என்றும் உன் நிழலாக – 19

19

நெதர்லாந்தின் ‘அம்ஸ்டர்டாம்’ விமானநிலையத்திலிருந்து சென்னை செல்லும் விமானத்தில் ஏறியமர்ந்த நிதியால், இத்தனைக்குப் பிறகும் தான் இந்தியா செல்வதை நம்ப முடியாமலிருந்து.

கொஞ்சமே கொஞ்சமாகத் தவிப்பு, ஏராளமாக ஏக்கம், என்னவென்று சொல்ல முடியாதளவில் பதற்றம், இவையெல்லாவற்றையும் தூக்கிச்சாப்பிடும் அளவில் மகிழ்ச்சி என, கலவையான உணர்வுகளால் நிறைந்திருந்தாலும், அவற்றை மிக இலாவகமாக அடக்கிக்கொண்டே, தன்னருகில் அமர்ந்திருக்கும் காயாவை நோக்கினாள்.

“பிறகென்ன மேடம்? ஒரு மாதிரி எங்களோடு சேர்ந்து வாறீங்க!’’ கேலியாகச் சொல்ல, நாணச்சிவப்பேறிய வதனத்தில் மென்முறுவல் படரத் தடுமாறினாள் காயா.

“ இனிச்சரி உம்மட ஆளோட தொடர்ந்து நாலு வார்த்தைகள் கதைக்கிறீரா பார்ப்பம்!’’ கலகலப்பாய்ச் சொல்லி கிண் கிணியாய்ச் சிரித்தவளை, “சும்மா போங்க நிதி…உங்களை…’’ என்றவாறே , செல்லமாக முறைத்தாள் அவள் .

இப்படி இவர்கள் குசுகுசுவென்று கதைப்பது என்னவென்று அவர்களுக்கு நேர் பின்னால் அமர்ந்திருந்த ரஞ்சன், வசியின் செவிகளை எட்டவில்லையென்றாலும், நிதியின் கணீர்ச்சிரிப்பு அவர்கள் செவிகளில் நுழைந்து, இருவரினதும் உள்ளத்தில் பெரும் வியப்பையும் மட்டற்ற மகிழ்வையும் ஏற்படுத்தியது.

இதுவரையில் சிறுமுறுவலுடன் நகர்ந்து விடுபவளிடமிருந்து, மகிழ்வான நகைப்புபொலியைக் கேட்டிராதவர்கள், இப்போதெல்லாம் சிறுசிறு விசயத்துக்கும் தன்னை மறந்து நகைப்பதைக் கண்டு உள்ளம் நிறைகின்றனர்.

தன்னையறியாமலேயே இயல்பாக, மகிழ்வாக அவள் இருப்பதைப் பார்க்கும் போதெல்லாம், ரஞ்சனோ மிகவும் நிறைவாக உணர்ந்தான்.

தன்னால் மிகமிக நேசிக்கப்பட்டவள், என்றைக்குமே தனக்கு மிகவும் இன்றியமையாதவள், இவ்வாறு சந்தோசமாக இருந்ததை இதுவரை கண்டுணராதவன், இன்று அவளின் இந்நிறைவுக்கு முக்கிய காரணம் அவளின் காதலும் அது தந்த அரவணைப்புமே என்பதை நம்பினான்.

‘அவளுக்கு வசி அண்ணா மிகவும் பொருத்தமானவர் தான். ஒருவேளை, என்னையே கலியாணம் செய்யும் நிலை உருவாகியிருந்தாலும் கூட, அவள்ட முகத்தில இந்தளவு மலர்வு வந்திருக்குமா என்று தெரியாது; அதற்கு நிச்சயம் அம்மா விட்டே இருக்கமாட்டார்.

என்னாலும் அம்மாவை இரண்டாம் பட்சமாக வைத்து அவளுக்காக என்று எல்லாவற்றையும் செய்திருக்க முடியாது. அப்படிப் பார்த்தால் நடந்தது, நடக்கின்றது, நடக்கப்போறது எல்லாமே நன்மைக்கே!’ என நினைத்துக்கொண்டே திரும்பி, தன்னருகில் இருந்த வசியை நோக்கினான் ரஞ்சன்.

தன்னிருக்கையில் இலேசாகச் சரிந்தமர்ந்திருந்தான் அவன்.

அவன் விழிகளோ, முன்னாலுள்ள இருக்கைகளின் இடைவெளியால் தெரியும் தன்னுள் நிறைந்தவளில் நிலைத்திருந்தன.

