சதிராடும் சித்திரமே 25 – 2

“என்னை மன்னிச்சிடு. சூதாடும் பழக்கத்தினால் எனக்குப் பணம் நிறையத் தேவையாக இருந்தது” என ரவிபிரசாத் உண்மையை ஒத்துக் கொண்டான்.

 

“இங்க பாரு ரவி, இப்படியெல்லாம் இருந்தா நம்ம எந்தத் தொழிலையும் பண்ண முடியாது. சீக்கிரம் நீ எடுத்தப் பணத்தை எல்லாம் கொண்டு வந்து கொடு. இல்லைன்னா, நம்ம தொழிலை இழுத்து மூட வேண்டிய நிலைமை வரும். சீக்கிரம் பணம் வரலைன்னா அப்புறம் வேற மாதிரி நடவடிக்கை எடுக்க வேண்டி வரும்” என நண்பனுக்கு முதலில் அறிவுரை வழங்கிவிட்டு இறுதியில் மிரட்டலாக முடித்தார் வெங்கடேஷ்.

 

‘சரி சரி’ என்று தலையை ஆட்டிக் கொண்ட ரவிபிரசாத்துக்கு அந்தப் பணத்தை எப்படித் திருப்பித் தருவது என்றே தெரியவில்லை. முதலில் வெங்கடேஷ் இப்படித் தன் கார் ஓட்டுநரின் முன்னால் விசாரித்ததே பிடிக்கவில்லை. தன்னை அவமதித்துவிட்டதாக நினைத்தான் ரவிபிரசாத்.

 

தன் பெற்றோர்களிடமும் திரும்பிச் செல்ல முடியாது. ஏனெனில் அவர்களிடம் சண்டை போட்டு, தனக்குச் சேர வேண்டிய சொத்தையெல்லாம் பிரித்துக் கொண்டு அங்கிருந்து தனித்து வந்திருந்தான் ரவிபிரசாத்.

 

அப்படிக் கொண்டு வந்த பணம் அனைத்தும் சூதாடுவதிலும் தொழில் ஆரம்பிக்கிறேன் என்றும் அதிலேயே கரைந்து போனது. கையில் சுத்தமாகப் பணமில்லை. வீட்டில் வேறு மனைவியும் மகனும் இருக்கிறார்கள். மனைவி வேறு கர்ப்பமாக இருக்கிறாள். அவளுக்குத் தெரிந்தால் அவ்வளவு தான். என்ன செய்வது என்று யோசித்த ரவிபிரசாத்திற்கு அப்பொழுது தான் அந்த எண்ணம் தோன்றியது.

 

நிதி நிறுவனத்தில் பணம் களவு போனது ரவிபிரசாத் மற்றும் வெங்கடேஷைத் தவிர வேறு ஒருவருக்கும் தெரியாது. கார் ஓட்டுநரை யாரும் நம்பப் போவதில்லை. அதனால் இதை இப்படியே அமுக்கிவிட்டால் யாருக்கு எதுவும் தெரியப் போவதில்லை எனக் குறுக்கு வழியில் ரவிபிரசாத்தின் புத்தி யோசிக்க ஆரம்பித்தது.

 

அதன்படி ஒரு நாள் வெங்கடேஷும் அவர் மனைவி மற்றும் மகளும் பருத்தி குடோனில் உள்ள ஓர் ஓய்வறையில் மாலை வேளையில் நொறுக்கித் தீனியைச் சாப்பிட்டுவிட்டு அசதியில் அமர்ந்திருந்தனர்.

 

நான்கரை வயதான திவ்யதர்ஷினி அசதியில் அப்படியே உறங்கிவிட, கணவன் மனைவி இருவருமே அமைதியானார்கள். பயணம் செய்து வந்த அசதியிலும், அதிகாலையில் எழுந்ததிலும் அவர்களுமே களைப்பாக உணர்ந்தார்கள். அப்படியே அவர்களும் கண்ணயர்ந்துவிட்டனர்.

 

காலையிலிருந்து இருவருக்கும் ஒரே அலைச்சல். உறவுக்காரர்கள் இருவரின் வீட்டில் நடந்த விஷேசத்தில் கலந்து கொண்டு அப்படியே இறுதியாக வங்கிக்குச் சென்று வங்கி லாக்கரில் இருந்த நகைகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு வந்திருந்தனர் கணவனும் மனைவியும்.

