அவள் குழப்பத்தோடு அவனைப் பார்க்க, “உனக்கு… ஆரையாவது பிடிச்சிருக்கா?” என்றான் சட்டென்று.
என்ன கேள்வி இது? அவளுக்கு நிறையப்பேரைப் பிடிக்கும். இதில் யாரைக் கேட்கிறான்?
விழிகளில் குழப்பத்துடன், “பிடிச்சிருக்கா எண்டா?” என்றாள்.
“பிடிச்சிருக்கா எண்டா தெரியாதா? விருப்பம்… லவ்? இந்தக் காதல் கத்தரிக்காய் ஏதும் இருக்கா எண்டு கேக்கிறன்?” ஏன் இந்தச் சூடு என்று தெரியாதபோதும் அவனுக்குள் சூடேறியது.
ஆம் என்று சொல்லிப்பார்; உன்னை உண்டில்லை என்று ஆக்குகிறேன் என்கிற அணல் தெறித்தது அவன் பேச்சில்.
அவள் பயந்துபோனாள். “ஐயோ, அப்பிடியெல்லாம் இல்ல!” என்னவோ செய்யக்கூடாத குற்றம் ஒன்றை அவள்மீது அவன் சுமத்திவிட்டது போன்று விழுந்தடித்துக்கொண்டு மறுத்த விதத்தில், அத்தனை தவிப்பும் வடிய அவன் உதடுகளில் புன்சிரிப்பு மலர்ந்தது.
“அப்ப, நானும் நீயும் காதலிப்பமா?” என்றான் விழிகளிலும் சிரிப்பைத் தேக்கி.
“என்னது?” அதிர்ந்துபோய்ப் பின்னால் திரும்பி உதயனைத்தான் பார்த்தாள் ஷர்மினி. அவன் கேள்விகள் ஒவ்வொன்றும் அவளின் அடிவயிற்றைக் கலக்கின. தப்பித்து ஓடிவிட்டால் என்ன என்று உள்ளே ஓடியது.
சீராளனுக்குக் கோபம் மூண்டது. “அவனை என்னத்துக்குப் பாக்கிற? என்னைப்பார்!” என்று அதட்டினான்.
பயந்துபோய்த் திரும்பி அவள் பார்க்க, “எனக்கு உன்னப் பிடிச்சிருக்கு. நாங்க கலியாணம் கட்டுவமா?” என்றான்.
‘கலி…யாணமா?’ பெரும் அதிர்ச்சி அவளிடம்.
“சொல்லு! கட்டுவமா?” அவனுக்குப் பொறுமை பறந்துகொண்டிருந்தது. பயம் போன இடம் தெரியவில்லை. அவளின் பதில் தெரிந்தே ஆகவேண்டும். அதுவும் ஆம் என்கிற பதில் மட்டுமே.
பதில் சொல்லாமல் விடமாட்டான் போலவே. “இத நீங்க வீட்டதான் கதைக்கோணும்.” தன் அதிர்ச்சியை விழுங்கிக்கொண்டு மெதுவாகச் சொன்னாள்.
“உனக்கு என்னைப் பிடிச்சிருக்கு எண்டு சொல்லு, வீட்டுல நான் கதைக்கிறன்!” என்றான் அவன்.
‘அம்மாடி! இதென்ன இப்பிடிக் கேக்கிறான்?’ அவன் வேகம் தாங்காமல் தடுமாறினாள் ஷர்மினி.
அதைவிட, அவன் பிடித்திருக்கிறதா என்று கேட்கவில்லை. ஆம் இல்லை என்கிற முடிவைக்கூட அவளிடம் விடவில்லை. பிடித்திருக்கிறது என்று மட்டுமே சொல் என்கிறான். என்ன விதமாக உணர்வது என்றே தெரியவில்லை அவளுக்கு.