உதடுகளில் சிறுநகையுடன் இருந்தவனின் மனமோ, ‘இவளட இந்தச் சந்தோசம், தான் தேடிப்போற விசயம் உண்மை என்ற நம்பிக்கையில் வந்தது தான்! ஒருவேளை, அது இல்லை என்று ஆகீட்டால்?’ என, எழும் பய உணர்வில் தடுமாறினாலும், அதையும் மீறி, தன்னவளை இரசிக்க முனைந்தது.

வசி, நிதி காதல் வீட்டில் தெரிந்து, குழப்பங்கள் நடந்து, இப்போது ஓரளவுக்கு எல்லாரும் சமாதானம் அடைந்து விட்டார்கள்.

அதிலும், முக்கியமாக இதில் பாதிப்படைந்த ரஞ்சனும், கொதிப்படைந்த புவனியும் இவ்விடயத்தின் தாக்கத்திலும் பிரச்சனையிலும் இருந்து வெளியில் வரவும், கொஞ்சமே கொஞ்சமாக அதைத் தள்ளி வைக்கவும் உதவியாக அமைந்தது, முகநூலில் கண்டுகொண்ட விடயமே!

அன்று இவர்கள் தீர்மானித்தபடி பெரியவர்களிடம் அதைச் சொல்ல, இந்திரன் மற்றும் ஜீவானந்தம் தம்பதியினர் மலைத்துத் தான் போயினர்.

“அட… இப்பிடியும் கூட நடக்குமா? அது எப்படிச் சாத்தியம்? அப்படித் தெரியாமல் போகுமா?’’ என்றபடி, சிறிதும் நம்பிக்கையின்றியே வசி காட்டிய புகைப்படங்களை பார்த்தவர்கள், தம் கண்களையே நம்ப முடியாது வியப்பின் உச்சத்துக்கே சென்று விட்டனர்.

“இதுதான் விதியின்ட விளையாட்டா? இல்லை என்றால் அருவமாக உலாவுற, நாம ஒவ்வொருவரும் ஒவ்வொரு உருவில நம்பி வணங்கிற இறைவன்ட திருவிளையாடலா? என்ன எண்டு சொல்லுறது!’’ என்று வியந்தவர்கள், இந்த விடயம் எந்தளவுக்கு உண்மை? எப்படிச் சாத்தியம்? என, எத்தனையோ வழிகளில் தீர ஆராய முயன்றாலும், முழுப்பயன் தான் கிட்டவில்லை.

“இங்க இருந்து கொண்டு, அதுவும் நமக்குக் கிடைக்கிற சொற்ப நேரத்தில யாரையும் நம்பி இப்படியான விசயங்களைச் செய்யிறது சரியான கஷ்டம்.’’ யோசனையுடன் சொன்னார் ஜீவானந்தம்.

“நாமே இந்தியாவுக்குப் போய் வந்தால் என்ன?’’ தொடர்ந்து அவர் கேட்க, நிதியும் அதை வெகுவாக விரும்ப, இறுதியில், “அது தான் சரி’’ என முடிவெடுத்து, இதோ இந்தியா செல்லப்புறப்பட்டு வந்துள்ளனர்.

இக்காலப்பகுதி, பாடசாலைகளிற்கு கோடை விடுமுறை என்பதால் எல்லோருக்கும் இது வசதியாகப் போயிற்று .

தன் வேலையில் இருந்து விடுமுறை எடுத்த இந்திரனும், வசி தேவையில்லை என்று மறுத்தும் கேட்காது இவர்களுடன் புறப்பட்டு விட்டார்.

இவ்வேற்பாட்டில் புவனிக்குப் பெரிதாக விருப்பம் இல்லையென்றாலும், எதையாவது மாறாகக் கதைத்து, கொஞ்சம் சரி சுமூகமாக நடமாடும் ரஞ்சனையோ, நிதி சம்பந்தமாக எதிர்மறையாகக் கதைத்தால் என்றுமில்லாதவாறு முறைக்கும் கணவனையோ பகைத்துக்கொள்ள விரும்பாதவர்,

“ஏதோ உங்கட விருப்பப்படி எல்லாத்தையும் செய்யுங்க; இப்ப நான் ஏதாவது சொன்னால் கேட்கவா போறீங்க?’’ என்றவருக்குமே நடப்பவை அதிர்ச்சியைத்தான் தந்திருந்தது.

