என்றும் உன் நிழலாக 9 – 1

9

குஸ்குஸ் செய்வதற்குத் தேவையான பொருட்களை எடுத்து ஆயத்தமாக வைத்திருந்தார் சுமி.

குஸ்குஸ் என்பது மக்கரோனி செய்யப் பயன்படுத்தப்படும் கோதுமையின் குருனலைக் கொண்டு தயாரிக்கப்படும் ஓர் உணவு வகை. இது மிகப்பழைய காலத்தில் வட ஆபிரிக்காவில் வாழும் ‘’பேர்பர்’’ இனமக்களால் உண்ணப்பட்ட உணவு வகையாக இருப்பினும், இன்று அனேக நாடுகளில் காய்கறி வகைகளுடனோ, கோழிக்கறியுடனோ தயாரிக்கப்பட்டு உண்ணப்படுகின்றது. இது மிகவும் ருசியாக இருக்கும் அதேநேரம், மரக்கறி வகைகளையும் சேர்ப்பதால் சத்து மிக்கதாகவும் உள்ளது.

நிதி வெங்காயத்தை சுத்தம் செய்து கொண்டிருக்க, அவள் பின்னால் வந்து நின்ற ரதீஷ், ‘‘நிதி எனி ஹெல்ப்?’’ என்றவாறே, ‘நீ ஒன்றும் செய்யத் தேவையில்ல; போய், உனக்கு ஏதாவது வேலை இருந்தாச் செய்!’ என, அவள் சொல்ல மாட்டாளா என்ற பாவனையில் கேட்டான்.

அவனைப் பற்றி மிகவும் நன்றாகத் தெரிந்திருந்ததால், ‘வீட்டில கூட அதில இருக்கிறத்தை இதில எடுத்து வைக்கிறதுக்கே எவ்வளவு கத்த வேணும்; பெரிய இவராட்டம் வந்து நிற்கிறான்.’ என, அவனை மனதில் திட்டிக்கொண்டே சீண்டலாகப் பார்த்துச் சிரித்தவள்,

‘‘அட…அதுதான் ரதீஷ் திரும்பவும் ஸ்னோ கொட்டப் போகுதாம்!’’ பகிடியாகச் சொல்ல, ஒருகணம் விழித்தவன், அவள் கிண்டல் செய்வது புரிந்ததும் நன்றாகவே முறைத்தான்.

‘‘ஐயோ பாவமென்று உதவிக்கு வந்தால், நீர் என்னையே பகிடி பண்ணுறீரா?” காட்டமாகக் கேட்பது போலப் பாவனை வேறு செய்தான்.

‘‘தேவையே இல்லை ரதீஷ்; இன்றைக்கு நான் தனியாவே செய்யிறன். அதுவும், உம்மட உதவி வேணவே வேணாம். நான் என்ன சொல்ல வாறன் என்றால், ஒன்றுக்கு ரெண்டாக எனக்கு வேலை வைக்காமல், நீர் போயிருந்து டிவியைப் பாரும், இல்லை, வேற ஏதாவது செய்யும். இங்க நிற்க வேணாம் . போம்…போம்.’’

அவனுடன் மல்லுக்கட்டி ஒருவாறு வெளியே அனுப்பிவிட்டு, மளமளவென்று மரக்கறிவகைகளை வதக்கி வைத்துவிட்டு, குஸ்குஸ்சையும் வெந்நீரில் போட்டு மூடி வைத்துவிட்டு, இறைச்சியைத் தயாராக்கி அடுப்பில் வைத்தாள்.

இதற்கிடையில் இருதடவைகள் உதவி செய்வதாக வந்த ரஞ்சனை, ஒரு முறைப்பைக் கொடுத்து வெற்றிகரமாக வெளியேற்றியும் இருந்தாள்.

அவன் தான் இந்த ஒருவாரமாக எல்லோருடனும் பேசா விரதம் இருக்கிறானே!

அவளது முறைப்பைப் பார்த்து, பதிலுக்குப் புரியாத பார்வை பார்த்துச் சென்றவனைக் காணும் போது அவள் மனதுக்கு மிகவும் துயராக இருந்தாலும், அவள் அதை வெளியில் காட்டிக் கொள்ளவில்லை.

