என்றும் உன் நிழலாக 18 – 2

ஆடி மாத ஆரம்பம்! பள்ளிகள் கல்லூரிகள் விடுமுறையை அறிவித்திருந்தன.

அனேகர் எப்படியெப்படி எல்லாம் விடுமுறையைக் கழிக்கலாம் என்று திட்டமிட்டு அதன் வழிசென்று கொண்டிருக்கும் போது, ரஞ்சன் வீட்டு வரவேற்பறையில், ரஞ்சன், ரதீஷ், நிதி மற்றும் வசி நால்வரும் தத்தம் முகங்களில் கலவையான உணர்வுகளுடன் அமர்ந்திருந்தனர்.

‘அப்படி இருக்குமோ? இதுவெல்லாம் சாத்தியமா?’ என்று விடைதேடி அலையும் எத்தனையோ கேள்விகளுடன் கலந்து கொஞ்சம் யோசனை.

‘அப்படி மட்டும் இருந்திட்டால்!’ என்ற ஆச்சரியத்துடன் கூடிய எதிபார்ப்பு! அந்த நினைவு தந்த மகிழ்வு இரேகைகள்!

‘இந்த விசயத்தை எப்படி அணுகுவது? அடுத்து என்ன செய்யலாம்?’ என்ற சிந்தனைகள்! என, நால்வருமே பேச்சுவார்த்தைகள் குறைந்து ஒருவர் ஒருவரை நோக்கிய வண்ணம் அமர்ந்திருந்தனர்.

நான்கைந்து கிழமைகளுக்கு முன்னர், வசி நிதி விடயம் தெரிந்து அதன் பின்னர் மாறி மாறி ஒருவரை ஒருவர் கோபப்பட்டதும் சமாதானம் ஆனதும் நடந்தாலும், ரஞ்சனின் மன ஆழத்தில் விழுந்த வசி மீதான கோபம் முழுமையாக இன்னமும் மறையாமல் இருக்கின்றது.

அன்றைக்குப் பிறகும் வழமைக்குத் திரும்பாது இறுக்கமாகவே திரிந்தான் ரஞ்சன். அவனை எப்படியும் பழையமாதிரி மாற்றிவிட வேண்டும், தன்னைப் புரிய வைத்திட வேண்டும் என்ற ஆவலுடன் அணுகினான் வசி.

“நிதியை நான் விரும்பிறன் என்று உணர்ந்ததும் எனக்குப் பேசியிருந்த கலியாணத்தை வேணாம் என்று சொல்லி நிப்பாட்டிய என்னால, உன்னட்ட வந்து சொல்ல முடியாதா ரஞ்சன்?’’ என்றவன், ‘இப்பப் புதுசா என்ன சொல்ல வாறீங்க?’ என்ற பாவனையில் கேள்வியாக ஏறிட்டவனைத் தீர்க்கமாகப் பார்த்தான்.

“நான் ஏன் அப்பிடி உடனே வந்து சொல்லேல்ல? அன்றைக்கு…அப்பிடி அந்த வேகத்தில எதையென்று உன்னட்டச் சொல்லுறது ரஞ்சன்?” அவன் குரலில் இயலாமை வந்து ஒட்டிக் கொண்டது.

“நான் அவள விரும்புறன் என்றா? அப்பிடிச் சொல்லேக்க அவள் உங்கள விரும்புறாளா என்று நீ திருப்பிக் கேட்டால் என்னட்ட அதுக்குப் பதில் இருக்கேல்ல டா! ஏன், அவளிட்டயே அந்த நேரம் என்ர விருப்பத்தைச் சொல்லி இருந்தால் நிச்சயம் மாட்டன், முடியாது என்றுதான் பதில் கிடைச்சிருக்கும்.’’ சொல்லி நிதானித்தான்.

“அவள் எது செய்தாலும் சித்தியை மனசில வச்சுத்தானே செய்து கொண்டிருக்கிறாள். அதனால தான் அவள் மெல்ல மெல்ல என்ர நேசத்தைப் புரிஞ்சு கொண்ட பிறகு இதை எல்லாரிட்டையும் சொல்லாம் என்று இருந்தன்டா!’’

