உயிரைத் திருடும் அழகியே 23 – 2

“ஏதாவது சொல்ல இருந்தாத்தான் தனியா வரவேணுமா? இப்படி உங்களை சைட் அடிக்கவும் தனிமை வேணும் எனக்கு!” என்று கண்ணடித்தாள் அவள்.

 

“அடிப்பாவி! கோயில்ல வச்சு என்னல்லாம் சொல்லுற?”

 

“நீங்க சாமியாராவே இருந்துக்கோங்க. நான் ஆசாமியாவே இருக்கிறன்!” என்றாள் அவளும் விடாமல்.

 

“என்ன பாத்தா சாமியார் மாதிரியா இருக்கு உனக்கு?” அவன் பார்த்த பார்வையில் வேகமாக எழுந்துகொண்டாள் அவள்.

 

“இது கோயில். வாங்க போவம்!” அவன் முகம் பாராமல் அவள் சொல்ல, “இப்பதான் தெரியுது போல!” என்றவனும் அவளுடன் நடந்தான்.

 

காரில் ஏறியதும், “வேற ஏதாவது கோயிலுக்குப் போகணுமா பாஸ்? அப்படினா, நல்ல ஹோட்டல் பக்கத்துல இருக்கிற கோயிலாப் பாத்துப் போங்க!” என்றான் விமல் வேண்டுமென்றே!

 

அவர்களைச் சீண்டுகிறான் என்று தெரிந்து முறைத்தாள் அனன்யா.

 

“நீங்க எதுக்கு இவரை காவலுக்கு கூட்டிக்கொண்டு அலையுறீங்க ஜேகே. தண்டமா சோறுபோட்டே உங்க சொத்து அழியப்போகுது பாருங்க!” என்று திருப்பிக்கொடுத்தாள் அனன்யா.

 

“நீங்க சொல்லுறதையெல்லாம் எங்க பாஸ் கேட்கமாட்டார் மேம்! முதல்ல அவருக்கு எதுக்குக் காவல்? அவர் என்னையும் சேர்த்துப் பாத்துக்குவார். ஆக்சுவலி, நான் உங்களுக்குத்தான் காவல்.” என்றான் அவன்.

 

இதென்னடா புதுக்கதை என்று அவள் பார்க்க, “நீங்க எங்க போறீங்க, எங்க வாறீங்க, என்ன பண்ணுறீங்க என்று பார்த்து சாருக்கு மெசேஜ் குடுக்கணும். அதுதான் என் வேல.” என்று அவன் சொல்ல விழிகளை விரித்தாள் அனன்யா.

 

அவளின் மீதான அவனின் நேசத்தில் ஏதோ ஒரு புதிர் மறைந்திருப்பதாக அவளும் உணர்ந்துதான் இருந்தாள். இல்லாமல் அவள் சொன்னதற்காக மட்டுமே அவன் ஓடிவரப் போவதில்லையே! அதற்கு வலுச் சேர்க்கும் வகையில் இருந்தது விமல் சொன்னது.

 

“பிறகு எப்படி உங்களுக்கு கால் நோவுக்கு ஆள் வரும், சைக்கிளால விழுந்ததும் ஆயில்மெண்ட் வரும்.” என்று கேட்டான் அவன்.

 

“அது ஷியாம் அனுப்பியது..”

 

“கிழிச்சார். எல்லாம் எங்க பாஸ் உபயம்.”

 

உண்மையா என்பதுபோல் ஜேகேயைப் பார்த்தாள் அனன்யா. அவனோ உதட்டில் ஒட்டியிருந்த இளஞ்சிரிப்போடு காரைச் செலுத்திக்கொண்டிருந்தான்.

 

மனம் நிறைந்து போயிற்று அவளுக்கு. அவள் கேட்டு அவன் சம்மதிக்கவில்லை. அவனுக்கும் அவளைப் பிடித்திருக்கிறது. அதுவும் அவளுக்கும் முதலே!

 

அனன்யாவால் அன்று இரவும் உறங்க முடியவில்லை. அவளின் சிம்மாசனத்துக்கு வந்திருந்தாள். நாளை இந்தியாவுக்குப் புறப்படுகிறாள். பெற்றவர்களுக்கு விசா ஏற்பாடு ஜேகே செய்திருந்தான். கிடைத்ததும் அவர்களும் வந்துவிடுவார்கள். அவனோடு அவளுக்கும் சேர்த்து அவன்தான் டிக்கெட்டும் போட்டிருந்தான். நாளை அவனுடன்தான் புறப்படுகிறாள்.

