14
காலையில், அவர்கள் வீட்டிற்கு மிக அருகிலுள்ள சூப்பர் மார்க்கட்டுக்கு பொருட்களை ஏற்றி வரும் ‘கன்டைனர்’ வந்து நிற்கும் சத்தத்தில் கண் விழித்தான் ரஞ்சன்.
எரிச்சல் எடுத்த விழிகளை விருப்பமின்றியே திறந்தவன், இரவுடை கூட மாற்றாமல் அப்படியே படுக்கையில் விழுந்து கிடப்பதை அப்போது தான் கவனித்தான்.
தொடர்ந்து, இரவு நடந்தவை ஒவ்வொன்றும் நினைவில் உலா வர, துள்ளி எழுந்தமர்ந்தவன் பார்வை கடிகாரத்தை நாடியது.
‘‘மணி ஏழாச்சா!” முணுமுணுத்தபடி விரைந்து சென்று காலைக்கடன்களை முடித்ததாகப் பெயர் பண்ணிவிட்டு கீழே இறங்கி வர, மூடிய படுக்கையறைகளும் வழமைக்கு மாறான நிசப்தமுமே வீட்டின் நிலையை உணர்த்தி வரவேற்றது.
இந்திரன், காலை ஏழுமணிக்கே வேலைக்குச் சென்று விடுவதால், ‘அப்பா போயிருப்பாரா?‘ என எண்ணியவாறே இறங்கியவனை, நிதியின் அறையிலிருந்து வந்த தொடர் கைபேசி மணிச்சத்தம் தயங்கி நிற்கச் செய்தது.
‘வழமையாக இந்நேரம் எழும்பியிருப்பாளே!’ என எண்ணியவன், ‘‘இங்க இல்லையென்றா, கீழ இருகிறாளோ! செல்லை இங்க வச்சிட்டுப் போய்ட்டாள் போல!’’ நினைத்தவாறே, தொடர்ந்து நகர முயன்றவனை, மீண்டும் சிணுங்கிய கைபேசி அவளது அறையை நோக்கிச் செல்ல வைத்தது.
மூடியிருந்த கதவைத்திறந்து அறைக்குள் நுழைந்தவன், யன்னல் திரையை கூட மூடாமல் கட்டிலில் சுருண்டிருந்தவளை பார்த்ததும், அவள் உறக்கம் கலையப் போகின்றதே எனும் ஆதங்கத்தில் அவசரம் அவசரமாக அழைப்பை ஏற்று, ‘‘ஹலோ’’ என்றான்.
அதேநேரம், அவளில் இருந்து மெல்லிய அனத்தல் சத்தம் வரவே, குனிந்து அவள் தோளில் தட்டியவன், அவள் அசைவின்றிக் கிடந்ததில் சற்றே பயந்துவிட்டான். மீண்டும் மீண்டும் தட்டி எழுப்பியவன், அக்கணம், கைபேசியை முற்றாக மறந்திருந்தான்.
எங்கோ அதலபாதாளத்தில் விழுந்து அமிழ்ந்து போகும் உணர்வில் கிடந்த நிதி, மீண்டும் மீண்டும் ரஞ்சன் அருட்டியதில் மெல்ல அசைந்தாள்.
“நிதி..நிதி…இங்க பார்!” அவன் குரலை கிரகித்துக்கொண்டவள் அழுந்த ஒட்டியிருந்த இமைகளை கடினப்பட்டுப் பிரித்தெடுக்க முயன்றாள்.
மெதுவாகக் கண்களைத் திறந்து பார்த்தவளின் இரத்தச் சிவப்பு விழிகளைப் பார்த்தவனுக்கு, கைபேசியில் ‘‘ஹலோ..ஹலோ..’’ என்று கத்திக் கொண்டிருந்த வசியின் குரல் கேட்கவே இல்லை.
கைபேசியை கட்டிலில் போட்டுவிட்டு, ‘‘நிதி! என்னம்மா செய்யுது? இங்க பார்!’’
பதறிக்கொண்டே அவள் கன்னம் தட்ட, முழுவதுமாக விழித்துக்கொண்டாள் அவள்.
ரஞ்சனையும் அவனது பதறிய தோற்றத்தையும் கண்டு வேதனையில் துடித்த மனத்தை அடக்கிவிட்டு, தனக்கான அவன் தவிப்பிற்கு, கோபத்தைப் பதிலாகக் கொடுக்க முயன்றாள் அவள்.
‘‘அய்யோ! உங்களுக்குத் திரும்பத் திரும்பச் சொன்னாலும் விளங்காதா? முதல் இந்த அறையை விட்டு வெளியில போங்க! நீங்க ஒன்றும் என்னோட கதைக்க வேணாம்!’’ குரல் தழுதழுக்க விம்மியவளை, வலியோடு பார்த்தவன் சட்டென்று விலகிவிட்டான்.