குக்கரில் வெந்து கொண்டிருந்த கறியை ஒருதரம் பார்த்தவள், பின், அவிந்து பூப்போல வந்திருந்த குஸ்குஸ்சினுள் வதக்கி வைத்திருந்த மரக்கறியைக் கொட்டி, அதனுடன் சேர்த்து வறுத்த கஜுவையும் போட்டுக் கிளறியவள், தற்செயலாகத் தான் பின்புறம் திரும்பிப் பார்த்தாள்.

அங்கே, சமையலறை வாயிலில் சாய்ந்திருந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் வசி. அவள் முகத்தில் தாமதியாமல் மென்னகை தவழ்ந்தது.

‘‘ஹாய்! எப்பிடி இருக்கிறீங்க? இப்பத்தான் வந்தீங்களா?’’ என்றவள், அவன் பதில் சொல்லும் முன்பே, தன் முன்னே கண்ணாடி அலுமாரியில் இருந்த மணிக்கூட்டில் பார்வையைப் பதித்து மீட்டு, ‘‘என்ன நேரத்துக்கு வந்திட்டீங்க?’’ சிறு வியப்புடன் வினவினாள்.

வழமையை விட சற்று முன்பாக வீட்டுக்கு வந்த வசி, கூடத்தில் இருந்தவர்களுடன் ஓரிரு வார்த்தைகள் கதைத்தவன் அங்கு நிதியைக் காணாததில், ‘ஓ…இன்றைக்கு மேடம் வரேல்ல போல!’ என நினைத்துக் கொண்டே தொலைக்காட்சி முன்பாக இருந்த ரதீஷ், ரஞ்சன் முதுகில் வரவேற்பாக ஒரு தட்டுத் தட்டியவாறே, ‘‘அம்மா குளிச்சிட்டு வாறன் .’’ என்று மாடிக்கு ஏற, மனைவி மச்சாளுடன் கதைத்துக் கொண்டிருந்த இந்திரன், ‘‘வசி…அப்பா வரேல்லையா? நேரம் செல்லுமோ?’’ எனக் கேட்டு அவனை நிறுத்தினார்.

‘‘இப்ப…கொஞ்ச நேரத்தில வந்திருவார் சித்தப்பா.’’ சொல்லிக் கொண்டிருக்கும் போது சமையலறையில் இருந்து சத்தம் வந்தது.

‘‘அட…அப்ப வந்து இங்க தான் எதையோ உருட்டிக் கொண்டிருக்கிறாள் போல!’’ என நினைத்தபடி, சமையல் அறை நோக்கிச் செல்லத் திரும்பியவனைப் பார்த்த சுமி,

‘‘நான் எவ்வளவு சொல்லியும் கேட்காமல், மல்லுக்கு நின்று தானே எல்லாம் செய்கிறாள் தம்பி. சரி, அவளட ஆசையை ஏன் கெடுப்பான் என்று விட்டுட்டன். உதவிக்குப் போனவர்களையும் வேணாம் என்று சொல்லீட்டாள்.’’ என்றவாறே, தன் கதையைத் தொடர்ந்தார் .

‘‘அப்பிடியா? அப்பிடி என்ன தான் நடக்குது என்று பார்த்திட்டே குளிக்கப் போறன்.’’ என்றவாறே வந்தவன், தன் வேலைகளில் மூழ்கி இருந்தவளைப் பார்த்தவாறே, சிலபல நிமிடங்கள் தன்னை மறந்து நின்று விட்டான்.

மதியம் உண்பதற்குக் கொஞ்ச நேரத்துக்கு முன்பாகவே தலைக்கு முழுகியிருந்தாள் அவள்.

தோளுக்கும் கொஞ்சம் கீழாக வளர்ந்திருக்கும் மிகவும் அடர்த்தியான, இயற்கையிலேயே கொஞ்சமும் சுருளற்ற நேரான முடியில் கொஞ்சத்தை எடுத்து குட்டிக்கிளிப் போட்டு அப்படியே விரித்து விட்டிருந்தாள். அவையோ, அழகாக முதுகை ஆக்கிரமித்திருந்தன.

முன்னுச்சிக் கேசங்கள் சிதறிக் கலைந்து, களைத்துப் போயிருந்த அவ்வழகு முகத்துக்கு மேலும் சோபை சேர்த்து நின்றன.

