சதிராடும் சித்திரமே – 29 ( இறுதி அத்தியாயம் )

அத்தியாயம் – 29

மித்ரன் -திவ்யதர்ஷினியின் திருமணம் கோலாகாலமாக நடந்தேறியது. விருந்தினர்கள், உறவினர்கள், நண்பர்கள் என அந்த மண்டபமே விழாக்கோலம் பூண்டிருந்தது. திவ்யதர்ஷினியின் சொந்தம் அனைவரும் நெல்லூரில் இருந்து வந்திருந்தனர்.

 

அதைப் பார்த்த முரளிதரனுக்குக் கண்கள் கரித்துக் கொண்டு வந்தது. எப்படியோ அவர் பாதுகாத்து பொக்கிஷத்தைப் பத்திரமான இடத்தில் சேர்த்துவிட்டார். அவரின் நீண்ட வருட மனக்கவலை மெல்ல அவரைவிட்டு நீங்கியது.

 

சசிதரன் ஏனோ தமக்கையைவிட்டு ஒதுங்கி ஒதுங்கிப் போக, அவனைப் பிடித்து அமரச் செய்து என்னவென்று விசாரித்தாள். அவனோ ஓவென்று கதற ஆரம்பித்துவிட்டான். அவள் வீட்டுக் கார் ஓட்டுநரின் மகனை எப்படி அவளுக்குச் சரி சமமாக எண்ணுவாள்?

 

அவன் தந்தையாவது உயிரைக் கொடுத்து உழைத்து அவளை அக்கறையுடன் வளர்த்திருக்கிறார். ஆனால் அவன் அவளுடன் சண்டையை மட்டுமே இழுத்திருக்கிறான்.

 

“எப்படியோ போக இருந்த என் வாழ்க்கை உன்னால மட்டுமே சந்தோஷமாப் போச்சு. நல்லா யோசிச்சுப் பாரு. அப்பா வேலைக்குப் போயிட்டா நானும் நீயும் மட்டுமே ஒன்னா இருந்தோம். உனக்கு நம்ம சண்டைப் போட்டது மட்டுமே ஞாபகமிருக்கு. ஆனா எனக்கு அதைத் தவிர எல்லாமே ஞாபகமிருக்கு. எனக்குத் தம்பின்னா அது நீ மட்டுமே” என அவனிடம் பேசிச் சமாதானம் செய்தாள்.

 

அனைவரின் முகங்களிலும் மகிழ்ச்சி தாண்டவமாடியது. மீனாட்சியால் நம்பவே முடியவில்லை. அடிக்கடி தன்னையே கிள்ளிப் பார்த்துக் கொண்டார்.

 

திவ்யதர்ஷினிக்கு சில வாரங்களுக்கு முன்னர் நடந்தவை அனைத்தும் ஞாபகத்துக்கு வந்தன.

 

ரவிபிரசாத் கைது செய்யப்பட்டதற்கு மறுநாள் செய்தித்தாள்களில் பக்கம் பக்கமாகப் பிரபல கட்டட நிறுவனத்தில் மோசடி என்ற தலைப்பில் ரவிபிரசாத்தின் புகைப்படத்துடன் வந்த செய்தியைப் பார்த்து முரளிதரனுக்குச் சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்க வேண்டும் போலிருந்தது.

 

உடனே, “திவிம்மா.. திவி” என மகளை அழைத்து அதைக் காட்டினார். என்னவோ அந்த ஜென்மத்துப் பகையெல்லாம் தீர்த்துக் கொண்டதைப் போலிருந்தது அவருக்கு. முழுவதுமாக அந்தச் செய்தியை வாசித்தாள்.

 

மித்ரன் அவர் மேல் புகார் தந்ததின் பெயரில் விசாரித்து அவரைக் காவல்துறை கைது செய்தததாகப் போட்டிருந்தது, அதில் மித்ரனிடம் பேட்டியெடுத்தும் போட்டிருந்தனர்.

 

“பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான். இருபது வருஷமா பதுங்கியிருந்தார். இப்போ ஆதாரம் கிடைச்சது. புகார் தந்தேன். காவல்துறையினர் அவங்க கடைமையைச் செஞ்சாங்க” எனச் சொல்லியிருந்தான்.

