என்றும் உன் நிழலாக – 20

20

அழகு கொஞ்சும் ‘பெசன்ட்நகர்’ கடற்கரைச்சாலை!

அந்த இடத்தையே இரம்மியமாக்கும் அழகுடன் நிமிர்ந்து நிற்கும் அஷ்டலக்ஷ்மி ஆலயம்!

தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு, அருளையும் அமைதியையும் வழங்கும் தேவியின் அழகும் அமைதியும் நிறைந்த முகத்தில் விழிகள் நிலைக்க, கரம் கூப்பி, தேவியின் பாதத்தில் தன் கோரிக்கையை மனதார வைத்து வணங்கிக் கொண்டிருந்தாள் நிதி.

அவளையுமறியாது விழிகள் கசிய, “அம்மா’’ என அரட்டியவளின் உள்ளமோ, ‘நான் தேடி வந்தவரை என்ர கண்ணில காட்டிரு தாயே! என்ர நம்பிக்கையைப் பொய்யாக்கி விடாதேம்மா.’ மன்றாடிக் கொண்டிருந்தது.

அவளருகில் நின்று கரம் குவித்திருந்த காயாவும், உளமாரத் தன் வேண்டுதலை தேவியிடம் சமர்ப்பித்துக் கொண்டிருந்தாள்.

நாடு விட்டு நாடு வந்த இடத்தில், இக்கோவிலுக்குள் முதல் முதலாக புகும்போதே தான் வேண்டிக் கொள்வது நிச்சயம் கிடைக்குமென்று அவள் மனதில் ஏதோ ஒரு நம்பிக்கை!

அந்நம்பிக்கையுடன், மனதில் சுமந்து திரியும் விருப்பை, எப்படி எப்போது எனத் தெரியாது தன்னுள் புகுந்து கொண்ட ஆசையை லக்ஷ்மியின் பாதத்தில் வைத்து, ‘இதை நிறைவேற்றித்தா தாயே!’ என வேண்டிக் கொண்டவள், தான் யாரை மனதில் சுமந்து, அதை அவனிடம் தெரிவிக்கும் வழி தெரியாது தயங்கித் தவிக்கிறாளோ, அவன், சிறிது தள்ளி நின்று கண்மூடி வணங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்ததும், ‘இவர் நிச்சயம் நிதியின்ட மன நிம்மதிக்காகத் தான் வேண்டுவார்.’ என நினைத்துக்கொண்டவளுள் இலேசான மனச்சுணக்கம் ஏற்படாமலும் இல்லை.

காயாவுக்கு ரஞ்சனில் விருப்பமுள்ளதை ரதீஷின் பிறந்தநாளன்று அறிந்து கொண்ட நிதி, அடுத்தநாள் அவளிடம் சென்று, “எங்கட ரஞ்சனை சைட் அடிக்கிறீரா?’’ என்று நேரடியாகவே கேட்டு விட்டாள்.

நிதியின் இந்நேரடிக் கேள்வியைச் சிறிதும் எதிர்பார்க்காத காயாவோ முதலில் அதிர்ந்து தடுமாறினாலும், அன்று, அவள் நிதி மீது பெரிதாக நல்லெண்ணத்தில் இருக்காததால், “ஏன்…நான் அவரைச் சைட் அடிக்க உங்கட அனுமதி தேவையோ?’’ கொஞ்சம் கடுமையும் நக்கலுமாகவே தான் கேட்டாள்.

அதற்கு மென்னகை பூத்தாள் நிதி!

“இல்ல…இல்ல, என்ர அனுமதி எல்லாம் தேவையே இல்லை. ஆனால்…ரஞ்சன்ட அனுமதி கூடத் தேவையில்லையா? ம்ம்…’’ புன்னைகையுடன் கேட்டவள், முறைத்துக்கொண்டு நின்ற காயாவை அன்பாய் அணைத்துக் கொண்டாள்.

