என்றும் உன் நிழலாக 17 – 1

17

அடுத்தடுத்து ஏற்பட்ட அதிர்ச்சிகளால் நிலைகுலைந்து போயிருந்தான் ரஞ்சன்.

‘என்ர நேசம் கைகூடவே கூடாதா? இப்பிடி, அண்ணா என்று நினைச்சன் என்று சொல்லிட்டாளே!’ என நினைத்து இரவிரவாய்த் துடித்துக் கொண்டிருந்தவன், ‘‘உண்மையான நேசம் ஒருக்காலும் தோற்காது என்று சொல்லுறதெல்லாம் பொய்யா?’’ என, தன்னைத் தானே கேட்டுக் குமைந்தவன், இப்போதோ, அதிர்ச்சியின் உச்சகட்டமாக, வசியின் செய்கையால் உறைந்து போய் விட்டான்.

‘நான் அவளை விரும்பிறன் என்று தெரிஞ்ச பிறகும் அண்ணாவால எப்பிடி இப்பிடிச் செய்ய முடிஞ்சிது?’ என்று கோபம் கொண்டவனுக்கு, வசியை நிறுத்தி வைத்துக் கேள்விகளால் விளாசித் தள்ளுமளவிற்கு ஆத்திரம் வந்தது.

‘‘உங்கள நான் விரும்புவன் என்று எப்படி எதிர்பார்த்தீங்க? உங்கள என்ர அண்ணாவாத் தான் நினைக்கிறன்.’’ என்று நிதி சொன்ன போது, அவள் மறுப்பில் எழுந்த கவலையில் துடித்தானேயொழிய, அவளில் ஆத்திரமோ கோபமோ கொள்ளவில்லையே!

அது அவனால் முடியுமா என்றால், ‘‘நிச்சயமாய் முடியவே முடியாது’’ என்றே விடை இருக்கும்.

அந்தளவுக்கு அவள் என்றால் அவனுக்கு உயிர்!

ஆனால், வசியின் இந்தச் செயல், அவனை மிகவும் கோபம் கொள்ளச் செய்தது. தனக்கு அப்பப்ப வந்த சின்னச்சின்ன உறுத்தல்களைக் கூட, தான் பெரிதுபடுத்தாமல் இருந்ததை நினைத்துப் பார்த்தவனுக்கு, வசியால் தான் நன்றாகவே முட்டாளாக்கப்பட்டு விட்டதாகவே தோன்றியது.

‘குடும்பத்துக்குப் பெரியவானாய் எல்லோராலும் மதிக்கப்படுபவன் செய்யும் வேலையா இது? எவ்வளவு சின்னத்தனமாக நடந்திருக்கிறார்!’ என்று கோபப்பட்டவன், தன் இயல்பை மறந்து வசியை நன்றாகவே திட்டித் தீர்த்தான். அப்படிச் செய்தும் அவன் மனம் ஆற மறுத்தது.

எத்தனையோ தடவைகள், நிதியின் தேவைகளை வசி மூலமே நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறான். அப்போதெல்லாம், எந்த வேலை இருந்தாலும் அவள் தேவையைக் கவனித்து விட்டே மறு வேலை செய்வான் வசி.

இதற்காக அவன் யாருக்கும் பயப்படுவதோ அல்லது அவனை யாரும் கேள்வி கேட்பதோ இல்லை. அப்படிக் கேட்டாலும் கூட அவன் அதையெல்லாம் கருத்தில் கொள்ளவே மாட்டான்.

புவனி கூட, வீட்டில் கத்துவாரேயொழிய, “நீ ஏன் அவளுக்காக வேலை செய்யிறாய்?’’ என்று வசியிடம் கேட்க மாட்டார்.

அவன் இப்படி உதவ முன்வருவதெல்லாம், மற்றவர்கள் போல அவள் மேலுள்ள பரிவாலேயே என்று நினைத்திருந்தான் இவன். இன்றோ, ‘நான் எவ்வளவு முட்டாள்தனமாக அப்படி நினைச்சிருக்கிறன். அவர், அவளில உள்ள காதலில தான் பார்த்துப் பார்த்துச் செய்திருக்கிறார்.’ என நினைத்தவனுக்கு, எப்படிப் பார்த்தாலும் தமையனின் செய்கையை நியாயப்படுத்தத் தோன்றவில்லை.

நேசம் கொண்டு அதில் படுதோல்வி கண்ட அவன் மனம் அதற்குத் தயாராகவும் இல்லை.

ஆனாலும் நிதி!

