என்றும் உன் நிழலாக 9 – 2

‘இன்றைக்கு இவருக்கு நல்லாவே பனி பிடிச்சிருக்குப் போல! அதுதான் வந்ததும் வராததுமா என்னோட வம்புக்கு நிற்கிறார்.’

மனதில் திட்டிக்கொண்டே விழிகளை அவனிடமிருந்து விலக்கிக் கொண்டவள், கலந்த குஸ்குஸ்சை மூடியினால் மூடப் போனாள்.

‘‘அய்ய்…இரவைக்கு குஸ்குஸ்சா சாப்பாடு!? எனக்கு விருப்பம்மென்று பார்த்துப் பார்த்துச் செய்தீர் போல!’’ சொல்லிக்கொண்டே அதில் மேலாக இருந்த கஜுவை எடுக்க, உடனே அவன் கையில் ஒரு அடி போட்டாள் இவள்.

‘‘இதென்ன சின்னப்பிள்ளை போல சாப்பாட்டில கை வைக்கிறீங்க? முதல்…கையைக் கழுவவும் இல்ல. கடவுளே! எவ்வளவு மினக்கட்டுப் பார்த்துப் பார்த்துச் செய்தன். இனி இதை எப்பிடி…மற்றவே சாப்பிட்டாலும் நான் சாப்பிடுறது?’’

கேலியாகவும் அதே நேரம் சிறுபிள்ளையைக் கண்டிப்பது போலவும் சொல்லிக்கொண்டே பாத்திரத்தை மூடப் போனாள்.

உடனே தானிருந்த இடத்திலிருந்து துள்ளி இறங்கினான் வசி. மறக்காது தன் கையிலிருந்த கஜுவை வாயில் போட்டுவிட்டு, தன் முன்னால் நின்றவளின் கைகள் இரண்டையும் பிடித்து அவளின் ஒருகையில் இருந்த மூடியைப் பிடுங்கி மேடையில் வைத்துவிட்டு பின்பக்கமாக அவள் கைகளை வளைத்துக்கொண்டு, அவளின் பின்புறமாகப் போய் நின்றவாறே அவளை அப்படியே தன்னுடன் சேர்த்தணைத்து ஒருகையால் இறுக்கிப் பிடித்துக் கொண்டான்.

அவனின் இந்த செய்கையைக் கொஞ்சமும் எதிர்பார்க்காதவள் அதிர்ந்து போனாள்.

‘‘என்ன செய்றீங்க? அய்யோ முதல் விடுங்க வசீ!’’ என்றதையும் கொஞ்சமும் பொருட்படுத்தவில்லை அவன். தான் செய்யும் காரியத்தில் கண்ணாக இருந்தான்.

குஸ்குஸ் பாத்திரத்தில் கைவைத்து ஒரு கிள்ளு எடுத்து, அவன் செய்கையில் மலைத்து முழித்துக்கொண்டு அவன் பிடியிலிருந்து விடுபட முனைந்து கொண்டு நின்றவளின் வாயில் அதை வைத்து, ‘‘இப்ப என்ன சொன்னீர்? என்ர கை சுத்தம் இல்லையா? இந்தச் சாப்பாட்டை உமக்குச் சாப்பிடக் கஷ்டமா? இப்ப என்ன செய்யப்போறீர்? என்ர செல்லம், கெதியா வாயைத் திறந்து வாங்கும் பார்ப்பம்.’’ சொல்லிக் கொண்டே சாப்பாட்டை ஊட்ட முனைந்தவன், அவள் வாயைத் திறக்காமல் இருக்கவும் முயன்று திணிக்க முனையவும் தான் அவன் செய்கையின் தீவிரம் புரிந்தது அவளுக்கு.

‘கடவுளே இந்த ஆளுக்கு விசர் பிடிசிட்டுதோ?! லூசு!’ மனம் அலற, அவனிடம் இருந்து விடுபட முடியாமல் போகவே, அவன் வைத்துத் திணித்த சாப்பாட்டை வாங்கிக் கொண்டவளின் கண்களில் இருந்து கண்ணீர் இறங்கியது.