“இங்க பாரும் காயா…உமக்கும் எனக்கும் என்ன பிரச்சனை? ஏன் என்னை மட்டும் ஒதுக்குறீர்? நீர் ரஞ்சனை விரும்பினால், அதுவும் உங்கட கலியாணம் நடந்தால் எனக்கும் சந்தோசம் தான். அதனால தான் நேரடியாகக் கேட்க வந்தன். ஆனால், நீர் சண்டைகோழி போல நிற்கிறீர்.’’ என்றாள், சமாதானமாகவும் கனிவாகவும்!

நிதியின் இந்த வெளிப்படையான அணுகுமுறையில் தடுமாறிவிட்டாள் காயா.

இதுவரை அவள் மீது பொறாமையை வளர்த்து ஒதுக்கியதை நினைத்து வெட்கியவள், அவளிடம் மன்னிப்புக் கேட்டு மனம் திறந்து கதைத்தாள்.

இதுவரை தன் மனதில் உள்ளதை எவருக்கும் திறந்து காட்டாது தனிமையில் புளுங்கியவளுக்கு, நிதியின் அன்பு பெரிய வரமாக அமைந்தது. இதையுணர்ந்தவள் அதனைக் கெட்டியாகப் பற்றிக் கொண்டாள். அன்றிலிருந்து அவர்களிற்கிடையில் ஒழிவு மறைவு இருக்கவில்லை.

அன்றே, “காயா உமக்கு என்ன உதவி வேணும் என்றாலும் செய்யிறன்; முதல் படிப்பை ஒழுங்கா முடியும். பிறகு சோதனையில (பரீட்சையில்) கோட்டை விட்டுட்டா, உங்கட அம்மாவும் அப்பாவும் உம்மை என்ன சொல்லுவீனம்? கொஞ்சம் அதை நினைவில் வச்சு ஒழுங்காப் படிக்கப் பாரும்.’’ என்று பெரிய மனிசியாய் அறிவுரை கூறியவள், பின்னர், தானே அந்த அறிவுரையை மீறி இந்த விடயமாகக் கதைக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டாள்.

ரஞ்சனுக்கு நிதிமீது விருப்பமுள்ளது என்பதை அவன் செய்கைகளிலிருந்து அறிந்து மனம் சுணங்கியிருந்த காயாவிடம், வீட்டில் நடந்த பிரச்சனையைச் சுருக்கமாகச் சொல்லிவிட்டாள் நிதி.

“நான் ஒரு நாளுமே ரஞ்சனை அப்படி நினைச்சுப் பழகேல்ல.” என்று சொல்லிக் கண்கள் கலங்க, தான் நினைத்துப் பயந்தது போல நடந்துள்ளதைக் கேட்டு மனதில் வேதனை எழுந்தாலும் அதனை மெல்ல மறைத்து, “விடுங்க நிதி…எல்லாம் சரியாகிரும்!’’ என, அவளைத் தேற்றினாள் காயா.

அதன் பின்னர், வெளியில் காட்டாவிடினும், ரஞ்சனின் மனம் இன்னும் சரியாகவில்லை என்றறிந்த காயா, அவனுடன் நட்பாகச் சரி பேசிப் பழக நினைத்தாள்.

அதற்காக எவ்வளவோ முயன்றும், இதுவரை அவன் நிழலைக் கூட அவளால் நெருங்க முடியவில்லை.

பல சமயங்களிலும் மரம் மாதிரி எவ்வித உணர்ச்சிகளும் இன்றி நடந்து கொள்பவனிடம் எவ்வாறு கதைக்கத் தொடங்குவது?

அவன் இன்னமும் நிதியின் நினைவிலிருந்து வெளிவரவில்லை என்பதை உணர்ந்தவள், மனத்தை வெகுவாகத் தேற்றிக்கொண்டே, ‘இவரை எப்படி நெருங்குவது?’ என்று சமயம் பார்த்துக் காத்திருக்கிறாள்.