 

அதைப் படித்ததும் விலுக்கென்று நிமிர்ந்தாள். மித்ரனுக்கு அவன் சித்தப்பாவைப் பற்றி தெரிந்திருக்கிறது. தன் பெற்றோர்களின் மரணத்துக்கு காரணம் என்று கண்டுபிடித்திருக்கிறான்.

 

ஆனால் ஆதாரமில்லாமல் எதுவும் செய்ய இயலாது என்று இப்படிச் சிக்க வைத்திருக்கிறான். அதை உலகுக்கும் தெரியப்படுத்தியிருக்கிறான். அவனை உடனே பார்க்க வேண்டும் போலிருந்தது அவளுக்கு.

 

அடுத்தப் பக்கத்தில் வினோத் பற்றிய செய்தியும் வந்திருந்தது. அதையெல்லாம் படித்து முடித்தவள் வெகுநேரம் அப்படியே அமர்ந்திருந்தாள்.

 

அதே நேரத்தில்…

அன்று காலை தனது அலுவலகத்தில் வேலையில் இருந்த மித்ரனுக்கு முந்தைய தினம் நடந்தது அனைத்தும் நினைவில் ஓடியது. இவை அனைத்தையும் ஏற்கனவே தன் அன்னையிடம் சொல்லிவிட்டான் மித்ரன்.

 

அப்போது யாரோ கதவைத் தட்டிவிட்டு உள்ளே வந்தனர். நிமிர்ந்து பார்க்க ரதிப்ரியா உள்ளே வந்தாள்.

 

“மித்ரன், நான் பண்ணினது தப்பு தான். அதுக்காக எத்தனை நாள் இப்படியே பேசாம இருப்பீங்க. இவ்வளவு தான் நம்ம நட்பா?” எனக் கேட்டவாறே வந்து அமர்ந்தாள்.

 

“ரதி, எனக்குப் பேசி நேரத்தை வீணாக்க நேரமில்லை” என்றான்.

 

“வினோத் இல்லாம, உங்க சித்தப்பாவும் இல்லாம தனியா எப்படிச் சமாளிப்பீங்க? உங்களுக்கு உதவ..” என அவள் ஆரம்பிக்கையிலேயே கை நீட்டி தடுத்து நிறுத்தினான்.

 

“என்ன மிரட்டறியா? யார் இல்லைனாலும் என்னால செயல்பட முடியும்” என்றான் எரிச்சலுடன்.

 

“அதான் திவ்யா உங்க காதலுக்கு ஒத்துக்கலையே.. எவ்வளவு நாள் இப்படியே இருப்பீங்க? பிளீஸ் நம்ம கல்யாணத்தைப் பத்தி யோசிங்க” என்றாள்.

 

இவளுக்குப் புரியவே புரியாதா? வெளியப்படையாகவே உன்னைப் பிடிக்கவில்லை என்று சொல்லியும் விலக மாட்டேன் என அடம் பிடிக்கிறாள்.

 

அப்போது யாரோ கதவைப் படாரென்று திறந்து கொண்டு, “மித்ரன்” என உள்ளே ஓடி வந்து அவனருகில் நின்றனர். திகைத்துப் போய் அவன் இருக்கையில் இருந்து எழுந்து, “திவி” என வந்தவளை எதிர்கொண்டான்.

 

அவன் என்ன ஏது என்று கேட்கும் முன்னரே அவனைத் தன்னோடு அணைத்துக் குளிர்ந்த இரு கரங்களால் முகத்தைப் பற்றி எண்ணிக்கையில்லா முத்தங்களை வாரி வழங்கினாள். இப்படி செய்வாள் என மித்ரனே எதிர்பார்க்கவில்லை, இதில் ரதிப்ரியா எப்படி எதிர்பார்த்திருப்பாள்?

 

சீற்றத்துடன் ஏதோ சொல்ல வாயைத் திறக்க, “சார்… நான் சொல்ல..” என அவன் உதவியாளர் தொடர்ந்து உள்ளே வர, அவர்கள் நின்றிருந்த நிலையைப் பார்த்து, “சாரி சார்” என விலகிவிட்டான்.

