‘அண்ணா சொல்வதில பிழையேதுமில்லையே!’ எழுந்து ஜன்னலருகில் சென்று நின்று கொண்டவன் பார்வை கீழே பாதையில்!
சிறிது நேர அமைதிக்குப் பின் தமயனிடம் திரும்பியவன்,
‘‘அண்ணா…நீங்க இப்ப கோபத்தில கதைக்கிறீங்க. நிதி உங்கள விரும்பி இருந்தால், வசி அண்ணாவால எதுவுமே செய்திருக்க ஏலாது. முதல், அப்பிடி ஏதும் செய்திருக்கவும் மாட்டார். நிதிக்கு உங்களில விரும்பம் இல்லையென்று தெரிஞ்சு தான் இப்படி அவளை விரும்பி இருப்பார். கொஞ்சம் பொறுமையா நிதானமா யோசிச்சுப் பார்த்தால் இது உங்களுக்கே விளங்கும்.’’ என்றவன்,
‘‘முதல், எனக்கும் வசி அண்ணாவில சரியான கோபம் தான் வந்தது. பிறகு, யோசிச்சுப் பார்த்தால் இதில கோபப்பட என்ன இருக்குச் சொல்லுங்க?
அவளுக்கு நல்லதொரு இடத்தில கலியாணம் செய்து வைக்கத்தானே வேணும்?
அந்த இடம் நம்மட பெரியம்மாவீடு என்று நினைச்சுப் பார்த்தால், சந்தோசமா இல்லையாண்ணா! அந்த வீட்டில அவள் எப்பவுமே சந்தோசமா நிம்மதியா இருப்பாள்.’’ என்றவன், ஒருகணம் தாமதித்து, ‘‘நம்மட வீட்டை விட’’ ஒரு அழுத்தம் கொடுத்துச் சொன்னான்.
எதுவும் கதைக்கவில்லை ரஞ்சன்.
நிச்சயம் இதைத் தமையனும் புரிந்து கொள்ளுவான் என்ற நம்பிக்கையுடன், அவன் கோபத்தைக் குறைக்கும் முயற்சியில் இறங்கிவிட்டான் ரதீஷ்.
அந்நேரம், அவர்கள் வீட்டின் முன்னால் வந்து நின்றது வசியின் கார்.
கார் நிறுத்தும் ஒலியில் சட்டென்று கீழே பார்த்தவன் விழிகள் விரிந்தன.
காரிலிருந்து இவன் அம்மம்மா, பெரியம்மாவுடன், நிதியும் இறங்கிக் கொண்டதும் கார் கிளம்பிச் செல்வதையும் கண்டவன் முகத்தில் ‘அப்பாடா’ என்ற நிம்மதியுணர்வு!
மறுநொடி, ‘‘அண்ணா நிதி வந்திட்டாள்!’’ பரபரப்போடு கீழே ஓடினான்.
அழைப்புமணியை அழுத்தும் முன்னரே கதவைத் திறந்த ரதீஷ், கையில் கூடையுடன் நிற்கும் நிதியைக் கூர்மையாகப் பார்த்தவன், பின் தன்னைச் சுதாகரித்துக் கொண்டு, ‘‘வாங்க அம்மம்மா…உள்ளுக்கு வாங்க பெரியம்மா.’’ பெரியவர்களை வரவேற்றான்.
“என்னைய்யா வீட்டில நிக்கிறீங்க? இன்றைக்கு வகுப்பு ஒன்றும் இல்லையா?”
இயல்பாக விசாரித்தபடி உள்ளே வந்த சுமி, “அம்மா எங்கடா?’’ என்று கேட்க, அவன் மாடியைக் கை காட்டினான்.
“சரி, நான் போய்ப் பார்க்கிறன்; சாப்பாடு இருக்குச் சாப்பிடுங்க!’’ என்றவர் மேலே செல்ல, “நான் இங்க கீழயே இருக்கிறன். இந்தப் படியால ஏறியிறங்க என்னால முடியாது..’’ சமையலறையில் இருக்கும் இருக்கையில் அமர்ந்து கொண்டார் அம்மம்மா.
கையில் இருந்த சாப்பாட்டுக் கூடையை மேசையில் வைத்த நிதி, அங்கு மூடியிருந்த பஸ்டாவை பார்த்துவிட்டுச் சிறுமுறுவல் பூத்தாள்.
