சதிராடும் சித்திரமே 27 – 1

அத்தியாயம் – 27

 

திவ்யதர்ஷினி ஊர்த் திரும்பிவிட்டாள் என வத்சன் வாயிலாகத் தெரிந்து கொண்ட மித்ரன் அவளை பார்க்க உடனே கிளம்பி விட்டான். அவன் சென்ற நேரத்தில் தினேஷ் திவ்யதர்ஷினியின் கையை உரிமையாய்ப் பற்றி, தோளோடு தோள் உரசி எதையோ காட்டிக் கொண்டிருந்தான்.

 

முரளிதரன் நீண்ட நாட்கள் கழித்து தன் நண்பர்களைப் பார்த்துவிட்டு வருவதாகக் கிளம்பியிருந்தார்.

 

திறந்திருந்த கதவை யாரோ மெதுவாகத் தட்டும் சத்தம் கேட்டதும் அவர்கள் இருவரும் யார் என்று ஏறிட்டுப் பார்த்தனர். மித்ரன் நின்று கொண்டிருந்தான். அவர்கள் நின்றிருந்த நிலையைப் பார்த்த மித்ரனுக்குத் தீயை வைத்து உள்ளத்தை யாரோ எரித்ததைப் போலிருந்தது.

 

ஆனால் அவன் எதையும் வாய்திறந்து சொல்லவில்லை. ஏற்கனவே ஒரு தடவை பட்டது போதாதா?

 

திவ்யதர்ஷினி எதுவும் சொல்லாமல் அப்படியே நின்று கொண்டிருக்க மித்ரன் வீட்டினுள் நுழைந்தான். அவனைப் பார்த்துக் கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு மேலாகிவிட்டது. பாதியாக இளைத்துப் பஞ்சத்தில் அடிபட்டவன் போல் காட்சியளித்தான்.

 

மித்ரனை யாரென்று தினேஷூக்கு நன்றாகவே தெரியும். ஒரே தொழிலில் இருப்பதால் அவனைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறான். சில தொழில்முறை கூட்டத்தில் பார்த்தும் இருக்கிறான் தினேஷ். அதனால் அவனைப் பார்த்ததும் வரவேற்று உள்ளே வந்து அமரச் சொன்னான்.

 

புருவத்தைச் சுருக்கி, ‘யாரிவன்?’ என மித்ரன் யோசித்தவாறே அங்கே அமர்ந்திருக்க, “நம்ம ஏற்கனவே பார்த்து இருக்கோம். ஞாபகமிருக்கா?” என மித்ரனிடம் கேட்டான் தினேஷ்.

 

“ம்..” என்ன தலையாட்டினான் மித்ரன்.

 

“உங்களுக்கு தர்ஷினியை தெரியும்னு எனக்குத் தெரியாது” எனச் சொன்ன தினேஷ், திவ்யதர்ஷினியைக் காட்டி, “அவ எனக்குச் சொந்தம்” எனச் சொல்லவும் மித்ரனுக்குக் கோபம் வந்துவிட்டது.

 

“அவ எப்போதுமே எனக்கு மட்டும் தான் சொந்தம். அவளோட உயிர் எனக்குச் சொந்தமானது. அதை எப்போவோ எனக்குத் தாரை வார்த்துத் தந்துட்டா” என்றான் கோபக்காரன் மித்ரன்.

 

‘என்னடா இது வம்பாகிவிட்டது? அவள் என் சொந்தக்காரப் பெண் என்று தானே அவனிடம் சொன்னேன். அதற்கு இத்தனை கோபமா இவனுக்கு?’ என அவன் திவ்யதர்ஷினியைப் பார்க்க, அவளோ மித்ரனைப் பார்த்து முறைத்துக் கொண்டு நின்றிருந்தாள்.

