என்றும் உன் நிழலாக 11 – 2

‘‘இதென்ன தம்பி உங்கட விசர் கதை? இதிலெல்லாம் யாரும் விளையாடுவீனமா? அதுவும் நம்மட பிள்ளையை அங்க கட்டிக் கொடுத்திருக்கிறம்.’’ கவலையும் அதிர்ச்சியுமாய்க் கேட்டவர், உடனே கணவனிடமும் இதை ஒப்பித்துவிட்டார்.

அவரும், ‘‘என்ன கதை வசி இது? விளையாடாத!’’ வசியின் இந்தப் பேச்சை கண்டிக்கும் வகையில் சொல்லவும், ‘‘இல்லப்பா…நான் விளையாடேல்ல; எனக்கு இதில விருப்பமில்ல; வாழப்போறது நான் தானே? கொஞ்சமும் விருப்பம் இல்லாமல் எப்படிப்பா?’’ மறுப்பை உறுதியாகச் சொன்னான் மகன்.

‘இவன் என்ன இப்பிடிச் சொல்லுறான்? இப்பிடி எல்லாம் சின்னப்பிள்ளத்தனமா விளையாடுறவன் இல்லையே! என்ன இது புதுப் பிரச்சினை?’ என நினைத்துக் கொண்ட ஜீவானந்தம், கலங்கிப் போயிருக்கும் மனைவியைப் பார்த்துக் கொண்டே, ‘‘ஏன் தம்பி இப்பத் திடீர் என்று இப்படிச் சொல்லுறீர்? முதல், உம்மட்டக் கேட்டுட்டுத்தானே பொம்பள பகுதிட்ட சம்மதம் சொன்னம்.’’

மகனின் மறுப்பு ஏற்படுத்திய எரிச்சலை மறைக்காத குரலில் கேட்டார்.

சிறிது நேரம் அமைதி காத்தான் வசி. ‘‘அது வந்துப்பா…’’ தந்தையின் எரிச்சலை உணர்ந்து தயங்கினான்.

‘இப்ப நான் நிதியைக் காதலிக்கிறன் என்று சொல்லவா முடியும்? வேற வினையே வேணாம் . அம்மா அப்பா நிச்சயம் ஒன்றும் சொல்ல மாட்டார்கள். ஆனால் ரஞ்சன்? ம்ம்ம்…இல்ல, இப்ப வேணாம்.’ என்ற முடிவுக்கே வந்தான் .

தொடர்ந்து, ‘அப்பிடி இவையளிட்ட என்ர விருப்பத்தைச் சொல்ல முதல் அவளட விருப்பமே எனக்குத் தெரியாதே! ஆனாலும், என்ர வாழ்க்கையில இன்னொருத்தியை என்னால நினைச்சும் பார்க்க முடியாது.’’ மனத்தில் தீர்மானமாக நினைத்துக்கொண்டான்.

‘‘அப்பா…இங்க பாசை வேற…அதை இனிப் படிக்க வேணும், நிஷாவுக்கு அது அவ்வளவு சுகம் இல்ல என்று சொல்லி கலியாணத்துக்குப் பிறகு என்னை இலண்டனில வந்து இருக்கச் சொன்னவே தானே? நானும் அப்ப, சரி நம்மட அக்காவோட இருக்கலாமென்று நினைச்சன். இப்ப யோசிச்சா, இங்க இதையெல்லாம் விட்டுட்டுப் போறது…சரி வராது…அதுதான்…’’ யோசித்து யோசித்துச் சொன்னான்.

‘‘அய்யோ தம்பி! இதுதான் பிரச்சினை என்றால்அவையளிட்ட கதைப்பம்; ரூபியிட மாமா மாமி நல்ல மனுசர்; புரிஞ்சு கொள்ளுவீனம்.’’ அவசரமாக இடையிட்டார் சுமி.

அதைச் சற்றும் பொருட்படுத்தாது, ‘‘இல்லைம்மா அதெல்லாம் வேணாம்; நான் முடியாது என்று சொன்னதாகவே சொல்லி விடுங்க.’’ எனச் சொல்லிச் செல்பவனைப் பார்த்துக் குழம்பித் தவிப்பது, தாயினதும் தந்தையினதும் வேலையாகிப் போனது!

வசி இப்படித் திருமணத்தை மறுத்த பின்னரும், ஒரு கிழமைக்கு மேலாக பொறுமையாய் பொறுத்திருந்த ஜீவானந்தம் தம்பதியினர், அதன் பின்னரும் வசியிடம் அவன் முடிவைக் கேட்ட பின்னரே, இனி செய்வதற்கு ஒன்றும் இல்லை என்று முடிவெடுத்து ரூபியின் புகுந்த வீட்டில் தகவல் சொன்னார்கள்.

