அத்தியாயம் 4
சைக்கிளை மிதித்துக்கொண்டிருந்த ஷர்மினி ஏதோ ஒரு கனவுலகில் சஞ்சரித்துக்கொண்டிருந்தாள். அவன் பார்த்த பார்வைகள், அதில் தெரிந்த சொந்தம், சின்னதாய்ச் சிந்திய சிரிப்பு, நீ போ என்று தலையாட்டி அனுப்பிவைத்த விதம் என்று அத்தனையும் நெஞ்சுக்குள் சென்று சட்டமாக அமர்ந்துகொண்டு, அவளை இன்பப் படபடப்பில் ஆழ்த்தின.
அவளோடு இணையாக வந்தபடி, “என்னவாம்?” என்று விசாரித்தான் உதயன்.
“கல்யாணம் கட்டுவமா எண்டு கேட்டவர்.” தயங்கி தயங்கிச் சொன்னாள்.
“என்னது?” அவன் அதிர்ந்து பார்த்தான்.
அவளுக்கும் அதே அதிர்ச்சிதானே. திடீரென்று வந்து நிர்ச்சலனமாய் இருந்த மனதை இப்படிக் குழப்பிவிட்டானே.
“நீ என்ன சொன்னாய்?” கூர் விழிகளோடு உதயன் கேட்டபோது, அவன் பார்வையைச் சந்திக்க அவளால் முடியவில்லை.
“நான் என்ன சொல்லுறது? வீட்ட கதைக்கச் சொன்னான்.”
“ஏதும் லவ்வா? எனக்கே தெரியாம?” மறுக்காமல் கதைக்கச் சொல்லியிருக்கிறாளே!
படக்கென்று திரும்பி அவனை முறைத்தாள் ஷர்மினி.
“டேய்! சைக்கிளால இடிச்சுத் தள்ளி விட்டுடுவன். நானே குழம்பிப்போய் இருக்கிறன். நீ விசர்க் கதை கதைக்காத!”
சீராளனும் இதையேதானே கேட்டான். ஆளாளுக்கு அவளைப்பற்றி என்ன நினைக்கிறார்கள்?
உதயன் சிரித்தான். “ஓகே ஓகே. திடீரெண்டு நடக்கவும் எனக்குத் தெரியாம எதுவுமோ எண்டு யோசிச்சன். அவ்வளவுதான்.” என்று சமாளித்துவிட்டு, மெல்ல அவனுக்கும் அவளுக்குமான பழக்கத்தை அவளிடமிருந்து தெரிந்துகொண்டான்.
அவன் அறிந்தவரையில் இது நல்ல சம்மந்தம் தான். நிறைவேறினால் அவளின் குடும்பத்துக்கே நல்லதுதான். ஆனால், தேவகி அம்மா?
அதையேதான் அவளும் சொன்னாள்.
“என்னையெல்லாம் ஆண்ட்டி மருமகளா ஏற்கவே மாட்டா. அவா பாத்து வச்சிருந்த வீட்டுக்காரர் நல்ல வசதியான ஆக்கள். சீதனம் ஒரு தொகை. இது பிரச்சனைலதான் வந்து முடியப்போகுது பார்.” பெரும் துன்பத்தோடு சொன்னாள்.
ஏன் இந்த வேதனை? ஏன் இந்த அலைபாய்தல்? வந்தவன் பேசாமல் அவர்கள் காட்டிய பெண்ணையே கட்டிக்கொண்டு போயிருக்கலாம். இப்படி, அவளின் மனத்தைக் கெடுத்துவிட்டானே. கலங்கப் பார்த்த விழிகளை பெரும் பாடுபட்டுச் சமாளித்தாள்.
அவளின் மனத்தை உணர்ந்தவனுக்குப் பரிவு உண்டாயிற்று. “நீ சும்மா கவலைப்படாத. நாங்களா கேட்டுப் போகேல்ல. அவரா வந்தா அதுக்கு என்ன செய்றது? எல்லாம் பொருந்தி வந்தா நடக்கட்டும்!” என்றான் தேறுதலாக.
