தொடர்ந்து, “பிற்காலத்துல நீங்க ஒன்னு சேர்ந்ததுக்கு அப்புறம் எனக்கு மரியாதையா ஒரு நல்ல இடத்துல ஹோட்டல் புக் பண்ணிக் கொடுங்க. நான் போய் நிம்மதியாத் தூங்கணும். என் தூக்கத்தைக் கெடுத்து நீங்க அப்படி லவ் பண்ணனுமா என்ன? இந்தப் பகல் பகல்னு ஒன்னு இருக்குதே. அந்த நேரத்துல எல்லாம் தேட மாட்டிங்களா?” என நக்கலாகச் சொன்னான் வத்சன்.
அதைக் கேட்டதும் திவ்யதர்ஷினி கலகலவென்று சிரித்தாள். அவள் சிரித்தது என்னவோ வத்சன் சொன்னதைக் கேட்டு தான். ஆனால் அவளது சிரிப்பு மித்ரனின் செவிகளில் தேனாய்ப் பாய்ந்து இனித்தது.
இந்தச் சிரிப்புச் சத்தத்தைக் கேட்டு எத்தனை நாட்கள் ஆகிவிட்டன. அப்படியே அலைபேசியுடன் அங்கிருந்த இருக்கையில் சாய்ந்து அமர்ந்தான் மித்ரன்.
உடனே வத்சன், “சங்கீத ஸ்வர்ங்கள் ஏழே கணக்கா, இன்னும் இருக்கா என்னவோ மயக்கம்? என் வீட்டில் இரவு அங்கே இரவா, இல்லை பகலா எனக்கும் என்னவோ மயக்கம்” எனச் சத்தமாகப் பாடினான்.
அதைக் கேட்ட மித்ரன் அவனைப் பார்த்துப் புன்னகைக்க, “சோதிக்காதீங்கடா.. காலையில நேரத்துல எந்திரிச்சு மீட்டிங் போகணும்” எனச் சொல்லவும், “என்னவோ என்கிட்டே பேசு பேசுன்னு கெஞ்சின. இப்போ வந்து பேசினா வீட்டை விட்டுத் துரத்தற” என மித்ரன் உல்லாசமாகக் கேட்டான்.
“என்ன ஃபீலிங்க்ஸா? என்கிட்ட பேசாம இருந்து கவலையில வந்து பேசற மாதிரி. என்னவோ நெல்லுக்குப் பாயற நீர் புல்லுக்கும் போற மாதிரி இங்க வந்துட்டு… போவியா” என முறைத்தான் வத்சன்.
மீண்டும் சிரித்த மித்ரன், “தேங்க்ஸ் திவி. எப்போ வருவ? உன்னைப் பார்க்கணும் போல இருக்கு” என அவன் சொல்ல, “குட்நைட்” என நீண்ட நாட்கள் கழித்துக் கோபப்படாமல் சொல்லிவிட்டு அழைப்பைத் தூண்டித்தாள்.
அங்கிருந்து எழுந்தவன், “கேட்ச்..” எனக் கைப்பேசியை வத்சனை நோக்கி வீசிவிட்டு, “நாளைக்கு அங்க நம்ம வீட்டுக்கு நைட் வந்திடு” எனச் சொல்லிவிட்டு கிளம்பினான்.
“புறா விடு தூது கேள்விப்பட்டிருக்கிறேன்… கடிதம் விடு தூது கேள்விப்பட்டிருக்கேன். இது என்னடா செல்ஃபோன் விடு தூது? கடவுளே” என மேலே பார்த்த வத்சன், “எனக்கு வந்த சோதனையைப் பார்த்தியா?” எனப் புலம்பினான்.
“ஃபோன் வெட்டியா தானே இருக்குது. அதைக் கொஞ்சமாவது வேலையைப் பார்க்கச் சொல்லு” எனச் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான் மித்ரன்.
****
அங்கே நெல்லூரில் தன் தாத்தா பாட்டி வீட்டில் இருந்த திவ்யதர்ஷினிக்கு ஓரளவுக்கு அங்கே பழக்கமாகிவிட்டது. அன்று திவ்யதர்ஷினியை அழைத்துக் கொண்டு விஜயவாடாவில் உள்ள கட்டட நிறுவனத்தை சுற்றிக் காட்டினான் தினேஷ்.
அவனுடன் சென்று நிறுவனத்தைச் சுற்றிப் பார்த்த திவ்யதர்ஷினிக்குப் பிரம்மிப்பாக இருந்தது. இருபது வருடங்களில் அவளது அத்தையும் மாமாவும் அத்தொழிலை பிரமாண்டமாக வளர்த்திருந்தனர். நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டாள். கற்றுகொள்ள வேண்டியதும் நிறைய இருந்தது.