 

குடோனில் ஒரு முக்கிய பணி இருக்கிறது என்பதால் அவர்ளை குடோனில் இறக்கிவிட்டுவிட்டு அவர்களின் கார் ஓட்டுநர் முரளிதரன் தன் வீட்டுக்குச் சென்றிருந்தார்.

 

ஊர்த் திருவிழா மற்றும் சொந்தத்தில் நிறையச் சுபகாரியங்கள் நடக்கவிருப்பதால் நகைகள் தேவை என்றே அனைத்து நகைகளையும் எடுத்து வந்திருந்தார் வெங்கடேஷின் மனைவி. குடோனில் உள்ள பீரோவில் நகைகள் அடங்கிய பையைப் பாதுகாப்பாக வைத்துப் பூட்டிவிட்டே உறங்கியிருந்தனர்.

 

திடீரென்று ஏதோ கருகும் வாசனை நாசியைத் தொட வெங்கடேஷூம் அவரது மனைவியும் துயில் கலைந்தனர். அவர்களுக்கு ஒரு சில கணங்கள் எங்கே இருக்கிறோம் என்றே புரியவில்லை. அவர்களைச் சுற்றியும் நெருப்புப் பற்றி எரிந்து கொண்டிருந்தது.

 

பருத்தி குடோன் என்பதால் பருத்தி பக்கென்று பற்றிக் கொண்டு மளமளவென்று எரிய ஆரம்பித்தது. ஆனால் நெருப்பு அங்கே எப்படி வந்தது? அதைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்க நேரமில்லை.

 

முதலில் அங்கிருந்து எப்படி வெளியில் செல்வது என்பது கூட அவர்களுக்குத் தெரியவில்லை. முதல் வேலையாக அங்கிருந்த கெட்டியான தார்பாயை எடுத்து திவ்யதர்ஷினிக்குச் சுற்றிவிட்டார் வெங்கடேஷ்.

 

கண்டிப்பாக வெளியில் சென்றால் தீக்காயங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஆனால் தப்பித்துவிடலாம் என எண்ணி கதவை நோக்கிச் சென்றனர். ஆனால் எவ்வளவு முயன்றும் அவர்களால் கதவைத் திறக்க முடியவில்லை. என்ன செய்வது எனக் கணவனும் மனைவியும் பூட்டிய அறைக்குள் திண்டாடிக் கொண்டிருந்தனர்.

 

அதற்குள் தீ வேகமாகப் பரவி மேலிருந்தக் கூரை கீழே விழ ஆரம்பித்தது. கணவன் மனைவி இருவரும் பதறினார். அவர்கள் இறந்தாலும் பரவாயில்லை. அவர்களின் வாரிசை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என எண்ணி, அங்கிருந்த சாளரத்தின் அருகில் வந்தனர்.

 

வெங்கடேஷ் இறந்து போனால் அவன் கையாடல் செய்த பணத்தைத் திருப்பிக் கொடுக்கத் தேவையிருக்காது என்று எண்ணினான் ரவிபிரசாத். அத்தோடு வசூல் செய்யப்பட்ட பணம் மொத்தமும் குடோனிலிருந்த மற்றொரு அலுவலக அறை பீரோவில் இருந்தது. அதைப் பற்றி ரவிபிரசாத்துக்கு ஏற்கனவே தெரியும்.

 

முதலில் அந்த அறைக்குச் சென்று அங்கிருந்த பணத்தையெல்லாம் எடுத்து ஒரு பையில் அடுக்கி வைத்துக் கொண்டான் ரவிபிரசாத். ஏற்கனவே சாவியைத் தயாரித்து வைத்ததால் காரியம் எளிதாக முடிந்தது அவனுக்கு.

 

பின்னர் பருத்தி குடோன் தானாகப் பற்றிக் கொண்டு எரிவதைப் போல் ஜோடித்து இருந்தான் ரவிபிரசாத். அதை விபத்து என்று சொல்லிவிடலாம் என எண்ணி தீயைப் பற்ற வைத்து அவர்கள் உறங்கிக் கொண்டிருந்த அறையில் தூக்கி வீசினான்.

 

திவ்யதர்ஷினி வீட்டுக்குச் செல்வதாக இருந்தால் அவளை வீட்டில் விட்டுவிட்டுத் தன் மனைவியின் சொந்தத்தில் நடந்த சுப காரியத்துக்குச் செல்ல இருந்தான் முரளிதரன். ஆகவே உடன் தன் குடும்பத்தையும் அழைத்து வந்திருந்தான்.