வணங்கி முடித்தவர்கள் கோவில் ஓரத்தில் வந்தமர, வசியும் ரஞ்சனும் அருகில் வந்தமர்ந்தார்கள்.

நேற்று, தாம் தங்கியிருந்த இடத்தைச் சுற்றி நடந்து திரிந்து களைத்துப் போய் வந்தவர்கள், நிதியைச் சும்மா இருக்க விட்டால் அதையும் இதையும் நினைத்துப் புலம்புவாள் என நினைத்து, இன்று காலையிலேயே அஷ்டலஷ்மி மற்றும் அருகிலேயே உள்ள வேளாங்கன்னிமாதா கோவில்கள் இரண்டையும் தரிசித்து வரக் கிளம்பிவிட்டனர்.

குறிப்பாக, இவர்கள் இப்பக்கமாக வரக்காரணமே, தாம் தேடி வந்தவர்கள் இந்தப் பக்கமாக வசிப்பதை அறிந்ததேயாகும்.

இங்கு வரும் போது அவர்கள் வீட்டுப் பக்கத்தால் காரை விடச் சொல்லிப் பார்த்துக் கொண்டே வந்தவர்கள், இப்போதைக்கு எதுவுமே நிச்சயமாகத் தெரியாத போதும், நெதர்லாந்தில் இருந்து கொண்டு வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டதை விட, நேரில் அவர்களின் செல்வநிலையைப் பார்த்தால், ‘இதெல்லாம் உண்மையாக இருக்கச் சாத்தியம் உண்டோ?’ என்கின்ற ஐயம் எழுந்தாலும், ‘சரி வந்திட்டம்…ஐயமின்றி விசாரித்து அறிந்து விட்டே செல்லலாம்.’ என்கின்ற எண்ணத்தில் அவர்கள் வரவிற்காகக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

மாலையில் வெளியே போகலாம் எனக் கூறி ஓய்வாய் இருந்து விட்டார் இந்திரன்.

காயாவின் விடயமாக அவரோடு கதைத்திருந்தான் வசி. காயா வீட்டினரை மிகவும் நன்றாகத் தெரிந்திருந்தபடியால் சந்தோசம் அடைந்தவர், புவனி பார்த்திருக்கும் சரளாவின் மகளை ரஞ்சனுக்கு அவ்வளவாக பிடிப்பதில்லை என்பதையும் அறிந்திருந்ததால்,

“ரஞ்சனை விரும்பிற பிள்ளையையே அவனுக்குக் கலியாணம் செய்து வைக்கிறதுதான் அவன்ட வாழ்க்கைக்கு நல்லது.’’ என்று சொன்னவர், நெதர்லாந்துக்குத் திரும்பிப் போனதும் இது சம்பந்தமாக புவனியுடன் கதைக்க வேண்டும் என்கின்ற முடிவுடன் இருக்கிறார்.

இந்தியா வந்ததும் தான் நினைத்தது நடக்காததால், அது நிறைவேறாமல் இழுத்தடிப்பதில் கலங்கித் தவித்து கொண்டிருந்த நிதி, அன்னை வேளாங்கண்ணி ஆலயத்திலும், இப்போது இங்குமாக அமைதியாய் வணங்கியதில் உள்ளத்தில் ஒருவித அமைதி சூழ்வதை உணர்ந்து கொண்டாள்.

அதே மனநிலையுடன் தன்னருகில் அமர்ந்திருக்கும் காயாவை நோக்கினாள்.

மறைக்க முடியாத ஏக்கம் பளிச்சென்று தெரிந்தது காயாவின் விழிகளில்.

‘அட…பார் நான் என்னைப் பற்றியே யோசிச்சதில இவளை மறந்தே போனன்.’ எண்ணிய நிதி, “எனக்கு லேசாத் தலையிடிக்குது ரஞ்சன்…நான் இங்க இருக்கிறன், இவர் என்னோடு இருக்கட்டும், நீங்க இரண்டு பேருமா கடலில் கால நனைச்சிட்டு வாங்ககோவன். இவ்வளவு தூரம் வந்திட்டுக் கடலில இறங்காமல் போறதா?’’ வெகு இயல்பாகச் சொன்னாள்.

