அத்தியாயம் 5
அன்று வேலை முடிந்து வந்த ஷர்மினி, வீட்டு வாசலில் நின்ற காரைக் கண்டதும் ஆனந்தமாய் அதிர்ந்தாள்.
‘வந்திட்டான்! கடவுளே பாட்டி சொன்ன மாதிரியே வந்திட்டான்.’ ஓராயிரம் மனக்கவலைகளைச் சுமந்து வந்தவளுக்குச் சந்தோசத்தில் கண்ணீர் வந்துவிடும் போலாயிற்று!
“இது… அபி வீட்டுக் கார்தானே?” நெற்றியைச் சுருக்கியபடி உதயன் கேட்க, வேகமாக ஆம் என்று தலையை அசைத்தாள்.
அவன் பார்வை, ஒரு நொடி அவளில் ஆழமாகப் பதிந்து மீண்டது.
ஓடிப்போய் அவனைப் பார்த்துவிட உடல் முழுவதுமே பரபரத்தது. அதை மறைத்து, நிதானமாகக் காட்டிக்கொள்ள முயபடி, சைக்கிளைக் கொண்டுவந்து நிறுத்தினாள். தயக்கத்தோடு வீட்டுக்குள் நுழைந்தாள்.
விழிகள், அங்கிருந்தவர்களிடம் வேகமாய்த் தாவி சீராளனிடம் நிலைகொண்டன. அவனைக் காணவே கண்கள் கொண்டவள் போன்று பார்வையால் தழுவினாள். ஓடிப்போய் அவன் கையைப் பிடித்துக்கொண்டு, அவனருகிலேயே நிற்கவேண்டும் போல் எழுந்த உந்துதலை அடக்கச் சிரமப்பட்டுப் போனாள்.
அவனும் வந்த நொடி முதற்கொண்டு அவளையேதான் பார்த்திருந்தான்.
அன்று தன் முகம் பார்க்கவே தயங்கியவள், இன்று கண்களுக்குள் அப்படியே தன்னை நிரப்புகிறவள் போன்று பார்த்தபோது, அந்த நிமிடமே அரவணைத்துக்கொள்ளத் துடித்த மனதை அடக்கி, என்ன என்று கண்ணால் கேட்டான்.
அத்தனைபேர் முன்பும் என்ன சொல்லுவாள்?
நெஞ்சுக்குள் என்னென்னவோ உணர்வுகள் பொங்கிக்கொண்டு வந்தன. மெள்ள நகர்ந்து அம்மாவின் அருகில் சென்று நின்றுகொண்டாள்.
சாய்மனை நாற்காலியில் சாய்ந்திருந்த அவர், அவளின் கையைப் பற்றி அழுத்திக்கொடுத்தார்.
அவர் முகத்தில் தெரிந்த மலர்ச்சியும், அந்த நேரத்தில் அண்ணா சயந்தன் வீட்டில் நிற்பதும், உதயனின் அம்மாவின் தயவோடு நடந்து முடிந்திருந்த உபசரிப்பும் அப்போதுதான் பார்வையில் பட, கேள்வியோடு அன்னையைப் பார்த்தாள்.
“முகம் கழுவி, நல்ல உடுப்பா போட்டுக்கொண்டு வாம்மா.” மகிழ்ச்சி பொங்கும் குரலில் சொன்னார் அவர்.
பாட்டியோடு கதைத்துக்கொண்டு இருந்ததில் நேரத்தைக் கவனிக்க மறந்திருந்தாள். உதயனும் அழைத்துப்போக வந்துவிட, அன்றைக்கு என்று பார்த்துத் தன் வெள்ளை ஆடையிலேயே வந்திருந்தாள்.
தலையை ஆட்டிவிட்டு ஓரடி எடுத்துவைக்க, “இந்தச் சம்பிரதாயம் எல்லாம் எதுக்கு? அவளை எங்களுக்கு முதலே தெரியும். தம்பியும் ஏற்கனவே பாத்திட்டான். பிறகு என்னத்துக்கு?” என்று இடையிட்டுத் தடுத்தார் தேவகி.