அவள் வாயைத் திறந்து சாப்பாட்டை வாங்கிக் கொண்டதும், ‘‘ம்ம்ம் … இது தான் நல்ல பிள்ளைக்கு அழகு!’’ என்றவன், ‘‘இப்ப என்ன செய்வீர்? என்ர அலம்பாத கையால சாப்பிட்டுட்டீரே!’’ என, கேலியாகச் சொன்னவாறே, ‘‘இன்னொருவாய்..’’ என்றபடி உணவுப் பாத்திரத்துள் கைவைக்கப் போனவன், அவள் கழுத்தின் கீழாக அவளை வளைத்துப் பிடித்திருந்த தன் கையில் விழுந்த சூடான கண்ணீரில் சுயநினைவடைந்து திடுக்கிட்டு அப்படியே அவளை தள்ளித் திருப்பி நிறுத்தினான்.

‘எனக்கு என்ன ஆச்சு? நான் ஏன் இப்பிடிச் செய்தன்? ச்சே…கொஞ்ச நாட்களாத்தான் ஒழுங்காக் கதைக்கத் தொடங்கினாள். அதற்குள்…நான் ஒரு முட்டாள். அதற்கு முதல் இதை மட்டும் சித்தி பார்த்திருந்தார் என்றால்?’’ மின்னல் வேகத்தில் குழப்பத்துடன் நினைத்துக்கொண்டான்.

‘‘நிதி சாரிடாம்மா. நான் சும்மா விளையாட்டுக்குத்தான்…ப்ளீஸ்… கோபிக்காதைடா…என்ர செல்லம் எல்லா? அழாதேடா!’’

சத்தமின்றி அழுபவளைப் பதற்றத்துடன் தேற்ற முனையும் போது யாரோ வரும் அரவம் கேட்டது.

யாரோ சமயலறைக்குள் வந்து கொண்டிருப்பதை உணர்ந்த நிதியும், அவன் தீத்தும்(ஊட்டும்) போது இலேசாகச் சிதறியிருந்த உணவையும், தப்புச் செய்த சிறுவன் போலப் பதற்றமாக நிற்கும் வசியையும் ஒரு பொருள் விளங்காப் பார்வை பார்த்தவள், அப்போதுதான் அவன் தீத்தி விட்டதைத் தான் அப்படியே வாயில் வைத்திருப்பதை உணர்ந்து அதை அவசரமாக விழுங்கியவாறே, அடுப்பிலிருக்கும் கறியைப் பார்க்கும் சாக்கில் திரும்பி நின்று கொண்டாள்.

அப்போது அங்கே வந்தவன் ரஞ்சன்.

கறியைப் பார்த்துக்கொண்டு நிற்கும் நிதியையும், ஏதோ சங்கடத்துடன் நிற்கும் வசியையும் பார்த்து, ‘என்ன அண்ணா? நீங்க இன்னும் குளிக்கப் போகேல்லையா?’’ ஒரு மாதிரிக் குரலில் கேட்டான்.

தன் மனதில் குன்றி, தான் நிதியுடன் சீண்டியதில் வெறும் கேலி கிண்டல் மட்டுமில்லை, அதையும் தாண்டிய உரிமை இருந்தது என்பதை உணர்ந்து, தவறிழைத்து விட்டோம் என மனதில் கலங்கிக் கொண்டிருந்த வசி, அங்கே ரஞ்சனைப் பார்த்ததும் இன்னும் குற்றவுணர்வு மேலிட அல்லாடிப் போனான்.

சட்டென்று, ‘‘இதோ போகப் போறன்டா…நீயும் வா.’’ அவனையும் அழைத்தபடி அங்கிருந்து நகர முயன்றான்.

‘‘இல்ல நீங்க போங்க…இனிச் சரி கிளீன் பண்ண உதவி செய்யிறன்.’’ என்ற ரஞ்சன் சமையலறையில் தங்கிக் கொள்ள, ‘‘ம்ம்ம்.’’ என்ற முணுமுணுப்போடு அவ்விடம் விட்டு நகர்ந்தான் வசி.

வசி அப்பால் செல்லவும், அசாதாரண அமைதியுடன் கறியையே கிளறிக் கொண்டிருப்பவளை ஆச்சரியத்துடன் பார்த்தான் ரஞ்சன். அவள் தன்னை ஏறெடுத்துப் பார்க்காததும் மனத்தில் சுருக்கென்று தைக்கவே செய்தது.