சட்டென்று திரும்பிப் பார்த்த காயாவின் விழிகள் மெல்லிய நீர்ப்படலத்தில் பள பளத்தன. ஆனாலும், “இல்லை வேணாம் நிதி…உங்களுக்குத் தலையிடிக்கிதா? அப்ப வாங்க வீட்டுக்குப் போவம்.’’ அவசரமாக எழுந்தாள்.

“அதுதானே, வாரும் வீட்டுக்குப் போவம்.’’ ரஞ்சனும் எழுந்தான்.

‘கடவுளே!’ மானசீகமாகத் தலையில் அடித்துக்கொண்டாள் நிதி.

“இங்க பாரும் காயா… நீர் தானே ஆசைப்பட்டீர், கடல் தண்ணியில நிற்க வேணுமென்று ! இப்ப என்ன? ஏன் எங்கட ரஞ்சனோட போகப் பயமா இருக்கா? பயப்படாதேயும்…அவர் உம்மை ஒன்றுமே செய்யமாட்டார்.’’ ஏற்ற இறக்கங்களுடன் சிரித்துக்கொண்டே சொன்னவள், தன்னை முறைத்த ரஞ்சனைச் சாதாரணமாகப் பார்த்தாள்.

“சரி சரி, இப்ப எதற்கு இந்த முறைப்பு? பேசாமப் போய்ப் பார்த்திட்டு வாங்க; நாங்க இங்க இருக்கிறம்.’’ அழுத்திச் சொன்னதும் விருட்டென்று எழுந்துவிட்டான் ரஞ்சன்.

இதற்கும் தனக்கும் எத்தொடர்புமே இல்லை என்ற பாவனையில் அமர்ந்திருக்கும் வசியை முறைக்கவும் செய்தான்.

அதேவேகத்தில், “இப்ப என்ன…நாங்க ரெண்டு பேரும் உங்களுக்கு இடைஞ்சலாக இருக்கிறமா?’’ இலேசான கோபத்துடன் கேட்டவன், “வாரும் காயா…நாங்க கடற்கரையில் நடந்திட்டு வருவம்.’’ அவளையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டுவிட்டான்.

*****

சென்னை வெயில் வழமை போலத் தன் பணியைத் திறம்பட செய்து கொண்டிருந்தது!

நெதர்லாந்தில் சூரிய வெளிச்சத்தை தவறவிடாமல் பொக்கிசமாய் நினைப்பதுண்டு! இங்கோ, அது படுத்தும்பாட்டில் வதங்கிப் போயினர் அங்கிருந்து வந்தவர்கள்.

இந்திரன் மட்டும் மிகவும் இரசித்து அனுபவித்தாரென்றால், இளையவர்களோ குய்யோ முறையோ என்றவாறே சுற்றித் திரிந்தனர் .

இரவுணவை முடித்து விட்டு, ரங்கன் வீட்டுக் கூடத்தில் அமர்ந்து கதைத்துக் கொண்டிருக்கையில், ரஞ்சன் மட்டும் அவர்கள் வீட்டின் மொட்டை மாடியை தஞ்சமடைந்திருந்தான்.

நெதர்லாந்தில் இருந்து வந்ததிலிருந்து நிதியின் நடவடிக்கையில் காணப்படும் மாற்றமும், அது ஏற்படுத்திய மனக்கலக்கமும், இயல்பாக அவர்களோடு சம்பாசனையில் ஈடுபடமுடியாமல் அவனைத் தடுத்து நின்றன.

இவர்கள் இங்கு வந்து முழுதாக நான்கு நாட்கள் முடித்து விட்டது.