 

அதற்குள் திவ்யதர்ஷினியும் தன்னைக் கட்டுக்குள் கொண்டு வந்துவிட, அவனைவிட்டு விலகிவிட்டாள்.

 

“இங்கிதமே இல்லையா? அப்படியே பார்த்துட்டு நிக்கிற. கிளம்பு” என ரதிப்ரியாவிடம் மித்ரன் சொல்லிக் கதவை சுட்டிக் காட்டினான்.

 

தரையை உதைத்துக் கொண்டு அவள் கிளம்ப, “கதவைச் சாத்திட்டுப் போ” என நக்கலாகச் சொன்னான்.

 

படாரென்று அறைந்து சாத்திக் கோபமனைத்தையும் அதில் காட்டிவிட்டே கிளம்பினாள்.

 

அவள் சென்றது தான் தாமதம் எதிரில் நின்றிருந்தவளை தன்னோடு இறுக்கி அணைத்து இப்போது முத்தம் வைப்பது அவனது முறையாயிற்று. வெகுநேரம் கழித்து அவளை விடுவிக்க, அவள் முகமனைத்தும் சிவந்து போயிருந்தது.

 

எண்ணிக்கை தீர்ந்தாலும் முத்தங்கள் தீராது என்பதைப் போல் மீண்டும் மீண்டும் அவளுக்கு முத்தங்கள் வைத்துக் கொண்டே போனான் மித்ரன்.

 

“தேங்க்ஸ் மித்ரன். உங்களுக்கு எல்லாமே தெரிஞ்சிருக்கு” என அவள் பேச்சை மாற்ற, அவன் நடந்தவைகளை எல்லாம் சொன்னான். இறுதியில் அவன் சித்தியை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்ததையும் பகிர்ந்து கொண்டான்.

 

சித்தியும், அவர்களின் மகளும் எதுவும் செய்யவில்லை. அதனால் அவர்களைத் தண்டிக்க மனம் வரவில்லை அவனுக்கு. ஆனால் அதுவரையில் தெனாவெட்டுடன் திரிந்து கொண்டிருந்த அவன் சித்தி முற்றிலும் சோர்ந்து போனார்.

 

கணவன் மகன் இரண்டு பேரும் கொலையாளி என்று தெரிய வருகையில் எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்?

 

“எனக்கு ரொம்ப நிம்மதியா இருக்கு. தேங்க்ஸ்” என்றாள் திவ்யதர்ஷினி.

 

“வெறும் தாங்க்ஸ் தானா? வந்தவுடனே ஏதோ தந்தியே.. அதைத் தரலாமே” என அவன் அவளை வம்புக்கு இழுக்க, “போங்க மித்ரன்” என அவள் வெட்கப் பட்டுச் சிணுங்கினாள்.

 

“திவி, உனக்கு என் மேலே இருக்கிற கோபம் போறதுக்காக நான் இதைச் செய்யலை. உன் துயரத்தைத் துடைக்க நினைச்சேன். குற்றவாளி தப்பிக்கக் கூடாதுன்னு நினைச்சேன்’ என்றான்.

 

புரிஞ்சது என்பதைப் போல் தலையாட்டினாள். “ஒரு குடும்பத்தை அடியோட அழிச்சவனோட குடும்பம் தானா அழிஞ்சிடுச்சு பாரு திவி. சித்தப்பா ஜெயில்ல இருக்கார். அவர் பண்ணின குற்றத்துக்கான தண்டனை கிடைக்கலைனாலும் பாவியல் நயன்மை, அதாவது போயடிக் ஜஸ்ட்டிஸ் கேள்விப்பட்டிருக்கியா? அது தான் இது” என்றான் மித்ரன்.

 

தன் பிள்ளைங்களுக்காக, தனக்காக, தன் குடும்பத்துக்காக என இத்தனையும் செய்த ரவிபிரசாத்தின் மகன் வினோத் ஜெயிலில் இருக்கிறான். மகளோ தந்தை முகத்திலேயே முழிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டாள். தொடர்ந்து நடந்த விஷயங்களைப் பகிர்ந்து கொண்டான் மித்ரன்.