 

அந்தப் பார்வை சாதாரணப் பார்வையாகத் தெரியவில்லை. இத்தனை நாட்கள் அவளுடன் பழகியதில் அவள் யாரையும் இப்படி ஓர் உரிமை பார்வைப் பார்த்ததில்லை. மித்ரனைப் பார்க்க, அவனோ முகம் மலர்ந்து போய் அவளை மட்டுமே நோக்கியிருந்தான்.

 

‘ஓஹ் கதை அப்படிப் போகுதா?’ அவர்களுக்குள் ஏதோ ஊடல் என தினேஷூக்கு நன்றாகப் புரிந்து போனது.

 

அவன் முகத்தில் குறும்பு புன்னகை ஒன்று தோன்ற, திவ்யதர்ஷினியின் அருகில் சென்று அவளைத் தோளோடு பிடித்த தினேஷ், “நீ என் சொந்தம். நான் உன் சொந்தம். அதை யாராலும் மாற்ற முடியாது” என அவளைப் பார்த்துப் புன்னகைத்தவன், “நான் அவ அத்தைப் பையன்” என மித்ரனிடம் தெரிவித்தான் .

 

யாருமே எதிர்பார்க்காத செயலைச் செய்தான் மித்ரன். படாரென்று இருக்கையில் இருந்து எழுந்தான். கோபத்தில் வெளியில் சென்றுவிடுவான் என்று இருவரும் எண்ண, திவ்யதர்ஷினியைத் தன்னருகே இழுத்து, அவள் கன்னங்களைப் பற்றி குனிந்து அவள் இதழ்களில் முத்தம் ஒன்றை வைத்துவிட்டு விடுவித்தான்.

 

இதை எதிர்பார்க்காத தர்ஷினி திகைத்துப் போய் நிற்க, “இனிமேலாவது புரிஞ்சு நடந்துக்கோங்க. அத்தைப் பையன் சொத்தைப் பையன்னு கிளம்பி வந்துடாதீங்க.. அப்புறம் நீங்க…” ‘செத்த’ என்ற வார்த்தையைச் சொல்லாமல் ஊகத்துக்கு விட்டுவிட்டு, “வரேன்” என திவ்யதர்ஷினியிடம் சொல்லிவிட்டுக் கிளம்பினான் மித்ரன்.

 

“நான் நினைச்சதை விடவும் மித்ரன் ஸ்ட்ராங்கா இருக்கிறான்” எனக் கிண்டலாக தினேஷ் சொல்ல அப்பொழுது தான் திவ்யதர்ஷினிக்கு சுய உணர்வு வந்தது. அவள் முகமெல்லாம் சிவந்து போயிருப்பதைப் பார்த்த தினேஷ்,

 

“உங்களுக்குள்ள என்ன பிரச்சனைன்னு எனக்குத் தெரியலை. ஆனா நீயும் அவரை விரும்புற. அவரும் உன்னை உயிருக்கு உயிரா விரும்புறார். அப்புறமென்ன நடந்ததையெல்லாம் மறந்துட்டு ஒன்னு சேரலாமே?” எனக் கேட்டான்.

 

“கண்டிப்பா ஒன்னு சேர்வோம் தினேஷ். ஆனா இப்போ இல்ல. காலம் வரும். அதுக்கு முன்னாடி எனக்கு நிறைய வேலையிருக்கு. அதை முதல்ல முடிக்கணும்” என்றாள்.

 

என்ன வேலை என்று அவள் சொன்னதும் அவனுக்கு அவளின் கோபம் புரிந்தது. அவனால் இயன்ற உதவிகளை அவளுக்குச் செய்வதாக வாக்குறுதி தந்தான்.

 

****

அன்று மித்ரனின் உதவியாளர் பரபரப்பாக அலுவலகத்திற்கு வந்திருந்தான். மித்ரனின் கட்டட நிறுவனம் ஒரு முக்கிய டெண்டரை ஏலத்துக்கு எடுப்பதற்குத் தயாராகிக் கொண்டிருந்தது. அன்று ஏலம் விடப்படும் நாள்.