‘பிறகென்ன? ரதீஷ் கைவண்ணம் போல!’ நினைத்தவாறே அவனைப் பார்த்தவளுக்கு அவன் தன்னோடு கதைக்கவில்லை என்பது புரிந்தே இருந்தது. அதைப் பெரிதுபடுத்தாது, “அண்ணா எங்க?’’ என்றதும், கூர்பார்வையால் குத்தினாலும் ஒத்தவார்த்தை பேசவில்லை அவன்.
எங்கே வாயைத் திறந்தால் தேவையில்லாது திட்டிவிட்டால் என்று மௌனக்கவசம் அணிந்திருந்தவன், தன்னையுமறியாது ரஞ்சன் மாடியில் என்றவாறு கைகாட்டினான்.
“ஓ! நீர் சாப்பிட ஆயத்தமாகும்; நான் போய் அவரைக் கூட்டிக்கொண்டு வாறன்.’’ படியேறினாள் நிதி.
இங்கு வரும் போதே, நேற்றிரவு ரஞ்சன் சொன்னதைப் பற்றி இனிக் கதைப்பதோ யோசிப்பதோ இல்லை என்ற முடிவில் தான் வந்திருந்தாள்.
ரஞ்சன் அப்படித் தன் விருப்பைச் சொன்னதற்காக, தான், அவனை ஒதுக்க, அவன் குற்ற உணர்வில் தவிக்க, ‘இந்த விஷயம் லேசில முடிவுக்கு வராது.’ என நினைத்தவள், அதை அப்படியே ஒதுக்கி விடுவதே நல்லதென்ற முடிவுக்கு வந்திருந்தாள் .
நேரே ரஞ்சன் அறைக்குப் போய் இலேசாக ஒருக்களித்துச் சாத்தியிருந்த கதவைத் திறந்தவள், கட்டிலில் சோர்ந்து போய் அமர்ந்திருந்தவனைப் பார்த்ததும் அவன் கோலத்தில் துணுக்கிட்டுவிட்டாள். அதைச் சிறிதும் வெளிக்காட்டாமல் இருக்கச் சிறிது நேரம் தேவைப்பட்டது அவளுக்கு! அமைதியாக நின்றாள்.
அவனோ, இவள் வந்தது தெரிந்தும், அவள் புறமே பார்க்காது வெளியில் பார்வையை உலவவிட்டிருந்தான்.
மெல்ல அருகில் சென்றவள், “சாப்பிடலாம் வாங்க!’’ அமர்ந்த குரலில் சொல்ல, விசுக்கென்று முறைப்போடு திரும்பிப் பார்த்தான் ரஞ்சன்.
அவள் இல்லாத போது அவள் செய்கைகளை நியாயப்படுத்தியவனால், அவள் மீது கோபம் கொள்ள முடியாமல் தவித்தவனால், இப்போது நேரில் பார்க்கும் போது அவ்வாறு முடியாமல், அவள் மீது கோபமே வந்தது.
அதுவும், வசியின் கையைப் பிடித்துக்கொண்டு சென்ற காட்சி அவன் மனக்கண்ணில் வலம் வந்து, கோபத்தை அதிகரித்தது.
“சாப்பாடா?! எனக்கு ஒன்றும் தேவையில்லை. முதல் நீர் எனக்குச் சாப்பாடு தரத் தேவையில்லை. எல்லாத்துக்கும் முதல், என்ர அறையை விட்டு வெளியில போம்!’’ அடிக்குரலில் சீறினான்.
அடங்க மறுத்த ஆத்திரம் முகத்திலும் குரலிலும் வெளிப்பட, “காலைல என்னை அவ்வளவு திட்டினீர்…இப்ப நீர் வந்து…’’ குரல் உயர்ந்தது.
ஒரு போதும் எதற்குமே தன்னைக் கோபிக்காதவனின், கடிந்து கதைக்காதவனின் இக்கோபம் அவளை மிகவும் பாதித்தது.
அதைப் புன்னகை என்ற வண்ணம் பூசி அழகாக மறைத்தவள், தொடர்ந்து கதைக்க விடாமல் இடையிட்டாள்.
