என்றும் உன் நிழலாக 18 – 1

18

சிறிது நேரத்தின் பின், அழைப்பு மணியின் ஓசை கேட்கவே வாயிலை எட்டிப் பார்த்தான் ரஞ்சன். மறுகணம், உடல் விறைக்க எழுந்தவன், கணமும் தாமதியாது விறுவிறுவெனத் தன்னறை நோக்கிச் சென்று மறைந்தும் விட்டான்.

தமையனின் பாவனையில் வந்திருப்பவன் யாரென ஊகித்துக்கொண்டான் ரதீஷ். எழுந்து சென்று கதவைத் திறந்து, “வாங்கண்ணா…’’ வரவேற்றுவிட்டு, சமையலறை நோக்கிக் கீழே இறங்கினான்.

“ரஞ்சன் எங்க ரதீஷ்?’’ என்றவாறே உள்ளே வந்தான் வசி.

‘இப்ப ஏன் இவர் ரஞ்சனைக் கேட்கிறார்? திரும்பவும் தேவையில்லாமல் பிரச்சனை வரவா?’ என நினைத்துக் கொண்டவனால், அதை அவன் முகத்துக்கு நேராகச் சொல்லும் தைரியம் தான் வரவில்லை.

“அவர்…மேல அவரின்ட ரூமில இருக்கிறார் .’’ என்றவன் குரலில் ஒதுக்கத்தை உணர்ந்த வசி, அதைப் பொருட்படுத்தாது மேலே செல்ல முயல, “வசி…இல்ல ராசா இப்ப வேணாம்; அவனே இப்பத்தான் கொஞ்சம் தெளிஞ்சு வந்து சாப்பிட்டிட்டு என்னோட கதைச்சுக்கொண்டு இருந்தான்.” மூத்தபேரனை நிறுத்தினார் அம்மம்மா.

“இப்ப உன்னைக் கண்டதும் தான் வேகமாக ரூமுக்குள்ள போய்ட்டான் ராசா; இப்ப நீ போய் ஒன்றும் கதைக்காத; கொஞ்ச நாள் போகட்டும்.’’

பேரன்களிடையே தேவையில்லாத குழப்பங்கள் என்று எண்ணிக் கலங்கிக் கொண்டிருந்தவர், அதை வளர்க்க வேண்டாமே என்ற எண்ணத்தில் தடுத்தார்.

“நான் பார்த்துக் கொள்ளுறன் அம்மம்மா…ஒண்டும் கவலைப்படாதீங்க!’’

அவரின் கவலையறிந்து சொன்னவன் விறுவிறுவென்று படிகளில் ஏறிச் சென்றான்.

அங்கே, படிக்கும் மேசையில் சாய்ந்தவாறு அமர்ந்திருந்தான் ரஞ்சன்.

அறைக்குள் நுழைந்த வேகத்தில், அவனெதிரில் இருந்த கதிரையை இழுத்துப் போட்டு அமர்ந்த வசியின் முகம் பார்க்கவில்லை ரஞ்சன். நெஞ்சம் கபகபவென்று எரிந்தது அவனுக்கு.

‘என்ன துணிவு இவருக்கு?’ விருட்டென்று எழுந்து செல்ல முயன்றான்.

சட்டென்று அவன் கரத்தை அழுத்திப் பிடித்து மீண்டும் அமர வைத்த வசி, எரிக்கும் பார்வையால் சுட்டவனைத் தணிவாகப் பார்த்தான்.

“ரஞ்சன் ப்ளீஸ்டா…உனக்கு என்னில கோவமா இருக்கா? வேணும் என்றால்…’’ என்று ஆரம்பிக்க, வெடுக்கென்று இடைமறித்தான் ரஞ்சன்.

“இங்க பாருங்க…உங்களைக் கோவிக்க நான் யார்? முதல் நீங்க எவ்வளவு பெரிய ஆள்…உங்களைப் போய் நான்…எப்படி?’’ ஏற்ற இறக்கங்களுடன் சொன்னவன் குரலில் எள்ளலும் கோபமும் போட்டிபோட்டுக் கலந்து கிடந்தது.

அதை உணர்ந்த வசியின் முகம் கன்றிப் போகாமலில்லை.

சகோதரனைச் சமாதானப்படுத்தியே தீரவேண்டும் என்ற முடிவோடு வந்தவன் தன்னை வெகுவாக கட்டுப்படுத்திக் கொண்டான்.

“சரிடா… இப்ப என்ன, உனக்கு என்னில அடங்காத ஆத்திரம், அப்பிடித்தானே ? அப்பிடியே இருக்கட்டும் விடு! ஆனால், ஒன்றுமட்டும் உறுதியாச் சொல்லுவன், நான் உனக்கு எந்தவிதத்திலும் துரோகம் செய்யேல்ல, செய்ய நினைக்கவும் இல்லை. கொஞ்சம் பொறுமையா யோசிச்சா உனக்கே அது விளங்கும் டா!’’