அவள் வசியைக் கண்டதும் கதறியதையும், அவன் கையைப் பிடித்துக்கொண்டு சென்றதையும் நினைத்துப் பார்த்தவனுக்கு, தெட்டத் தெளிவாக அவள் மனம் புரிந்தது.

அவள் வசியைத் தனக்கு நெருங்கியவனாக, தன்னவனாக நினைத்திருந்தைத் தான் அவள் செய்கை வெளிச்சம் போட்டுக் காட்டியதே!

‘‘அண்ணாவில எந்தளவுக்கு நம்பிக்கையும் அன்பும் வச்சிருந்தால் அவர் வா என்றதும் வீட்டை விட்டுப் போயிருப்பாள்?’’ என்று கேட்ட மனச்சாட்சிக்குச் சிறிதே செவிசாய்த்தவனால், நிதியின் உள்ளத்தைக் கவர்ந்து அதில் உறுதியாய் இருப்பது வசி என்பதை நன்றாக விளங்கிக்கொள்ள முடிந்தாலும், அந்நிஜம் சுட்ட சூடு தாங்காது வேதனையில் துடித்துப் போனான்.

அவள் சென்றதும் வந்து அறையில் முடங்கியவன், தான் ஆண்பிள்ளை என்பதையும் மறந்துவிட்டான்.

கண்ணீர் வழிய, அப்படியே மல்லாந்து படுத்தவன் பார்வை இலக்கின்றி வெறித்துக் கொண்டிருந்தது. மனமோ, வெறுமையை மூச்சு முட்டச் சுவாசித்து வதைபட்டது.

மறுபுறமோ, வசி நிதியை அழைத்துச் செல்வதை எவ்வளவோ தடுத்துப் பார்த்த ரதீஷுக்கு, முதல் முதலாய் நிதியில் கோபம் பொத்துக்கொண்டு வந்தது.

அதுவும் ‘‘வா’’ என்றதும் வசியின் இழுப்புக்கு அவள் செல்வதைப் பார்த்ததில் கொதிப்பே உருவானது!

‘என்னதான் வீட்டில பிரச்சினை என்றாலும் இப்படியா ஒருத்தி போவாள்? அதுவும், இவ்வளவு நாட்களாக இங்க இருந்து, கூடப் பிறந்தவள் போல எவ்வளவு பாசம் காட்டியும் கடைசியில இப்பிடிச் செய்திட்டாளே!

அப்பா வந்து, இதைக் கேட்டால் எவ்வளவு கவலைப்படுவார்? அவர் வெளியில் காட்டிக் கொள்ளாட்டாலும் இவளில எவ்வளவு அன்பு வச்சிருக்கிறார்.’ யோசித்தவாறே சமையல் அறையில் அமர்ந்திருந்தான்.

நேரம் செல்லச் செல்ல, அவன் வயிறு பசியில் துடித்துக் கதறியது. குறித்த நேரத்துக்குச் சாப்பிட்டுப் பழகியவன் அவன்.

‘ம்ம்..’ எழுந்து சமையல் பொருட்களை ஆராய்ந்தவன், பாஸ்டா தயாரிப்பதென்ற முடிவுக்கு வந்திருந்தான்.

விறுவிறுவென்று இயங்கி ஏதோ தனக்குத் தெரிந்தவகையில் பாஸ்டா தயாரித்தெடுத்து மேசையில் மூடி வைத்து விட்டு, ‘அண்ணா பாவம், காலம குடிச்ச தேத்தண்ணியோட இருக்கிறார்; அவரையும் கூட்டிக்கொண்டு வருவம்.’ என நினைத்தவனுள், ‘அம்மா இன்னும் சாப்பிடவும் இல்லை; கீழே வரவும் இல்லை.’’ என்ற எண்ணம் வந்ததால் முதலில் தாயின் அறைக்குள் நுழைந்தான்.

எப்போதும் சுறுசுறுப்பாக, நிதியை அதட்டி உருட்டிக்கொண்டு ராணி போல நடமாடும் தாய், ஓய்ந்து போய் படுத்திருப்பதைப் பார்க்கையில் வேதனை ஏற்பட்டாலும், ‘இது எல்லாமே உங்களால தான்மா!’ என்றெண்ணிக்கொண்டே தான், ‘‘அம்மா…’’ அவர் தோள் தொட்டு அசைத்தான்.

விழித்துக்கொண்டே படுத்திருந்த புவனியோ, எரிக்கும் பார்வையை மகன்மீது செலுத்தி, ‘‘ஏன்டா…இப்ப என்ன வேணும் உனக்கு?’’ சீறினார்.

