நீ வந்து தங்கிய நெஞ்சில் 10.1

அத்தியாயம் 10

அலுவலகம் முடிந்து வீட்டுக்குப் புறப்பட்டவளின் உள்ளத்திலும் உடலிலும் பல நாள்களுக்குப் பிறகு பரபரப்பும் உற்சாகமும். சண்டையின் பின்னான சமாதானம் மிகுந்த அழகுதான் போலும். அந்தளவில் அப்போதிருந்தே அவன் வருகைக்காகக் காத்திருக்க ஆரம்பித்தாள் யாமினி.

போகிற வழியிலேயே சமைக்கத் தேவையானவற்றை வாங்கிக்கொண்டு சென்றாள். உடை கூட மாற்றவில்லை. நேராகச் சமையல் பகுதிக்குச் சென்று, விறுவிறு என்று வேலைகளை ஆரம்பித்தாள்.

அன்னைக்கு வீடியோ கோலில் அழைத்துப் பேசிக்கொண்டே கோழிக்கறி, நெய் சேர்த்த கத்தரிக்காய்ப் பால் கறி, கோவா வறை என்று சமையல் அமோகமாக நடந்தது.

ஏன் இத்தனை என்று கேட்ட அன்னையிடம் அஜந்தா அவளின் வருங்காலக் கணவனோடு சாப்பாட்டுக்கு வருகிறாள் என்று ஒரு கதை சொன்னாள்.

சின்னவன் கூப்பிடுகிறான் என்று அவர் அழைப்பைத் துண்டித்துக்கொண்டார். இங்கே இவள் முட்டையும் அவித்து, நிரோஜனுக்கு விருப்பம் என்று அரிசிமாவில் குழல் புட்டும் அவித்து வைத்தாள்.

சமையற்கட்டை ஒதுக்கிவிட்டு ஓடிப்போய் ஒரு குளியலைப் போட்டுவிட்டு வந்தாள். வீட்டுக்கு அணியும் வகையிலான சிவப்பில் டீ ஷேர்ட்டும் கறுப்பில் காப்ரி லெக்கிங்ஸும் அணிந்துகொண்டாள்.

அடர் கேசத்தை ஒரு கிளட்ச்சரில் அடக்கி, கண்களுக்கு மை தீட்டி, இதழ்களை லிப் குளோஸில் நனைத்தெடுத்தாள். புருவங்களுக்கு மத்தியில் சின்ன வெற்றிலை வடிவப் பொட்டை ஒட்டிக்கொண்டு கண்ணாடி பார்த்தபோது, அவள் தோற்றத்தில் அவளுக்கே மிகுந்த திருப்தி.

அவனும் வரும்போதே கொடுப்புக்குள் சிரித்தபடிதான் வந்தான். கதவைத் திறந்தவள் தோற்றத்தைக் கண்டுவிட்டுக் தன்னாலே சீட்டியடித்தான்.

யாமினிக்கு முகம் சிவந்துவிடும் போலாயிற்று. அவனுக்காகத்தான் அத்தனை அலங்காரங்களும். அதற்கென்று இப்படித்தான் சில்மிஷம் செய்வானா? “சமையல் முடிஞ்சுது. சாப்பிடலாம்.” என்றாள், உதட்டுச் சிரிப்பை இதழ்களுக்குள்ளேயே அடக்க முயன்றபடி.

“சா…ப்பி…டலாமே!” விசமப் பார்வையோடு இராகம் இழுத்தான் அவன்.

“நிரோ!” அதற்குமேல் முடியாமல் பொய்யாக அதட்டிவிட்டு, “கை, முகம் கழுவிக்கொண்டு வாங்க.” என்றுவிட்டுச் சமையற்பகுதிக்கு ஓடினாள்.

தோளில் குறுக்காக அணிந்துவந்த லெதர் பாக்கை அங்கிருந்த சோபாவில் கழற்றி வைத்துவிட்டுப் போய், முகம் கழுவிக்கொண்டு வந்து அமர்ந்தான் அவன். அதுவும் அணிந்திருந்த ஷேர்ட்டின் முழுக்கையை முழங்கை வரை இழுத்து விட்டுவிட்டு அவன் அமர்ந்த அழகே அவள் இதயத்தைப் பறித்தது.

ஒரு கணம் இமைக்காது அவனையே பார்த்துவிட்டுத் தட்டை எடுத்து வைத்துப் பரிமாறினாள்.

அத்தனையும் அவனுக்குப் பிடித்த உணவாகக் இருக்கக் கண்டு, அவள் கரம் பற்றி உதடுகளை ஒற்றி எடுத்து, “தேங்க்ஸ்!” என்றான் அவன்.