புரிந்து கொள்வாயா என்கின்ற எதிர்பார்ப்போடு தவிப்பும் கலந்திருந்தது அவன் குரலில்.

என்றைக்கும் ஆளுமையோடு வெளிவரும் தமையன் குரல் நைந்திருந்ததை உணர்ந்தாலும், தமையனை ஏறிடவோ, அவன் சொல்வதை ஏற்கவோ மாட்டேன் என்றது, ஏமாற்றத்தில் துவண்டிருந்த ரஞ்சனின் உள்ளம்.

“இல்ல…உனக்கு நான் பிழை செய்திட்டன் என்று நீ நினைச்சா தயவு செய்து மன்னிச்சுக்கொள்ளடா!’’

மிக இறங்கிய குரலில் சொன்னவாறே அவன் கரத்தைப் பற்றினான் வசி.

வெடுக்கென்று கரத்தை உருவிக்கொண்டான் ரஞ்சன்.

தீ விழிகளை வசியின் விழிகளோடு மோதவிட்டவனின் உடல் கோபத்தில் நடுங்கியது.

“இங்க பாருங்க…உங்களை மன்னிக்கிறதுக்கு நான் யார்?’’ என்றவன் குரலில் அவனையும் மீறி விரக்தி விரவி நின்றது.

“என்ன சொன்னீங்க? நீங்க எனக்குப் பிழையே செய்யேல்லையா? அதுபற்றி நான் யோசிக்க முதல் நீங்க கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. நான் நிதியை…’’ ஆத்திரமாகச் சொல்லிக்கொண்டு வந்தவன், சட்டென்று நிறுத்தி விழிகளை அழுந்த மூடித் திறந்தான்.

“என்ர மனசில என்ன இருக்கு என்று உங்களுக்குச் சொன்னன் தானே? அது உங்களுக்கு மறந்திட்டுதா? அது நினைவில இருந்திருந்தால், உங்கட மனசில இந்த எண்ணம் வந்ததும்…அய்யோ இந்த முட்டாள் அப்பிடி நினைச்சுக்கொண்டு திரியிறானே…’டேய் முட்டாள், நீ நினைக்கிறது பிழை’ என்று என்னட்டச் சொல்லி இருந்தால்…நீங்க ஒரு அண்…’’ சொல்ல வந்ததை விழுங்கிக் கொண்டே இயலாமையும் வெறுப்புமாக வசியை நோக்கினான்.

“ஒன்று மட்டும் சொல்லுறன், நீங்க யாரும் என்ன நினைச்சாலும் எனக்குப் பரவாயில்லை. நிதி சொன்னது போல அவளைத் தங்கச்சியாக நினைக்கிறன் என்று ஒரு நாளும் சொல்ல மாட்டன். எனக்கு அவள் எப்பவுமே மச்சாள் தான் சரியா? ஆனால், அவளை நான்…நான்…’’ என்றவன், மிகவும் திண்டாடித் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான்.

“அவளை நிச்சயமாக இனி…இனி…நான் என்ர மனசில நினைக்க மாட்டன். அதுமட்டும் நிச்சயமாச் சொல்லுறன். எங்க இருந்தாலும் யாரோட வாழ்ந்தாலும் அவளின்ட சந்தோசம், விருப்பம் மட்டும் தான் எனக்கு முக்கியம். அவளுக்கு உங்களோட வாழுறதில தான் மகிழ்ச்சி என்றால், அது எனக்கும் மகிழ்ச்சி தான்.’’ வெறுமையான குரலில் பட படத்தான்.

சகோதரனையே இமைக்க மறந்து பார்த்திருந்தான் வசி.

நிதியில் அவனுக்குள்ள அக்கறையும் பாசமும் தெரியாதவன் அல்லவே!

என்றாலும், இக்கணம், அவன் அவளில் கொண்ட அன்பின் உயரம் உச்சத்தை தொட்டிருந்தது.

“ரஞ்சன்!” என்று ஆரம்பித்தவனை கரமுயர்த்தித் தடுத்தான் ரஞ்சன்.

“நான் இப்பிடிச் சொன்னதின்ர அர்த்தம்…நீங்க செய்ததை மறந்திட்டன் என்றதில்ல. அதை என்னால் நிச்சயமாக மறக்க…’’ சொல்லிக்கொண்டு வந்து இடைநிறுத்தியவன், வசியைக் கூர்மையான பார்வையால் துளைத்தெடுத்தான்.

