்கும் பொழுது அதைச் செய்ய அவளுக்குச் சற்றும் விருப்பமில்லை.
முதலில் ஏனிப்படி அபாண்டமாகத் தன் மேல் பழி சுமத்துகிறான் என அவளுக்குத் தெரிய வேண்டும்?
மித்ரனுக்கோ அவள் அப்படிச் சண்டைக் கோழியாய்ச் சிலிர்த்துக் கொண்டு நிற்கையில், அந்த நேரத்திலும் அவளது முகத்தையும் உடல் மொழியையும் பார்த்து அவளை அணைத்து முத்தமிட வேண்டும் போல் தோன்றியது.
இவள் ஏமாற்றிவிட்டாள் என்று தெரிந்த பின்னரும் அவள் மேலிருக்கும் ஈர்ப்பு குறையமாட்டேன் என்கிறதே என அவன் மேலேயே அவனுக்குக் கோபம் வந்தது. அவள் தோள்களை இதற்கு மேல் பற்றிக் கொண்டிருந்தால் அவன் தன் கட்டுப்பாட்டை இழக்க நேரிடும். அதனால் அவளை ஒரே தள்ளாக அவனிடமிருந்து தள்ளி அவளைத் தன்னிடமிருந்து பிரித்தான்.
அவளை விட்டு விலக வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான் மித்ரன். அவ்வளவே. ஆனால் அவன் தள்ளிய வேகத்தில் திவ்யதர்ஷினி தடுமாறிப் போய் அங்கிருந்த மேஜையின் மேல் விழுந்தாள். அப்படியே தலையும் மேஜையின் கூரான ஓரத்தில் பட, அங்கிருந்து இரத்தம் கசிய ஆரம்பித்தது.