“கொஞ்சம் பொறுங்க பொறுங்க; என்ன? நான் காலம கத்தினனா? போகச் சொன்னால், காய்ச்சல் என்றாலென்ன, கூதல்(நடுக்கம்/குளிர்) என்றாலென்ன, நீ எக்கேடும் கேட்டுப்போ என்று விட்டுட்டுப் போக வேணுமா சொல்லுங்க?
சரியான எஸ் என்; (சுயநலம் என்பதை இவர்கள் இப்படிச் சொல்லிக் கொள்வார்கள்) இதில் என்னில பெரிய அன்பும் அக்கறையுமாம்.
பிறகு, அவர் அடுத்தவர் வந்து, ‘இந்தா குடி! இல்லை கிட!’ என்று பரசிட்டமோலையும் தண்ணியையும் மேசையில வீசிட்டுப் போறார்.
பெரிசா அன்பும் அக்கறையும் உள்ள ஆட்கள் செய்யிற வேலையா இது?’’ என்றாள், அப்பட்டமான கேலியோடிய தொனியில்.
இவளைத் தொடந்து வந்திருந்தான் ரதீஷ். அறையின் வெளியே நின்று என்ன நடக்கின்றது என்று பார்த்துக்கொண்டிருந்தவனும் ரஞ்சனும் ஒரே நேரத்தில், ஆளுக்கொரு பக்கமாக அவளைப் பிடித்துக் கொண்டார்கள்.
“என்னடி சொன்னாய்? நாங்க ‘எஸ்என்’னா அல்லது நீ ‘எஸ்என்’னா?’’ என்றவுடன் இரண்டு பேரையும் தோளோடு சேர்த்தணைத்துக் கொண்டாள் அவள்.
“ம்ம்…நீங்க ரெண்டு பேரும்தான் எஸ் என்; என்னில கொஞ்சமும் அன்பிலாதவர்கள்; நீங்க மட்டும் அப்பிடி வருத்தமாக இருந்திருந்தா விட்டுட்டுப் போவனா சொல்லுங்க? உங்களிட்ட அடி வாங்கிச் சரி உங்களுக்கு மருந்து தந்து இருப்பனா இல்லையா?’’ என்றவளின் காதைப் பிடித்து அழுத்தி முறுக்கினான் ரதீஷ்.
“சொல்லுவீர் சொல்லுவீர்…அதுதான் காலம எங்களை வேணாம் என்று விசுக்கென்று போனீர் போல!’’
இதுவரை, அவளின் செய்கையில் கனன்று கொண்டிருந்த ஆத்திரத்தில் கோபமாகவே கேட்டான்.
கண்கள் கலங்க இருவரையும் பார்த்தவள், உள்ளுக்குள் திரண்ட துக்கத்தைப் பெரும் பிரயத்தனத்தில் அடக்கிக்கொண்டாள்.
“அது வந்..து…நான்…இங்க மாமி சரியான ஹீட்டா(கோபமாக) இருகிறதால, சுமி மாமி வீட்டில போய்ச் சமைச்சிக்கொண்டு வருவம் என்று தான் போனன்; வேற என்ன என்று நினைச்சீங்க?’’
மென் முறுவலுடன் வினவியவள், கணத்தில் மாறி, “ஸாரி ஸாரி…நான்…நான் அப்பிடி வசிக்குப் பின்னால போயிருக்கக் கூடாது தான்; ப்ளீஸ் என்ன மன்னிச்சிக் கொள்ளுங்க.’’ என்றாள், பனித்த விழிகளுடன்!
அவள் கண்ணீரைக் கண்டதும் தான் தாமதம், சற்று முன் அவள் மீது தான் காட்டிய கோபமெல்லாம் மறந்து, மறைந்து போக, “சரி சரி விடும் விடும், அதுதான் திரும்பி வந்திட்டீரே!’’ என்றான் ரஞ்சன்.
“பரவாயில்ல விடும், அதுதான் சும்மா வராமல் ஏதோ வெந்தும் வேகாட்டியும் சமைச்சு வேற கொண்டு வந்திருக்கிறீரே.’’ என்ற ரதீஷ்,
‘‘என்ன இன்னும் காச்சல் அடிக்குது போல.’’ தொடர்ந்து கேட்க, அவளோ, “இல்ல…இப்பப் பரவாயில்லை… வேணுமென்றால் இன்னொருதரம் பனடோல் குடிக்கிறன்.’’ என்றவள், “நான் கொண்டு வந்தது வெந்ததும் வேகாததுமா? அப்பச் சரி…நீர் அந்த பாஸ்டாவையே சாப்பிடும்.’’ என்றாள் கேலி நகையுடன்.