அவள் முகம் மலர்ந்து விகசித்தது. “இதுக்கெல்லாமா தேங்க்ஸ் சொல்லுவீங்க? சாப்பிடுங்க.” என்றுவிட்டு அவனெதிரில் அமர்ந்து அவளும் சாப்பிட்டாள்.

இங்கே வரப்போவதால் அங்கே கேண்டீனில் அவள் தேநீரைப் பருகிய பிறகு எதுவும் உண்ணவில்லை. அதில் அவனுக்கு நல்ல பசி. சுவை வேறு அருமையாக இருந்ததில் நல்ல வெட்டு வெட்டினான். “எப்பிடி இருக்கு?” என்றவள் கேள்விக்கு ஒரு கை உணவை அள்ளி வாயில் வைக்க, மறு கையால் அருமை என்று சைகை செய்து காட்டினான்.

உணவு வேளை முடிந்ததும் ஆளுக்கு ஒரு கப்பில் வனிலா ஐஸும், அதற்கு மேலே பழக்கலவையும், அதன் மீது கொஞ்சமாய் நட்ஸ் தூவி, கேரமல் விட்டு எடுத்துக்கொண்டு வந்து சோபாவில் அமர்ந்தார்கள்.

தன்னுடையதில் இருந்து ஒரு கரண்டி எடுத்து அவளுக்கு நீட்டினான் அவன். யாமினி தடுமாறிப்போனாள். ஒரு சிறு செய்கை. அதில் தெறித்த அன்பு அவளை உடைத்தது. இத்தனை நாள்களாய் மனத்தில் வைத்து அலைப்புற்ற உணர்வுகள் எல்லாம் பொங்கிக்கொண்டு வந்து, கண்ணீரை உற்பத்தி செய்தன.

அவனைப் பாராமல் அவன் தந்ததை வாங்கியவள் மூக்கு முகமெல்லாம் அடக்கிய கண்ணீரால் சிவந்து போயிற்று. அதை மறைக்க கையில் இருந்த கப்பில் பார்வையைப் பதித்தாள்.

அவளையே பார்த்திருந்த நிரோஜன், தன் கப்பை எட்டி மேசையில் வைத்துவிட்டு, அவளை இழுத்துத் தன் மடியில் அமர்த்திக்கொண்டான். அவ்வளவுதான். கரகரவென்று கண்ணீர் அவள் கன்னத்தில் வழிய ஆரம்பித்தது.

“யம்மு என்னடி?” என்று அவன் அவளை அணைத்துக்கொள்ள, “என்னை வெறுத்திட்டீங்களோ எண்டு பயந்திட்டேன் நிரோ.” என்றாள் கண்களில் கண்ணீருடன்.

“நீ என்ன லூசா?” என்றான் அவன் உடனேயே.

“என்னை வெறுத்திட மாட்டீங்களே?”

திரும்பவும் கெட்டவளை இலேசாக அதிர்ந்து பார்த்தான் நிரோஜன். அவள் அவனை வற்புறுத்தியதிலும், பிடிவாதமாக நின்று தான் நினைத்ததைச் செய்ய வைத்ததிலும் அவனுக்கு மிகுந்த கோபம்தான். அதற்கென்று வெறுத்துவிடுவானா என்ன?

“யமி, என்னைப் பார். என்ன பிரச்சினை உனக்கு? ஏன் இப்பிடி எல்லாம் கேக்கிறாய்?” என்றான் ஒன்றும் புரியாமல்.

“தெரியா நிரோ. என்னவோ பயமா இருக்கு. அப்பா போனதில இருந்து ஏதேதோ யோசனை எல்லாம் கண்டபாட்டுக்கு ஓடுது.” என்றவளுக்கு மீண்டும் கண் முகமெல்லாம் அழுகையில் சிவந்துகொண்டு வந்தன.

“யம்மு என்னடா?” என்று அவளைத் தன்னுடன் சேர்த்து அணைத்துக்கொண்டான் அவன்.

தந்தை இறந்தது, வானிலை மாற்றம் போன்று சட்டென்று மாறிப்போன அவள் வீட்டு நிலை, இதில் அவனோடு நடந்த சண்டைகள் என்று எல்லாம் சேர்ந்து அவளை மிகவுமே பாதித்திருப்பது புரிந்தது. அவள் முதுகை வருடிக்கொடுத்து, அணைப்பை இறுக்கி, நெற்றியில் உதடு பதித்து, உனக்கு நான் இருக்கிறேன் என்று உணர்வுகளால் அவளுக்குள் கடத்தினான் அவன்.

உண்மையில் அவளுக்கு அந்த அணைப்பும் அவன் தரும் அரவணைப்பும் தேவையாய் இருந்தன. அதை அனுபவித்து உள்ளம் தெளிந்தவள் நிமிர்ந்து, “நான் கேட்டதுக்கு நீங்க பதில் சொல்லவே இலை நிரோ.” என்றாள்.

error: Alert: Content selection is disabled!!