நடக்கவேண்டும் என்று அவனுள்ளமும் எதிர்பார்த்தது. ஆனால், அவள் சொன்னதைப்போல தேவகியைப் பற்றி அவனுக்கும் ஓரளவுக்குத் தெரியும்.
உதயனோடு அபி கதைப்பதையே அவர் வரவேற்பதில்லை. தப்பித்தவறி காதல் கீதல் என்று வந்துவிட்டால் என்ன செய்வதென எண்ணிப் பயப்படுகிறார் என்று தெரிந்து ஒரு புன்னகையோடு அவனும் விலகிக்கொள்வான். அப்படியானவர் சீதனமில்லா ஏழை வீட்டுப் பெண்ணை ஏற்பாரா?
மகளின் தோழி என்பது வேறு மருமகள் என்பது வேறல்லவா. அவர் மறுத்து சீராளனும் சரி என்றுவிட்டால்? சும்மா இருந்தவளின் மனதைக் கெடுத்துவிட்டது போலாகாதா?
‘என்ன இருந்தாலும் என்னையெல்லாம் ஆண்ட்டி மருமகளா ஏற்கவே மாட்டா.’ என்று சொன்னதிலேயே அவள் மனம் விளங்கவில்லையா?
ஆனால், சற்று முன்னர் அறிந்துகொண்ட சீராளனும் பிடிவாதம் மிகுந்தவன் என்றுதான் நினைத்தான் உதயன்.
அவளுக்கோ அடுத்தக் கவலையாக அபி வந்து நின்றாள். “என்னைப்பற்றி என்ன நினைக்கிறாளோ தெரியாது. நான் அவரை ஒழுங்கா பாக்கக்கூடி இல்லை.” என்றாள் கவலையோடு.
“அவள் என்ன நினைக்க இருக்கு? கேட்டது அவர். உண்மையான ஃபிரெண்ட்டா இருந்தா ஃபிரெண்ட் அண்ணியா வாறதுக்குச் சந்தோசப்படவேணும்.” என்றான் அவன்.
“டேய்! என்னவோ நீ கல்யாணமே சரிவந்த மாதிரி அண்ணி கிண்ணி எண்டு கதைக்கிற?” பதறிப்போனாள் ஷர்மினி.
சீராளன் இன்று நடந்துகொண்ட முறையைப் பார்க்கையில், நடக்கும்… நடக்கவைப்பான் என்றுதான் உதயன் நம்பினான்.
இதோ இரண்டு நாட்கள் ஓடிவிட்டது. வேலையில் நின்றால் வந்திருப்பானா என்று நினைப்பதும், வீட்டுக்கு வந்துவிட்டால் வருவானா என்று வாசலைப் பார்ப்பதுமாக பொழுது ஓடியதே தவிர, வேறு ஒரு மாற்றமும் இல்லை. ‘நீ சந்தோசமா போ. நான் எல்லாத்தையும் பாக்கிறன்’ என்றவன் ஒன்றையுமே பார்க்கவில்லை.
ஏன்? என்னாயிற்று? பின் எதற்காக அவளிடம் வந்து கதைத்தான்? அவள் மனத்தைக் கலைத்தான்? தன் நிம்மதியை தொலைத்துவிட்டு உள்ளுக்குள்ளேயே மருக்கிக்கொண்டிருந்தாள் ஷர்மினி.
அவளுக்குள்ளும் வயதுக்கேற்ற ஆசைகளும் கனவுகளும் நிறைந்ததுதான் இருந்தன. ஆயினும், யாரையும் மனதுக்குள் வர விட்டதில்லை.
விரலுக்கேற்ற வீக்கமாக, நமக்கு இணையான ஒருவனைத்தான் மணம் முடிக்கவேண்டும்; அதுவும் காலம் முழுக்க அம்மாவை வைத்துப் பார்த்துக்கொள்ள இசையும் ஒருவனை மட்டுமே என்றுதான் நினைத்திருந்தாள்.
அவனோடு எளிமையான அழகான வாழ்க்கை வாழவேண்டும் என்பதுதான் அவளின் கற்பனை.
அப்படியிருக்கத் திடீரென்று வந்து, அனுமதி இல்லாமலேயே அவள் மனதுக்குள் நுழைந்து விட்டிருந்தான் சீராளன். அவனை வெளியேற்றும் வல்லமையற்றவளாகிப் போனாள் அவள்.