அதையும் மீறி, ‘இங்க ஏதோ நடந்திருக்கு! அண்ணா உள்ள வரேக்க நல்லாத்தானே வந்தார். இப்ப முகமே சரியில்லை. என்னவாயிருக்கும்! போதாதுக்கு இவளும் ஒரு மாதிரி நிற்கிறாள். அண்ணா ஏதும் பேசினாரா!’ என்று நினைத்துக் குழம்பிப் போனான்.

‘அப்படி இருக்காது. ஆனால், இவள் ஏன் ஒரு மாதிரி நிற்கிறாள்? கேட்டால் மட்டும் உடனே சொல்லுவாளா?’ என, தொடர்ந்து சலிப்பாக நினைத்துக்கொண்டவனின் குழம்பிக் கிடந்த மனம் இன்னும் நன்றாகக் கலங்கிப் போயிற்று!

அவள் மூடாமல் சமையல் மேடையில் வைத்திருந்த உணவுப் பாத்திரத்தை மூடி எடுத்துச்சென்று சாப்பாட்டறை மேசையில் வைத்து விட்டு வந்து சமையல் மேடையைத் துடைக்கத் தொடங்கியவன், தான் இப்படி வந்து வேலை செய்யத் தொடங்கும் போதெல்லாம், கத்தித் திட்டி அப்பால் அனுப்பும் நிதி, இன்று எதுவுமே சொல்லாது கறியையே கிளறிக் கொண்டிருப்பதைப் பார்த்ததும், ‘‘நிதி…இதென்னப்பா கோழியில கூழா செய்யிறீர்!’’ என்றபடி, சென்று கையிலிருந்த மரக்கரண்டியை வாங்கித் தான் ஒரு தரம் கறியை ருசி பார்த்தான்.

‘ம்ம்…சூப்பரா இருக்கு நிதி.’’ என்றபடி அவளை நோக்கியவனின் விழிகளுக்கு, அவளது சிவந்து கலங்கிய விழிகள் தப்பாமல் பட்டு மேலும் குழப்பினாலும், எதுவுமே சொல்லாது அவளுடன் கதைக்கக் கதைக்க, சகஜ நிலைக்கு வந்தவளுடன் சேர்ந்து எல்லாம் ஒழுங்கு செய்து வைத்த பின்னர் இருவருமாக ஹாலை நோக்கிச் சென்றனர்.

அங்கே ஜீவானந்தமும் வந்திருக்கவே, சிறிது நேரம் எல்லோருமாகக் கதைத்துக் கொண்டிருந்தனர். அதில் தன்னை மிகவும் சகஜநிலைக்கு கொண்டு வந்திருந்த நிதி ஓரளவுக்கு இயல்பாகவே இருக்க முயன்றாள்.

ஆனால், மேலே சென்ற வசியோ இறங்கி வரவேயில்லை!

ரஞ்சனும் சிந்தனையுடனேயே இருந்தாலும், அவன் ஆரம்பத்தில் இருந்தே அப்படியே இருப்பதால் யாருக்கும் அது வேறுபாடாகத் தெரியவில்லை .

‘‘சரி, நேரமாச்சுச் சாப்பிடுவமா?’’ எழுந்தார் சுமி.

அனைவரும் எழுந்து சாப்பாட்டறை நோக்கிச் சென்றனர். அங்கே சென்று அமர்ந்த பிறகும் வசி வராமல் போகவே, ‘‘எங்க பெரியம்மா அண்ணாவைக் காணேல்ல?’’ என்றான் ரதீஷ்.

அதுவரை பேச்சுச் சுவாரசியத்தில் மகனை மறந்திருந்த சுமியும், ‘‘அதுதானே? இன்னுமா குளிக்கிறான்!’’ என்றவர், சாப்பாட்டறையால் வெளியில் எட்டிப் பார்த்து, ‘‘தம்பி…வசி வாய்யா சாப்பிட.’’ என்றழைத்தவர், ‘‘இந்தா வாறன்மா..’’ என்ற அவன் பதிலைப் பெற்ற பின்னரே, மற்றவர்களுக்குச் சாப்பாட்டை பரிமாறத் தொடங்கினார் .

 

 

 

error: Alert: Content selection is disabled!!