‘கடவுளே! இந்தாளுக்குத் திரும்பப் பனி பிடிச்சிருக்கு. கொஞ்ச நாட்களா நல்லாத் தானே இருந்தார்? இப்ப என்ன நடந்திட்டு?’ என, மனத்தில் அவனின் செய்கைகளையும் பேச்சையும் நினைத்துப் புலம்பியவளுக்கு, அந்தப் புலம்பலுக்கு நேர் மாறாக, இதயம் முழுதும் மகிழ்வுணர்வு பரவுவதைத் தடுத்து நிறுத்த முடியாமல் இருந்தது.
அவளருகில் நெருக்கமாகி அவளையே பார்த்திருந்த வசியின் மனத்திலோ எல்லையில்லாத இன்பக் குமிழிகள்!
இந்தளவுக்குத் தன்னை உணர்த்த முயன்றும், அவள், அதை ஏற்று ஏதுவும் சொல்லவில்லை என்றாலும் எதுவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லையே!
அதுமட்டுமா? இலேசான நாணத்துடன் விழிகள் தழைய நிற்கிறாளே!
‘அவள் மனத்தை நிச்சயம் நான் வெற்றி கொள்வேன்! காரணம், நான் அதனுள் இருக்கிறேன்! ’ என்ற நம்பிக்கை, இன்று இந்த இடத்தில் இன்னமும் வலுப்பெற்றது.
தான் கதைத்ததற்கு அவளிடமிருந்து திட்டோ முறைப்போ வாராது போகவும், இன்னும் கொஞ்சம் துணிவு பெற்றவன், மேலும் சிறிது நெருங்கி, ‘‘நிதி..’’ மென்மையாய் அழைத்து, குனிந்திருந்த அவளின் முகத்தை மெல்ல நிமிர்த்தினான்.
உடலில் மென் நடுக்கமோட, பாவங்களை அள்ளித் தெளித்தபடி, தவிப்போடு தத்தளித்தன, அவள் விழிகள்.
அவள் நயனங்கள் பேசி நிற்கும் மொழியை அறிந்துவிடத் துடிக்கும் இரசனையோடு கவ்விக்கொண்டது இவன் பார்வை! அதில், சிறிது சிறிதாகக் குறும்பும் கைகோர்த்துக் கொண்டது. அதுவே, ‘‘அதில இருக்கிற கேக்கில ஒரு துண்டு தருவீரா? சரியாப் பசிக்குது…’’ பாவமாகக் கேட்கத் தூண்டியது.
இதுவரையில் அவன் பேச்சில் தளர்ந்து, மயங்கி நின்றவள் அவனின் இப்பேச்சில் பட்டென்று விழிப்படைந்து விட்டாள்.
அவன் பரிதாபமாக முகத்தை வைத்திருந்த விதத்தைப் பார்த்ததும் பக்கென்று நகைத்தவள், தன்னை முழுமையாகச் சுதாகரித்திருந்தாள்.
‘‘உங்களுக்கு உண்மையாகவே சில நேரங்களில் மேல் வீட்டில பிரச்சனை வருது போல! அதுவும் இப்ப வர வர கூடிக்கொண்டு போகுது. பேசாமல் டொக்டரிட்ட காட்டுங்க. பிறகு, நாள் சென்றால் ஒன்றுமே செய்ய முடியாது.’’ கேலியாகச் சொல்லியவாறே அவனுக்குக் கொடுப்பதற்காகக் கேக்கை எடுத்தாள்.
‘‘சரியாகச் சொன்னீர். ம்ம்ம்… கூடுது தான். அதுவும் எவ்வளவு கஷ்டப்பட்டு கட்டுப்படுத்த வேண்டியிருக்குத் தெரியுமா?’’
ஆழ்ந்த குரலில் சொன்னவன், அவள் முக்கைப் பிடித்து செல்லமாய் ஆட்டியவாறே, அவள் தந்த கேக் பிளேட்டை வாங்கிகொண்டான்.
“பார்க்கும் போதே நாவூறுதே!” அதிலிருந்த கரண்டியால் ஒரு துண்டினை வெட்டியெடுத்து வாயில் வைத்து ருசித்துச் சாப்பிட்டான்.
