10
மாலை வேலை முடிந்ததும் உற்சாகமாக வீட்டிற்கு வந்த வசி, முதலில் நிதியைக் காணாததில் அவள் வரவில்லை என்றே நினைத்தான். ஏனெனில், பெரும்பாலும் இந்திரன் குடும்பமாக வெளியே செல்கையில், அவள் அவர்களுடன் சேர்ந்து கொள்வதில்லை. இதை அவர்களும் உணர்திருந்தாலும், ‘ஏன்?’ என்ற கேள்வியை எழுப்புவதில்லை. கேட்டாலும் அவள் அவள் பதில் மௌனமே!
அவளும் வேலை, படிப்பு என அலைந்து திரியவே, ‘சரி கிடைக்கின்ற நேரத்தில் வீட்டில் ஓய்வாக இருக்கட்டும்.’ என நினைத்து, பேசாது விட்டு விடுவர் .
தானும் சேர்ந்து வர வெளியில் செல்வதில் புவனிக்கு அவ்வளவாக விருப்பம் இருப்பதில்லை என்பதை உணர்ந்தே, இவள் அவர்களில் இருந்து ஒதுங்கிக்கொள்வது.
அதனாலேயே, வந்ததும் அவளை ஆவலாகத் தேடிய வசி, ‘அவள் வரவில்லைப் போல!’ என, மேலே செல்லத் தொடங்கியவன், சமையலறையிலிருந்து சத்தம் வர அங்கு சென்றிருந்தான்.
மனம் ‘‘வேண்டாம் வேண்டாம்…’’ என்று தடுத்துச் சொல்லச் சொல்ல, அவளை, அவள் செய்கைகளை இரசித்துப் பார்த்திருந்தான். கடைசியில் அவளுடன் வம்பிழுத்து, சாப்பாடு தீத்தி, ரகளை செய்து, அதனால் அவள் விட்ட கண்ணீரைக் கண்டதும் பதறிப் போனவனோ, அப்போது அங்கு வந்த ரஞ்சனைக் கண்டதும் மிகவும் குன்றியே போய் விட்டான்.
அதுவும், ரஞ்சனின் துளைக்கும் பார்வை அப்படியே தன்னைத் துளைத்ததில் அவனுக்குகே அவனை வெறுத்துப் போய் விட்டது.
எப்போதுமே மிகவும் மரியாதையாகவும் நிமிர்வாகவும் நடப்பவன் வசி. அவன் செய்கைகளும் அப்படித்தான் இருக்கும். ஆனால் இன்று?
‘‘உன்னட்ட எதையுமே மறைக்காமல் பகிர்ந்து கொள்ளும் ரஞ்சனுக்கு, உன்னட்ட யோசனை கேட்டு அதன்படி நடப்பவனுக்கு முன் மாதிரியா இருக்க வேண்டிய நீயே, கடைசியில் துரோகம் செய்ய நினைச்சிட்டியா?’’ என்று கேட்டு, அவன் மனச்சாட்சியே அவனை குத்திக் கிழித்தது.
மனக் குன்றலுடன் மாடிக்குச் சென்று அப்படியே கட்டிலில் மல்லாக்க விழுந்தவன், தன் மனதில் நுழைந்து தன்னைத்தானே இனம் காண முயன்று, அதிலும் வெற்றிகரமாகத் தோல்வியையே தழுவிக் கொண்டான்.
தனக்குமே, தன் அக்காவின் மைத்துனியைப் பெரியவர்களாக விரும்பியே என்றாலும் தன் தலையாட்டலையும் பெற்ற பின்னரே பேசி வைத்திருக்கையில், நிதியை ரஞ்சன் விரும்புகிறான் எனத் தெரிந்த பின்னரும், ‘‘என்ர நினைவுகள் போற வழி தான் சரியா?’’ எனத் தன்னைத் தானே கேட்டுத் தடுமாறினான் அவன் .
இப்போதெல்லாம் நிதி மீது தான் கொஞ்சம் அதிகமாகவே ஆளுமை செலுத்த முனைவதை அப்பப்போ உணர்ந்திருந்தாலும், ‘பாவம் அவள், கண் முன்னால கஷ்டப்படுறாள் என்பதால தான் என்னால் முடிந்தளவு உதவி செய்ய நினைக்கிறன்.’ எனத் தன்னைத் தான் சமாதானம் செய்து கொண்டு வந்தவன், கொஞ்சநாட்களாக அவளின் நினைவுகள் தன்னைப் பாடாய்ப்படுத்துவதை, அவள் முகம் சிணுங்கினால் தன் மனம் சிணுங்குவதையும் உணர்ந்தே தான் இருந்தான்.
