‘‘ஹலோ ஹலோ…போதும் போதும் நிப்பாட்டுங்க! என்ன சுடுதண்ணி குடிச்சீங்களா? இப்பிடிக் கொதிக்கிறீங்க? இது உடம்புக்கு நல்லதில்ல சொல்லீட்டன்.” என்றவள், அவன் முகம் மேலும் இறுகுவதைப் பார்த்து இலகுவாக முறுவல் செய்தபடியே,
“ம்ம்…சரி, இப்ப ஒன்று செய்யலாமா? இப்பிடியே ஒருதரம் மேல போய் பாருங்க; உங்கட ஆள் வந்திருக்கிறா; அவவைப் பார்த்தால் அப்படியே கூலாகிடுவீங்க; பிறகு போய் காயாவைக் கூட்டிக்கொண்டு வாங்க!’’ சிரிப்புடன் சொல்லிக்கொண்டே தன் வேலையில் கவனமாக , விழிகள் இடுங்கப் பார்த்தான் அவன்.
‘‘என்ன…என்ர ஆளா? அது யாரு?’’ அவள் எவ்விதத் தயக்கமும் இன்றிச் சந்தோசமாக, தன்னை இன்னொருத்தியுடன் இணைத்துக் கதைத்ததால் வந்த கோபத்துடன் இறுகிய குரலில் கேட்டான்.
‘‘அட! நீங்க எந்த உலகத்தில இருக்கிறீங்க? நீங்க இப்பிடிக் கேட்டது மாமிட காதில விழுந்திருந்தால் அப்பத் தெரிஞ்சிருக்கும்.’’ என, இடுங்கிய விழிகளும் சுருங்கிய நெற்றியுமாக முறைத்துக்கொண்டு நிற்பவனை முறுவலோடு பார்த்துச் சொன்னாள் நிதி .
‘‘இப்படி அநியாயத்துக்குச் சின்னப்பிள்ளையாக இருக்கக்கூடாது. அதுதான் உங்கட சரளா ஆன்டியும் லக்ஷியும் வந்திருக்கீனம். உங்க ரெண்டு பேருக்கும் சோடிப்பொருத்தம் அருமை! எனக்கும் லக்ஷியைப் பிடிச்சிருக்கு…நல்லபிள்ளை.’’ மிகவும் இயல்பாகச் சொன்னவளை நெருப்புப் பார்வை பார்த்தான் அவன்.
‘‘சும்மா இந்த அலட்டலை நிறுத்தும் நிதி; அம்மாதான் விசர்க் கதை கதைக்கிறா என்றால் இப்ப…’’ உறுமியவன், சொல்ல வந்ததை முழுவதுமாய் சொல்லக் கூட முடியாமல் கோபம் தலைக்கேற, விறுக்கென்று அவ்விடத்தை விட்டகன்றான்.
அப்போதும் அவன் கோபம் பார்த்து நகைத்த நிதி, சிரித்துக்கொண்டே வேலைகளைத் தொடர்ந்தாள்.
லக்ஷியைப் பற்றிப் பேசினால் அவனுக்கு கோபம் வருமென்று அவளுக்கும் தெரியும். அதேநேரம், புவனியின் விருப்பமும் தெரியுமே!
‘‘கடைசியில் எப்படியும் இவர்களைச் சம்மதிக்க வைத்து, தான் நினைக்கிறதைச் செய்யப் போறார் மாமி. இதற்குப் போய் ஏன் இப்பிடிக் கத்துறார்? அதுவும் மாமியைப் பற்றித் தெரிஞ்சிருந்தும்.’’ நினைத்தவாறே, தேநீரைத் தயாரிக்கவெனப் பாத்திரத்தை அடுப்பில் வைத்தவள், பின்னால் அரவம் கேட்டுத் திரும்பினாள்.
அங்கு, களைத்திருந்தாலும் புன்னகையால் நிறைந்து மலர்ந்த முகத்துடன் நின்றிருந்தான் வசி.
மறுகணம், இப்போதெல்லாம் அவனைக் காண்கையில் உண்டாவது போல ஒருவகைப் பரவசம் கொண்டாள் நிதி! அதுவே அவள் முகத்தை அன்றலர்ந்த மலராக்கியது!
தன் மனநிலை போகும் பாதையில் சென்று அது சொல்வதைக் கேட்டறிந்து கொண்டவளோ, ‘ஏன் நான் இப்பிடி ஆனேன்?’ என, தன்னைத் தானே பல தடவைகள் திட்டிக் கொண்டது தான் மிச்சம்.