“அது மட்டும் என்னால முடியுமா என்று தெரியேல்ல…’’ ஆணித்தரமாகச் சொன்னவன், உனக்கும் எனக்கும் பேச்சு முடிந்துவிட்டது என்ற வகையில் விசுக்கென்று வெளியில் நகர்ந்தான்.

அதுவரை அவர்கள் உரையாடலைக் கேட்டவாறே வாயிலருகில் மறைவாக நின்றிருந்த நிதி, கதவால் வெளிப்பட்டவனை பிடித்திழுத்துக் கொண்டு அறைக்குள் நுழைந்தாள்.

அவள் பிடியில் இருந்த அழுத்தத்தையும் கலங்கிக்கிடந்த அவள் வதனத்தையும் பார்த்த ரஞ்சன், “கையை விடு நிதி!’’ விடுவித்துக் கொண்டு அங்கிருந்து சென்றுவிட முயன்றான்.

அவளோ, அதைக் காதிலும் வாங்கிக்கொள்ளவில்லை. தன் பிடியைத் தளர்த்தவும் இல்லை.

முகம் கன்ற அமர்ந்திருந்த வசியின் அருகில் சென்று அவன் கரத்தையும் பற்றியவள், இருவர் கரங்களையும் ஒன்றோடு ஒன்று சேர்த்து இறுகப்பற்றிக் கொண்டாள்.

“இங்க பாருங்க, நீங்க…ரெண்டு பேரும் என்னை நடுவில் வச்சு …என்னால் சண்டை போட்டுக்கொள்ளப் போறீங்களா? சொல்லுங்க?’’ கலங்கிய குரலில் கேட்டவளுக்குக் கட்டுப்பாட்டை உடைத்துக்கொண்டு கேவல் எழுந்தது.

தம் கரங்களை விடுவிக்க முனைந்து கொண்டிருந்த இருவரும் அவள் கண்ணீரைக் கண்டதும் தான் தாமதம், “நிதி என்ன இது?’’ ஒன்றாகத் தொடங்கி, ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டு நிறுத்தினார்கள்.

அவர்களைக் கலங்கும் முகத்துடன் பார்த்தாள் நிதி.

‘என்னால இவையளுக்கிடையில தேவையில்லாத பிரிவு வந்திட்டுதே! அப்ப, சித்தி சொல்லுறதும் சரிதானே? நான் நன்றி கெட்டவளாத் தான் நடந்திருக்கறன். எனக்காக, என்ர சந்தோசம் தான் முக்கியம் என்று நினைக்கிற ரஞ்சனைத் துன்பப்படுத்தி, இவர்களுக்கிடையில் என்றைக்குமே பெரியவனாக நின்ற வசியை இன்றைக்குத் தம்பியிடமே மன்னிப்புக் கேட்க வச்சு, இது எல்லாம் என்னால் தானே?’ மனதில் வேதனைப்பட்டவள்,

“நான் இலங்கைக்கே திரும்பிப் போகலாம் என்று நினைக்கிறன். அதற்குப் பிறகு நீங்க அடிபடுங்க…முகத்தத் திருப்புங்க…எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை.’’ தீவிரமாய்ச் சொன்னாள்.

“உனக்கென்ன விசரா?’’ வெடுக்கென்று கேட்ட ரஞ்சன், “நான் பிரச்சனை செய்யேல்ல நிதி…ஆனால்?’’ என்றவன்,

“வேணாம் நிதி…இப்பிடியே விடும்…எனக்கு அண்ணாவில…’’ வெகுவாய்த் தடுமாறியவன், கலங்கும் விழிகளை வசி மீது நிலைக்கவிட, அவனின் குழப்பத்தையும் வருத்தத்தையும், தங்கள் பிரச்சனையால் கலங்கும் நிதியையும் பார்த்த வசி, தானுமே கலங்கியபடி, தமக்கிடையில் நின்ற நிதியை அப்பால் விலக்கிய வேகத்தில் சகோதரனை இழுத்து இறுக்கிக் கட்டிக்கொண்டான்.

“ஸாரிடா ரஞ்சன், நான் உன்ன வருத்த வேணுமென்றோ, உனக்கு அநியாயம் செய்ய வேணுமென்றோ எதையும் செய்யேல்லடா. இவளும் நானும்… எப்பிடிடா உனக்குச் சொல்லுறது? நான் உனக்குத் துரோகம் செய்வேனாடா? அப்பிடி நீ நினைக்கிறயாடா?’’ என்று அரட்டல் குரலில் கேட்க, தமயனை கட்டிக்கொண்ட ரஞ்சன் விழிகளில் இருந்து வழிந்த சூடான கண்ணீர் கண்டு பதறித் துடித்தாள் நிதி .