‘இதெல்லாம் நல்லதற்கா? முதல் சரியா?’ என்று யோசிக்கத் தொடங்கியவுடனே, அதன் வீரியம் புரிந்து அந்த நினைப்புக்கே முற்றுப்புள்ளி வைத்தாலும், அவள் பார்வையில் படும் போதெல்லாம் அந்த முற்றுப் புள்ளிகள் கரைந்து மாயமாய்ப் போய், திரும்பவும் அவள் அவனில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கி விடுவாள்.
கடந்த வாரம் ஒரு போதும் இல்லாதவாறு தன் சித்தியையே முறைத்துக் கொண்டதும், அவருடன் முகம் திருப்பியதும், நிச்சயம் வசியின் இயல்பில்லையே!
அவன் எப்போதுமே இலேசில் தளம்பும் ரகம் இல்லை. மிகவும் உறுதியாக நாலும் யோசித்துச் செயல் படும் ரகம்! ஆனால் அன்று? இன்று?
நிதியின் முகச்சிணுங்களை, அவள் தலைகுனிவைப் பொறுக்க முடியாமல் போனதால் தான், அன்று புவனியுடன் அப்படி நடந்து கொண்டான்.
அது மட்டுமா? இப்போதெல்லாம் அப்பப்போ அவன் மனதில், ‘ரஞ்சன் மட்டுமாக அவளை விரும்பினால் போதுமா? நிதியும் விரும்ப வேணாமா? அவளுக்குக் கடைசிவரை அவனில அப்படி ஒரு எண்ணம் வரவே வராது.’ என்ற எண்ணம் வேறு எழுகின்றதே!
அதே கையோடு,‘என்னோட பிறக்காவிட்டாலும், ஒன்றாக வளர்ந்த என்ர அன்புத் தம்பியை, அவன் விருப்பத்தை நான் கெடுக்கலாமா?’ என்றும் நினைத்து, அங்கும் இங்குமாகத் தடுமாறியவாறே மனதில் ஊசலாடிக் கொண்டிருந்தவன், இன்று தன்னையே அறியாமல் விளையாட்டு விளையாட்டாக ஆரம்பித்துக் கடைசியில் அது அவள் கண்ணீருக்குக் காரணமாகிப் போய் விட்டது .
‘‘அது சரி, இப்ப என்ன ஒரு வாய்ச் சாப்பாடு தீத்தி விட்டால், அது ஒரு பெரிய குற்றமா?’’ என வாதிட்டவனைப் பார்த்து, அவன் மனசாட்சியே கெக்கலி கொட்டிச் சிரித்து எள்ளி நகையாடியது.
‘‘டேய் வசி! எப்போதிருந்தடா இப்பிடிப் பொய் கதைக்கத் தொடங்கினாய்? நீ சாப்பாடு மட்டுமா தீத்தினாய்!? உன்ர மனசைத் தொட்டுச் சொல்லு பார்ப்பம்?” கேள்வி கேட்டு மல்லுக்கு நின்று அவனைத் தடுமாற வைத்தது.
“அப்படியென்றால் அவள் நெருக்கத்தை நீ கொஞ்சம் சரி இரசிக்க இல்லையா? அவள் கூந்தலில் இருந்து வந்த சுகந்தத்தை நீ நுகரவில்லையா? போடா டேய்… உன்னை நீயே ஏமாத்தாத!’’
இப்படி, அவன் மனசாட்சி கொஞ்சமும் ஒளிவுமறைவின்றி பெரும் குரலெடுத்துக் கத்திக் கொண்டிருக்கும் போதே, கீழிருந்து அவன் அன்னையும் சாப்பிட வரும்படி அழைத்தார்.
தாயின் அழைப்பில் திடுகிட்டவன் சட்டென்று நேரத்தைப் பார்த்தான்.
‘‘கடவுளே! இவ்வளவு நேரமாக நான் அப்பிடியே இருந்திட்டேனே; இன்னும் குளிக்கவும் இல்லை.’’ முணுமுணுத்துக் கொண்டவன், ‘‘சரி சாப்பிட்டுட்டு வந்து குளிப்பம்.’’ என முடிவெடுத்து, வருவதாகச் சொல்லிக் கட்டிலை விட்டு எழுந்தும்அப்படியே அமர்ந்திருந்தவனால், சற்றுமுன் அவன் மனச்சாட்சி உரைத்ததில் கொஞ்சமும் தவறு கண்டு பிடிக்க முடியவில்லை.
எப்போதுமே அவளைச் சீண்டுவான் தான்; ஆனால், அவளைத் தொட்டு எல்லாம் கதைத்ததில்லை.
அன்று இவன் காரில் இருந்து அழும் போது கூட அவள் முகம் பற்றியதற்கே வெடுக்கென்று இவன் கையைத் தட்டிவிட்டவள் நிதி! அந்தளவுக்கு யாரோடுமே நெருங்காது கவனமாக இருப்பவள் அவள்.