‘‘எனக்கு ஒன்றுமே வேணாம். நீங்க வந்து சாப்பிடுங்க… ஏதோ எனக்குத் தெரிஞ்ச மாதிரிச் செய்திருக்கிறன்.’’ என்றவன், மெல்ல நகர்ந்து சென்றுவிட்டு, கதவடியில் நின்று திரும்பினான்.

‘‘அம்மா ப்ளீஸ்மா…இனி இந்தப் பிரச்சினையைப் பெரிசுபடுத்தாமல் முடிக்கப் பார்ப்பம்மா. பாருங்க, எப்பிடி இருந்த நம்மட வீடு இன்றைக்கு இப்பிடிப் போய் நிற்குது என்ற கவலையில் சொல்லுறன்.’’ என்றவன், விறுவிறுவென்று தமையனின் அறை நோக்கிச் சென்றான்.

ரஞ்சனின் அறைக்கதைவைத் திறந்தவனுக்கு, கண்ணீர் வழியப்படுத்திருந்த தமையனைப் பார்த்ததும் நெஞ்சம் பிசைந்தது.

ரஞ்சன் மிகவும் அன்பும் பாசமும் கொண்டவன். எல்லோரையும் அனுசரித்துப் போக நினைப்பவன். அதனால், அவனை எல்லோருக்குமே பிடிக்கும்.

ரதீஷின் உற்ற தோழன் அவன். ‘இவனுக்குப் போய்..’ என்று நினைத்த ரதீஷ், மெல்ல அவனருகில் அமர்ந்து, நெற்றியில் வைத்திருந்த கரத்தை விலக்கினான்.

‘‘அண்ணா! இங்க பாருங்க, இப்ப என்ன நடந்திட்டு என்று இப்படி ரூமுக்குள்ள இருந்து உண்ணா விரதம் இருக்கிறீங்க? முதல் எழும்பிப் போய் முகம் கழுவுங்கோ… எழும்புங்கோ!’’ அவனை வற்புறுத்தி எழுப்பினான்.

எழுந்தமர்ந்தவன் கரங்களை ஆதரவாய்ப் பற்றிக் கொண்டவன் சிறிது நேரம் எதுவும் கதைக்கவில்லை.

‘‘நடந்ததை இனி நம்மால மாற்ற முடியாது. இங்க நாம கவனிக்க வேண்டிய முக்கிய விசயமே…நம்மட நிதிக்கு வசி அண்ணாவப் பிடிச்சிருக்கு என்றது தான்..’’ அவசரமாகச் சொல்லி நிறுத்தினான்.

தான் சொன்னதற்கு எந்த எதிரொலியும் இன்றித் தலைகுனிந்திருக்கும் தமையனில் விழிபதித்தவன், ‘‘அண்ணா…எனக்குக் கொஞ்ச நாட்களாகவே அவே ரெண்டு பேரிலும் சந்தேகம் இருந்திச்சு. அதனால தான் உங்களிட்ட அப்பப்பச் சொல்லிப் பார்த்தன். நீங்க தான்…” என்று ஆரம்பித்தவன் அப்படியே நிறுத்திவிட்டான்.

“சரி சரி, அதை இனிக் கதைக்கிறதால என்ன பிரயோசனம் சொல்லுங்க? அவள் சந்தோசமா இருந்தால் நமக்கும் சந்தோசம் தானே அண்ணா? இல்லை என்றா சொல்லுவீங்க?’’ என்று, தமயனிடமே விடைகாண முயன்றான்.

கசங்கிக் கன்றிய முகத்தைச் சகோதரன் பக்கம் திருப்பிய ரஞ்சன், சிறிது நேரம் மௌனம் காத்தான்.

‘‘கட்டாயமாடா…எனக்கு எப்பவுமே அவளட சந்தோசம் தான் முக்கியம். அதில ஒரு போதும் மாற்றம் இல்லடா. ஆனாலும்…இந்த வசி அண்ணா இப்பிடிச் செய்திட்டாரே என்று தான் நம்பவே முடியாமல் இருக்கு.

நான் இவ்வளவு நாளும் முட்டாள் மாதிரி இதை விளங்கிக் கொள்ளாமல் இருந்திருக்கிறன். அவருக்கு என்னைப் பார்த்தால் பேயன் விசரன் மாதிரி இருந்திருக்கும் என்ன?’’

இயலாமையும் வெறுப்புமாகச் சொன்னவன், கைகளால் தலையை தாங்கிக்கொண்டு குனிய, அவனை ஆதரவாக அணைத்துக் கொண்டான் அவன் அன்புத் தம்பி.