 

பருத்தி குடோனுக்கு வந்த முரளிதரனின் கண்களில் ரவிபிரசாத் அலுவலக அறையிலிருந்து பையை எடுத்துக் கொண்டு வருவது தெரிந்தது. ‘இவன் இங்கே தனியாக என்ன செய்கிறான்? அலுவலக அறையில் இவனுக்கு என்ன வேலை?’ என எண்ணியவாறே முரளிதரன் காரை நிறுத்தினார்.

 

என்று அவன் நிதி நிறுவனத்தில் கையாடல் செய்தான் என்று தெரிந்ததோ அப்போதிலிருந்தே அவனைப் பிடிக்காமல் போனது முரளிதரனுக்கு. நீதி, நியாயம், நேர்மை என்று இருக்கும் தன் முதலாளிக்கு இப்படி ஒரு நண்பனா என்று எரிச்சல் கொண்டார்.

 

அதற்குள் அந்தப் பாதகன் உறங்கிக் கொண்டிருந்த வெங்கடேஷ் குடும்பத்தினரின் அறையை வெளியிலிருந்து பூட்டிவிட்டு அறைக்குள் தீ பந்தத்தை எடுத்து வீசுவது தெரிந்தது. இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த முரளிதரனுக்கு கை காலெல்லாம் வெடவெடவென்று அடித்துக் கொண்டது.

 

“டேய் துரோகி.. பாதகா” எனத் தெலுங்கில் கத்தியவாறே அறையை நோக்கி ஓடினார் முரளிதரன்.

 

சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்த ரவிபிரசாத் , ‘இவன் பார்த்துவிட்டானா?’ எனத் திடுக்கிட்டான். இவனை விட்டால் அவன் மாட்டிக் கொள்ளக் கூடும் என அறையை நோக்கி ஓடிச் சென்ற முரளிதரனை இடையில் தடுத்து நிறுத்தி சரமாரியாகத் தாக்க ஆரம்பித்தான் ரவிபிரசாத்.

 

அப்போது திவ்யதர்ஷினியின் அழுகுரல் சாளரத்தின் வழியே கேட்க, அவர்களை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என முரளிதரனின் மனம் துடியாய்த் துடித்தது. தீ வேகமாய்ப் பரவிக் கொண்டு வேறு இருந்தது.

 

பலம் முழுவதையும் உபயோகித்து ரவிபிரசாத்தைத் தள்ளிவிட்டு ஓடிச்சென்று கதவைத் திறந்துவிட்டார் முரளிதரன். தள்ளிய வேகத்தில் அவன் கையிலிருந்த பை கீழே விழ, அதிலிருந்த பணம் கீழே விழுந்து சிதறியது. அதைப் பார்த்துத் திகைத்த முரளிதரனுக்கு பணம் முக்கியமாகப் படவில்லை. முதலாளியின் குடும்பத்து உயிரே பிரதானமாகப் பட்டது.

 

திவ்யதர்ஷினியின் அன்னை தன் கைகளில் மகளையும், மற்றொரு பையையும் அணைத்தவாறே உடலில் தீக்காயங்களுடன் தட்டுத் தடுமாறி அறையின் வாயிலில் மடாரென்று வந்து விழுந்தார்.

வீறிட்டு அழும் திவ்யதர்ஷினியைக் கைகளில் ஏந்திக் கொண்டார் முரளிதரன்.

 

எஜமானியை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என அவரையும் தூக்க முயன்றான். ஆனால் என்பது சதவீதம் உடல் கருகிய நிலையில் அவர்களால் பிழைக்க முடியாது என்று வெங்கடேஷ் மற்றும் அவரது மனைவிக்கு உறுதியாகத் தெரிந்தது.

 

மகளை எப்படியாவது காப்பாற்றுமாறு அவனிடம் கையெடுத்துக் கும்பிட்டனர் இருவரும். வெங்கடேஷின் மனைவியோ கையில் வைத்திருந்த பையையும் முரளிதரனிடம் தந்து அங்கிருந்து போகச் சொன்னார்.

