உன்னில் என்னை தொலைத்தேனடி 2 – 2

வெளியே வந்து காரில் ஏறியதும், “ஏன் தம்பி, அந்தப் பிள்ளையைப் பிடிக்கேல்லையா?” என்று கேட்டார் தேவகி.

 

அவனுக்கு என்ன சொல்ல என்றே தெரியவில்லை.

 

அவனின் அமைதியைக் கவனித்துவிட்டு, “என்ன அண்ணா, ஷர்மி சொன்னமாதிரி வெள்ளைக்காரி ஆரையும் கட்டிட்டியோ?” என்று குறும்புடன் வினவினாள் அபி.

 

அத்தனை மனக்குழப்பங்களும் நொடியில் மறைய, அதைச் சொன்னவளின் நினைவில் அவன் உதடுகளில் புன்னகை மலர்ந்தது.

 

“என்னப்பா? இப்பிடியே ஒண்டும் சொல்லாம இருந்தா எப்பிடி?” தகப்பனும் கேட்டுப்பார்த்தார்.

 

“கொஞ்சம் பொறுங்கோப்பா. எனக்கும் ஒண்டும் வடிவா தெரியேல்ல…” குழப்பத்தோடு சொன்ன மகனை விளங்காமல் பார்த்தனர் பெற்றவர்கள்.

 

ஆனாலும், என்னவோ குழம்பிப்போய் இருக்கிறான், யோசித்துச் சொல்லட்டும் என்று அவர்கள் விட்டுவிட, அவனோ அபிராமியிடம் வந்து ஷர்மினியை விசாரித்தான்.

 

அவளைப் பற்றி, அவள் குடும்பம் பற்றி, அவளின் பழக்கவழக்கங்கள் பற்றி, முக்கியமாக அவள் யாரையாவது விரும்புகிறாளா, கல்யாணம் நிச்சயமாகி இருக்கிறதா என்று கேட்டுத் தெரிந்துகொண்டான்.

 

அவளைப் பற்றி அறிந்துகொள்ள அறிந்துகொள்ள அவள்தான் வேண்டும் என்று மனம் உறுதியாகச் சொல்லத்தொடங்கியது.

 

அடுத்தநாள் காலையில் அவன் முகத்தை ஆவலோடு பார்த்தவர்களிடம், “எனக்கு அபின்ர பிரெண்ட் ஷர்மினிய பேசுங்கோ அம்மா!” என்று, அலுங்காமல் குலுங்காமல் தலையில் குண்டைப் போட்டான் அவன்.

 

இதென்ன என்று திகைத்துப்போயினர் மூவருமே. அப்பா இல்லாத, நோயாளியான அம்மாவோடு ஏழை வீட்டுப் பெண்ணை ஏன்? அழகி என்று சொல்வதற்கும் இல்லை. பார்க்கச் சுமாராகத்தான் இருப்பாள். எல்லாம் அருமையாக அமைந்த இடம் இருக்க, ஒன்றுமில்லாத இடத்தில் ஏன் கட்டவேண்டும்?

 

“என்ன தம்பி திடீர் காதலா? சொந்த வீட்டுப்பிள்ளைமாதிரி அவளைப் பாத்ததுக்குக் குணத்தைக் காட்டிப்போட்டாள் போல.” என்றார் தேவகி ஒருமாதிரிக் குரலில்.

 

அடுத்த நொடியே, “அவளைக் கேக்கச் சொல்லிச் சொன்னது நான். இனித்தான் அவளோடையே கதைக்கவேணும். பிறகு ஏன் அவளைப்பற்றித் தேவையில்லாமக் கதைக்கிறீங்க?” என்றான் அவன்.

 

திகைத்து நின்றுவிட்டார் தேவகி. ஒருகாலமும் தன் பேச்சைத் தட்டாத மகனை எதிர்த்துப் பேச வைத்துவிட்டாளே! இப்போதே இப்படி என்றால் திருமணத்துக்குப் பிறகு? அந்த நொடியில், அவளைக் கட்டி வைக்கவே கூடாது என்கிற முடிவு தேவகியின் மனதில் அழுத்தமாக விழுந்தது.