ஒருமாதிரி ஆகிப்போனது அவளுக்கு. வேலைமுடிந்து வந்தவள் வேறு உடை மாற்றிக்கொண்டு வருவதில் என்ன இருக்கிறது? சாதாரணமாய்ச் சொன்னதுபோன்று தெரிந்தாலும், அப்படியல்ல என்று அவர் சொன்ன தொணி எடுத்துரைத்தது.
மனத்தில் கலக்கம் சூழ தேவகியைப் பார்த்தாள். அப்போதுதான், அபியின் முகத்தில் இருந்த இறுக்கத்தையும் கண்டாள். தேவகியைப் பற்றித் தெரியும் தான். ஆனால் அவள்? அவளுக்குமா தன்னைப் பிடிக்கவில்லை? நட்பில் திளைத்திருந்த நெஞ்சில் சுருக்கென்று முள் ஒன்று தைத்தது.
இல்லாமல், அவளின் முகமே பாராமல், என்னவோ முன்பின் அறியாத அந்நியர் வீட்டுக்கு வந்ததுபோல் இருப்பாளா? அவளையே பார்த்தாள். இவள் பார்ப்பது தெரிந்தும் திரும்பியும் பாராதவளின் செய்கை காயப்படுத்த, அப்படியே நின்றாள்.
தங்கையின் மனத்தைப் படித்ததுபோல், “பரவாயில்ல ஆன்ட்டி. வேலை உடுப்போடையே நிக்க ஏலாது தானே. நீ போய் மாத்திக்கொண்டு வா.” என்றான் சயந்தன்.
அவனிடம் தலையாட்டிவிட்டு உள்ளே போகத் திரும்பியவள், சீராளனை ஒரு பார்வை பார்த்துவிட்டுப் போனாள்.
‘உன் வீட்டினருக்குப் பிரியமில்லை எனில் எதற்காக என் வீட்டினரைச் சங்கடப்படுத்துகிறாய்?’ என்று மொழிபெயர்த்தது அந்தப் பார்வை.
சீராளனுக்கும் விளங்காமலில்லை. எதை மனத்தில் வைத்து அன்னை சொன்னார் என்றும் தெரியும். என்றாலும், இதையெல்லாம் பெரிதுபடுத்தும் நிலையில் அவன் இல்லை.
ஆசையாசையாகப் பெண்பார்த்துவிட்டு, ஒற்றை மகனின் திருமணத்தை அப்படி நடத்தவேண்டும், இப்படி நடத்தவேண்டும் என்று ஆயிரம் கற்பனைகளோடு காத்திருந்த அம்மாவின் ஏமாற்றத்திலும், அது உண்டாக்கிய கோபத்திலும் நியாயம் உண்டு என்றுதான் நினைத்தான்.
அவளின் கோபத்திலும் நியாயம் இல்லாமல் இல்லை. ஆக, இருவரையும் சமாளித்து, பொறுத்துப் போக்கவேண்டியவன் அவன் தான் என்பதில் அமைதியாகவே இருந்துகொண்டான்.
அதுவரை நேரமும், ‘சொன்னது போலவே வந்துவிட்டான்’ என்று பொங்கிக்கொண்டிருந்த மனம், அப்படியே அடங்கிப்போனது.
இது, தகுதிக்கு மீறிய ஆசையா என்கிற கலக்கம் மேலோங்க, பெண் பார்ப்பது போலும் அல்லாமல் பழைய வீட்டு உடையாகவும் அல்லாமல் கடைத்தெருக்களுக்குப் போடக்கூடியது போன்று, முழங்கால் வரையிலான பாவாடை சட்டை ஒன்றை அணிந்து, முகம் கழுவித் தலைவாரிக்கொண்டு, ஒப்பனைகளற்ற முகத்தோடு வந்தவளை ரசனையோடு மொய்த்தன சீராளனின் விழிகள்.
சாதாரணமாகத்தான் இருக்கிறாள் என்று அவளுக்கே தெரியும். என்றாலும், ‘நீ அழகாய் இருக்கிறாய்’ என்று ஆராதித்த அவன் பார்வையில், தன்னைப் பேரழகியாய் உணர்ந்தாள். கூடவே, தன் மனச்சிணுக்கத்தையும் அந்தப் பார்வை துகள் துகளாய் அடித்துப்போடுவதையும் உணர்ந்தாள்!
