‘அவரட இந்த லூசுக் கூத்தை இன்றைக்கு மாமி மட்டும் பார்த்திருந்தார் என்றால், கடவுளே! இன்றைக்கு என்ன பாடுபடுத்தி இருப்பாவோ?
எல்லாம் என்ர பிழை; எல்லாரோடும் அளவாகப் பழக வேணும் ; நான் தான் முதல் சரிக்குச் சரி கதைக்கத் தொடங்கினன்; இனி இதைக் குறைக்க வேணும் .’ என்ற முடிவுடன் அவன் அறை வாயிலில் வந்து நின்று, இலேசாக மூடியிருந்த கதவை மெதுவாகத் தட்டினாள்.
கதவு தட்டும் சத்தம் கேட்டு, ‘‘யாரு?’’ வசி படுக்கையிலிருந்து எழவும், நிதி கதவைத் திறக்கவும் சரியாக இருந்தது.
அறையில் இருளாக இருந்தாலும் அறைக்கு வெளியே போட்டிருந்த வெளிச்சத்தில் அவன் கட்டிலில் படுத்திருந்து எழுவது நன்றாகவே தெரிந்தது.
‘பார்… வேலை என்று சொன்னவர் சின்னப்பிள்ளை கோபத்தில் கிடப்பது மாதிரி இருட்டில படுத்துக்கிடக்கிறார்.’ என, அவனை மனதில் திட்டிக்கொண்டே அருகிலிருந்த மின்விசையைத் தட்டினாள் அவள்.
வெளியில் எரிந்த வெளிச்சத்தினால் வந்திருப்பது நிதி என்று கண்டு கொண்டான் வசி.
‘இவள் ஏன் வந்திருக்கிறாள்? நானே இவளைத் தவிர்க்க இங்க இருந்தால், இவள் தேடி வந்திருக்கிறாளே!’ என நினைத்துக் கொண்டாலும், அவள் தன்னைத் தேடி வந்திருக்கிறாள் என்பதே இனிப்பாகவும் இதமாகவும் இருந்தது, அவனுக்கு .
மின்விளக்கைப் போட்டுவிட்டு கட்டிலில் அமர்ந்திருப்பவன் முன் வந்து நின்றாள் நிதி.
‘‘இப்ப என்ன நடந்திட்டு என்று உண்ணாவிரதம் இருக்கிறீங்க? வெளிய எல்லாம் போய் வந்தனீங்க கழுவாத கையை ஏன் சாப்பாட்டில வைச்சீங்க என்று கேட்டதற்கு அந்தச் சாப்பாட்டை என்னைச் சாப்பிட வைச்சீங்க. பிறகு, நீங்க இங்க வந்து ஹாயா இருக்கிறீங்களா? கெதியா எழும்பி வாங்க…வந்து சாப்பிடுங்க.’’ விறைப்பாகச் சொல்லத் தொடங்கியவள், ‘‘ப்ளீஸ்.’’ கெஞ்சலில் முடித்தாள்.
எதுவுமே நடக்காத பாவனையில் வந்து நிற்பவளை ஆச்சரியமாகப் பார்த்தவனுக்கு மனதில் வேதனையாகவும் இருந்தது.
‘அப்பிடி என்றால், இவளுக்கு நான் அப்பிடி நடந்ததில வேறு ஒன்றுமே இல்லை. அப்பிடி ஏதும் உணர்ந்திருந்தால் இப்பிடிச் சாதாரணமா வந்து நிற்க முடியுமா?’ சுழன்ற சிந்தனையைக் கலைத்தது அவளின் மென்குரல்.
‘‘இங்க பாருங்க…மாமி பார்த்தால் திட்டுவார் என்று பயந்து தான் அழுதனான். சரி…இனி அதை விடுங்க, சாப்பிட வாங்க. எனக்கு உங்களில கோபமெல்லாம் இல்லை.’’
பெரிய மனதாய் வெள்ளைக் கொடியைப் பறக்க விட, மானசீகமாக தலையில் கை வைத்துக் கொண்டான் வசி.
‘கடவுளே! இதிலேயும் சித்திக்குத்தானா முதலிடம்?’ நொந்து கொண்டவனுக்கு, எப்போதுமே முறையோ பெயரோ சொல்லாமல் பொதுவாகக் கதைப்பவள், சற்றுமுன் கீழே ‘வசி’ என அழைத்தது நினைவுக்கு வந்து, உள்ளத்தில் மகிழ்வை ஏற்படுத்த, அதைப் புன்னகையாக வெளிப்படுத்தினான்.