 

“எங்களுக்கு விருப்பம் இல்லை தம்பி. அதெல்லாம் சரியாவும் வராது.” தானும் தன் முடிவை உறுதியாகச் சொன்னார் தேவகி.

 

அவன் தோள்களைக் குலுக்கினான். “ஓகே! நானும் வந்தமாதிரியே திரும்பிப்போறன். போனா இனி வரமாட்டன்!”

 

ஒரு நொடி என்ன சொல்வது என்று தெரியாமல் நின்றார் தேவகி. பின், “என்ன தம்பி? வெருட்டிப் பாக்கிறியா?” என்றார் அடக்கிய கோபத்தோடு.

 

அவர் எப்படிக் கேட்டும் அவன் அசையவில்லை. தன் முடிவில் உறுதியாய் நின்றான்.

 

தேவகிக்கு மகனின் இந்தப் புதிய முகத்தை நம்பவே முடியவில்லை. எத்தனையோ மைல்களுக்கு அப்பால் தன்னம் தனியாக வாழ்ந்து, அவர்களுக்கு என்று பல வசதிகளைச் செய்து தந்த பிள்ளை, வீட்டுக்கு வந்து நிற்கையில் சண்டை பிடிக்கவும் முடியவில்லை.

 

அவன் சொன்னது போலவே தனியாகவே இரு என்று சொல்லவும் பெற்றமனம் மறுத்தது. தன்னை இக்கட்டான நிலையில் நிறுத்தி, தன் ஆசையை நிறைவேற்றிக்கொள்ள முனைகிறான் என்று தெரிந்தபோது, இதற்கெல்லாம் அவள்தான் காரணம் என்று அவள் மீதான வெறுப்பு ஏறிக்கொண்டே போயிற்று.

 

அபிராமியும் இதை எதிர்பார்க்கவில்லை. முன்னப்பின்ன சந்தித்தே இராதவளைப் பெண் கேள் என்கிறான் அண்ணா. போயும் போயும் ஷர்மி அவளுக்கு அண்ணியா? ஏனோ அவளுக்கு அது பிடிக்கவில்லை; ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

 

அந்த நேரம் பார்த்து, “என்னடி? எப்ப டும் டும் டும்?” என்று கேட்டு மெசேஜ் அனுப்பி இருந்தாள் ஷர்மினி.

 

பார்த்ததும் எங்கிருந்து என்று இல்லாமல் கிளம்பிய ஆத்திரத்தில் கட்டில் மீது ஃபோனை எறிந்துவிட்டுப் போனாள் அபி.

 

வீட்டின் நிலவரம் தலைகீழாக மாறிப்போயிற்று. யார் முகத்திலும் மகிழ்வு இல்லை. ஒரு சிரிப்பில்லை; பேச்சில்லை. தன் ஏமாற்றத்தைக் கண்ணீரோடு சொல்லி சொல்லிப் புலம்பிய அம்மாவை எதிர்கொள்வது பெரும் சிரமமாக இருந்தாலும் அவள் வேண்டாம் என்று நினைக்கக்கூட அவனால் முடியவில்லை.

 

“அவளைத்தான் அம்மா பிடிச்சிருக்கு. நான் என்ன செய்ய?” என்று அவரிடமே கேட்டும் பார்த்தான்.

 

அதற்கும், “இப்ப அப்பிடித்தான் இருக்கும். கலியாணம் நடந்தா எல்லாம் சரியாப் போகும். ஒரு பிள்ளை பிறந்த பிறகு, ‘அம்மா சொன்னது எவ்வளவு சரி’ எண்டு நீயே நினைப்ப.” என்றுதான் சொன்னார் அவர்.