ஆனால், அதை வீட்டில் சொல்லக்கூட முடியவில்லை. அவர்கள் சீதனம் எதிர்பார்ப்பார்கள் என்று தெரியும். தன் தமையானால் அது முடியவே முடியாது என்பது இன்னும் நன்றாகவே தெரியும். அப்படியிருக்க, நோய்வாய்ப்பட்ட அம்மாவையும் வைத்துக்கொண்டு, வெளிநாட்டு மாப்பிள்ளைக்குச் சீதனம் கொடுத்து என்னைக் கட்டிக்கொடு என்று எப்படிக் கேட்பாள்?
தன் வீட்டு நிலைமை தெரிந்தும் மனத்தைப் பறிகொடுத்துவிட்டதை எண்ணி நொந்தாள். அவனல்லாத இன்னொருவனை இனிக் கற்பனையில் கூட எண்ண முடியாது. ஒன்றில் அவனோடு வாழவேண்டும். அல்லது, இப்படியே காலம் முழுக்க அம்மாவுக்கு மகளாக இருக்கவேண்டும். இந்தளவு தூரத்துக்கு அவனது ஆதிக்கம் இருக்கும் என்று அவளே எதிர்பார்க்கவில்லை.
இதையெல்லாம் யாரிடமும் பகிர்வாள்? ‘ஏன் ஒருமாதிரி இருக்கிறாய்?’ என்று உதயன் கேட்டும் ஒன்றுமில்லை என்றுவிட்டாள். சொன்னவன் வரவில்லையே என்று
உதயனுக்கும் யோசனைதான்.
அபியோடு கதைக்கக் கூடத் தயங்கினாள். சிறு வயதிலிருந்து தோழி. கதைக்கவும் கலகலக்கவும் எப்போதுமே ஆயிரமாயிரம் விசயங்கள் அவர்களுக்கு இருக்கும். இன்றோ ஒன்றையும் காணோம். அவளும் அழைக்கவில்லை. என்னை ஏதும் தவறாக நினைக்கிறாளோ? அது வேறு மனதை அரித்துக்கொண்டிருந்தது.
‘நான் ஒண்டுமே செய்யேல்லையடி. உன்ர அண்ணாவாத்தான் வந்து கதைச்சவர்’ என்று சொல்லி, அவனைக் குற்றவாளியாக்கவும் மனம் இடம் கொடுக்க மறுத்தது.
இவ்வளவு நடந்தபிறகு அவர்கள் வீட்டுப் பக்கம் போகவும் மனமில்லை. ஏதாவது தெரியவருகிறதா பார்ப்போம் என்று, பெரும் தயக்கத்துக்கு மத்தியில் அபிக்கு அழைத்தாள். அவள் அழைப்பை ஏற்கவில்லை. மனம் இன்னுமே கலங்கிப்போனது.
“டைம் இருந்தா ஃபோன் பண்ணு அபி.” என்று மெசேஜை தட்டிவிட்டாள்.
எப்போதுமே கனிவோடும் இதழோரச் சிரிப்போடும் தன் வேலையைப் பார்ப்பவள் ஷர்மினி. இரண்டு நாட்களாகப் பாட்டியும் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார். அவள் முகத்தில் ஒரு மெல்லிய கவலை அப்படிக்கிடந்தது. இன்றும் சிந்தனையை எங்கோ தொலைத்துவிட்டு, இயந்திரமாய் அவருக்கானதைச் செய்தவளின் கரத்தை மெல்லப் பற்றினார்.
நினைவுகள் கலைந்து கேள்வியாகப் பார்த்தவளிடம், “என்னம்மா?” என்றார் கனிவோடு.
அந்த அன்பு, அவளைப் பலவீனப்படுத்துவது போலிருக்கத் தொண்டை அடைத்தது. வாயைத் திறந்தால் உடைந்து விடுவோமோ என்று பயந்து, ஒன்றுமில்லை என்று தலையை அசைத்தாள்.