‘இவளை விட்டுத்தான் பிடிக்கவேணும் . ஆனால்…இவளை மட்டும் என்னை விட்டுப் போக விடமாட்டன். இவள் எனக்கானவள். அது மட்டும் நிச்சயம். இவளுக்கும் நிச்சயம் என்னைப் பிடிக்கும். அந்த நாளுக்காக நான் காத்திருப்பன். எதற்காகவும் யாருக்காகவும் இவளை விட்டுத் தர முடியாது.’
இவ்வளவு நேரமாகக் குழம்பித் தவித்தவன், இக்கணத்தில், அவள் முகம் பார்த்துக்கொண்டே உறுதியாய் முடிவெடுத்தவன், ‘‘சரி.. நீர் போம்…நான் முகம் கழுவிட்டு வாறன்’’ என்றபடி எழுந்தான்.
‘‘வேணாம் வேணாம் …கீழ வந்து கை கழுவிட்டு சாப்பிடுங்க. பிறகு வந்து தலைகீழா வேணுமென்றாலும் நில்லுங்க. உங்களை ஏன் என்றும் கேட்க மாட்டன். இப்பவே என்னோடு வாங்க.’’ கதவை நோக்கி நகர்ந்தாள் அவள்.
அவளது மிரட்டலான கேலியில் கொஞ்சமாய்ப் பழைய வசி மீண்டுவிட்டான்.
ஒரு எட்டு எடுத்து வைத்து அவளுக்கு முன்னால் சென்று நின்றவன், தான் அப்படிச் சென்று நின்றதும் அவள் மிரண்டு பார்த்ததைக் கவனித்தவாறே கொஞ்சமும் தயங்காமல் அவள் தோள் பற்றி நிறுத்தினான்.
அவளோ திகைத்துப் போனாள். சட்டென்று அவன் கைகளைத் தட்டி விட்டுவிட்டு பின்னால் சென்று விட்டாள்.
ஒரு பெருமூச்சுடன் தன் கைகளை அகற்றியவாறே தன்னை வெகுவாக கட்டுப்படுத்திக்கொண்டான் வசி. தன் இப்படியான செய்கைகளால் அவளைத் தன்னிடம் இருந்து விலகச் செய்யும் எண்ணம் சிறிதும் இல்லாமல், ‘என்ர அன்பை அவள் உணரும் வரை நான் கவனமாகவே பழக வேணும்.’ என நினைத்துக் கொண்டவன், ‘‘நிதி…ஸாரிம்மா கோபிக்காதேயும். உண்மையாகவே மனசில கோபம் இல்லைத் தானே?’’ சிறுவன் போல கெஞ்சலாகக் கேட்டான் .
எப்போதும் அதட்டி உருட்டிக் கொண்டு திரிபவன், தன்னுடன் எவ்வளவு தான் இலகுவாகக் கதைத்தாலும் கொஞ்சமும் இறங்கி வராமல், தான் நின்றதிலே நின்று, தான் சொல்வதையே கேட்க வைப்பவன், ‘‘நீ இப்படியே தலையை ஆட்டி ஆட்டி நிதி சொல்வதெல்லாம் செய்து நல்லா இடம் கொடுக்கிறாய்.’’ என்று ரஞ்சனைக் குறை சொல்லிக் கண்டிப்பவன், இன்று, இப்படித் தன்னிடம் கெஞ்சவும் அவசரமாக ‘இல்லை’ என்று தலையை ஆட்டியவளுக்கு ஏனோ தெரியவில்லை, அந்நேரத்தில் கண்ணைக் கரித்துக் கொண்டு வந்தது.
தான் சொன்னதற்கு அவள் தலையாட்டிக் கொண்டே கண்கள் கலங்குவதைப் பார்த்த வசி, தன்னை மறந்தான். தான் சில கணங்களுக்கு முன் ‘அவளுடன் கொஞ்சம் பார்த்துப் பழக வேண்டும்’ என்று நினைத்ததையும் மறந்தவன், சட்டென்று அவளை இழுத்து நெஞ்சோடு இறுக்கி அணைத்துக் கொண்டான்.
‘‘இனி ஒருதரம் கூட எனக்கு முன்னால கண் கலங்கக் கூடாது நிதி, இல்லை இல்லை…எப்பவுமே இந்தக் கண்களில இருந்து கண்ணீர் வரக் கூடாது சரியா?’’ அவன் அணைப்பில் அடங்கி நின்று விழித்தவளை நோக்கிச் சொன்னவன் மெல்ல அவளை விடுவித்து, ‘‘இனி வாரும் கீழே போவோம்!’’ என, அவள் கைகளைப் பிடித்துக்கொண்டு படிகளில் இறங்கத் தொடங்கினான்.