இதைக் கேட்டதிலிருந்து ரூபியின் புகுந்த வீட்டினருடன் சேர்த்து ரூபிக்குமே வசி மீது மிகுந்த மனவருத்தமும் கோபமும் தான், இப்படி நம்பிக்கை தந்து பின்வாங்கிவிட்டான் என்று.

ஆனாலும், தங்கள் மகள் திருமணம் பற்றி பெரிதாகச் சிந்திக்காது படித்துக் கொண்டிருக்கும் போதே, இந்த விடயம் தெளிவாகத் தெரிந்தது நன்மைக்கே என்று நினைத்த ரூபியின் புகுந்த வீட்டினர், தங்கள் மகளுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளையும் தேடத் தொடங்கி விட்டார்கள்.

என்றாலும் இதற்குப்பின் ரூபியின் தாய் வீட்டுடனான தொடர்புகள் கொஞ்சம் குறைந்து தான் போய்விட்டது.

அதற்கும் சேர்த்துக் கலங்கினார் சுமி. ‘‘அது எல்லாம் போகப் போகச் சரி வந்திரும்மா. எல்லாமே நல்லதாகவே நடக்கும், யோசிக்காதீங்க!’’ என்று அவரைத் தேற்றிய வசி, இயல்பாகத் தனது வேலைகளுடன் ஒன்றிப் போய் விட்டான்.

இதையெல்லாம் நினைத்து ஏக்கப் பெருமூச்சு விட்டார் சுமி.

‘இந்த வீட்டில் விளக்கேத்த, யாருக்கு…எந்த மகராசிக்கு கொடுத்து வச்சிருக்கோ?’ மனதில் புலம்பித்தள்ளினார்.

‘தோளுக்கு மேல வளர்ந்த பிள்ளை, தானே முன்னின்று எல்லாவற்றையும் பொறுப்பாகப் பார்க்கின்றவன், இப்படிச் சொன்ன சொல்லைக் காப்பாற்றாமல், அதைப்பற்றிக் கொஞ்சமும் வருத்தமோ கலக்கமோ இல்லாமல் திரியிறானே!’ தான் மிகவும் பெருமைப்பட்டும் நம்பிக்கை வைத்தும் வளர்த்த மகனின் செய்கை தந்த ஏமாற்றமும் கோபமுமாகச் சாப்பிட்டுவிட்டு எழுந்தார் அவர் .

இதைப்பற்றி எல்லாம் எதுவித கவலையுமின்றி, ‘எல்லாம் சரி செய்ய முடியும்.’ என்ற நம்பிக்கை தந்த துணிவுடன், தனக்கேயுரிய வழமையான நிமிர்வுடன் தானும் உண்ட பின், சிறிது நேரம் தந்தை தாயுடன் அளவளாவிய வசி, மாடியேறி தன் அறையில் அமர்ந்தவனின் சிந்தனையை அவன் பிரியத்துக்குரியவள் வந்து ஆக்கிரமித்துக் கொண்டாள்.

அன்றைக்குப் பிறகு அவளுடன் அப்பப்போ கைபேசியில் உரையாடுவதை வழக்கப்படுத்திக் கொண்டிருந்தான் இவன். அவளுமே, இப்போதெல்லாம் என்ன தேவை என்றாலும் உரிமையாய் அவனிடம் உதவி கேட்கும் அளவுக்கு நட்பாகப் பழகினாள் தான். ஆனாலும், அவள் தன்னை விரும்புகிறாளா என்றால், அதற்கு இவனால் நிச்சயமாய் விடை சொல்ல முடியவில்லை.

அதேநேரம், அவளது அருகாமைக்கு ஏங்கும் மனத்தைக் கட்டுப்படுத்தவும் பெரும் அவஸ்தைப்பட வேண்டியிருந்தது.

ஆனாலும், அவளுடன் அப்பப்போ செலவிடும் சிறுசிறு சந்தர்ப்பங்களும், மிக இனிமையானதாக, கேலியும் கிண்டலுமாய்க் கழிவதிலேயே தன் மனத்தைச் சாந்தப்படுத்திக் கொள்பவன், அவள் என்றாவது தன் உண்மை நேசத்தை உணர்வாள் என்ற நம்பிக்கையில் ஒவ்வொரு நாளையும் நகர்த்துகிறான்.

இதற்கிடையில், ரஞ்சன் நிதியைத் திருமணம் செய்ய விரும்பினாலும், அவளுக்கு அவனில் அப்படியொரு எண்ணமில்லை எனத்துல்லியமாய் அறிந்து கொண்டான் வசி . அதில் மிக ஆறுதலும் கொண்டான்.

