பதில் சொல்லாமல் அமர்ந்திருந்தான் அவன். அவள் முகம் சற்றே வாடிப் போயிற்று.
“உங்கட வீட்டுல… அம்மா அப்பா சம்மதிக்க மாட்டினமா?” மெல்லக் கேட்டாள்.
“அல்லது… நீங்க எதிர்பார்க்கிற அந்தப்பெண் நான் இல்லையா?”
பதிலற்ற அவனது மௌனம் இப்போது அவள் கண்ணீர் சுரப்பிகளைத் துறக்க முயன்றுகொண்டிருந்தன.
“நான்… என்ர குடும்பம் உங்கட தகுதிக்குச் சமனா இல்லை எண்டு நினைக்கிறீங்களா?”
இதைவிட வேற என்ன காரணங்கள் இருக்க முடியும்? கண்கள் முழுக்கக் கண்ணீர் மல்கிற்று அவளுக்கு!
இதுவரை,அப்பிக்கிடந்த இருளுக்குப் பழகிய பார்வை அவன் முகத்தில் ஒட்டிக் கிடக்க, ஒன்று ஒன்றாகக் கேட்டுக்கொண்டிருந்தவள், தைரியம் இழந்தவளாய் முகத்தைத் திருப்பிக்கொண்டு கடைசியாகக் கேட்டாள்.
“அந்த ஷோவில… காட்டினதையெல்லாம் பாத்து… என்னைப் பிழையா… கேவலமா…” அவள் சொல்லிமுடிக்க முதலே அவனது கை ஒன்று வேகமாக அவளை இழுத்துத் தன்னோடு இறுக்கிக்கொண்டிருந்தது, தேகம் இறுக.
“ஜேகே!” ஆனந்த அதிர்வோடு அவன் முகம் பார்த்தவள் அப்படியே அந்தக் கைக்குள் உடைந்து விம்மினாள்.
“மண்டைக்க சரக்கே இல்லையா உனக்கு? இந்தியாக்குப் போயிருக்க வேண்டியவன், நீ சொன்னேன்னு உங்க வீட்டுக்கு வந்திருக்கேன். நட்ட நடு ராத்திரில தனியா உன்கூட இவ்வளவு நெருக்கத்தில உரசிட்டு இருக்கேன். நீ என்னடான்னா, லூசுத்தனமா காரணம் சொல்லிட்டு இருக்க!” காதோரமாகச் சீறிய அவன் குரலில் தேகம் சிலிர்த்தது அவளுக்கு.
அப்படியே பூமழை பொழிந்தது போன்று அவள் மனத்தைக் குளிரச் செய்தது அவன் கோபம். இன்னுமே அவள் பொங்கி அழ, “ப்ச்! அழாதடி!” என்றபடி மற்றைய அவன் கரமும் சேர்ந்து அவளைத் தன்னுடன் இறுக்கிக்கொண்டது.
“நான் அழுவன்!” சிறுபிள்ளையின் பிடிவாதத்தோடு அழுதவளைக் கண்டு அவன் உடல் மௌனச் சிரிப்பில் குலுங்கிற்று!
“அடம் பிடிச்சு அழுற ஒரே ஆளு நீயாத்தான் இருப்ப!” தன் கைகளுக்குள் அடங்கியபடி அழுதவளின் முகம் பார்த்துச் சொன்னான் அவன்.
கண்ணீருடன் அவனை முறைத்தாள் அவள். “என்ர கஷ்டம் உங்களுக்குச் சிரிப்பா இருக்கா? எனக்கு எவ்வளவு பயமா இருந்தது தெரியுமா? உங்கட வீட்டுல சம்மதிக்க மாட்டினமோ உங்களுக்கு விருப்பம் இல்லையோ எண்டு.”
“இப்ப?” இளநகையுடன் அவன் கேட்க, உதடு கடித்தாள் அவள்.
அவன் பார்வை அவளின் உதட்டுக்குச் சென்றது. முதன் முதலாகப் பார்வையால் எல்லை மீறியவனின் நெருக்கம் அவளைச் சிவக்க வைத்தது. தலை குனிந்தவள் அப்போதுதான் கவனித்தாள், அவன் மடிக்குள் தான் இருப்பதை.
அதிர்ச்சியில் விழிகள் விரிய நிமிர்ந்தவளை எதிர்கொண்டது அவனது சிரிக்கும் கண்களே! எப்போது வந்தாள்? முதலில் எப்படி வந்தாள்? உணரவே இல்லையே. என்னவோ காலம்காலமாக அப்படி இருந்தவள் போன்று… கடவுளே!
சிரிப்பும் வெட்கமுமாக, “ஜேகே!” என்று அதட்டினாள் அவள்.