 

அவள் சம்மந்தப்பட்ட அத்தனை விடயங்களையும் அவன் பொறுப்பெடுத்துக்கொண்டிருந்தான். அவள் சொல்லவில்லை; அவனும் கேட்கவில்லை. ஆனாலும் பொறுப்புகள் அனைத்தும் அப்படியே கைமாறி இருந்தது! இப்படி, பார்த்துப் பார்த்துச் செய்ய அவளுக்கென்று ஒருவன் இருக்கிறான் என்கிற நினைவே நெஞ்சுக்குள் இனித்துக்கொண்டு ஓங்கியது.

 

சுகமான நினைவுகளுடன் இருந்தவளைக் கலைத்தது கேட்ட மெசேஜ் டோன். எடுத்துப்பார்க்க, “வந்து தூங்கு!” என்று அனுப்பியிருந்தான் ஜேகே.

 

“உங்களுக்குப் பக்கத்திலையா?” அவன் அருகில் இல்லாத தைரியத்தில் அனுப்பிவைத்தாள் அவள்.

 

“தைரியம் இருந்தா வாடி!”

 

‘அப்பா கட்டிவச்சுத்தான் வெளுப்பார்!’ உதட்டைக் கடித்துவிட்டு, “ஒரு கிஸ் தரவே துணிவில்லாத நீங்க எல்லாம் தைரியத்தைப் பத்தி பேசக்கூடாது!” என்று, அவனைச் சீண்டுகிறோம் என்று தெரிந்தும் சீண்டினாள்.

 

“கிஸ் அதோட நிக்காது! பரவால்லையா?”

 

அதைப் பார்த்ததும் முகமெல்லாம் சிவந்து போயிற்று அவளுக்கு! வெக்கம் கெட்டவன். இன்னும் வேற என்ன செய்யுமாம்?

 

அதை அவள் கேட்கவில்லை. அவன் அதற்கும் வெட்கமே இல்லாமல் பதில் சொல்லுவான் என்று தெரியுமே!

 

“என்ன மேடம்! பதிலே இல்ல?” காதோரமாகக் கேட்ட குரலில் அதிர்ந்து திரும்பினாள் அனன்யா.

 

“உங்களை யாரு இங்க வரச் சொன்னது?” பொய்யாக அதட்டியவளின் உள்ளம் அவனது வருகையில் துள்ளியது.

 

“யாரோ கிஸ் கேட்டாங்க.. அதான் குடுத்திட்டுப் போகலாமேன்னு வந்தேன்.” அவளை உரசிக்கொண்டு அமர்ந்தபடி சொன்னான் அவன்.

 

“ஒன்றுமே வேண்டாம் ஒடுங்க நீங்க!”

 

“அதுக்கு முதல், எதுக்குத் தனியா வந்திருக்க அதைச் சொல்லு?” என்று அவளைத் தன் கைவளைவுக்குள் இழுத்தபடி கேட்டான் அவன்.

 

“சும்மாதான்.. ரொம்ப சந்தோசமா இருக்கிறன் ஜேகே. அதுதான் நித்திரை வரேல்ல.” அவன் முகம் பார்த்துச் சொன்னாள் அவள்.

 

அந்தப் பிறை நெற்றியில் உதடுகளை ஒற்றி எடுத்துவிட்டு, “அம்மா அப்பாவை விட்டுட்டுப் போறது கவலையா இல்லையா?” என்றவனின் மடிக்கு நேற்றுப்போலவே இன்றும் அவளறியாமல் வந்திருந்தாள் அனன்யா.

 

ம்கூம்! என்று மறுத்துத் தலையசைத்தாள் அவள்.

 

அவன் கேள்வியாகப் பார்க்க, “இனி என்ன எண்டாலும் பாக்க நீங்க இருக்கிறீங்க ஜேகே. பிறகு ஏன் நான் கவலைப்பட?” என்று திருப்பிக் கேட்டாள் அவள்.