அதோடு, ரஞ்சனும் நிதியில் உள்ள பரிவினால் தான் அவளைத் திருமணம் செய்ய நினைக்கிறானேயொழிய, அவனுக்கு அவள் இல்லாவிடின் வாழ்வில்லை என்ற நிலையா என்று யோசித்தால், ‘‘இல்லை’’ என்றே அவனால் சொல்லிக்கொள்ள முடிந்தது .

பிரியம் வைத்தவனின் மனமல்லவா? தனது நிலையை நியாயப்படுத்தும் வகையிலேயே சிந்தித்தது. தனக்குத் தேவையான பதிலை எதிர்பார்த்தே கேள்விகளையும் நகர்த்தியது. அப்படியிருக்கையில் சாதகமான பதில் கிடைக்காதிருக்குமா?

அவன் மட்டில், நிதியை இப்படி உயிராய் விரும்புவது, அதுவும் அவளை அவன் தம்பி விரும்புவது தெரிந்த பின்னும், ‘‘பிழையில்லை…அதுதான் அவள் விரும்பவில்லையே!’’ என்றே மனதுள் வாதாடினான். தன்னைத்தான் சமாதானமும் செய்து கொண்டான்.

இதனால் வரும் பிரச்சனையை, அது ரஞ்சனிடம் இருந்து வந்தாலும் எதிர்கொள்ளத் தயார் என நினைத்து, அதைப் பற்றி அவ்வளவாகக் கவலைப்படுவதை விட்டவன், ரஞ்சனை நேரில் காணும் போதோ, நியாயம் கொண்ட மனம் சுருங்குவதையும், தயங்குவதையும் தவிர்க்க முடியாமல் திணறித்தான் போனான்.

அவளின் நினைவுகள் மயிலிறகாய் வருட அதில் சுகமாய் ஆழ்ந்திருந்தவனுக்கு, திடீரென்று, முதல் நாளிரவு பதினோரு மணிக்கும் மேல் அழைத்த நிதி பதற்றத்துடன் சொன்ன விடயம் நினைவில் வந்தது.

‘அட…நான் அதை மறந்தே போனனே! அவளும் ஃபோட்டோ மெயில் பண்ணுறன் என்றாள்…பார்ப்பம்.’ என நினைத்தவாறே தனது மெயிலைத் திறந்து, நிதி அனுப்பியிருந்த சில சிறுவயது ஃபோட்டோக்களைப் பார்த்திருந்தவன், மிகவும் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தாலும், அதில், தனது சகோதர சகோதரிகளுடன் முட்டைக்கண்ணை உருட்டிக்கொண்டு வெட்கச் சிரிப்புடன் நிற்கும், குட்டிக் குண்டம்மா நிதியை இரசிக்காமல் இருக்க முடியவில்லை.

‘இந்தக் குண்டம்மாவா இப்ப இப்படி மெல்லிய இடையும் மனதை அள்ளும் அழகுமாய் இருப்பது?’ என நினைத்தவனுக்கு, அவளை இப்பவே பார்க்கும் எண்ணம் வந்தாலும் அதை எவ்வளவோ முயன்று அடக்கிக் கொண்டான்.

அந்தப் புகைப்படங்களைப் பார்த்துக்கொண்டே இன்னொரு புதிய ‘டப்’ (tab) ஒன்றில் முகநூலைத் திறந்தவன், நிதி கூறியவரின் முகநூலை எடுத்து அதிலிருந்த அவரின் ப்ரோஃபைல் ஃபோட்டோவையே விழியெடுக்காது பார்த்துக்கொண்டிருந்தான்.

அங்கு அவரது வேறெந்த புகைப்படங்களும் போட்டிருக்கவில்லை என்பதால், தெளிவில்லாமல் இருந்த ப்ரோஃபைல் ஃபோட்டோவையே, ஆழ்ந்த சிந்தனையுடனும் குழப்பத்துடனும் பார்த்துக் கொண்டிருந்தான் வசி.

அவன் மனமோ, ‘நிதி சொல்லுறதை நம்ப முடியாமல் இருக்கே! அப்படியெல்லாம் கற்பனையில வேணுமென்றால் நடக்கலாம். உண்மையில …ம்ம்ம்..ஆனால், இந்தப் படங்களைப் பார்க்கேக்க எனக்குமே சின்னச் சந்தேகம் வருகுது. என்ன செய்யலாம்? ஆயிரத்தில் இலட்சத்தில் ஒன்றாக…அவள் சொல்லுறது உண்மையா இருந்தால்?’ என்று யோசித்தவன், இந்த விடயத்தை எப்படிக் கையாள்வது என்ற சிந்தனையில் ஆழ்ந்தான்.

error: Alert: Content selection is disabled!!