“நீயா வந்திட்டு என்னை எதுக்கு அதட்டுற?” என்றான் அவன். கண்கள் மட்டும் கள்ளத்தனமாகச் சிரித்தது.
“கூப்பிடு தூரத்தில அம்மா அப்பா இருக்கினம். அப்பா பாத்தார் எண்டு வையுங்கோ… நான் சரி!” என்று அவள் எழுந்துகொள்ளப் போக, “எங்க போற? பக்கத்துல இரு!” என்று அருகிலேயே இருத்திக்கொண்டான் அவன்.
அவனது ஒற்றைக் கைவளைவுக்குள் தோளில் சாய்ந்துகொண்டவளின் மனமெங்கும் ஆழ்கடலின் அமைதி. வார்த்தைகளில் வடிக்கமுடியாத சுகம்!
“இப்பத்தான் நிம்மதியா இருக்கு ஜேகே!” அவன் முகம் பார்த்து அவள் சொல்ல அவனது அணைப்பு இறுகியது!
“அப்பா என்ன சொல்லுறாரோ தெரியாது. அவேக்கு உங்கட வசதி பாத்துப் பயம்போல. நான் சொன்னதுக்கு, நீங்க ஒண்டும் சொல்லேல்லையாம் எண்டு அதுவும் கவலை அவேக்கு.” என்று அவர்களைப்பற்றிச் சொன்னாள் அவள்.
“நீங்க ஏன் ஜேகே ஒன்றுமே சொல்ல இல்ல?” அவளுக்கும் அந்தக் கேள்வி இருந்ததில் கேட்டாள்.
“உன்னாலதான்!” என்றான் அவன்.
என்னாலையா என்று கேள்வியுடன் அவள் பார்க்க, “யோசிச்சு பாரு! நீ ஒன்னும் டீனேஜ் பொண்ணு இல்ல. இருபத்தியொன்பது வயசாகுது. உன்கிட்ட ஒரு அளவுக்கு மேல எதையும் திணிக்க முடியாது. எனக்கு இவரைத்தான் பிடிச்சிருக்குன்னு நீ வேற பப்ளிக்கா சொல்லிட்ட. அவங்களுக்கு எப்படி இருக்கும் சொல்லு? இதைத்தான் நீ செய்யணும், இல்ல இத நீ செய்யக்கூடாதுன்னு எதையுமே அழுத்திச் சொல்ல யோசிப்பாங்க. இதுல இவ்வளவு வருசமா பிரிஞ்சிருந்த நீங்க இப்பத்தான் சேர்ந்து இருக்கீங்க. இப்ப உன்கிட்ட வந்து இதுல விருப்பம் இல்லன்னு சொன்னா, திரும்பவும் அவங்களை விட்டுட்டுப் போய்டுவியோன்னு பயப்படுவாங்க. இதுல நானும் சொன்னேன்னு வை, ரொம்பவே உடைஞ்சு போயிற மாட்டாங்களா? நம்ம பொண்ணு நம்ம கைக்க இல்ல. அவங்க விருப்பத்தை நிறைவேத்தி வைப்போம்ன்னு மனசுல பாரத்தோட செய்வாங்க. இதுவே, அவங்களா யோசிச்சு நீ ஆசைப்பட்டபடியே செய்வோம்ன்னு முடிவெடுத்து என்கிட்டே வந்து பேசுறப்போ, பொண்ணு அவ ஆசைய சொன்னா, நாங்க செய்து வச்சோம்ன்னு சந்தோசப்படுவாங்க. புரியுதா உனக்கு?” அவன் சொன்னபோது, எப்போதும்போல அவனது புத்தி கூர்மையை எண்ணி, விசாலமான சிந்தனையை எண்ணி வியக்கத்தான் முடிந்தது அவளால்.
“இந்த வியுல நான் யோசிக்கேல்ல ஜேகே. ஆனா, அப்பா சம்மதிப்பாரா?” அவனிடம் தான் அதற்கான பதில் உண்டுபோல் அவன் முகம் பார்த்துக் கேட்டாள்.
“என்கிட்ட ஏதாவது குறை கண்டியா நீ?” பதில் கேள்வி கேட்டான் அவன்.
“இதுவரைக்கும் இல்ல!” குறும்புடன் கண்ணடித்துச் சொன்னாள் அவள்.
“இனியும் காணமாட்ட. சோ, கண்டிப்பாச் சம்மதிப்பாரு! இல்லைன்னாலும் மாமனாரைச் சம்மதிக்க வைக்கிறது என் பொறுப்பு!” என்றான் அவன்.