‘‘சரி சரி…நான் போறன்; உனக்குக் காச்சல் அடிக்குது நிதி; பிடிவாதம் பிடிக்காமல் முதல் எழும்பு; மருந்து தாறன், குடிச்சிட்டுப் படும்மா…பிளீஸ்!’’ இழுத்து வைத்த பொறுமையுடன் சொல்லிக்கொண்டே நகர்ந்தான்.
‘‘நீங்க ஒன்றும் எனக்குத் தரத் தேவையில்ல; என்னைப் பார்த்துக்கொள்ள எனக்குத் தெரியும்; நீங்க உங்கட வேலையைப் பார்த்துக்கொண்டு போங்க!’’ குரலை உயர்த்தினாள் அவள்.
சட்டென்று வெறுமையான அவனது விழிகள் அவளை உரசின!
ஒருகணம் உற்றுப் பார்த்தவன், மறுகணம், நெஞ்சம் வலியில் துடிக்கத்துடிக்க வெளியேறிவிட்டான்.
‘இப்ப என்ன செய்தன் என்று இந்தக் கத்துக் கத்துறாள்? அப்படி என்ன பிழை செய்தன்?’ மறுகினான் ரஞ்சன்.
‘அவளுக்கு நல்ல காச்சல்… பனடோல் குடுக்கச் சொல்லி இவனிட்டச் சரி சொல்லுவம்.’ என நினைத்தவாறே சென்று ரதீஷின் அறையைத் தட்டினான்.
சில நிமிடங்களில், தமையன் சொன்னதற்கிணங்க பனடோல் கொடுக்கச் சென்ற ரதீஷ், நிதியின் சிடுசிடுப்பில் சுர்ரென்று கோபமேற முறைத்தான்.
‘‘இங்கே பாரும் நிதி…இந்தா இதில வச்சிருக்கிறன், விருப்பம் என்றால் எடுத்துக் குடியும். முதல் இந்தப் பிடிவாதத்தை விட்டுத் தள்ளும்!’’ கோபமாகவே சொன்னவன், பனடோலையும் தண்ணீர் கிளாசையும் அருகிலிருந்த மேசையில் வைத்துவிட்டு அதே கோபத்துடன் கீழே வர, பாலைக்காய்ச்சி அவளது கப்பில் ஊற்றிக்கொண்டிருந்த ரஞ்சன், ‘‘என்னடா குடிச்சிட்டாளா?’’ என, அவசரமாக விசாரித்தான்.
‘‘பச்…இல்ல.” என்றவனுக்கு, ஏனோ அவளை நினைக்கையில் எரிச்சல் தான் வந்தது.
“சும்மா இருங்கண்ணா. அவள் என்ன சின்ன பேபியா? நான் குடுக்கவும் வேணாம் என்றாள், சரி விருப்பம் இருந்தால் எடுத்துக்குடி…இல்லையோ விடு என்று வச்சிட்டு வந்திருக்கிறன்.’’
எரிச்சலை மறைக்காது குரலில் காட்டினான்.
‘‘பாவமடா…அவளும் தான் எத்தனையைத் தாங்குவாள்.’’ அவளுக்காக பரிதாபப்பட்டான் ரஞ்சன்.
‘அவளைச் சந்தோசமாப் பார்த்துக்கொள்ள வேணும் என்றுதான் நினைச்சன் ; ஆனால், இப்ப நானே கஷ்டம் குடுத்திட்டன்.’ மனதுள் அரற்றினான்.
தன் மனதின் சஞ்சலத்தைத் தம்பிக்குக் காட்டாது அழகாகச் சமாளித்தவன், ‘‘அப்பா வேலைக்குப் போய்ட்டார் போலடா. அம்மா இன்னும் எழும்பேல்ல, இப்பத் தான் பார்த்தன். அப்பாவும் அம்மாவும் கதைச்சுக் கொண்டார்களோவும் தெரியாது. எதற்கும் ஒரு தரம் அப்பாவுக்குக் கால் பண்ணிக் கேளடா.’’ என, சுரத்தே இல்லாமல் சொன்னவாறு நிதியின் பாலை எடுத்து மேசை மீது வைத்தான்.
‘‘இப்ப உடனே திரும்பிப் போனால் இன்னும் கத்துவாள். நாம டீ குடிச்ச பிறகு கொண்டு போய்க் குடுப்பம்.’’ என்றவாறே, தனக்கும் தம்பிக்குமாக இரண்டு கோப்பைகளில் தேநீரை ஊற்றி, தம்பிக்கும் கொடுத்துத் தானும் குடிக்கத் தொடங்கினான்.
*****
தான் முகநூலில் கண்ட விசயம் பற்றி நிதியோடு கதைப்பதற்காக, இரவு பல தடைவைகள் அழைத்திருந்தான் வசி.
அவள் அழைப்பை ஏற்காததில், ‘‘என்ன நடந்திட்டு இவளுக்கு!? சரி, விடியட்டும் எடுத்துப் பார்ப்பம்.’’ என்று நினைத்து உறங்கி விட்டான்.
