உயிரைத் திருடும் அழகியே 22 – 2

“அவரைப்பற்றி எங்களுக்கு ஒன்றுமே தெரியாம்மா. உனக்கும் மூண்டு மாதமாத்தான் தெரியும் எண்டு சொல்லுறாய். விக்ரமன் சேர் சொன்னதை வச்சுப்பாத்தா அவே நல்ல பணக்காரர் போலக்கிடக்கு. அரசியல்லையும் இருக்கினமாம். நாளைக்கு ஒண்டு எண்டாலும் நாங்க வந்து கதைக்க ஏலுமா கதைச்சாலும் எடுபடுமா எண்டு ஒண்டும் தெரியாம்மா. நாம நம்ம உயரத்தில பாக்கிறதுதானே நல்லம் சொல்லு.” மெல்ல எடுத்துச் சொல்லி, அவளின் மனநிலையை ஆராய்ந்தார் அன்னை.

 

“உண்மை தானம்மா! எனக்கும் விளங்குது. ஆனா… எப்படிச் சொல்ல? அவரைக் கட்டினா அமைதியான நிம்மதியான வாழ்க்கை ஒண்டு எனக்குக் கிடைக்கும் எண்டு நம்புறன்மா.” விழிகள் கலங்கச் சொன்னாள் அவள்.

 

எதற்கு உணர்ச்சிவசப்படுகிறாள் என்று தெரியவில்லை. நேரம் செல்லச் செல்ல அவனல்லாத எதிர்காலம் ஒன்றை எண்ணிப்பார்க்கவும் பயந்தாள். தாயின் எதிர்மறையான கருத்துக்கள் அவளுக்குள் கலக்கத்தை விதைத்தன.

 

இதோ இப்போது நியாயமான காரணங்களை எடுத்துவைக்கும் அன்னையிடம் கூட அவனை விட்டுக்கொடுக்க முடியவில்லை.

 

“அவரை எனக்குத் தெரியாதுதான். ஆனா, அவர் பிழையான ஆள் எண்டால் எப்படியும் கிசுகிசுவா எண்டாலும் நியூஸ் வெளில கசிஞ்சிருக்கும். எனக்குத் தெரியாட்டியும் விக்ரமன் சேர் கட்டாயம் கேள்விப்பட்டு இருப்பார். அதைவிட, மூண்டுமாதம் அவரோட பழகினது மட்டுமில்ல, நடிச்சும் இருக்கிறன். ஒருநாள் கூட நடிக்கேக்க மனமோ உடம்போ கூசினதே இல்லையம்மா. அவ்வளவு பாதுகாப்பா உணரச் செய்தவர். ஒரு பிரச்சனை எண்டாலும் அவரிட்டத்தான் ஓடி இருக்கிறன். உதவி செய்திருக்கிறன் எண்டு பேச்சிலையோ பார்வையிலையோ எல்லை தாண்டினதே இல்ல. விலகி விலகித்தான் போனவர். எனக்கு அவரைப் பிடிக்க முதல் காரணமே அதுதான்.” என்னைப் புரிந்துகொள்ளுங்களேன் என்கிற தவிப்பு அவள் குரலில்.

 

மூன்று பெண்களைப் பெற்று வளர்த்தவருக்கு அது விளங்காதா? விழிகள் கசிய அவளைப் பார்த்தார். அவள் விருப்பம் போலவே நடக்கட்டும். அவளின் மனதுக்குக் கெட்டது எதுவும் நடக்காது என்றே அந்தத் தாய் மனது நம்பத் தொடங்கியது.

 

அதோடு, விக்ரமன் வரமுதலே ஜேகேயின் உதவியாளன் என்று அந்த விமல் தான் அவர்களோடு முதன் முதலில் வந்து பேசியதும். அவன் மூலமாகத்தான் மகள் நுவரெலியாவில் இருக்கும் செய்தி அவர்களுக்கு எட்டியதே. அவளிடம் இதைப்பற்றிச் சொல்லவேண்டாம் என்றும் சொல்லியிருந்தான். அப்படி, அவளுக்கே தெரியாமல் அவளுக்கு நல்லது செய்ய நினைத்த அந்த நல்ல மனத்தையும் அவர் மறக்கவில்லை.

 

“எல்லாம் சரியம்மா. அவரின்ர வீட்டில என்ன சொல்லுவினமோ தெரியாதே. அவே எங்களுக்குப் பெரிய இடம் எண்டால் அவேக்கு நாம தகுதியில்லாத இடமெல்லா? நீ எல்லாருக்கும் முன்னால சொல்லியும் இன்னும் அவர் ஒண்டும் எங்களிட்டக் கதைக்க இல்ல. எதுக்கும் நீ மனதில ஆசைய வழக்காத பிள்ள. நடக்காட்டித் தாங்கிறது கஷ்டம்.” அனுபவம் பெற்ற அன்னை சொன்னபோது, அதிலிருந்த உண்மையில் கண்கள் குளமாகிற்று அவளுக்கு.