அவளோ, கைவேலையில் கவனமாக நிற்க, அவள் வேலை செய்யும் நளினத்தைத் தன்னை மறந்து பார்த்திருந்தவனின் உள்ளமிட்ட கடும் எச்சரிக்கையையெல்லாம் அவன் செய்கை கொஞ்சமும் பொருட்படுத்தவேயில்லை.

அவனுக்கு மிகவும் நன்றாகத் தெரியும், தான் இப்பொழுது ஒரு கணமென்றாலும் இரசித்துப் பார்ப்பவள் வேறு யாரோ ஒருத்தியில்லை, தன் தம்பி விரும்புவதாகக் கூறிய பெண் என்று.

ஆனாலும், அவனுள்ளத்தில் என்றும் இல்லாதவாறு இன்று முரண்பட்ட உணர்வுகள் சஞ்சரிக்கின்றனவே!

அதைத்தடுத்து நிறுத்த முடியாமல், அதற்குக் கொஞ்சமும் முயலாமல் அவளையே விழியெடுக்காது பார்த்திருந்தான். அப்போதுதான் அவள் இவனைப்பார்த்து மலர்ந்த முகத்துடன் கதைக்க ஆரம்பித்தாள்.

மறுகணம், அவளை நோக்கிச் சென்று சமையல் மேடையில் ஏறியமர்ந்து கொண்டவன், தொடர்ந்து இதமான பார்வையால் வருடிக்கொண்டே, ‘‘ஏன் நிதி…என்ர சொந்த வீட்டுக்குக் கொஞ்சம் முன்னப்பின்ன வரக் கூடாதா?’’ சோகமாகக் கேட்டுவிட்டு, அதற்கு அவள் ஏதோ மறுத்துச் சொல்லத் தொடங்க அதற்கும் இடம் கொடாது தொடர்ந்தான்.

‘‘அட…கொஞ்சம் முதல் வந்தவனை… வந்திட்டீங்களா என்று சந்தோசமாகக் கூப்பிட்டுக் கதைக்காமல், இப்படி ஒரு கேள்வி! அதுவும் சும்மா இல்ல மணியையும் பார்த்துக் கொண்டு. ம்ம்…ஏன்டா இப்ப இவ்வளவு நேரத்தோட வந்து மனிசரின்ட கழுத்தை அறுக்கிறாய் என்று கேட்டிட்டீரே! என்றாலும் உம்மட்ட இருந்து இப்பிடியொரு வரவேற்பை நான் கனவிலும் எதிர்பார்க்கேல்ல.’’

அடக்கிய புன்னகையுடன் சொல்லிக்கொண்டே சென்றவனை, தன் கைவேலையை விட்டுவிட்டு அதிசயமாகப் பார்த்தாள் அவள்.

‘‘என்னது? நான் எப்ப இப்பிடி எல்லாம் சொன்னன்? அதற்கு முதல் இது என்ன கெட்ட பழக்கம், சமைக்கிற இடத்தில இப்பிடி ஏறிக் குந்துறீங்க? முதல் கீழே இறங்குங்க!’’

அதட்டலாகச் சொன்னவளை இளநகையுடன் குறும்பாக நோக்கினான் அவன்.

‘‘பார்த்திரா பார்த்திரா…திரும்பவும் இந்த இடத்தை விட்டுப் போடா! உனக்கு இங்க என்ன வேல என்று சொல்லுறீர்.’’ மீண்டும் சோககீதம் பாடினான்.

அவனது சிறுபிள்ளை போன்ற பேச்சினைக் கேட்டுப் பொறுமை இழந்தவள், ‘‘ஹலோ ஹலோ…என்ன சேட்டையா?’’ முறைத்தபடியே கேட்டாள்.

இப்படி இவன் இவளுடன் கதைப்பதொன்றும் புதிதல்ல என்றாலும், அதனை எல்லாம் இவள் எப்போதும் நின்று கேட்பதோ இப்படியான பேச்சுக்களை வளர்ப்பதோ இல்லையே!

ஆனால், இப்போது தான் இருவரும் நண்பர்களாச்சே! கிண்டல்களும் கேலிகளும், வார்த்தைக்கு வார்த்தை மல்லுக் கட்டுவதும் தான் சகஜம் ஆச்சே!

ஆனாலும் தான் ‘சேட்டையா’ என்றதும், அவன் பார்த்த துளைக்கும் பார்வையை எதிர் கொள்ள முடியாமல் மிகவும் தடுமாறிப் போனாள் நிதி.

error: Alert: Content selection is disabled!!