நீளமாகத் தன்னிலை விளக்கம் கொடுத்தவன், அப்போதும் அமைதியாக அமர்ந்திருந்த ரஞ்சனின் கரங்களை இறுகப் பற்றிக் கொண்டான்.

“அன்றைக்குத் தான்டா நாங்களே ஒருவர் ஒருவரை விரும்பிறம் என்றதை வெளிப்படையாகச் சொல்லிக் கொண்டம்.’’

குற்றவுணர்விலிருந்து விடுபடாத தவிப்புக் குரலில் சொன்ன தமயனை நேராக ஏறிட்டான் ரஞ்சன்.

“சரி சரி விடுங்கண்ணா…முடிஞ்சதையே பிடிச்சுக்கொண்டு தொங்கிறதில யாருக்கும் எந்தப் பயனுமில்லை. வீண் மனத்துன்பம் மட்டும் தான் மிஞ்சும். அதனால இனி இந்தக் கதையையே எடுக்க வேணாம் ணா.’’ என்றான் அமைதியாகவே!

“அதைத் தான்டா நானும் சொல்லுறன்; நீ இதை முழுசா மறந்து எப்பவும் போல இருக்க வேணும் டா; அப்பத் தான் என்ர மனம் நிம்மதி அடையும்.’’ என்று வசி சொன்னதும், மெதுவாக தலையசைத்துச் சம்மதம் தெரிவித்தான் ரஞ்சன்.

அவனுக்குமே ஒரு விடயம் மிகத் தெளிவாகத் தெரிந்தே இருந்தது.

வசியை நிதி விரும்பாவிட்டாலும் கூட, ஒரு போதும் தன்னை மணக்கச் சம்மதித்திருக்கவே மாட்டாள் என்பதுதான் அது.

ஆனால், இது தெரிவதற்குள், அவன் இதை உணர்வதற்குள், அவன் மனம் ஆழமாகப் புண்பட்டு விட்டதே!

எவ்வளவோ கடினப்பட்டு வலிதரும் ஏமாற்றத்தை விழுங்கிக் கொண்டான் ரஞ்சன்.

தான் நேசித்தவளின் மகிழ்ச்சிக்காக வசியையும் அவன் செய்கையையும் ஏற்றுக் கொண்டவனால் பழைய ரஞ்சனாக, எனக்கு இதில் எதுவிதப் பாதிப்பும் இல்லவே இல்லை என்ற தோரணையில் நடமாட மிகவும் கடினமாக இருந்தது.

இப்படியிருக்கையில், இப்பிரச்சனை நடந்து இரண்டு நாட்களிலேயே வசி சொன்ன செய்தியைக் கேட்டவன், மிகுதி அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு அந்த விடயத்திலேயே முழுவதுமாய் ஆழ்ந்து போய் விட்டான்.

நிதியும் வசியும் ஒருவரையொருவர் விரும்புவதாகச் சுமியின் மூலம் அறிந்ததும், அதை நம்பவே மிகவும் தடுமாறினார் புவனி. தன் அக்காவினதும் அத்தார் மற்றும் வசியினதும் குணம் பற்றி நன்றாகத் தெரிந்திருந்ததால், நிதி தங்கள் வீட்டு மருமகள் என்று சுமி சொன்னதும், ‘இவளுக்கு மட்டும் ஒன்றுமே இல்லாட்டியும் எல்லாமே கிடைக்கிதே!’ என்ற எரிச்சலையும் மீறி, “அப்பாடா!! என்ர பிள்ளை தப்பிச்சான்.’’ என ஆசுவாசப்பட்டுக் கொண்டார்.

அதன்பின் நிதி விடயமாகக் கதைப்பதையே நிறுத்தி விட்டார். இப்பொழுதெல்லாம் அவளோடு பெரிதாக முகம் கொடுத்துக் கதைப்பதில்லை அவர்.

எதற்கு என்று வரையறுத்துச் சொல்ல முடியாமல் அவளில் அவர் வளர்த்துக்கொண்ட வெறுப்பு, அவள் எதைச் செய்தாலும், எப்படி நடந்தாலும் அதில் பிழையையே கண்டு பிடிக்கின்றது. அவளை அந்தக் கோணத்திலேயே பார்த்துப் பழகிய புவனியால், அதிலிருந்து இலகுவில் மீள முடியவில்லை.