இந்த உணர்வை அடக்க எவ்வளவோ பாடுபட்டாலும், அவன் முன்னே அவள் உணர்வதை, உள்ளம் நெகிழ்வதை இப்போதெல்லாம் தடுக்கவே முடியாதுள்ளது.
அவள் மனமும் செய்கைகளும், அவன் முன்னால், அவள் சொல்வதை ஒருபோதும் கேட்பதாகக் காணோம்.
அவன் முகத்தில் விழிகள் பதித்து இரசித்துக் கொண்டிருந்தவள், அவன் முகம் புன்னகையில் விரியவும் தன்னிலைக்கு வந்துவிட்டாள். அவனோ, இவளையே குறும்புடன் பார்த்திருந்தான்.
கணத்தில் படர்ந்த வெட்கச் சிரிப்புடன், ‘‘வாங்க!” சமாளித்து வரவேற்றாள் நிதி.
‘நான் அப்பிடிப் பார்த்ததில அவர் ஏதும் கண்டு பிடிச்சிருப்பாரோ? நிதி…நீ வர வர மோசமாகிக் கொண்டு போறாய். இப்பிடியே போனால், கெதியா இலங்கைக்குப் போகலாம். அதுவும் மாமி இங்கயிருந்து உதைக்கிற உதையில அங்க போய் விழுவாய்.’
தன் செய்கைக்கு மனதில் ஒரு குட்டு வைத்துக் கொண்டவளின் வாயோ தன்னியல்பாய் வார்த்தைகளை விட்டது.
‘‘ஏன் இவ்வளவு நேரம்? பின்னேர வகுப்பைக் கட் பண்ணீட்டு கொஞ்சம் முதலே வந்திருக்கலாமே! மாமி வரும்போதே….’’ என்றவள், தான் கூறியதைக் கேட்டதும் அவன் கண்களில் சுவாரசியம் எட்டிப் பார்ப்பதை அவதானித்துவிட்டுச் சட்டென்று நிதானித்தாள்.
‘அய்யோ நிதி, இது உனக்குத் தேவையா? அவர் எப்ப வந்தால் தான் உனக்கென்ன? நீ நினைப்பதொன்று கதைப்பதொன்று. முதல், களைச்சுப் போய் வந்தவரிட்ட நீ கேட்கிற கேள்வி என்ன?’
தன்னையே தான் மனதில் கடிந்து கொண்டே, ‘‘இருங்கோவன்…கேக் சாப்பிட்டுட்டுக் கோப்பி குடிக்கிறீங்களா? வீட்டுக்குப் போகாமல் அப்பிடியே இங்க வாறீங்களா?’’
அடுத்தடுத்ததாய்க் கேட்கவும், அவளருகில் வந்தவனோ சமையல் மேடையில் சாய்ந்து நின்றவாறே,
‘‘என்ன நிதி இப்ப ஏதாவது கேட்டீரா? இல்லை…சொன்னீரா? எனக்கு நீர் வாயை அசைச்சது மட்டும் தெரிஞிது; ஆனாப் பாரும்… சத்தம் கொஞ்சமும் காதுகளில விழவேயில்லை; ஏன் தெரியுமா?’’
நேசம் நிரம்பிய விழிகள் அவளையே வருட வினவினான்.
சட்டென்று தடுமாறி விட்டாள் நிதி. உள்ளத்தின் படபடப்பு அவள் செவிகளில் எதிரொலிக்க, தத்தளிக்கும் விழிகள் அவனை நோக்கின!
‘‘நான்தான் வந்ததும் உம்மைப் பார்த்து மயங்கிட்டனே!’’
அவள் விழிகளைத் தன் வசமாக்க முயன்றபடி தாழ்ந்த குரலில் தொடர்ந்தான் வசி.
அவன் வாயால் சொன்னதையும் விழிகளால் சொல்வதையும் தெளிவாகப் புரிந்தாலும், அதை வெளியில் காட்ட முடியாமல் மனப்பயம் தடுக்க, மிகவும் தயங்கியவள், கஷ்டப்பட்டுத் தன்னை அடக்கிக் கொண்டாள்.
‘‘என்ன மயக்கமா?! அய்யோ! முதல் இப்பிடி வாங்க…இதில வந்திருங்க. நான் சுமி மாமியைக் கூப்பிடுறன்.’’ சற்றுமுன் தத்தளித்துத் தடுமாறியவளின் விழிகளில் இப்போது அப்பட்டமான சேட்டை!