 

மித்ரன் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தான். அவன் இதுவரையில் தோற்றதாகச் சரித்திரமே இல்லை. அனைத்தும் துல்லியமாகக் கணித்துத் திட்டமிட்டு அவனே முடித்திருந்தான். அதனால் அதைப் பற்றிய எவ்வித படபடப்பும் இல்லாமல் அமர்ந்திருந்தான்.

 

திவ்யதர்ஷினி நெல்லூருக்குச் சென்றுவிட்டு வந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. சசிதரன் ஆசிய போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடித்திருந்தான். அவன் கல்லூரி, சதுரங்கப் போட்டி எனப் பம்பரமாகச் சுழன்று கொண்டிருந்தான்.

 

சந்தோஷ் இங்கே வந்து கணினி மென்பொருள் நிறுவனம் ஒன்றைத் தொடங்கிவிட்டான். அவனும் அயராது உழைத்துக் கொண்டிருக்கிறான். அவன் திவ்யதர்ஷினியைக் காதலிப்பதாகப் பொய் சொன்னதைக் கேட்ட அவன் அன்னை அவனை உண்டு இல்லை என்று ஆக்கிவிட்டார்.

 

அவன் நல்லதுக்குப் பொய் சொல்லி, திவ்யதர்ஷினிக்கு எப்பேற்பட்ட இக்கட்டை இழுத்து வைத்திருக்கிறான் எனக் காது புளித்துப் போகும் வரையில் திட்டித் தீர்த்தார். அதற்குத் தண்டனையாக அவனுக்குப் பெண் தேட ஆரம்பித்துவிட்டார்.

 

அவனும் இப்போது ஓரளவுக்கு வேலையில் கவனம் செலுத்த ஆரம்பித்திருந்ததால் மறுப்புத் தெரிவிக்கவில்லை. மறுப்புத் தெரிவிக்க தைரியம் வரவில்லை.

 

திவ்யதர்ஷினி இப்பொழுதெல்லாம் மித்ரனைப் பார்த்தால் முகத்தைத் திருப்பிக் கொள்வதில்லை. அதே சமயத்தில் வழிந்து, சிரித்துப் பேசுவதுமில்லை. அவன் வீட்டுக்குச் சென்றால் அவனுக்குப் பிடிக்கும் என்று காபி போட்டுத் தருவாள்.

 

எப்போதும் அவன் மாலை வேளையில் செல்வான். அந்நேரத்துக்குக் காபி குடித்தால் அவனுக்குத் தூக்கம் அண்டாது. இருந்தும் அவள் கையால் கொடுப்பதை மறுக்காமல் வாங்கி அருந்துவான் மித்ரன்.

 

முழித்திருக்கும் நேரத்தில் எல்லாம் அவளை நினைத்துக் கொண்டிருக்கலாம் என்ற மகிழ்ச்சியோ என்னவோ. அவள் முகத்தில் குடிகொண்டிருந்த அழ்ந்த அமைதியில் நித்தமும் தன் அமைதியைத் தேட முயன்று தோற்றான் மித்ரன்.

 

அவ்வப்பொழுது மீனாட்சியும் உடன் வருவார். இல்லை, வத்சன் வருவான். வத்சன் வந்தால் கலகலப்புக்குப் பஞ்சமே இருக்காது. மித்ரன் வரும் நேரம் பார்த்து முரளிதரன் வெளியில் கிளம்பிவிடுவார்.

 

மகளின் மனம் அவருக்குத் தெரியாதா என்ன? ஆனாலும் ஏனோ சிறு குழந்தையாய்ச் சீராடிக் கொண்டிருக்கிறாள். அவர்களுக்குத் தனிமையைத் தந்து விலகிவிடுவார். அவளுமே தடை செய்து வைத்திருந்த மித்ரனின் எண்ணை தடை நீக்கம் செய்திருந்தாள்.