அனைத்தையும் சுற்றிப் பார்த்துவிட்டு தனி அறைக்குள் இருவரும் சென்றனர். அங்கிருந்த இருக்கையில் அமர்ந்த திவ்யதர்ஷினி, “எதுக்கு இப்போ எனக்கு இந்த நிறுவனத்தையெல்லாம் சுத்தி காமிக்கறீங்க? எனக்கும் இந்த நிறுவனத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.
என் அப்பா ஆரம்பிச்சதா இருந்தாலும் இதில் அத்தை-மாமாவோட உழைப்பும் உங்களோட உழைப்பும் மட்டுமே இருக்குது. அதனால் இது எனக்கு வேண்டவே வேண்டாம்” எனப் பட்டெனச் சொல்லிவிட்டாள் திவ்யதர்ஷினி.
“அப்படி எல்லாம் எப்படி விட முடியும்?” எனத் தினேஷ் திணற, பெருமூச்சொன்று இழுத்துவிட்டவள்,
“நடிக்காதீங்க தினேஷ். உங்களுக்கும் இந்த நிறுவனத்தை விட்டுக் கொடுக்க மனசு இல்லன்னு எனக்கு நல்லாவே தெரியும். நேத்து நீங்க உங்க தங்கச்சியோட பேசிட்டு இருந்ததை நான் கேட்டேன்” எனச் சொன்ன திவ்யதர்ஷினி அவனையே இமைக்காமல் பார்த்தாள்.
‘கேட்டுவிட்டாயா?’ என அதிர்ந்து போனான் தினேஷ். அவர்கள் தெலுங்கில் அல்லவா பேசிக் கொண்டிருந்தார்கள் இவளுக்கு எப்படிப் புரிந்தது?
“என்ன யோசிக்கிறீங்க? எனக்கு எப்படிப் புரிஞ்சதுன்னு பார்க்குறீங்களா? நான் காலேஜ் படிச்ச சமயத்துல என் பெஸ்ட் ஃப்ரெண்ட் தெலுங்குல பேசுவா. ஆந்திரா பொண்ணு அவ. அவ தமிழ் கத்துக்கிட்டாளோ இல்லையோ, நான் நல்லா தெலுங்குப் பேச கத்துக்கிட்டேன்” எனச் சிரித்தாள்.
அவன் பெரிதாக எதையும் சொல்லவில்லை. ஆனால் அவன் தங்கை, இத்தனை நாட்களாக ராணி போல் வலம் வந்த குடும்பத்தில் இன்னொரு பெண்ணை அவளுக்கு நிகராக, இல்லை, இல்லை அதற்கும் மேலாகக் கொண்டு வந்து நிறுத்தினால் அவளால் எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்?
என்ன தான் இது போன்று ஒரு பெண் தங்கள் குடும்பத்தில் இருக்கிறாள் என்று தெரிந்தாலும் அவள் கண்காணாமல் எங்கேயோ இருக்கிறாள் என்று நினைத்துக் கொண்டிருந்தாள். இப்போது திடுதிப்பென்று அவள் அங்கே வரவும் அவளால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
அதே சமயத்தில் திவ்யதர்ஷினியை அவள் வெறுக்கவுமில்லை. ஏதோ ஒருவித உரிமைப் போராட்டத்தில் இருந்தாள் தினேஷின் தங்கை. அவளது தாத்தா பாட்டிக்கு மகன் வயிற்றுப் பேத்தியே உசத்தியாகத் தெரிகிறாள் என்று எண்ணினாள்.
“நான் உங்ககிட்ட ஏற்கனவே சொல்லிட்டேன். எனக்கு எந்தச் சொத்தும் வேண்டாம். நீங்களா என்னைத் தேடிக் கண்டுபிடிச்சு வந்தீங்க. உறவுக்காரங்க மனசு கஷ்டப்படக் கூடாதுன்னு என் அப்பா சொன்னதால இங்கே வந்தேன். இது என்னோட இடம் கிடையாது” என அவள் சத்தியம் செய்யாத குறையாகச் சொல்லவும் தினேஷூக்கு என்னவோ போலாகிவிட்டது.
“சாரி தர்ஷினி, உண்மையைச் சொல்லணும்னா எனக்கும் உன்னைக் கண்டுபிடிச்சதும் எங்கே என் தொழில் சாம்ராஜ்யத்துல குறுக்க வந்துடுவியோன்னு நினைச்சேன், ஆனா ஒரு சதவீதம் கூட நான் நினைச்ச மாதிரி நீ இல்ல.
சொந்தத்துலேயும் பாசத்துலேயும் மட்டும் பங்கு கொடுங்க போதும்னு சொல்லற. உன்னை மாமா அருமையா வளர்த்திருக்கிறார்” என முரளிதரனை அவனின் மாமவாக ஏற்றுக் கொண்டான் தினேஷ்.