 

இதுவரை பெரிதாகத் தோன்றாத அவனது மௌனம் இப்போது கலக்கத்தைக் கொடுத்தது. பார்வைகள் மட்டும் போதாதே! அதைவிட அவனுடைய வீட்டார்?

 

சுபாகரிக்கும் அவளின் கலக்கம் புரிந்தது. அவருக்கும் நெஞ்சில் பாரமேறிப்போயிற்று! உள்ளம் அதுபாட்டுக்கு, ‘என்ர பிள்ளை ஆசைப்படுற வாழ்க்கையை அமைச்சுக்குடு தெய்வமே!’ என்று வேண்டிக்கொண்டது!

 

“எல்லாம் சரியா வந்து அந்தத் தம்பியக் கட்டினா இந்தியா தான் உனக்கு நிரந்தரமாப் போயிடும். நீ அங்க நாங்க இங்க எண்டு திரும்பவும் பிரிஞ்சு இருக்கவேணுமோ எண்டு நினைக்கவே பயமா இருக்கம்மா. அப்பா என்னெண்டு இதையெல்லாம் தாங்குவார் எண்டு தெரியேல்ல.” தொண்டை அடைக்கத் தன்பாட்டில் சொன்னார் அன்னை.

 

“ஆறு வருசத்துக்கு முதல் சொன்னது தானம்மா. இந்தியா எண்டு யோசிச்சா தூரம்தான். பக்கத்து நாடு எண்டு நினையுங்கோ… பக்கத்தில தெரியும். அதைவிட இப்பப் பலாலி எயார்போர்ட் திறந்தாச்சு. றால் பிரட்டி கோழியும் சமைங்கம்மா எண்டு சொல்லிப்போட்டு, நீங்க சமைச்சு முடிக்க முதல் நான் பலாலில வந்து இறங்கிடுவன். ஒரு மணித்தியாலமும் இல்ல. கொழும்புல இருந்து இங்க வாறதுக்கே ஆறு மணித்தியாலம் வேணும். இப்ப சொல்லுங்க, இந்தியா தூரமா கொழும்பு தூரமா?” அப்படிக் கேட்ட மகளையே பார்த்தார் அன்னை.

 

அவள் தந்த விளக்கத்தைக் காட்டிலும், அந்த விளக்கத்துக்குள் அடங்கிக்கிடந்த அவன் மீதான விருப்பமே பெரிதாகத் தெரிந்தது.

 

“எங்களுக்கும் நீ சந்தோசமா இருக்கவேணும் எண்டுறதுதான் முக்கியம். அதனாலதான் பயப்படுறதும். அப்பா என்ன சொல்லுறார் எண்டும் பாப்போமே.” என்றவர், “நேரம் போகுது, வா படுப்பம்” என்றபடி எழுந்துகொண்டு, மண் ஒட்டியிருந்த சட்டையின் பின்பக்கத்தைத் தட்டிக்கொண்டார்.

 

“போங்கம்மா, வாறன்!” என்றாள் அவள்.

 

“இருட்டு, பூச்சி புழு கடிச்சாலும். கனநேரம்(நிறைய நேரம்) இருக்காம வாம்மா!” என்றுவிட்டுச் சென்றார் அவர்.

 

அவன் வீட்டில் சம்மதிப்பார்களா என்று அதிலேயே சிக்குண்டு நின்றது அவளின் மனது.

 

அவன் சம்மதிப்பான்; அவனுக்கும் விருப்பம் இருக்கும் என்று ஆழமாக நம்பியது அவள் இதயம். இல்லாமல், அவள் சொன்னதைக்கேட்டு வந்திருக்க மாட்டானே. அவசியம் வந்தால் ஒழிய அவள் முகம் பாராதவன் இன்று திருமணப் பேச்சின்போது அவளையே பார்த்தபடி இருந்தானே.

 

ஆசைகொண்ட மனது தன் விருப்பத்துக்கு வலுச்சேர்க்கும் வகையிலேயே சிந்தித்துக்கொண்டு போனது.

 

“யா! அயம் ஹியர்!” ஃபோனை காதுக்குக் கொடுத்தபடி வேகநடையில் வந்துகொண்டிருந்தான் ஜேகே. அனன்யா திரும்பிப் பார்க்க, இருளில் அவளைக் காணும் சாத்தியமில்லாததால் அவளையும் கடந்து சென்று வேலியோரமாக நின்று யாரிடமோ மெல்லிய குரலில் பேசிக்கொண்டிருந்தான்.

 

அவனையே பார்த்திருந்தாள் அனன்யா. மெல்லிய குரல் தான். ஆனாலு, அழுத்தம் திருத்தமாக நேர்த்தியாக உரையாடிக்கொண்டிருந்தான். அவ்வப்போது பிடரி முடியைக் கோதிச் சரி செய்தான்.