 

சற்றுநேரம் அமைதியாக இருந்தவள், “நம்ம எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம்?” எனக் கேட்க அவன் அதன்பிறகு அமைதியாக இருப்பானா என்ன? அவளை இறுக்கி அணைத்து தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தவன், உடனே மளமளவென்று திட்டமிட்டான். எரிகோள்களின் வேகமே அதன்பிறகு.

 

இதோ இப்போது திருமணமும் முடிந்து மேடையில் நின்று கொண்டிருந்தனர்.

 

அருகில் நின்றிருந்த திவ்யதர்ஷினியின் தோளை மெல்ல இடித்து, “ஏதோ கொஞ்சம் ஹீரோயிசம் பண்ணினா மட்டுமே ஹீரோன்னு ஏத்துக்குவீங்க இல்லையா? முத்தமென்ன, ஸ்பெஷல் கவனிப்பு என்ன?” என அவன் கிண்டலாகக் கேட்க, அவனைப் பார்த்து வெட்கச் சிரிப்பு சிரித்தாள்.

 

அவளுக்கு அன்று அலுவலகத்தில் நடந்தது அனைத்துமே மீண்டும் ஞாபகத்துக்கு வந்தது. முகம் சிவந்து போனாள்.

 

“என்னை மாதிரி ஒரு நல்லவனை, அன்பானவனை, குணமானவனை எல்லாம் விட்டுட்டு உன்னை மாதிரி ஒரு கோபக்காரனைக் காதலிக்கிறான்னா மண்டையில் மேனுபாக்சரிங் டிபெக்ட் இருக்கும் போல. என்ன டிசைனோ இந்த தர்ஷி” என வத்சன் சொல்ல, “அழகான அத்தைப் பையனை விட்டுட்ட” என அங்கே வந்து சேர்ந்தான் தினேஷ்.

 

“அவ எனக்குச் சொந்தம்னு சொல்லி முடிக்கலை… என் சொந்தக்காரப் பொண்ணுன்னு சொல்ல வர்றதைக் கூடப் புரிஞ்சுக்காம என்கிட்டே சண்டைக்கு வந்தார் ஹீரோ. சண்டை என்னோட போட்டுட்டு தண்டனையை அவளுக்குக் கொடுக்கிறாராம் கிளுகிளுப்பா. இது தான் சாக்குன்னு தர்ஷினிக்கு முத்தம் கொடுத்துட்டார்” என அவன் காலை வாரினான் தினேஷ்.

 

சந்தோஷூம் அங்கே தான் இருந்தான்.

 

“இப்பவும் கொடுப்பேன். உங்களுக்கு என்னடா பொறாமை?” என திரும்பிப் பட்டென அவள் கன்னத்தில் முத்தம் பதித்தான் மித்ரன்.

 

“சென்சார்.. சென்சார்..” என வத்சன் கத்த, “மூணு பையனுங்களோட சாபம் உன்னைச் சும்மா விடாது” என்றான் தினேஷ்.

 

“நல்லா வருவீங்க” என சந்தோஷ் கத்திவிட்டு, “எதிரியைச் சமாளிக்க, எதிரியைப் பத்தி எல்லாத்தையும் தெரிஞ்சுக்கணும்னு யாரோ ஒருத்தரோட வீட்டுக்கு வேலைக்குப் போனாங்க” என்றான்.

 

“ஹூ மீ… எதிரி?” என மனைவியைப் பார்த்த மித்ரன், “இல்லை, நாங்க காதல் திரியைப் பத்த வச்சோம். என்ன அனுபவம் இல்லாததால் கொஞ்சம் லேட் பிக்கப்” என்றான். அதைக் கேட்டு அனைவரும் கலகலவென்று நிறைவுடன் சிரித்தனர்.

 

அவனுடன் சதிராடிக் கொண்டிருந்த அவனின் சித்திரம் இன்று அவனுக்குள் பத்திரமாய்ச் சரணாகதி ஆகிவிட்டாள்! இனி அவன் வாழ்க்கை என்றும் வண்ண மயமே! இன்றுபோல் என்றும் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கட்டும். வண்ணம் பொங்கட்டும்!

 

****முற்றும் ****

error: Alert: Content selection is disabled!!