ஆனாலும், “தெரியேல்ல.” என்று மெல்லத் தன் மனத்தைச் சொன்னாள். உண்மையிலேயே என்ன சொல்வது என்று தெரியவில்லை.
பார்த்ததும் பிடிக்கிற அளவுக்காகவாது அவனை அவள் பார்த்ததில்லை. பார்த்த கோலம் பிடிக்கிற கோலமா என்ன?
“உங்களுக்கு ஏற்கனவே கலியாணம் பேசி இருந்ததே?” யோசனையோடு கேட்டாள்.
திருமணம் நிச்சயமாகி இருக்கும்; தோழியின் தமையனின் கல்யாணம்; அவளும் கட்டாயம் போகவேண்டும்; அதற்கு என்ன அணியலாம் என்றுதானே யோசித்துக்கொண்டிருந்தாள். அப்படியிருக்க இப்படி வந்து கேட்டால்?
“அத வேண்டாம் எண்டு சொல்லீட்டன்.”
“ஏன்?” அபியும் ஆண்ட்டியும் எவ்வளவு ஆசையாசையாக அந்தப் பெண்ணைப் பார்த்து வைத்துவிட்டு, இவனை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள் என்று அவளுக்குத் தெரியும். இவன் இப்படிச் சொன்னால் எப்படி? அதோடு அந்தப் பெண்ணின் நிலை?
“உன்னப் பாத்த பிறகு வேற ஆரையும் பிடிக்கேல்ல.” அவளையே பார்த்தபடி சொன்னான் அவன்.
அவள் விழிகள் விரிந்துபோயின. ‘கடவுளே! நானா இதுக்கெல்லாம் காரணம்..’ உள்ளே திடுக்கிட்டாலும், விழியோடு உறவாடிக்கொண்டே அவன் சொன்ன விசயம், அனைத்துத் தடைகளையும் உடைத்துக்கொண்டு, நேராகச் சென்று அவள் இதயத்தில் அமர்ந்துகொண்டது.
அதுவரை எந்தச் சலனமும் இல்லாத மனதில் முதன் முதலில் மெல்லிய தடுமாற்றம். அவன் விழிகளை நேரே சந்திக்க முடியவில்லை. தலையைத் தாழ்த்திக்கொண்டாள்.
“அது பிழை எல்லோ…”
“பிழைதான். ஆனா, என்ன செய்யச் சொல்லுறாய்?” என்று திருப்பிக் கேட்டான் அவன். அவளுக்குத் தன்னை விளக்குகிறவனாக, “உன்னைப் பாத்த நிமிசமே பிடிச்சுப்போய்ட்டுது. அங்க போய் அவளைப் பாத்தா எனக்கு அங்கேயும் நீதான் தெரியிறாய். அதுக்குப்பிறகும் அவளைக் கட்டினா, அது எவ்வளவு பெரிய பிழை எண்டு யோசிச்சுப்பார்.” என்றான் அவன்.
ஷர்மினியின் இதயம் அவள் வசமிருந்த நழுவத் தொடங்கிற்று. பதட்டத்தில், முன்பக்கமாக நீண்டு தொங்கிய அடர்ந்த ஒற்றைப்பின்னலின் அடியை அவள் விரல்கள் அலையத் துவங்கின.
அவன் விழிகளும் அங்குச் சென்றது. இந்த அடர்ந்த கூந்தல் காட்டுக்குள்தானே முதன் முதலில் அவன் தொலைந்தான். தன் விரல்களையும் அதற்குள் தொலைத்துவிடப் பரபரத்த கைகளை அடக்கப் பெரும் பாடுபட்டான்.
ஒரு பெருமூச்சுடன், “இன்னும் மூண்டு கிழமைதான் நான் இங்க நிப்பன். அதுக்கிடையில ரெண்டு வீட்டிலையும் கதைக்கவேணும், நாள் குறிச்சுக் கலியாணத்தக் கெதியா முடிக்கவேணும். நீ இப்பவே ஓகே எண்டு சொல்லீட்டா நான் மிச்ச வேலை எல்லாம் பாப்பன். எங்களுக்கு நிறைய நாள் இல்ல.” என்று அவன் சொன்னபோது, மலைப்பாயிருந்தது அவளுக்கு.