 

முரளிதரனுக்கு அங்கிருந்து கிளம்ப மனம் வரவில்லை. குற்றுயிரும் குலையுயிருமாக இருப்பவர்களை அப்படியே விட்டு விட்டுச் செல்ல எப்படி அவருக்கு மனது வரும். தீ வேகமாகப் பரவி வரவும் ஆட்கள் வர ஆரம்பித்தனர். அவரை அங்கிருந்து தயவு செய்து போகுமாறு இறைஞ்சுதலாகக் கேட்டார் வெங்கடேஷ்.

 

ஏனெனில் அந்தப் பாதகன் ரவிபிரசாத் வந்து தங்கள் மகளை ஏதாவது செய்துவிடுவான் என்று பயந்தனர். வெளியில் நடந்த சண்டையை அவர்கள் இருவரும் சாளரத்தின் வழியே பார்த்தார்களே.

 

அதற்குள் பணத்தை எடுத்துப் பையில் வைத்துக் கொண்ட ரவிபிரசாத் அங்கே வந்தான். “ஐயோ என்ன ஆச்சு?” என நாடகமாட ஆரம்பித்தான். வெங்கடேஷ் அவர்கள் இருவரும் சண்டையிடுவதைப் பார்க்காமல் இருந்திருந்தால் அவன் நாடகத்தை நம்பியிருப்பார்.

 

அத்தோடு அவர்களை வந்து காப்பாற்றாமல் பை நிறையப் பணத்தை எடுத்து அடுக்கி வைத்துக் கொண்டிருக்கிறான் என்றதுமே அவருக்கு அனைத்தும் புரிந்து போனது.

 

முரளிதரனுக்குக் கோபம் வர, அவன் முகத்தில் இரண்டு குத்துவிட்டு, “நீதானே இதற்கெல்லாம் காரணம்? அலுவலக அறையில் இருக்கும் பணத்தை திருடிட்டு இவங்க அறையில் தீ பந்தத்தை வீசினதை நான் பார்த்தேன். இரு உன்னை போலீசில் பிடித்துக் கொடுக்கிறேன்” என ஆக்ரோஷத்துடன் கத்தினார்.

 

குரூரமாக சிரித்த ரவிபிரசாத், “தெரிஞ்சுருச்சா. இப்படியே நல்லவனா கிளம்பிடலாம்னு நினைச்சேன் விட மாட்டீங்களே. உன்னையும் விட்டு வைக்கக் கூடாது” என அவனை நெருங்கினான் ரவிபிரசாத். அதற்குள் கீழே விழுந்திருந்த வெங்கடேஷ் ரவிபிரசாத்தின் காலைக் கெட்டியாக பிடித்துக் கொண்டு முரளிதரனை அங்கிருந்து ஓடுமாறு அலறினார்.

 

எஜமானரையும் எஜமானியையும் அங்கேயே விட்டுவிட்டு எப்படிச் செல்வது என அவர் தயங்க, வெங்கடேஷன் மனைவி கையெடுத்துக் கும்பிட்டு திவ்யதர்ஷினியைக் காப்பாற்றும்படி கதறினார்.

 

அங்கேயே நின்று கொண்டிருந்தால் அந்தக் கயவனின் கையில் அகப்பட்டு அவர்கள் குடும்பம் மொத்தமும் அழிய நேரிடும் எனச் சொன்னார்.

 

எப்படியாவது திவ்யதர்ஷினியைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் அவளைத் தூக்கிக் கொண்டு காருக்கு ஓடினார் முரளிதரன். அவர் மனைவி தங்கள் கைக் குழந்தையை ஏந்திக் கொண்டு பதற்றத்துடன் காரிலிருந்து இறங்கியிருந்தார்.

 

முரளிதரன் ஓடி வருவதைப் பார்த்ததும் கார் கதவைத் திறந்துவிட்டு மீண்டும் உள்ளே ஏறிக் கொண்டார். நடந்த களேபரத்தில் முரளிதரனின் கைப்பேசி சட்டையிலிருந்து கீழே தவறி விழுந்துவிட்டது.

 

வெங்கடேஷின் பிடியில் இருந்து தப்பிய ரவிபிரசாத் தன் வாகனத்தில் முரளிதரனைத் துரத்த ஆரம்பித்தான். இதற்குமேல் அந்த ஊரிலேயே இருந்தால் திவ்யதர்ஷினியின் உயிருக்கு ஆபத்தாக முடியும் என்று புரிந்தது.

error: Alert: Content selection is disabled!!