‘‘அப்பா…என்ன ருசி! அதுவும் உம் கையால செய்தது…சொல்ல வார்த்தையில்லை.’’ இரசனையோடு சொல்ல, அதைக் காதில் வாங்காத பாவனையில், ‘‘இங்க பாருங்க…இப்படியே கொண்டு போய் மேல மற்றவையோட இருந்து சாப்பிடுங்க; நான் தேத்தண்ணி கொண்டு வாறன்.’’ அவனைப் பிடித்து மெல்ல அப்பால் தள்ளிவிட்டாள்.
அதில் தொனித்த உரிமையில் ஆனந்த ஆக்கிரமிப்பில் குதித்தது அவன் மனம்.
இக்கணம், அவளோடு கழிக்க முடிந்த இச்சிறு தனிமையை இழக்க அவன் என்ன விசரனா?
‘‘இல்ல…இல்ல…நான் இங்கயே இருந்து சாப்பிடுறன்.’’ என அடம் பிடித்தவன் திடீர் என்று நினைத்துக் கொண்டவனாக, ‘‘ஹேய்! நீர் சாப்பிட்டீரா?” என்றவன், அவள் பதில் சொல்ல முன்னரே, “நான் ஒரு விசரன், உம்மட்ட இப்பிடிக் கேட்கிறனே! நீர் எங்க சாப்பிட்டு இருக்கப் போறீர்?’’ சலிப்பாகச் சொல்லிக்கொண்டே, தனது கேக்கில் இருந்து ஒரு துண்டினை எடுத்து அவளின் வாயருகில் கொண்டு செல்ல, ‘‘இல்லை வேணாம் …நீங்க சாப்பிடுங்க; நான் வேற எடுத்துச் சாப்பிடுறன்.’’ அவசரமாகச் சொன்னாள் நிதி.
‘‘ஏன்? இது நான் சாப்பிட்ட கரண்டி என்றா வேணாமென்று சொல்லுறீர்?’’ அவன் ஒருமாதிரிக் குரலில் கேட்டதும், ‘‘கடவுளே… இல்ல்ல்ல…சரி தாங்க.’’ என்று அவன் தந்ததை வாங்கி உண்ணத் தொடங்கினாள்.
அவளுக்கும் தீத்தி விட்டுக்கொண்டே தானும் கேக்கைச் சாப்பிட்ட பின், மற்றவர்களுக்கும் சிற்றுண்டிகளும் தேநீரும் எடுத்துக்கொண்டு மேலே சென்ற இருவருமே ஒன்றை அறியவில்லை, ஒருவர் மற்றவரில் உள்ள மயக்கத்தில் சுற்றுப்புறத்தையே மறந்துவிட்டார்களே!
வசியின் வருகையும் அவன் செய்கைகளும் நிதியை மறக்கச் செய்து விட்டதென்றால், வசியின் பார்வையிலோ, சுற்றுப்புறத்தில் தன் இதய தேவதை தவிர யாருமே புலப்படவில்லையே!
இதுவரை, அவர்களையே கவனித்துக்கொண்டிருந்தான் ரதீஷ்.
வசி, வந்ததிலிருந்து நடந்து கொண்ட முறையும், அதை, நிதி எதிர்கொண்ட விதமும் அவனுள் கொஞ்சம் கொஞ்சமாகக் கோபத்தைச் சுரக்கச் செய்தது.
அவர்களின் செய்கைகள் உணர்த்தியதை நம்பவும் முடியாது, கண் கூடாகக் கண்டதைத் தட்டிக் கழிக்கவும் முடியாது தடுமாறிப்போனான் அவன்.
இங்கு இப்படியிருக்க, காயாவை அழைத்து வருவதற்காகச் சென்று கொண்டிருந்த ரஞ்சனுக்குத் தனது உள்ளக்கொதிப்பை அடக்கிக்கொள்ளவே பெரும்பாடு பட வேண்டியிருந்தது.
‘அம்மாதான் எனக்கு விருப்பமில்லை என்று சொன்ன பிறகும் சரளா ஆன்ட்டிக்கு நம்பிக்கை கொடுக்கிற விதத்தில் நடந்து கொள்ளுறார் என்றால், நிதியும் பகிடி விடுறாளே!’ என நினைத்தவனுக்கு, நிதி மீது என்றும் இல்லாதவாறு கோபம் வந்தது.
‘சொன்னது மட்டுமில்லை, ஒரு சிரிப்பு வேற! அப்ப இவளுக்குக் கொஞ்சம் கூட என்னில நேசமில்லை. நான்தான் அவளை நினைச்சுக் கொண்டு திரியிறனா? முட்டாள் போல!