‘‘அட விடுங்கண்ணா…இப்பச் சரி நமக்குத் தெரிய வந்ததே!” மென்மையாக ஆரம்பித்து, “உங்களுக்கென்று இனியொருத்தி பிறந்தா வரப் போறா? இல்லையே! எங்கயாவது உங்களுக்கே உங்களுக்காக ஒரு ஜீவன் காத்துக் கொண்டிருக்கும்; முதல் வேலையாக அந்த ஜீவனைத் தேடிப் பிடிப்பம்.’’ இலகுவாகச் சொன்ன சகோதரனைத் தலைதூக்கி முறைத்தான் ரஞ்சன்.

‘‘ஏன்டா…உனக்கு இப்ப என்னைப் பார்த்தால் கிண்டலாக்கிடக்கா? என்ர நிலை இப்பிடிப் போச்சே!’’ மீண்டும் விரக்தியாகவே சொன்னான்.

‘‘என்ன அண்ணா நீங்க? நான் உண்மையைத் தான் சொன்னன். என்ன பெரிய காதல்? காதல் காதல் என்று சொல்லி அந்தச் சொல்லுப் படும்பாடு இருக்கே! அய்யோண்ணா…அந்தச் சொல்லுக்கு மட்டும் வாயிருந்தால் என்னை ஒருத்தருமே சொல்லாதீங்கப்பா என்று எல்லாரிண்ட காலிலும் விழுந்து எழும்பும்’’ பரிகாசம் செய்தான்.

இப்போது தம்பியை முறைத்தான் தமையன்.

‘‘பின்ன என்ன அண்ணா? ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமாய் அதை வச்சுப் பாடாதபாடு படுத்துறீங்க! என்ன நான் சொல்லுறது பொய்யா சொல்லுங்க?’’ கலங்கிப் போயிருந்த தமயனிடமே நியாயம் கேட்டான்.

‘‘போதும்டா..என்னைக் கொஞ்ச நேரம் தனியா இருக்கவிடு! முதல் பேசாமல் எழும்பிப் போ!’’ சினந்தவனைப் பார்த்து, இப்போது, தான் முறைத்தான் ரதீஷ்.

‘‘நல்லதைச் சொன்னால் பிடிக்காதே! நல்லது சொல்ல வயசா தேவை? முதல், நீங்க மட்டும் விரும்பீட்டு அதைக் காதல் என்று சொல்லுறதே பெரிய குற்றம் தெரியுமா? இந்த விசயம் வெளிய தெரிஞ்சா இதைத் தலைப்பாகப் போட்டு விவாதமே ஆரம்பிப்பீனம்..

உங்களுக்கு இப்ப இது தேவையா சொல்லுங்க? அப்படியே வந்தால் வா போனால் போ என்று போய்க்கொண்டே இருக்க வேணும் அண்ணா.

நிதி இல்லாவிட்டால் இன்னொரு மதி கிடைக்க மாட்டாவா சொல்லுங்க? அதுவும் இந்தப் பரந்த உலகத்தில்.’’

தனது பாணியில் நிறுத்தாது கல கலத்தவன், ‘‘எழும்பி முகம் கழுவிட்டு வாங்கண்ணா…சாப்பிட்டிட்டுப் போய் நிதியைக் கூட்டிக்கொண்டு வருவம்.’’ கதையோடு கதையாகச் சொல்லிவிட்டான்.

மறுநொடி, தன் மீதிருந்த அவன் கைகளை வெடுக்கென்று தட்டி விட்டுவிட்டுக் கோபமாக எழுந்தான் ரஞ்சன்.

‘‘என்ன…நாம போய் அவளக் கூட்டிக்கொண்டு வாறதா? முடியாது; என்ன நினைவில போனாளோ, விரும்பினால் திரும்பி வரட்டும்; இல்லாட்டி, பாப்பம் என்ன நடக்குதென்று!

அந்தளவுக்கு நாங்க வேண்டாம் என்று நினைச்சிட்டாள் இல்லையா?

மடச்சி! அவளுக்குகாகப் பார்த்துப் பார்த்துச் செய்ததெல்லாம் ஒரு நிமிசத்தில இல்லையென்று ஆக்கீட்டாள்.’’ என்றவனால், ஆத்திரத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

‘‘எல்லாத்தும் மேல, ஒரு அண்ணனா அந்த மனிசன் நல்ல வேலை செய்திருக்கிறார்.’’ குமுறினான்.

கோபத்தில் குமுறும் தமையனிடம் கதைப்பதற்கு வார்த்தைகளைத் தேடினான் ரதீஷ்.

error: Alert: Content selection is disabled!!