ஆனாலும், ஒரு சின்ன ஊடல், ஒன்றும் சொல்லாமல் இருந்தானே என்று! அவனிடம் தாவிடத் துடித்த விழிகளை மிரட்டி அடக்கிக்கொண்டு நின்றிருந்தாள்.
“பிறகு என்ன? பிள்ளையும் வந்திட்டாள். பொருத்தமும் அமோகமா பொருந்தி இருக்கு. இனி மேற்கொண்டு என்ன எண்டு பாக்கலாமே.” என்று ஆரம்பித்தார் சீராளனின் அப்பா சண்முகராஜா.
இவளுக்கு இதயத்துடிப்பு எகிறத் துவங்கிற்று! சீதனம் என்கிற அரக்கன், இளம் மனங்களின் நேசத்தைத் துண்டாட, தன் அகன்ற வாயைக் கோரத்தோடு திறந்துகொண்டு வருவதுபோல் இருந்தது.
சயந்தனும் தாயை ஒருமுறை பார்த்துவிட்டு, “எங்களுக்கும் இதுல சந்தோசம் அங்கிள். ஆனா… சீதனம் எண்டு… எங்களிட்ட பெருசா இல்ல.” என்று உண்மை நிலவரத்தை எடுத்துரைத்தான்.
சண்முகராஜா பதில் சொல்ல முதல் சீராளன் முந்திக்கொண்டான்.
“உங்கட தங்கச்சியக் கேட்டுத்தான் என்ர அம்மா அப்பாவைக் கூட்டிக்கொண்டு இங்க வந்திருக்கிறன் சயந்தன். சீதனத்தையில்ல! அவாவை மட்டும் நீங்க தந்தாப் போதும்!” என்றான் தெளிவாக.
‘அவ்வளவு கஷ்டப்பட்டு உன்ன வளத்து ஆளாக்கினது இப்பிடி ஒரு அன்னக்காவடி வீட்டுல இருந்து பெண் எடுக்கவா? எத்தினை கனவு, எவ்வளவு ஆசை? எல்லாம் நாசமாப் போச்சு!’ தேவகியால் தாங்கவே முடியவில்லை. மனம் பொறுக்காமல் எதையாவது கதைத்துவிடுவோமோ என்று பயந்து, இறுக்கி வாயை மூடிக்கொண்டு அமர்ந்திருந்தார்.
சயந்தன் வீட்டினருக்கு மிகுந்த சந்தோசம். ஏணி வைத்தாலும் எட்டாத நல்ல சம்மந்தம், தம் நிலையால் தவறிப் போய்விடுமோ என்று பெரும் அச்சம் கொண்டிருந்தனர். இப்போது அது, அடித்துக் கழுவியதுபோல் அகன்றுபோயிற்று.
ஷர்மினிக்கு எவ்வளவு அடக்கியும் முடியாமல் கண்ணோரம் ஒருதுளி நீர் கசிந்திருந்தது. ‘சீதனம்’ என்கிற ஒன்றை எண்ணி எவ்வளவு பயந்தாள். அவனானால் ஒற்றை வார்த்தையிலேயே ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டானே.
தேவகியின் முகம் பார்த்ததும் மனம் மீண்டும் கனத்துப்போனது. அபி ஏதாவது ஆறுதலாய்ப் பார்ப்பாள் என்று பார்த்தால், அவளோ இவளைத் தவிர மற்ற எல்லோரையும் பார்த்துக்கொண்டிருந்தாள். இல்லையோ ஃபோனை நோண்டினாள். மனத்திலிருக்கும் எதையும் காட்டிவிடக்கூடாது என்கிற கவனத்தோடும், ஒருவித இறுக்கத்தோடும் அமர்ந்திருந்தாள்.
‘ஒருமுறை என்னைப் பாரடி. என்னோட கதையடி..’ இவள் மனம் அவளிடம் மன்றாடிக்கொண்டிருந்தது. நான் இருக்கிறேன், கவலைப்படாதே என்று ஒற்றைப் பார்வையில் தைரியம் தந்தால் கூடப் போதுமே!