அப்போதும் விடாமல், அவளின் காரத்தைப் பற்றித் தன் கட்டிலிலேயே அமரவைத்து, “சொல்லு செல்லம். என்ன கவலை உனக்கு? ஏன் முகம் வாடிக்கிடக்கு?” என்று கனிவுடன் வினவினார்.
மளுக்கென்று கண்ணீர் இறங்கிவிட, நடந்ததைச் சொல்லி, “வந்து கதைக்கிறன் எண்டவர் வரவே இல்ல பாட்டி.” என்றாள் தழுதழுத்த குரலில்.
மனச்சுமையை எங்கே இறக்கி வைப்பது என்று தெரியாமல் அல்லாடிக் கொண்டிருந்தவளாயிற்றே. வீட்டினரிடமோ உதயனிடமோ பகிர முடியாது. வீட்டினர் அல்லாத யாரோ ஒரு வயோதிபப் பெண்மணி அன்போடு கேட்டபோது, மறைக்க முடியவில்லை.
அவளின் தலையைப் பரிவுடன் வருடிவிட்டார் அவர். “என்ர பேரன் கட்டாயம் வருவான் ஆச்சி. நீ ஒண்டுக்கும் கவலைப்படாத.”
“ம்ம்…”
“நான் உன்னட்ட ஒண்டு கேக்கவா?”
என்ன என்று கேள்வியாக அவரைப் பார்த்தாள்.
“உனக்கு அந்தத் தம்பியப் பிடிச்சிருக்குத்தானே?”
சட்டென அவள் உதடுகள் சிரிப்பைச் சிந்தின. “நீங்களும் அவரை மாதிரியே பிடிச்சிருக்கா என்று கேக்கேல்ல பாட்டி. பிடிச்சிருக்குத்தானே எண்டுதான் கேக்கிறீங்க.”
அவனைப் பற்றிய பேச்சில் நொடியில் மலர்ந்துவிட்ட அவளின் முகத்தைப் பார்த்தபடி, “நீ பதிலைச் சொல்லு!” என்று அதிலேயே நின்றார் அவர்.
“பி..டிச்சிருக்கு. ஆனா… பயமா இருக்கு.” அவனிடம் கூடச் சொல்லாததைப் பாட்டியிடம் சொன்னாள்.
“பிறகு என்ன? ஒண்டுக்கும் பயப்பிடாத. அந்தத் தம்பி இன்னும் ரெண்டு நாளைக்கிடைல வந்து கதைக்கும். நீயும் சந்தோசமா கலியாணம் கட்டி, வெளிநாட்டுக்குப் போகப்போறாய்.” என்று ஆரூடம் சொன்னார் அவர்.
அவர் வாக்கு, மனத்தில் இனித்துக்கொண்டு இறங்கியது. ஆனால் அம்மா? அவரை எண்ணி அவள் கலங்க, “உன்ர அண்ணாவுக்கு ஒரு கலியாணத்தைக் கட்டி வை. அண்ணி அம்மாவைப் பாக்கட்டும், செலவை நீ பார். முடிஞ்சுது விசயம். சும்மா சின்ன விசயத்துக்கு எல்லாம் கலங்குறேல்ல. கல்யாணப் பொம்பிளையாச் சந்தோசமா இருப்பியா… அத விட்டுட்டு..” என்றார் அவர் சிரித்துக்கொண்டு.
உண்மையிலேயே அவளுக்குள்ளும் மெல்லிய சந்தோச அலைகள் குமிழியிடத் தொடங்கிற்று! மனப்பாரத்தை அவரிடம் இறக்கிவைத்த பிறகு கொஞ்சம் இதமாக உணர்ந்தாள். ஆனாலும், வருவானா, வந்து பெண் கேட்பானா என்பதிலேயே நின்று மனம் உழன்றது.
“தம்பி வீட்ட வந்து கதைச்ச பிறகு என்னட்ட கூட்டிக்கொண்டு வா. என்ர ராசாத்தின்ர மனத்தப் பறிச்ச ராசனை நான் பாக்கோணும்.” என்று அவர் சொல்ல, அவள் முகம் அழகாய்ச் சிவந்தது.
“இது அழகு!” படுத்திருந்தே அவர் நெட்டிமுறிக்க, சந்தோசமாய் அவரிடம் விடைபெற்றாள் ஷர்மினி.