அந்தளவும் போதுமாயிருந்தது அவளுக்கு. இனி அவன் பார்த்துக்கொள்வான். நிம்மதியோடு அவன் தோளில் சாய்ந்துகொண்டாள்.
ஏகாந்தமான இரவு, மலர்களின் வாசத்தை அவர்கள் மீது பூசிச்செல்லும் காற்று, மெல்லிய குளிர், அருகில் மனம் கவர்ந்தவன்… வாழ்க்கையில் இதைவிட வேறொன்றும் வேண்டாம் போலிருந்தது அனன்யாவுக்கு!
“மூண்டு மாசத்துக்கு ஒருவாட்டி நீங்க இங்க என்னக் கூட்டிக்கொண்டு வரவேணும்; சொல்லிட்டேன்!” உத்தரவாகச் சொன்னாள் அவள்.
“சரி!” சின்னச் சிரிப்புடன் சம்மதித்தான் அவன்.
“நீங்களும் என்னோடவே இருக்கவேணும்!”
“அது கொஞ்சம் கஷ்டம்.”
“என்ன கஷ்டம்? மரியாதையா வரீங்க. இல்லையோ உங்களோட சண்டை பிடிச்சிட்டு அடுத்த பிளைட்ட பிடிச்சு இங்க வந்திடுவன். பின்னாலையே வந்து சமாதானம் செய்யவேணும்.”
“உன்னோட ஆசைக்கு அளவே இல்லையா?” அவன் சிரிப்போடு கேட்க,
“ஏன், செய்ய மாட்டிங்களா?” என்று அவள் சண்டைக்கு வர, “செய்துதானே ஆகணும்! வேற வழி?” என்றான் அவன்.
“அது” என்று மிதப்பாகச் சொன்னவளுக்குச் சிரிப்பு வந்தது. அவனோடு இத்தனை நெருக்கத்தில் செல்லச்சண்டை போட்டுக்கொண்டு இருக்கிறாள். நினைவே மனத்தைக் குளிர்விக்க “தாங்க்ஸ் ஜேகே” என்று அவன் தோளில் மீண்டும் சாய்ந்துகொண்டாள்.
அவனுக்கும் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும். அவளை சுற்றியிருந்த கையின் அணைப்பு இறுக, அவளின் தலைமீது தாடையை வைத்துக்கொண்டான்.
“உள்ளுக்கு போவமா? கொஞ்ச நேரமாச்சும் தூங்கணும்.”
“ம்ம்…” என்றவள் அசையவே இல்ல. அவனுக்கும் எழுந்துகொள்ளும் எண்ணமில்லை.
இன்னும் சில நொடிகள் அப்படியே போயிற்று! “விட்டா விடியறவரைக்கும் இருக்கவேண்டியதுதான்! வா!” என்றவன் அவளையும் எழுப்பிவிட்டுத் தானும் எழுந்துகொண்டான்.
“குட்நைட்!” என்றபடி அவன் ஒரு அடி எடுத்துவைக்க,
“ஜேகே!” என்று, அவன் கையைப் பற்றினாள் அவள்.
என்ன என்பதாகப் பார்த்தான் அவன். தன்னால் முடிந்தவரை அவனை ஒருமுறை இறுக்கி அணைத்து, மார்பில் மிக மிக அழுத்தமாகத் தன் இதழ்களைப் பதித்து எடுத்தாள் அவள்.
அவன் சிரிப்பும் வியப்புமாகப் பார்க்க, “அதுவரைக்கும்தான் எனக்கு எட்டுது. இனி ஹை ஹீல்தான் போடப்போறன்!” என்றாள் குறையோடு.
சட்டென்று அவளைத் தூக்கிக்கொண்டான் அவன். “வேற எங்க குடுக்க விருப்பமோ குடுத்துக்கோ!” என்றான் விசமத்துடன்.
ஒருநொடி அதிர்ந்து சிவந்தவள், “உங்கள! வெளுக்கப்போறன்!” என்றபடி அவன் தோள்களில் அடிப்போட, “நீதானடி குறைபட்ட? இப்ப அடிக்கிற.” என்றபடி இறக்கியவனின் கள்ளத்தனம் நிறைந்திருந்த கண்களைச் சந்திக்க முடியாமல் தலைகுனிந்தாள் அவள்.
முகம் கனிந்துபோயிற்று அவனுக்கு.
“வா! போவம், நேரமாச்சு!” என்று அவளையும் அழைத்துச் சென்றான்.
இனிய கனவுகள் அவளைச் சூழ்ந்திருந்ததில் அதிகாலையில்தான் தன்னை மறந்து கண் உறங்கியிருந்தாள் அனன்யா.