அவள் அங்கு நிலவும் இறுக்கமான நிலையை மாற்றவே இப்படிக் கதைக்கிறாள் என்று புரிந்து கொண்டான் ரதீஷ்.
“இல்லையில்லை நிதி…எனக்கு இன்றைக்கு என்னவோ தெரியேல்ல வயிறு சரி இல்ல. அதால…’’ என்றவன், அவர்கள் இருவரையும் பார்த்து “ஹி ஹி’’ என்று பல்லை இளித்துக் காட்டிவிட்டு,
“நீர் சமைச்சது அப்பிடியும் இப்பிடியும் தானே இருக்கும், அப்ப கொஞ்சமாச் சாப்பிட்டிட்டு நிறுத்தலாம்பா. பாஸ்டா…அதுவும் நான் செய்தால் ருசிக்குக் கேட்கவா வேணும்? அதை வாயில் வச்சால் பிறகு நிறையச் சாப்பிட வேண்டி வரும்… அதனால…’’ இழுத்துக்கொண்டே சொல்ல,
“உம்மை…உமக்கு விழுந்தாலும் மண் ஒட்டாது என்ன?’’ என்ற நிதி, ரஞ்சனைக் குளியல் அறைக்குள் தள்ளி விட்டு, அவன் தயாராகி வந்ததும் இருவரையும் இழுத்துக்கொண்டு கீழே இறங்கி வர, இவர்களைப் பார்த்திருந்த அம்மம்மா, ‘தெய்வமே இந்தக் குழந்தைகள் எப்பவும் இப்பிடியே ஒற்றுமையா இருக்க வேணும்!’ என்று, வேண்டிக் கொண்டார்.
அப்பொழுது அங்கே வந்த சுமி, “புவனி கொஞ்சம் தலைவலி என்று படுத்து இருக்கிறாள்மா, நான் அங்கயே கொண்டு போய் சாப்பாட்டைக் குடுக்கிறன்.’’ என்றவர், புவனிக்காக உணவை ஒரு தட்டில் போட்டு மேலே எடுத்துச் செல்ல, எதுவும் சொல்லாமல் அமர்ந்திருந்த ரதீஷுக்கும் ரஞ்சனுக்குமாக உணவைப் பரிமாறிய நிதி, “ம்ம்…இனிச் சாப்பிடுங்க!’’ என்றவள், தானும் அவர்களுடன் அமர்ந்து கதைத்துக்கொண்டே அவர்களுக்கு தேவையானவற்றைப் பார்த்துப் பார்த்து பரிமாறினாள்.
சாதாரணமாகக் கதைக்க வெகுவாக முயன்று அதில் வெற்றியடைந்து உணவை உண்ணும் ரஞ்சனையும், அவன் தன் மீது வைத்துள்ள பாசத்தையும் நினைத்துப் பார்த்தவள், ‘நிச்சயமாய் ரஞ்சனை இந்த விசயத்தில இருந்து, அவர் மனதிலுள்ள தேவையற்ற குழப்பங்களில இருந்து வெளிக்கொண்டு வர இயன்ற அளவுக்கு முயல வேணும்.’ என்று நினைத்துக் கொண்டவள், அதற்கு, தனக்குத் தேவையான இடத்திலிருந்து உதவியைப் பெறவும் முடிவெடுத்தாள்.
அவர்கள் இருவரும் உண்டு முடித்த பின், தம் அம்மம்மாவின் அருகில் சென்று அமர்ந்து கதைத்துக் கொண்டிருக்க, நிதியோ, “சரி நீங்க கதைச்சுக் கொண்டிருங்க…நான் போய்க் குளிச்சிட்டு வாறன்.’’ என்று கிளம்ப,
“பார்த்தம்மா தலையில குளிக்காத! பிறகு காய்ச்சல் திரும்ப வந்திரும்.’’ என்ற அம்மம்மாவும், பேரன்களும் நடந்தவற்றை மறக்க வேண்டும் என்ற வைராக்கியத்துடன் இயல்பாக இருக்க முயன்றபடி அளவளாவிகொண்டிருந்தார்கள்.