 

‘இந்த நேரத்தில எவள் பாக்கப் போறாளாம்?’ உதட்டினில் சிரிப்பரும்பிற்று.

 

ஒரு நேரம் பாக்கெட்டுக்குள் கையை விட்டுக்கொண்டு பேசினான். இன்னொரு நேரம் காலால் கண்ணுக்குத் தெரியாத எதையோ தட்டிக்கொண்டு பேசினான். இன்னொருமுறை மீசையை நீவியபடி பேசினான்.

 

என்ன செய்தாலும் அழகாய் தெரிந்தான். எழுந்துபோக மனமில்லாமல் அங்கேயே அமர்ந்திருந்தாள் அனன்யா.

 

அவன் பேசிமுடித்துத் திரும்பி அவளைக் கடந்து போக முனைகையில் , “ஜேகே!” என்று மெல்ல அழைத்தாள்.

 

அந்த நேரத்தில், அமைதியான இருளில் அவளை எதிர்பாராத சின்ன அதிர்வோடு உற்றுப் பார்த்தான் அவன்.

 

“நான்தான். நித்திரை வராட்டிக் கொஞ்ச நேரம் இங்க வந்து இருங்களன்.” என்று தன்னருகில் தட்டிக் காட்டினாள்.

 

ஒருகணம், அந்த அந்தகாரத்திலும் வரிவடிவாகத் தெரிந்த அவளுருவில் பளபளத்துத் தத்தளித்த அவள் விழிகளை ஊடுருவியது, அவன் பார்வை. காரணம் அறிந்து தளராது எதிர்கொண்டாள் அவளும். அவளருகில் வந்து அமர்ந்தான் அவன். அணிந்திருந்த ஆடைகள் உரசிக்கொள்ளும் தூரம். நெருக்கத்தில்தான் அவளும் தட்டிக் காட்டினாள். அவனும் அதே நெருக்கத்தில் தான் வந்து அமர்ந்துகொண்டான்.

 

உருவாகிப்போன அந்த நெருக்கத்துக்குப் பெயரென்ன?

 

முதன் முறையாக ஒரு நெருக்கத்துக்கு அவனாக அனுமதித்திருக்கிறான். தேகம் சிலிர்க்க நெஞ்சுக்குள் பூமழை பொழிந்தது அவளுக்கு. அந்தச் சந்தோசத்தை அனுபவித்தபடி சில நொடிகளை மௌனமாகவே கழித்தாள்.

 

இப்படி ஒரு தனிமை வாய்க்கும் என்று எண்ணாதபடியால், என்ன பேசுவது என்றும் தெரியவில்லை. நேற்றுப்போல் விளையாட்டாகப் பேசும் மனநிலையிலும் இல்லை.

 

அம்மாவின் கேள்விகள் அவனிடம் நிறையச் சொல்லத் தூண்டியது.

 

“திடீர் எண்டு நேற்று ஏன் உங்களிட்ட அப்படிக் கேட்டன் எண்டு இப்பவரைக்குமே எனக்குத் தெரியேல்ல ஜேகே. ஆனா, உங்களோட இருந்தா சந்தோசமா இருப்பன் எண்டு மட்டும் மனம் உறுதியாச் சொல்லுது. எவ்வளவுதான் என்னை அலட்சியம் செய்தாலும் எனக்கு ஒண்டு எண்டதும் எனக்காக வந்தீங்களே… அதுவா? இல்ல, நானே உணராத என்ர மனச அவ்வளவு தெளிவா எனக்கே உணர்த்தினீங்களே… அதுவா? இல்ல, உங்களிட்ட நான் பாத்த கண்ணியமா? எது எண்டு தெரியாது. உங்களுக்குப் பக்கத்தில இருந்தா எந்தப் பயமும் இல்லாம இருப்பன். இப்பவும் நீங்க பக்கத்தில இருக்கிறீங்க எண்டுற நினைப்பே பெரும் தைரியமா இருக்கு.” உணர்வுகளின் ஆதிக்கத்தில் அகப்பட்டுக்கொண்டவள், மெல்லத் தன் மனத்தைச் சொன்னாள்.

 

“உங்கட மனதில என்ன இருக்கு எண்டு தெரியேல்ல ஜேகே. ஆனா எனக்கும் உங்களுக்குமிடையில என்னவோ இருக்கு எண்டு மட்டும் விளங்குது. இல்லாம, சின்னப்பிள்ளை மாதிரி நான் கதைக்கிறதையெல்லாம் கேட்டுக்கொண்டு அமைதியாப் போற ஆள் இல்ல நீங்க. நான் சொன்னதுக்காக மட்டுமே இங்க வார ஆளும் இல்ல.”என்றவள் அவன் முகத்தை உற்றுப் பார்த்தாள். அந்த என்னவோவைக் கண்டுபிடித்துவிடும் ஆவல் அந்த விழிகளில் தெரிந்தது.

error: Alert: Content selection is disabled!!