“அப்பிடியும் இருக்குமோ? அப்பிடியிருந்தால் அது யாருக்குத்தான் சந்தோசத்தைத் தராது?’’ என்றே அவரும் நினைத்துக் கொண்டார்.

இந்திரனும் வசியும் நிதியுடன் புறப்படுவதைப் பற்றிக் கதைக்கும் போது, “நானும் வாறன் .’’ என, முடிவாகச் சொல்லி விட்டான் ரஞ்சன். அவனை மறுக்கும் துணிவு வசிக்கு வரவே இல்லை. சிறிது யோசித்த இந்திரனும், “சரி நாலு பேருமே போவம்.’’ என்றவர், அதற்கான ஆயத்தங்களைச் செய்யத் தொடங்கினார்.

தன் புதுத்தோழி காயா பெரிதாக எங்கும் போவதில்லை என்பதாலும், அவளுமே விடுமுறையில் வீட்டில் நிற்பதால் இந்தியா போகும் போது அவளும் வந்தால், ‘எனக்கும் துணையாக இருக்கும்.’ என்று நினைத்துக் கொண்ட நிதி, “மாமா, நம்மளோட காயாவையும் கூட்டிக்கொண்டு போவமா? அவள் இந்தியாவுக்குப் போனதேயில்லையாம், ஆசைப்படுறாள்… எனக்கும் துணையாக இருக்கும்.’’ எனத் தன் விருப்பைத் தெரிவித்தாள்.

அவரோ, “நாமென்ன ஊர் சுற்றிப் பார்க்கவா போறம்?’’ என்று மறுத்து விட்டார்.

நிதி, துணைக்காக மட்டும் அவளை அழைத்துச் செல்வோமா என்று கேட்கவில்லை என்பதை அறிந்திருந்த வசியும், அத்தோடு, நிதி தனியே வருவதைவிட காயாவும் வந்தால், துணையாக இருக்குமென்று நினைத்தவன், இந்திரனிடம் எடுத்துச்சொல்லி, எவ்வளவோ முயன்று காயா வீட்டிலும் அனுமதி வாங்கிய பின், இதோ ஐவருமாக விமானத்தில் அமர்ந்திருக்கின்றனர்.

விமானத்தில் அமர்ந்திருந்தவர்கள் மனங்களில், தத் தம் சொந்த நினைவுகள் ஓடிக் கொண்டிருந்தாலும் அதையெல்லாம் புறம் தள்ளி, ’நாம் போகும் விசயம் நல்லபடியாக நடக்க வேணும், இறைவா அதற்குத் துணையிரு!’ என்ற எண்ணமும் பிரார்த்தனையுமே முழுமையாய் வியாபித்திருந்தது.

காயாவின் தந்தை ராஜனுடன் வேலைசெய்பவரின் சகோதரன் சென்னை ஆழ்வார்பேட்டையில் பலவருடங்களாக வசித்து வருகிறார். இந்தியாவுக்கு முதன் முதலாகச் செல்வதால் அவரின் துணை மிக உதவியாக இருக்கும் என நினைத்த ராஜன், அவரின் விலாசத்தைக் கொடுத்து அவர் வீட்டின் மாடியிலேயே தங்குவதற்கு ஒழுங்கும் செய்திருந்தார்.

சென்னை சென்றடைந்தவர்களை விமானநிலையத்தில் வரவேற்ற ரங்கன் அன்புடன் தம் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

ஆழ்வார்பேட்டையில் தாம் தங்க இருக்கும் வீட்டை வந்தடைந்தபின், விமானத்தில் வந்த களைப்புப் போக குளித்த நிதிக்கு, தான் முதல் முதல் வந்திருக்கும் இந்நாட்டின் எந்த விடயமும் கண்ணிலோ கருத்திலோ பதிய மறுத்தது.

எவ்வளவு விரைவாக முடியுமோ அந்தளவு விரைவில், தான் தேடி வந்த இடத்திற்குச் செல்லவே மனம் பரபரத்தது.

பசி தூக்கம் எதையும் உணர முடியாது தவிப்பே மிஞ்சியிருந்தது!

குளித்து முடித்துத் தயாராகி வந்தவளிடம், “இப்பவே போகப் போறமா?’’ சந்தேகமாகக் கேட்டாள் காயா.