கண்டதும் தன்னைமறந்து தடுமாறி நின்றவள் சட்டென்று சுதாகரித்த அழகில் மனம் கனிந்தது அவனுக்கு.
ஆனாலும், தன் அன்புக்குச் சற்றும் குறையாத எதிரொலியை மிகவும் ஆவலாக எதிர்பார்த்த அவனுள்ளம் கணத்தில் சுருங்கித்தான் போனது.
அதை அப்பட்டமாக முகத்தில் காட்டியவனின் பாவனையில் இவளுள் நகைப்பே பொங்கியது!
நகைப்பில் மலர்ந்த வதனத்தையும் சிடுசிடுப்போடு இரசிக்கவே முனைந்தான் அவன்.
‘‘ஓ! அப்ப நான் சொன்னது உமக்குச் சரியா விளங்கேல்ல, அப்படித் தானே?” என்றபடி, இமைக்காது அவள் விழிகளை ஊடுருவினான் வசி. அந்தப் பார்வையில் மீண்டும் தடுமாறிப்போனாள் நிதி.
“சரி அதை விடும்; அதெல்லாம் போகப் போக விளங்கும்; ஒன்றும் அவசரம் இல்லை.’’ புன்னகையுடன் சொன்னவாறே இன்னும் நெருங்கி நின்று கொண்டான் அவன் .
‘‘நிதி நான் மயங்கினது…’’ விடாது தொடர்ந்தவன், மீண்டும் அவள் தடுமாற்றத்தை வெகுதிருப்தியோடு இரசித்தான்.
‘‘உண்மையாவே இன்றைக்கு நீர் நல்ல வடிவா இருக்கிறீர் தெரியுமா? அதனால தான்மா நான் அப்படியே மயங்கிப் போய், எங்கயோ மிதக்கிற மாதிரி…’’ சொல்லிக்கொண்டே, கணப் பொழுதில் அவளை மேலிருந்து கீழாக மீண்டும் ஒருதரம் படம் படித்துக் கொண்டான்.
அன்று அவள் அணிந்திருந்த மங்கிய வெள்ளை நிறத்தில் முத்துக்களும் சீகுயின்சும் சேர்த்து வேலை செய்த மேல் சட்டையும், அதன் கீழே கறுப்பு நிறத்தில் இறுக்கமான ஜீன்சும், காதுகளில் மாத்திரம் பான்சி முத்துத் தோடுகள் தொங்க, மெல்லிய அலங்காரத்திலும் மதி முகத்துடன் அழகு மயிலாக நின்றவளை, அப்படியே அள்ளி அணைக்கத் துறு துறுத்த கரங்களையும் மனத்தையும் மிகவும் முயன்று அடக்க வேண்டிய நிலையில் நின்றான் வசி.
அவளோ, வார்த்தை புரளாது விழித்துக்கொண்டு நின்றாள்.
‘‘இந்த வயிட்கலர் டாப் உமக்கு அழகா இருக்கு! அதுவும் இப்பிடித் தலைமயிரையும் விரித்து விட்டுட்டு நிற்க அப்படியே பார்த்துக்கொண்டு இருக்கலாம் போல இருக்கு!’’
அவள் கன்னத்தில் உரிமையோடு உரசி, அவனுக்குப் பழிப்புக்காட்டிய கூந்தல் கற்றையை ஒற்றைவிரலால் ஒதுக்கிவிட்டவாறே கிசுகிசுத்தான்.
அதுவரையில் அவனையே பார்த்துக் கொண்டிருந்த அவள் நயனங்கள் சட்டென்று தழைந்துவிட்டன.
அவன் பேச்சும் பட்டும் படாமலும் கன்னத்தில் உரசிய அவன் ஸ்பரிசமும் அவளுள் மிகையான நடுக்கத்தையே உண்டு பண்ணியது.
அன்று, அவர்கள் வீட்டில் வைத்து நடந்த சம்பவத்துக்குப் பின், பழைய கலகலப்பும் கேலியுமாகப் பழகினாலும் இப்படியெல்லாம் பேசியதில்லை இவன்.
ஆனால் இன்று, தானும் அவனாலும் அவன் அருகாமையாலும் வெகுவாகப் பாதிப்படைவதை உணர்ந்திருந்தவள், அவனின் இந்தச் சீண்டலால் வெகுவாகக் குழம்பித் தவித்துத் தான் போனாள்.