இன்று காலை எழுந்ததில் இருந்தும் பல தடவைகள் அழைத்தும் அவள் எடுக்கவில்லை என்பதால் இலேசாகப் பதற்றம் கொண்டவன், வெளியே செல்லத் தயாராகி வந்து, தாய் தந்த தேநீரைக் குடித்துக்கொண்டே, ‘இன்னொருதரம் எடுத்துப் பார்ப்பம், எடுக்கேல்ல என்றால் நேரில போய்ப் பார்ப்பம்.’ என்ற முடிவோடுதான் அழைத்திருந்தான்.
மறுபுறத்தில் அழைப்பு ஏற்றும் கதைக்கப்படாதில் பல தடவைகள் கூப்பிட்டுப் பார்த்தவன் செவிகளில், மிகத்தெளிவாக ரஞ்சனின் கெஞ்சலும், நிதியின் கத்தலும் வந்து விழுந்தன.
அங்கு நடந்ததை பதற்றத்துடன் கேட்டிருந்தவன், ‘என்னவோ நடந்திருக்கு!’ என எண்ணியவாறே, தேநீரை பாதியில் வைத்து விட்டு, ‘‘அம்மா… கொஞ்சம் வெளியில் போயிட்டு வாறன்.” விரைந்து வெளியேறியவன், ‘‘எங்க தம்பி? என்ன விசயம்?’’ என்று கேட்ட அன்னைக்குப் பதிலெதுவும் சொல்லாது புவனி வீடு நோக்கிச் சென்றான்.
ரஞ்சனும் ரதீஷும் தேநீர் அருந்திக் கொண்டிருக்கையில், அவர்கள் வீட்டு அழைப்புமணி ஒருவித அவசரத்துடன் சிணுங்கியது.
சமையிலறையில் இருந்தே முன் வாசல்கதவின் கண்ணாடியால் யார் வந்திருப்பது என்று பார்க்கலாம் என்பதால் எட்டிப் பார்த்த ரதீஷ், அங்கு வசி நிற்பதைக் கண்டதும் முகம் சுருங்கிப் போனான்.
‘இதென்ன இவர் இந்த வெள்ளணத்தோட வந்திருக்கிறார்! நிதி ஏதும் சொல்லித்தான் வந்தாரோ?’
கணத்தில் எழுந்த ஐயத்துடன் வசி மீதான கோபமும் கைகோர்த்துக் கொண்டது.
ஆனாலும், இதுவரை மரியாதை கொடுத்துப் பழகியவன், அந்த மரியாதை கலந்த பயத்தில் சென்று கதவைத் திறந்தான்.
‘‘என்னடா இங்க நடந்தது? எங்க நிதி?’’ அவசரமாக உள்ளே நுழைந்த வசி, சமையலறை வாயிலில் கன்றிக் கலைந்த முகத்துடன் நின்ற ரஞ்சனை யோசனையாக உற்று நோக்கினான்.
அவன் தோற்றமே, ‘இவன் தான் முட்டாள்தனமாக உளறிட்டான் போல!’ என்ற எண்ணத்தை உருவாக்க, மறுகணம், நிதியின் அறை நோக்கித் தாவி ஏறினான்.
அங்கே, கோடையின் வருகையின் முன்னறிவிப்பாக, காலைப்பொழுதிலேயே பளிச்சென்று ஒளிர்ந்த ஆதவன் அறை முழுவதும் உரிமையாகப் பரவியிருக்க, விழிகளை அழுந்த மூடியவாறு, சுவர்புறமாகத் திரும்பிச் சுருண்டிருந்தவளை கண்டவன் நெஞ்சமோ துடி துடித்தது.
சட்டென்று அவளருகில் அமர்ந்தவன் கரம் மென்மையாக அவள் தோளில் படிந்தது.
அவனது பரிவான தொடுகையை உணர்ந்தவளோ கனவோ எனக் குழம்பிவிட்டாள்.
‘‘நிதி…நிதி இங்க பாரம்மா…’’
ஓய்ந்து போய்ப் படுத்திருந்தவளின் செவிவழி தேனாகப் பாய்ந்தது அவன் குரல்!
சற்றுமுன், பரிவுடன் வந்து கதைத்த ரஞ்சனிடம் பைத்தியம் போல் சீறியவள், தொய்ந்து போய் நகர்ந்தவனின் வேதனையைக் கண்டு துடித்துப்போனாள்.
நெருப்பாகக் கொதிக்கும் காச்சல் தந்த வேதனையை விட, ரஞ்சனை வருத்துகிறோமே என்பதே அவளுள்ளத்தை உலைக்களமாகக் கொதிக்க வைத்தது.
சிந்திக்கும் திறனை அறவே இழந்து, எதையுமே யோசித்து முடிவெடுக்க முடியாமல் கிடந்தவள், வசியின் குரலில் சட்டென்று திரும்பிப் பார்த்தாள்.