அதற்கென்று தன் சகோதரி குடும்பத்தினரின் விரோதத்தைச் சந்தித்துக் கொள்ளவும் அவர் தயாரில்லை.

தான் பார்க்க வளர்ந்த பிள்ளை வசி, சும்மாவே நிதிக்கு ஒன்று என்றால் மல்லுக்கு நிற்பவன், இப்பொழுது, அவன் மனைவியாகப் போகின்றவளுக்கு ஏதுமென்றால் தன்னை உண்டு இல்லை என்றாக்கி விடுவான் என்பது மிக நன்றாகப் புரிந்திருந்ததால், நிதி மீதான தன் விருப்பின்மையை தன்னுள்ளேயே அடக்கிக் கொண்டார் அவர்.

இந்திரனோ, மகனுக்கு நிதியை மணமுடிக்க முடியாது போனாலும், தன் மருமகளுக்கு மிகவும் அன்பாகப் பார்த்துக்கொள்ளக் கூடிய குடும்பத்தில் வாழ்வு அமைந்ததில் மிகவும் மகிழ்ந்து போனார்.

இப்படி, யாருடைய முகம் திருப்பலையுமோ மகிழ்வையுமோ உணர்ந்து கவலைப்படும் அல்லது சந்தோசப்படும் நிலையில் இருக்கவில்லை நிதி!

வசியின் காதலைப் பெற்ற சந்தோசம், அதன் நினைவு கூட அவளுக்கு இப்போதெல்லாம் வருவதில்லை.

இதையே வசியும் பல தடவைகள் சொல்லிக் காட்டிக் கேலி செய்யும் அளவுக்கு, அவள் நினைவிலும் சிந்தனையிலும் சில மாதங்களின் முன் தான் முகநூலில் கண்டு, ஒருவித சந்தேகத்திலும் சின்னஞ்சிறு எதிர்பார்ப்பிலும் வசியுடன் மட்டுமே பகிர்ந்து கொண்ட விடயம், இன்று அவனாலேயே அதுவும் இந்தளவுக்கு, “இதில் இனி சந்தேகம் ஏன்?’’ என்ற வகையில் தெரிய வந்ததில், திக்கு முக்காடிப்போய்ச் செய்வதறியாது தவித்துக் கொண்டிருக்கிறாள்.

‘இதுவும் தான் எப்பிடிச் சாத்தியம்? சரி அப்பிடி நடந்திருந்தால், ஏன் இப்பிடி நடக்கவில்லை?’ என்று, ஒன்றை ஒன்று மாறி மாறிக் கேள்விகள் எழுப்பிய வண்ணம், மண்டைக் குடைச்சலில் தூக்கத்தைத் தொலைத்து, எந்நேரமும் முகநூலே கதியென்று இருக்கத் தொடங்கி விட்டாள் அவள்.

“அடுத்து என்ன செய்யிறது?’’ என்பதற்கு அவள் மலை போல ரஞ்சனையும் வசியையுமே நம்பி இருக்கிறாள்.

இப்போது இவர்கள் கவலையெல்லாம் தாங்கள் அறிந்ததை பெரியவர்கள் பார்வைக்குக் கொண்டு போவதா அதை அவர்கள் ஏற்பார்களா என்பதே!

இன்று புவனியும் இந்திரனும் வேலைக்குச் சென்றிருப்பதால், தங்கள் மகாநாட்டை இங்கு கூட்டியுள்ளனர், இளையவர்கள்.

அப்போது நிதியின் கைபேசி சிணுங்கவே எடுத்துப் பார்த்தவள், தன்னைக் கேள்வியாகப் பார்த்த மற்ற மூவருக்கும், “காயா..’’ என்றவாறே அவளுடன் கதைத்த பின் கைபேசியை வைத்துவிட்டு, “இன்னும் கொஞ்ச நேரத்தில இங்க வாறாளாம்.’’ என்றபடி எழுந்து, “எல்லாருக்கும் தேத்தண்ணி போட்டுக்கொண்டு வாறன்.’’ என்றபடிக் கீழே சென்றாள்.