திடீர் என்று அவன் அணைத்ததும், சொன்னதும் ஏதோ மிக மிக அழகிய கனவு போலத் தோன்றியது அவளுக்கு!
சற்றுமுன் தன் தோளில் படிந்த அவன் கரங்களை வேகமாகத் தட்டி விட்டவளுக்கு, அவன் அணைத்த போது அதிலிருந்து விலகும் எண்ணம் கொஞ்சமும் வரவில்லை.
சில கணங்கள் என்றாலும் அவ்வணைப்பில் தனக்கே தனக்கான இடத்தில் தான் இருப்பது போன்ற உணர்வே அவளை ஆட்கொண்டிருந்தது.
அவ்வுணர்வு விலகாமலேயே, அவனது உறுதியான கைபிடியினுள் அடங்கியிருந்த தன் கரத்தைப் பார்த்தவளுக்கு, இதயத்தின் அடியில் மிக மெல்லியதாய் மகிழ்வலைகள் தோன்றி உள்ளத்தில் உவகை பரப்பியது.
என்றாலும், அந்த மகிழ்ச்சியை ஆராய்ந்து பார்க்கும் எண்ணம் சிறிதுமின்றி வெகுவாக முயன்று அதை ஒதுக்கியவள், மெல்லத் தன் கரத்தை அவனிடமிருந்து விடுவித்துக் கொண்டாள்.
நேசமாகவும் உரிமையாகவும் அவளை நோக்கி புன்னகைத்தவாறே அவள் கரத்தை விடுவித்தவன், அவள் தலையை ஆதரவாக வருடி விட்டு, ‘‘வாரும்..போவம்..’’ என்றவாறே சாப்பாட்டறை நோக்கி நடந்தான்.
அங்கு அனைவரும் அமர்ந்து உணவை உண்ணத் தொடங்கி இருந்தனர்.
‘‘அப்பாடா…ஒரு வழியா வந்தாச்சா? ஏன் வசி சாப்பிட்ட பிறகே வேலையைத் தொடங்கி இருக்கலாமே?’’ என்ற தந்தையைச் சங்கடத்துடன் பார்த்து மெலிதாக முறுவலித்தவன், கரங்களை கழுவிய பின்னர் சாப்பிட வந்தமர்ந்து, தனது தட்டிலிருந்த சாப்பாட்டைப் பார்த்தவனுக்கு மீண்டும் சற்று முன் நடந்தது தான் நினைவில் வந்தது.
அவனுக்கு சிறு வயதில் இருந்தே கஜு என்றால் கொள்ளைப் பிரியம். இன்று இந்த கஜுவை, அதுவும் பொன்னிறமாக அழகாய் முழித்துக் கொண்டிருந்ததைச் சாப்பிடும் ஆசையில் கை வைத்து எடுக்கப் போய்த்தான் கொஞ்சம் முதல் அத்தனையும் நடந்தது என்று நினைத்தவனுக்கு,
‘என்றாலும் அதுவும் கூட நல்லதுக்குத் தான். இந்தச் சந்தர்ப்பத்தில சரி என்னையே என்னால் அறிஞ்சு கொள்ள முடிஞ்சிதே! இந்தத் தெளிவு தேவையில்லாத சில விசயங்களைத் தடுக்க உதவும்.’ என நினைத்தவன், அமைதியாகச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் நிதியை ஒரு பார்வை பார்த்து விட்டு, மற்றவர்களுடன் கதைத்தவாறே சாப்பிடத் தொடங்கினான் .
முதலில், வசிக்கும் நிதிக்குமிடையில் ‘ஏதோ நடந்திருக்கு.’ என்று நினைத்துக் கலங்கிக் கொண்டிருந்த ரஞ்சனும், இருவரும் வந்து இயல்பாகச் சாப்பிடவும்,
‘ரெண்டு பேரும் ஏதோ சண்டை போட்டீனம் போல! வேற ஒன்றுமில்லை. அது தான் அண்ணா முகத்தை நீட்டிக் கொண்டு சாப்பிடவும் வராமல் இருந்திருக்கிறார். இவள் நிதி என்னோடு வள்ளென்று கத்திறது மாதிரி அவரிட்ட என்னத்துக்குச் (எதற்கு) சண்டை போட்டாளோ!?’ என்று நினைத்துத் தன் மனதைத் தேற்றிக் கொண்டவன், மெல்ல மெல்ல அவர்கள் பேச்சில் கலந்தவாறே உணவை உண்ணத் தொடங்கினான் .