இதுக்கெல்லாம் ஒரே தீர்வு, எனக்கு நிதியைக் கல்யாணம் செய்ய விருப்பம் என்று வீட்டில் சொல்வது தான். முதல் அவளிட்டச் சொல்லுவம் என்று காத்திருந்தாக் கடைசியில எல்லாமே கைவிட்டுப் போயிரும்.’ என முடிவெடுத்தவன், காரைக்கொண்டு போய் காயாவின் வீட்டின் முன்னால் நிறுத்தினான்.
அழைத்துச் செல்ல யாராவது வருவார்கள் என்று காத்திருந்த காயா, ரஞ்சனின் கார் வந்து நிற்பதைப் பார்த்ததும், வீட்டைப் பூட்டிவிட்டு கேக் பெட்டியுடன் விரைந்து வந்தவள், ‘‘ஹாய்…எப்படி இருக்கிறீங்க?’’ என்றவாறே, இந்நாட்டில் ஒருவர் குடும்பத்தில் விசேசம் என்றால் அக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரையும் வாழ்த்தும் வழக்கத்தின் படி, ‘‘வாழ்த்துகள்!’’ என, அவனை வாழ்த்தி, அவன் சொன்ன நன்றியைப் பெற்றுக்கொண்டாள்.
“கேக்கை பின் சீற்றில வைக்கிறன்.” என்றபடி வைத்துவிட்டு வந்து முன்பக்கமாக ஏறிக்கொள்ள, காரைத் திருப்பி, தங்கள் வீட்டை நோக்கி ஓட்டத் தொடங்கினான் ரஞ்சன்.
‘என்னவாயிற்று இவருக்கு? உம்மென்று இருக்கிறார். கோபத்தில் இருக்கிறார் போல!’ ரஞ்சனின் வழமைக்கு மாறான இறுகிய தோற்றம் இப்படி நினைக்க வைத்தது. அவன் அமைதியைக் கலைக்கும் துணிவின்றி தானும் அமைதிகாத்தாள், காயா.
இப்படியே இவர்கள் வீடு வந்து சேர, அழைத்தவர்கள் அனைவரும் வந்திருக்கவே, கேக்கை வெட்டி ஆரவாரமாக ஒருவர் ஒருவருடன் கதைத்துக் கொண்டிருந்தாலும், எப்போதும் தன் பிறந்தநாளை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் அந்த வீட்டின் கடைக்குட்டி ரதீஷ்தான் சந்தோசத்தைத் தொலைத்துவிட்டு அமர்ந்திருந்தான். நிதி, வசி நெருக்கமே அவன் மனதில் கிடந்தது அரித்துக்கொண்டிருக்க, இயல்பாக இருப்பது போல் நடிக்கப் பெரும் பிரயத்தனமும் செய்துகொண்டிருந்தான்.
வசியோ, நிதியே தனக்கு கிடைத்து விட்டாள் போன்று சந்தோசக் கடலில் ஆனந்தமாக நீச்சல் அடித்தாவாறே, நிதி போகும் இடமெல்லாம் விழிகளால் பின் தொடர்ந்து கொண்டிருந்தான்.
ரஞ்சனோ, தன் விடயத்தை எப்படி பெற்றவர்களிடம் சொல்வதென்று சிந்தனையில் உழன்று கொண்டிருந்தான்.
அப்போது, வீட்டுப் பிள்ளையாக எல்லாவற்றையும் பொறுப்பாகப் பார்த்துப் பார்த்துச் செய்து கொண்டிருந்த நிதியின் பார்வையில், தற்செயலாகப்பட்டது காயாவின் பார்வை! அதில் நிறைந்திருந்த தவிப்புடன் கூடிய நேசம்!
வியப்புடன் அவள் பார்வை நிலைத்திருந்த இடத்தைப் பார்த்த நிதி, சில கணங்கள் அசைவற்று நின்று விட்டாள்.
‘அட அப்பிடிப் போகுதா கதை? பரவாயில்லையே! இது கூட நல்லா இருக்கே!’’ என நினைத்துக்கொண்டவள், அதன்பின் தன் வேலைகளைத் தொடர்ந்தாலும் தான் கண்டுகொண்டதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக காயாவையே விழிகளால் தொடந்து கொண்டிருந்தாள்.