“என்ன அண்ணா…இந்த காயாவுக்கு நிதி என்றால் சரியே வராது, கதைக்கவே யோசிப்பா. இப்ப என்ன ரெண்டு பேரும் கூட்டுச் சேர்ந்து கொண்டு திரியீனம்? ம்ம்…என்ன விசயம்!’’

ரஞ்சன் இப்படிக் கேட்டதும், உதட்டினுள் நகைத்துக் கொண்ட வசியின் பார்வை ஒரு கணம் தன்னெதிரில் இருந்த ரதீஷில் நிலைத்து மீண்டது.

அவன் வாயோ, “யாருக்குத் தெரியும் ரஞ்சன்! இப்பத் தான் ஒருத்தருக்கு ஒருத்தர் பிடிச்சு ஃப்ரெண்ட்ஸ் ஆகி இருக்கீனம் போல! இந்த விசயமும் காயாவுக்கும் தெரியுமாம் என்றால் பாருமன்; அந்தளவுக்கு நெருக்கமாயிட்டீனம் .’’ என்றவாறே, முகநூலில் இருந்த அக்கல்யாணப் புகைப்படத்தையே மீண்டும் உற்றுப் பார்க்கத் தொடங்கினான் .

முதலில், முகநூலில் தற்செயலாக பார்த்த தெளிவில்லாத ப்ரோஃபைல் புகைப்படத்தையே பார்த்து நம்ப முடியாமல் குழம்பிக் கொண்டிருக்கும் வேளையில் தான், ஒருநாள் இரவு இந்தத் திருமணப்படத்தை கண்டான் வசி.

அதைப்பற்றி நிதியிடம் கதைக்க நினைக்கையில் தொடர்ந்து இவர்கள் பிரச்சனை கிளம்பியதில் அதை மறந்திருந்தவன், பின், அதை நிதியிடம் தெரியப்படுத்தியதும் திருமணப் படத்தைப் பார்த்தவளோ, இதுவரை இந்த விடயத்தில் சந்தேகத்தில் ஊஞ்சல் ஆடிக் கொண்டிருந்தவள், அது அறவே மறைந்து போக, தான் நினைக்கும் நபர்தான் அதுவென்று உறுதியாக நினைக்கத் தொடங்கி விட்டாள்.

ஆனாலும், ஓரளவுக்கென்றாலும் ஆராயாமல் பெரியவர்களிடம் ஏன் சொல்லுவான் என்று நினைத்தவர்கள், எத்தனையோ வழிகளில் உண்மையை அறிய முயன்றும் அவர்களால் எந்தவிதமான உபயோகமான தகவல்களையும் பெற முடியவில்லை.

அவர்களுக்குக் கிடைத்த தகவல்கள் அனைத்தும் இவர்கள் நினைப்புக்கு எதிரானதாகவே இருந்தது .

தேநீரைத் தயாரித்து எடுத்துக்கொண்ட நிதி, காயாவும் வரவே, அன்பாய் உள்ளே அழைத்தாள்.

“இல்ல நிதி, எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு; போக வேணும்.

ஃப்ருட் கேக் செய்தனான் …அதுதான் உங்களுக்கும் தரலாம் என்று வந்தன்.’’ என்றவாறே, கேக் அடங்கிய பாக்ஸ்சைக் கொடுக்க, “எங்கள் எல்லாருக்குமா? நம்பிட்டன் காயா.’’ கேலி செய்தாள் நிதி.

‘போங்க நிதி, உங்களுக்கு வேற வேலையே இல்லை.’’ என்றுவிட்டு சைக்கிளைத் திருப்பி ‘’பை’’ என்று சொல்லிச் செல்பவளை சில கணங்கள் பார்த்து நின்றுவிட்டு, கேக்கையும் தேநீரையும் எடுத்துக்கொண்டு வரவேற்பறையை நோக்கிச் சென்றாள் நிதி .

பின், அனைவரும் கதைத்து என்ன செய்யலாம் என்று கலந்தாலோசித்து, இன்று வீட்டில் சொல்வதென்ற முடிவோடு தத்தம் வேலைகளைப் பார்க்கச் சென்றார்கள்.

 

 

error: Alert: Content selection is disabled!!