“என்ன போகப் போறோமாவா? கெதியாப் போய் வெளிக்கிட்டிட்டு வாரும் காயா. மாமா வெளிக்கிட்டிட்டாரா என்று பார்த்திட்டு வாறன் .’’ என்றவாறே அவசரமாக வெளியே வந்தவள், எதிரில் வந்த வசியில் மோதி நின்றாள்.

அவசரமும் பரபரப்புமாக வந்து மோதி நின்றவளை, முறுவலோடு பற்றி நிறுத்தியவன், “என்னடாம்மா…இப்பவே ஓடத் தாயார் போல! நான் யார் என்று சரி தெரியுமா? இல்லாவிட்டால் யாரடா நீ என்று கேட்பீரா?’’ கேலிக்குரலில் சீண்டினான்.

அவன் சீண்டலில் மலர்ந்த புன்னகையுடன், “போங்க வசி, உங்களுக்கு எப்பவும் என்னோட சேட்டை!’’ அவனை அப்பால் தள்ளியவள், அவனும் தயாராகி இருப்பதைப் பார்த்ததும், “இப்பவே போவமா வசி?’’ என்றாள் ஆர்வம் பொங்க!

“கொஞ்சம் பொறும் நிதி, முதல், இப்பிடி நினைச்சதும் போய் நிற்க முடியுமா என்று தெரியாதம்மா. அப்பொயின்ட்மென்ட் ஏதும் வைக்க வேணுமோ தெரியாது. எதுக்கும் மாமாவும் வரட்டும்.’’ என்றவன், சட்டென்று முகம் சுருங்கி நின்றவளை அன்பாக அணைத்துக் கொண்டான்.

“உடனே முகத்தை தொங்கப் போட்டாச்சா? இங்க பாரும், இவ்வளவு தூரம் வந்தாயிற்று. இன்னும் கொஞ்ச நேரம் பொறுமையாக இரும். எல்லாம் நல்லதாகவே நடக்கும்.’’ கனிவுடன் தேற்றியவன், மற்றவர்களும் தயாராகி வர, ரங்கனின் மனைவி தேநீர் தயார் என்றதும் அருந்துவதற்காகக் கீழே சென்றனர்.

எல்லோருமாக அமர்ந்து தேநீரை அருந்திக் கொண்டிருக்க, வசியும் இந்திரனுமாகத் தாம் சந்திக்க வந்தவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்று கொண்டிருந்தவர்கள், கடைசியில், கதைத்துவிட்டு, தணிந்த குரலில் தம்முள் கதைத்துக்கொண்டே வந்தமர்ந்தவர்களின் முகங்களில் ஏமாற்றத்தின் சாயல் வெகுவாக அடித்தது!

“அவையள் ஏதோ விசேசத்துக்குக் குடும்பமாக ஊருக்குப் போய் இருக்கீனமாம். வர நாலு நாட்கள் ஆகுமாம். இதை விட வேற எதுவும் அந்த ரிஷப்ஷனிஸ்ட் சொல்லுறா இல்லை. இப்ப நமக்கு வேற வழியில்லை, வரும் வரைக்கும் பொறுமையாக இருப்பம்.’’ என்ற வசி, கலக்கத்தோடு பார்த்த நிதியின் கரங்களை ஆதரவுடன் பற்றிக்கொண்டான்.

“இவ்வளவு நாட்கள் இருக்கேல்லையா நிதி? இன்னும் நாலேநாலு நாட்கள்…பொறுத்துப் பார்ப்பமே!’’ என்றவுடன், அவன் மடியில் முகம் பதித்தவள் அழத் தொடங்கிவிட்டாள்.

“இங்க பாரும் நிதி…இதென்ன சின்னப்பிள்ள போல…பாரும், எல்லாரும் உம்மையே பார்க்கீனம்.’’ தணிந்த குரலில் கடிந்து கொண்டவன்,

“சரி வாங்க… இப்படியே கொஞ்சத் தூரம் போயிட்டு வருவம். நடந்தே போவமே…இடமும் பார்த்ததாக இருக்கும்.’’ என்றவாறே, “ரங்கன் அண்ணன், எதுக்கும் உங்கட ஃபோன் நம்பர் தாங்க. கை காவலாகக் கொண்டே போறம்.’’ என்று, ரங்கனின் கைபேசி இலக்கத்தையும் வாங்கிக் கொண்டவன், நிதி மறுக்க மறுக்க கட்டாயப்படுத்தி அழைத்துக்கொண்டு எல்லோருமாக வெளியே சென்றனர்.

 

 

error: Alert: Content selection is disabled!!