 

காதோர முடியை ஒதுக்கிவிட்டவனின் விரல்கள் ஒருமுறை நின்றது. அவளையே பார்த்தான். தன்னை அந்தமும் ஆதியுமாய் நம்பும் அவளின் அன்பு அவனை அசைத்தது! நெஞ்சில் நேசம் சுரக்க, அவனுடைய உதடுகள் இப்போது அவள் விழிகளில் பதிந்து மீண்டது! மயங்கிக் கிறங்கிய விழிகள் அப்படியே மூடிக்கொள்ள, இதழணைப்புக்காய் அவள் இதயம் துடிக்கத் தொடங்கிற்று!

 

துடித்த இதழ்களைப் பார்த்தான் ஜேகே. தொட்டணைத்துவிடத்தான் அவன் உதடுகளும் ஆசைப்பட்டது! ஆனால்.. தாபத்தோடு கட்டை விரலால் அவள் இதழ்களை மெல்ல வருடிக்கொடுத்தான் அவன்.

 

அந்த வருடல் மேனியெங்கும் கிளர்ச்சியைப் பரப்ப, “ஜே..கே..!” என்று, அவன் பெயரையே அவள் இதழ்கள் காதலின் வார்த்தையாய் முணுமுணுத்தது.

 

“சொல்லு! ஜேகேக்கு என்ன?” அவனுடைய சூடான மூச்சுக்காற்று காதோரமாய் உரசியது!

 

“கிஸ் மீ!”

 

“நோ!” என்றது அவன் உதடுகள்.

 

பட்டென்று திறந்துகொண்ட விழிகள் அவனை முறைத்தது. “கொடுமை செய்றீங்க ஜேகே!” என்றாள்.

 

“உன்ன விடவா?” மூச்சும் மூச்சும் முத்தமிட்டுக்கொள்ளும் தூரத்தில் முகங்கள் இருக்க அவள் விழிப்பார்த்துக் கேட்டான் அவன்.

 

“நான் என்னடா செய்தனான்?”

 

காதல் பெருக்கெடுக்கும் பொழுதுகளில் எல்லாம் மரியாதையை அவள் தொலைத்துவிடுவதை உணர்ந்தவனின் கைகள் வேகம் கொள்ள, அவளை இன்னும் இறுக்கமாக தனக்குள் கொண்டுவந்தான்.

 

“அத நீதான் கண்டுபிடிக்கணும்!” என்றான் அவன்.

 

“என்ன மனுசன்டா நீ? கட்டிப்பிடிப்ப, கொஞ்சுவ. ஆனா காதலையும் சொல்லமாட்ட, கிஸ் பண்ணவும் மாட்ட! கொடுமைக்காரன்டா நீ!” என்றவள்,அவன் பிடரியில் கைகள் இரண்டையும் கொடுத்துத் தன் முகத்தருகே இழுத்து முகமெங்கும் முத்தமழை பொழிந்தாள்.

 

அவளைத் தடுக்கவில்லை அவன்.

 

“அப்போ இதுவரைக்கும் நான் சொல்லல?” கிடைத்த இடைவெளிக்குள் கேட்டான் ஜேகே.

 

அந்தக் கேள்வியில் அப்படியே நின்றாள் அனன்யா.

 

“எப்ப சொன்னீங்க? முதல்ல நீங்க எப்ப என்கூட பேசுனீங்க?”

 

“அது உனக்குத்தான் தெரிஞ்சு இருக்கணும்!” அவன் தோள்களைக் குலுக்கிவிட்டுப் பேசாமல் இருந்தான்.

 

அவனையே பார்த்தாள் அனன்யா. சும்மா எதையும் சொல்கிறவன் அல்ல இவன். அப்போ சொல்லியிருக்கிறான். எப்போது?

 

அவளுக்குச் சிந்திக்க வேண்டியிருந்தது. அவன் மடியிலிருந்து இறங்கி அருகில் அமர்ந்துகொண்டாள். அவனும் தடுக்கவில்லை.

 

எவ்வளவு யோசித்தும் கண்டுபிடிக்க முடியவில்லை அவளால்.

 

“எப்ப ஜேகே சொன்னீங்க? நீங்க எதையும் சும்மா சொல்லுற ஆள் இல்லையே. இங்க இலங்கைல வச்சுச் சொன்னீங்களா?” என்றாள் அவள்.