 

அவனுக்கு அப்படித் தோன்றவில்லை. அல்லும் பகலும் அவளே நினைவில் நின்றாள். கனவுகளில் கூட காதல் புரிந்தாள். ஒவ்வொரு கணமும் கழிய கழிய அவள் மீதான ஆசை வலுத்துக்கொண்டே போயிற்று!

 

சில வினாடிகள் மாத்திரமே பார்த்த ஒரு பெண்ணிடம் இந்தளவுக்குத் தலை சுற்றிப்போவோம் என்று அவனாலேயே நம்பமுடியவில்லை.

 

அன்னை சம்மதிக்காத அந்த நிலையிலும் அவளிடம் எப்போது, எப்படிச் சம்மதம் கேட்கப்போகிறோம், என்ன சொல்லுவாள் என்று அதிலேயே உழலும் மனதை என்ன செய்வான்?

 

அம்மா அப்பாவின் ஆசைக்காகப் பிடிக்காத பெண்ணை மணந்து வாழும் வாழ்க்கை இருவருக்குமே நரகமாய்ப் போய்விடாதா?

 

பிடித்தபெண் கைக்கெட்டும் தூரத்தில் இருக்கையில் எதற்காக நழுவ விடவேண்டும்?

 

வாழ்க்கையை இன்னொரு முறை வாழப்போவதில்லை. அதைப் பிடித்தவளோடு பிடித்தமாதிரி வாழவேண்டாமா?

 

அடுத்தநாளும் அந்த வீட்டில் முகம்பாரா போராட்டம் தொடர்ந்தாலும் அப்படியே இருக்க முடியவில்லை. இன்னும் மூன்று வாரங்கள்தான் இங்கு நிற்க முடியும். அதற்குள் அவளோடு கதைக்கவேண்டும். குடும்பங்கள் சம்மந்தம் பேசவேண்டும். கல்யாணம் நடக்கவேண்டும். பிறகு தாலி கட்டியதும் கட்டாததுமாக அவளை விட்டுவிட்டு ஓடத்தான் சரியாக இருக்கும்.

 

எனவே, அன்று காலை உணவின்போது, “அவளிட்டக் கதைக்கப்போறன் அம்மா.” என்றான்.

 

தன் மகன், முற்றிலுமாகத் தன் கையை விட்டுப்போகிறான் என்பதை உணர்ந்து துடித்தார் தேவகி.

 

“ஏன் தம்பி? சந்தோசமான வாழ்க்கை அமைஞ்சு வரேக்க அந்தப் பிள்ளைதான் வேணும் எண்டு ஏன் அடம் பிடிக்கிறாய்? இவ்வளவு காலமும் தனியா கிடந்து கஷ்டப்பட்ட நீ இனியாவது சந்தோசமா வாழவேணும் எண்டுதானே எல்லாரும் ஆசைப்படுறோம். எவ்வளவு நல்ல சம்மந்தம் சொல்லு பாப்பம்?” மகன் மனதை மாற்றவே முடியவில்லையே என்கிற ஆற்றாமையோடு கேட்டார் தாய்.

 

“எனக்குப் பிடிச்சவளோட வாழ்ந்தாத்தானேம்மா நான் சந்தோசமா இருப்பன். உங்களுக்கு நல்ல சம்மந்தம் அமையிறது முக்கியமா, இல்ல, நான் சந்தோசமா வாழுறது முக்கியமா?”

 

“நீ சந்தோசமா வாழவேணும் எண்டுதானே எந்தக் குறையும் இல்லாத குடும்…” என்று அவர் சொல்லும்போதே, “எனக்கு அவள்தானம்மா சந்தோசம்!” என்று முடித்துவைத்தான் அவன்.

 

இனி என்ன சொல்வது? அவள் தான் வேண்டும்; என் சந்தோசமே அவள்தான் என்று சொல்கிறவனிடம் என்ன சொல்லுவார்? முற்றிலுமாகத் தளர்ந்துபோனார்.

 

“என்னவோ செய்!” என்று முடித்துக்கொண்டார்.

 

 

 

error: Alert: Content selection is disabled!!