‘இல்ல ரஞ்சன், கொஞ்ச நாளில உங்களுக்கே எல்லாம் விளங்கும்; உங்களையே உங்களுக்காக நேசிக்கிற பொக்கிசமான அன்பு உங்களுக்குக் கிடைக்கும் போது, இந்த விசயம் நிச்சயம் உங்கட மனசிலிருந்து முழுதாக விலகிச் சுவடேயில்லாமல் மறைஞ்சிரும். நிச்சயமாக…’ என நினைத்துக் கொண்டவள் விழிகளில் இருந்தும் கண்ணீர் தான் வழிந்தது.

அப்போது, அங்கு வந்து சேர்ந்தான் ரதீஷ்.

“அய்யோ! போதும் போதும் உங்கட பாசமலர் போராட்டம்; இனிக் கொஞ்ச நேரம் பேசாம விடுங்க; எல்லாம் சரியாகிரும்.’’ சூழ்நிலையை இலகுவாக்கும் விதமாய் கேலியில் இறங்கினான்.

ஒருவரை ஒருவர் விலக்கிய அண்ணனும் தம்பியும், கண்ணீருடன் தங்களையே பார்த்திருக்கும் நிதியைப் பார்த்ததும்,

“போதும் நிதி…இப்ப என்னத்துக்கு அழுகிறீர்?’’ அவள் கண்ணீரைக் காணப் பிடிக்காது கடிந்து கொண்டான் வசி.

“நிதி எனக்கு ஒரு கோபமும் இல்லை; நீர் முதல் கண்ணைத் துடையும்.’’ எப்போதும் போலவே, அவள் துன்பம் பொறுக்கமுடியாமல் அவசரமாகச் சொன்னான் ரஞ்சன்.

அவளோ அழுகையுடன் சிரித்துக் கொண்டே கண்ணைத் துடைத்தவள் “சரி வாங்க கீழ போவம்.’’ நகர, அவளைத் தொடர்ந்த ரதீஷ் தன் அண்ணன்மார்களைப் பார்த்துக் கண்ணடித்தான்.

“அம்மம்மா பாவம்… நீங்க இரண்டு பேரும் போடும் சண்டையில யார் யாரிட மண்டையை உடைக்கப் போறீங்களோ…என்ன நடக்கப் போகுதோ என்று கீழயிருந்து யோசிச்சுக் கொண்டு இருக்கிறா!

இங்க இப்படிச் சப்பென்று ஆகீட்டுதே! நிதி கண்ணீரால் சமாதானம் செய்து விட்டாளே!’’ கேலிச் சிரிப்புடன் சொன்னான்.

“டேய் உன்னை…உனக்கு…’’ என்று, அவன் முதுகில் ஒன்று வைத்த ரஞ்சன், “அண்ணா நான் அப்பவே சொன்னன் தானே? இனி மதியைத் தேடிப் பிடிப்பம் என்று.’’ திரும்பவும் தன் வாயைத் திறந்த தம்பியை முறைத்தான்.

“வேணாம் ரதீஷ்…இனிப் போதும்…கீழ போ நாங்க வாறம்.’’ என்றவன், தங்களையே பார்த்துக்கொண்டு நிற்கும் வசியையும் அழைத்துக் கொண்டு கீழே இறங்கினான்.

இந்தளவுக்கு வேதனையில் துவண்ட ரஞ்சன், இலகுவில் சுதாகரித்தாலும், அவன் மனம் கவலையில் சுருண்டு கிடந்தது.

அதை வெளியில் காட்ட விரும்பவில்லை அவன். தன் வேதனை கண்டு தான் நேசித்தவள் துடிப்பதைப் பார்த்தவனால், அந்த வேதனையை வெளியில் காட்ட முடியவில்லை. அவன் மனதில் வசியின் மீதிருந்த கோபத் தீ, நிதியின் கண்ணீர் பட்டுத் தணிந்து போனதே உண்மை !

அத்தீ ஏற்படுத்திய காயமும், அது மிச்சமாக விடப் போகும் தளும்பும் ‘மாறுமா? மறைந்தே போகுமா?’ என்பது அவனுக்கே புரியாத புதிர்!

அதன் பதில் காலத்தின் கைகளில் தான்!

அவள் மீது கொண்ட பரிவால் ஏற்பட்ட அவன் காதல், நிச்சயம் முழுமையான அவன் அன்பின் வெளிப்பாடே! அதனால், வன்மத்தையோ ஆத்திரத்தையோ அவள் மீதோ, அவள் நேசிப்பவன் மீதோ காட்ட முடியவில்லை என்பதே உண்மை!

*****

error: Alert: Content selection is disabled!!