 

அவன் சிரித்தானே தவிரச் சொல்லவே இல்லை. அவளுக்குக் கோபம் வந்தது.

 

“உங்கள வச்சுக்கொண்டு நான் படுற பாடு இருக்கே… அம்மாடி! எப்படித்தான் குடும்பம் நடத்தப்போறேனோ தெரியாது ஜேகே!” என்று தலையில் கையை வைத்தவளுக்கு, அதை அப்படியே விட முடியவில்லை. கண்டுபிடித்தே ஆகவேண்டும் என்று மனம் உந்தியது.

 

“முதல்ல கண்டுபிடி. பிறகு தெரியும், எப்படிக் குடும்பம் நடத்துவன்னு!” அவனும் அசராமல் சொன்னான்.

 

எதையோ அவளிடம் எதிர்பார்க்கிறான். எதையோ என்ன எதையோ.. அவன் காதலைச் சொன்ன தருணத்தைக் கண்டுபிடிக்கச் சொல்லுகிறான்.

 

ஆனால் எப்போது? மனம் பரபரத்து, அவனோடானா எல்லாச் சந்திப்புக்களையும் மீள்பார்வை நிகழ்த்திச் சோர்ந்து.

 

சண்டையும் அழுகையும் தான் அவர்களுக்குள் இருந்திருக்கிறதே தவிர காதல் எங்கிருந்தது?

 

“ஒரு ஹிண்ட் கூட தரமாட்டிங்களா?”

 

மறுத்துத் தலையசைத்தான் அவன்.

 

“சரி! நானே கண்டுபிடிக்கிறன். ஆனா, நான் கேக்கிற கேள்விக்கு எல்லாம் பதில் சொல்லவேணும். சரியா?” என்று நல்லபிள்ளையாகக் கேட்டாள் அவள்.

 

“சொல்லக்கூடியதுக்கு மட்டும் சொல்லுவேன்.”

 

அவனை முறைத்தாள் அவள். கொஞ்சம் கூட பிடி கொடுக்கிறான் இல்லையே!

 

“சரி, என்னை எத்தனை நாளா தெரியும்?”

 

“ஒரு ஏழு வருசமா.”

 

“என்னது?” என்று அதிர்ந்தாள் அவள். “அந்த ஷோ நடந்தே ஆறுவருசம் தான் வரும். அதுக்கு முதலேவா?” அவளால் நம்பவே முடியவில்லை.

 

அந்தக் கல்லுளிமங்கனோ சிரிப்பைத் தவிர வேறு எதையும் காட்டினான் இல்லை.

 

“எங்க வச்சு என்னை முதன் முதலா பாத்தீங்க?”

 

“இந்தியால.”

 

அவள் முறைத்தாள். “இந்தியால எங்க? எந்த பிளேஸ்ல?”

 

“நெக்ஸ்ட்!”

 

இதற்குப் பதில் சொல்ல மாட்டான். அவளுக்குக் கோபம் தான் வந்தது. இடிச்ச புளி தோற்றுவிடும்

 

“என்னோட கதைச்சு இருக்கிறீங்களா?”

 

“பேசினதுமட்டுமில்ல. நீ கேட்ட காதலையும் சொல்லி இருக்கிறன். நீயும் என்கிட்டே பேசி இருக்க.”

 

“வாட்!” என்று அதிர்ந்தவள், “நோ சான்ஸ்!” என்றாள் அடுத்த கணமே.

 

அவன் அதற்கும் சிரித்தான்.

 

“எத்தனை வாட்டி பேசுனீங்க?”

 

“நிறைய வாட்டி.”

 

அவள் குழம்ப அவள் முகத்தை ஒருமுறை பார்த்துவிட்டுச் சொன்னான்.

 

“எனக்கும் உனக்குமான ரகசியம் ஒன்னு உன்கிட்ட உனக்கே தெரியாம இருக்கு. அதை கண்டுபிடிச்சா நான் யாருனு தெரியும் உனக்கு. பொக்கிஷம் மாதிரி அத பாதுகாத்து வச்சிருக்கிற நீ.” என்றான் அவன்.

 

அதிர்ந்து விழித்தாள் அனன்யா.

error: Alert: Content selection is disabled!!