“அதுக்காக உன்னை அப்படியே நாங்க விட முடியாது, உன் அப்பா-அம்மா சம்பாதிச்சது மட்டுமல்ல, நம்ம பூர்வீகச் சொத்தும் நிறைய இருக்கு. அத்தோட உன் அம்மாவோட எல்லாச் சொத்தும் உனக்குச் சேரும். உன் அம்மா மட்டும் தான் அங்க வாரிசு. அந்தத் தாத்தா-பாட்டியைப் பார்க்க நாளைக்குக் கூட்டிட்டுப் போறேன். உன்னைப் பார்த்தா ரொம்பச் சந்தோஷப் படுவாங்க” என்றான்.
அனைத்தையும் கேட்டுக் கொண்டவள் அதன்படியே சொந்தம் அனைவரையும் சென்று பார்த்துவிட்டு வந்தாள். அவர்கள் அனைவரும் அவளை அங்கேயே இருக்குமாறு கேட்டுக் கொள்ள, அவள் தன்மையாக மறுத்துவிட்டாள்.
ஆனால் அடிக்கடி அவர்களை வந்து அவள் பார்ப்பதாக வாக்குறுதி தந்தாள். அவர்களும் எப்போது வேண்டுமென்றாலும் அவளைப் பார்க்க வரலாம் என உரிமையாகச் சொன்னாள். அனைவரும் அவள் நிலைமையைப் புரிந்து கொண்டனர். உடனே சென்னையில் ஒரு வீட்டை வாங்க ஏற்பாடு செய்தனர் திவ்யதர்ஷினியின் அம்மா வழி தாத்தா-பாட்டி.
தினேஷின் வீடு ஏற்கனவே சென்னையில் இருப்பதால் அவன் பெற்றோர்களும் அவர்களின் தாத்தா பாட்டியும் அடிக்கடி அங்கே வருவார்கள் என்று தெரிவித்தனர். அடுத்து வந்த வாரத்தில் அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு கிளம்பிவிட்டாள்.
மேலும் இரண்டு நாட்களில் சசிதரன் வேறு தன் ஆசிய பயணத்தை முடித்துக் கொண்டு வந்து விடுவான். அவன் கல்லூரிக்கு வேறு செல்ல வேண்டும். அதனால் உடனே கிளம்பிவிட்டனர்.
சென்னை செல்லும் வழியில் தினேஷிடம், “எனக்கு உங்க உதவி கொஞ்சம் தேவை. நீங்க சென்னையில இருக்கிற உங்க கட்டட நிறுவனத்துக்குக் கூட்டிட்டுப் போவீங்களா. எனக்குக் கொஞ்சம் ஆலோசனைகள் வேண்டும்” என்றாள்.
“கண்டிப்பா… போகலாம். உனக்கில்லாததா?” எனச் சொன்னான் தினேஷ். அவளுக்குச் சொந்தமாக நிறுவனம் தொடங்க வேண்டும் என்ற லட்சியம் இருக்கிறது என்று அவனுக்கு தெரியும். ஆகவே அதற்கு முழுவதுமாக அவன் ஒத்துழைப்பு தருவதாகச் சொன்னான்.
வழி நெடுகிலும் திவ்யதர்ஷினி அவள் ஏற்கனவே போட்டு வைத்திருந்த திட்டத்தைப் பற்றியும் அவளது முயற்சிகளைப் பற்றியும் அவனிடம் பகிர்ந்து கொண்டாள். அடுத்தக் கட்டமாக என்ன செய்யப் போகிறாள் என அனைத்தையும் சொல்ல தினேஷ் அவளைப் பார்த்து பிரமித்துப் போனான்.
அவன் மாமாவைப் போலவே மாமாவின் மகளும் அதிபுத்திசாலியாக இருக்கிறாளே என வியந்து போய் அவளைப் பார்த்தான். இவளுக்கெல்லாம் ஆரம்பத்தில் இருந்தே பணப் பற்றாக்குறை இல்லாமல் இருந்திருந்தால் இன்று அவனே அண்ணாந்துப் பார்க்கும் அளவிற்கு உச்சத்தில் இருந்திருப்பாள். அதை அவளிடம் தெரிவிக்கவும் செய்தான்.
அதைக் கேட்ட திவ்யதர்ஷினி பெரிதாக எதுவும் சொல்லவில்லை. புன்னகைத்துக் கொண்டாள். ஆனால் அவளின் மனதில் அவள் கட்டடக் கலைத் துறையைத் தேர்ந்தெடுக்கும் பொழுது முரளிதரன் ஏன் அதற்கு முட்டுக்கட்டையாகநின்றார் என்ற புரிதல் வந்திருந்தது. விதியை யாரால் மாற்ற முடியும்?!