இதில், ‘எங்களுக்கு’ என்று அவளையும் சேர்த்துவிட்டானே. என்ன, அது அவளுக்குள் இனித்துக்கொண்டு இறங்கிற்று. இனி அவனும் அவளும் ஒன்றா? மெல்ல நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.
அவள் விழிகளோடு தன் விழிகளைக் கலந்தபடி, “அப்ப நான் வீட்டுல கதைக்கிறன்.” என்றான் அவன்.
மீண்டும் தலை குனிந்துவிட, “க…தைங்கோ.” என்றாள்.
“என்னைப் பிடிச்சிருக்குத்தானே?” அவள் புறமாகக் குனிந்து மெல்லக் கேட்டான்.
‘இப்பிடிக் கேட்டா?’ நிமிர்ந்தவள் அவன் விழிப்பார்வைக்குள் சிறைப்பட்டாள். அந்தக் கண்களில் என்ன காந்தமா வைத்திருக்கிறான்? மனதை இப்படி வசியம் செய்கிறதே. நெஞ்சமெல்லாம் இனிமையாகப் படபடக்கத் துவங்க, கன்னங்களில் கதகதப்பு ஏறுவது போலிருக்கவும் பார்வையைத் தழைத்துக்கொண்டாள்.
அவன் உதடுகளில் புன்னகை பூத்தது. “சரி போ!” என்றான் சின்னதாகத் தலையசைத்து.
‘நான்தான் ஒண்டும் சொல்லேல்லையே…’ என்று அவள் பார்க்க, “உன்ர பதில் எனக்குத் தெரியும். மிச்சத்தை நான் பாக்கிறன். நீ போ!” என்றான் அவன் முகம் முழுக்கப் படர்ந்த சிரிப்புடன்.
“நான் ஒண்டும் சொல்லேல்ல. நீங்க வீட்டிலதான் கேக்கோணும்.” பயந்துபோய் வேகமாகச் சொன்னாள்.
“நீ சொல்லீட்டாய்!” என்றான் பற்கள் தெரியச் சிரித்தபடி.
நெஞ்சம் கொள்ளைபோனது அந்தச் சிரிப்பில்.
“ஐயோ, சத்தியமா நான் ஒண்டும் சொல்லேல்ல!” விட்டால் அழுதுவிடுவேன் என்கிற நிலையிலிருந்தாள் அவள்.
அவனோ வாய்விட்டுச் சிரித்தான். அவளுக்கு வெட்கமாய்ப் போய்விட்டது! அசடுபோல் நடந்துகொள்கிறோமோ?
ஆனால், அவளின் சம்மதம் மட்டுமே இந்தத் திருமணத்துக்குப் போதும் என்பதுபோல் கதைக்கிறானே. அவன் வீட்டில் என்ன சொல்லுவார்கள் என்று எண்ணிக் கலங்கினாள்.
அவள் சொல்லாமலேயே அவள் மனதை அறிந்தவன் அவள் விழிகளில் தென்பட்ட கலக்கத்தையும் படித்தான்.
“நீ ஒண்டுக்கும் யோசிக்காத. எல்லாம் நான் பாப்பன். உனக்கும் என்னைப் பிடிச்சிருக்கா எண்டுதான் எனக்குத் தெரியவேண்டி இருந்தது. இப்ப தெரிஞ்சிட்டுது. நீ சந்தோசமா போ!” என்றான் கனிவாக.
‘சந்தோசமாகப் போறதா? முழுசா குழப்பி விட்டுவிட்டுச் சந்தோசம் வேறயா?’ அவன் விட்டதே போதும் என்று ஓடியே போய்விட்டாள் அவள்.