ரஞ்சன், ரதீஷுடன் ஒன்றாக வளர்ந்திருந்தாலும், அவர்கள் வெளிநாட்டில் வளர்ந்தாலும், அவள் எப்போதும் ஒரு ஒதுக்கத்துடன் தான் இருப்பாள். அதற்கு அடிப்படைக் காரணம் புவனியாக இருந்தாலும், அது நிதிக்கும் பழக்கப்பட்டுவிட்டது .
அதனால், நிதியுடனான அச்சிறு அணைப்பும் சிலநிமிட நெருக்கமும் தன்னில் ஏற்படுத்தியிருந்த தாக்கத்தை அவனால் அப்போது உணர முடியாமல் இருந்தாலும், இப்போது, மிகநன்றாக உணர முடிந்தது.
இப்போதும் அவள் தன் கைவளைக்குள் இருப்பது போன்ற உணர்வால் ஆட்கொள்ளப்பட்டான் அவன்!
இப்படி உணர்ந்து கொண்டதும் மிகவும் ஆயாசமாக உணர்ந்தான் வசி . அப்படியே தன் சிரத்தைக் கரங்களில் தாங்கிக் கொண்டவனுக்கு அடுத்து என்ன செய்வதென்றே புரியவில்லை.
எல்லாவற்றுக்கும் மேலாக, ‘இப்ப அவளை எப்பிடி எதிர் கொள்வது?’ குழம்பிப் போனான்.
‘அவளுக்கும் என்னில் இப்பிடி விருப்பம் இல்லாவிட்டால், என்னைப் பற்றி என்ன நினைப்பாள்? நான் என்ன சின்னப்பெடியனா?’ எனக் குழம்பியவாறு அமர்ந்திருந்தவனை, மீண்டும் பொறுமையின்றி அழைத்தது தாயின் குரல்.
‘‘அம்மா…நான் கொஞ்சம் வேலையா இருக்கிறன்; நீங்க சாப்பிடுங்கோ; நான் கொஞ்சத்தில வாறன் மா!’’ அறையிலிருந்து எழுந்து வந்து கீழே எட்டிப் பார்த்துச் சொன்னவன், இப்படி அடிக்கடி நடப்பதென்பதால் தாய் இனி அழைக்கமாட்டார் என நினைத்துக்கொண்டு, தனது பசியையும் உணராமல் மீண்டும் சென்று கட்டிலில் மல்லாந்து படுத்துக் கண்களை முடிய வண்ணம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தான்.
‘‘பிறகு வந்து சாப்பிடுறன், நீங்க என்னைப் பார்த்துக்கொண்டு சாப்பிடாமல் இருக்க வேணாம்.’’ என்று சொல்வது அடிக்கடி நடப்பதென்றாலும், அவனுக்குப் பிடித்தமான உணவைச் சுடச்சுட மகன் சாப்பிடாமல் வேலையென்றிருந்தால், எந்தத் தாயினால் தான் பொறுக்க முடியும்?
இப்போதும் அதையே சொன்னார் சுமி.
‘‘இவனுக்கு இதே வேலையாப் போச்சு! செய்யிற வேலையைச் சாப்பிட்ட பிறகு செய்யக் கூடாதா? எல்லாருமாக இப்பிடிச் சேர்ந்திருந்து ஒவ்வொரு நாளைக்குமா சாப்பிடப் போறம்? இல்லையே!’’ என அங்கலாய்த்தவர், ‘‘இனி ஆறின பிறகு வந்து சூடு பண்ணிச் சாப்பிட வேணும். நீங்க எல்லாரும் சாப்பிடுங்க, நான் போய் அவனைக் கூட்டிக்கொண்டு வாறன்.’’ என்று சொல்லி நகர்ந்தார்.
சுமியுடன் சேர்ந்து எல்லோருக்கும் சாப்பாட்டைப் பரிமாறிக் கொண்டிருந்த நிதியோ, ‘‘மாமி நீங்க இருங்க…நான் போய்க் கூட்டிக் கொண்டு வாறன்.’’ சுமியைத் தடுத்தாள்.
‘‘சரியம்மா…இப்பவே வராட்டி பிறகு பாண்(ப்ரெட்) தான் சாப்பாடு என்று சொல்லடா.’’ சிரித்துக் கொண்டே சொன்னவர், தானும் சாப்பிட அமர்ந்து மற்றவர்களையும் சாப்பிடச் சொன்னார்.
‘என்னால தான் இவர் இப்ப சாப்பிடாமல் இருக்கிறார்; அதுவும், நான் அழுததால் தான்.’ மனதில் முணுமுணுப்போடுதான் மாடியேறினாள் நிதி.