 

அவன் அனுப்பும் செய்திகளுக்கு பதில் சொல்ல மாட்டாள். ஆனால் அதுவே பெரிய முன்னேற்றமாகத் தெரிந்தது மித்ரனுக்கு. கூடிய விரைவில் அவள் இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டால் அடுத்த நாளே டும் டும் திருமணம்.

 

அலுவலகத்தில் அமர்ந்து கோப்புக்குள் தலையைவிட்டு மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்த பொழுது அவன் உதவியாளர், பரபரப்புடன் கதவைத் தட்டிவிட்டு உள்ளே வந்தான். அவன் முகத்தை ஏறிட்டுப் பார்க்க, “வந்து சார்… அந்த மால் ப்ராஜக்ட் நமக்குக் கிடைக்கலை” என்றான்.

 

“வாட்?” என மித்ரன் எழுந்து நின்றுவிட்டான். அவனுக்கு வந்த கோபத்துக்குக் கையிலிருந்த கோப்பையை விசிறியடித்தான்.

 

“எப்படி, நல்லா விசாரிச்சியா? யாருக்குக் கிடைச்சது?” எனக் கேட்க, “புது கம்பெனி. இதுவே அவங்களோட முதல் ப்ராஜக்ட்” என்றான்.

 

“வாட்… அவங்களுக்கு என்ன பைத்தியமா?” என மித்ரன் எரிச்சலுடன் கேட்க, “அதைப் பத்தி எதுவும் தெரியாது எனக்கு” என்றான் உதவியாளர்.

 

“என்ன நக்கலா?” என அதற்கும் எரிந்து விழுந்த மித்ரன், “அப்படி என்ன இருந்தது அந்த ப்ராஜக்ட்ல?” எனக் கேட்டான்.

 

“எனக்கு மற்ற விவரம் எதுவும் தெரியலைங்க சார். ஆனா ஏதோ புதுமையா இருக்குன்னு சொன்னாங்க. விசாரிச்சுப் பார்க்கிறேன்” என உதவியாளர் சொல்ல,

 

“விசாரிச்சு டைமை வேஸ்ட் பண்ண வேண்டாம். எப்படியும் போன ப்ராஜக்ட் திரும்ப வராது. அந்த நிறுவனத்து ஓனரை மீட் பண்ண ஏற்பாடு பண்ணு. முடிஞ்சா அவங்க நிறுவனத்தை நம்மளோட இணைக்க முயற்சி செய்யலாம்” எனத் தேர்ந்த தொழிலதிபனாய்ப் பேசினான்.

 

இதுவே அவனின் அபார வெற்றியின் பின்னணி. நடந்து முடிந்ததைப் பற்றிக் கவலை கொள்ள மாட்டான். அதிலிருந்து என்ன கற்று கொள்ளலாம் என்றே நினைப்பான். அதை எப்படி அடுத்ததற்குப் பயன்படுத்தலாம் என்று நினைப்பான்.

 

அடுத்து வந்த இரண்டு நாட்களில் மித்ரனின் உதவியாளர் அந்த நிறுவனத்தின் முதலாளியைச் சந்திக்க ஏற்பாடு செய்துவிட்டான். அதன்படி குறிப்பிட்ட உணவு விடுதிக்கு மித்ரன் சென்றான்.

 

என்னென்னவோ சிந்தித்துக் கொண்டு சென்ற மித்ரன் சத்தியமாக அந்த நபரைப் பார்ப்போம் என்று எதிர்பார்க்கவில்லை. மேஜையின் முன்னாலிருந்த இருக்கையில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்த திவ்யதர்ஷினி தன்னை நோக்கி நடந்து வந்த மித்ரனையே கண்கள் இமைக்காமல் பார்த்திருந்தாள்.

error: Alert: Content selection is disabled!!