தாங்கள் சந்திக்க வந்தவரை நாளை காலையில் சந்திக்கலாம் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர் எல்லோரும்.

இந்த நான்கு நாட்களும் கனத்த மனத்துடன் இருந்தாலும் அங்குமிங்குமாகச் சுற்றித் திரிந்தனர். ஒவ்வொரு முறையும், “காயாவைக் கூட்டிக்கொண்டு அங்க போங்க…இங்க போங்க.’’ என்றும், “நாங்க ரெண்டு பேரும் இங்க இருக்கிறம்… நீங்க போயிட்டு வாங்க.’’ என்றும், நிதி, தான் வசியுடன் தங்கிக்கொண்டு இவர்களை மெல்ல அப்புறப்படுத்தியதில், ஏதோ அவள் தன்னை வேண்டும் என்றே ஒதுக்குவது போல, தாங்கள் அவர்கள் இருவருக்கும் இடைஞ்சல் போலக் கருதுவதாகவே மனத்தில் நினைத்துக் கொண்டான் ரஞ்சன்.

‘தனக்குத் துணையென்று ஒற்றைக் காலில் நின்று காயாவைக் கூட்டிக்கொண்டு வந்தாள். இப்பப் பார்த்தால் நான் அவளுக்கு சுமை! கூடவே காயாவும்!’’ என, கோபமாக நினைத்தவனால், எப்படிச் சமாதானம் செய்ய முயன்றாலும் தன்மனதில் எழும் விரக்தியை அடக்க முடியவில்லை.

நிதி வசிக்குரியவள் என்ற உண்மை எப்போது தெரிய வந்ததோ, அக்கணத்தில் இருந்து அவள் விருப்பம் நிறைவேறி என்றும் மகிழ்வுடன் இருக்க வேண்டுமென்றே விரும்பினான் அவன்.

நிதியை நினைத்த தன் மனத்திலிருந்து அவள் சார்ந்த எண்ணங்களை எப்பாடுபட்டாவது அப்புறப்படுத்தவே போராடுகிறான்.

ஆனால், அவனும் ஒரு சாதாரண மனிதன் தானே! வருடக்கணக்கில் நினைத்த நினைப்பை கணத்தில் தூக்கிப் போடுவது எப்படி?

என்னதான் அடுத்தடுத்து வந்த வேறு பிரச்சனைகளில், கொஞ்சமே கொஞ்சமாக கவனம் செலுத்தினாலும், அவன் நைந்துபோன மன ரணம் இன்னும் அப்படியே தான் இருக்கிறது. அவனும், அதை ஆற்ற, முழுதாய் மாற்ற மிகவும் முயன்று கொண்டேதான் இருக்கிறான்.

காயாவை சிறுவயதில் இருந்தே தெரியும் என்றாலும், பெரிதாகக் கதைத்துப் பழகியதில்லை. அவளும் ரதீஷுடன் கதைக்குமளவிற்கு இவனோடு கதைத்ததில்லை. அதற்குத் தேவையும் இருந்ததில்லை. இப்போதும் அவனுடன் நிதியின் ஆக்கினையால் சேர்ந்து திரிந்தாலும் அமைதியாகவே வருவாள். பெரும்பாலும் ஊமைகள் போலவே இந்த நான்கு நாட்களும் சுற்றித் திரிந்துள்ளனர்.

ஆனாலும், அப்படிச் சுற்றித் திரிந்ததில் தன்னையறியாமலேயே காயாவில் ஒரு சிநேகத்தன்மை ரஞ்சனுக்கு உருவாகியுள்ளது.

“இல்லை, அப்படி ஒரு நிலையில் என்னை நிறுத்திய நிதி, காயாவைக் கவனிக்கக் கட்டாயப்படுத்தியதால், இப்படி ஒரு உணர்வு அவள் மீது எனக்குத் தோன்றியுள்ளது என்பது உண்மையே!’’ என முணுமுணுத்துக் கொண்டவன், ‘இந்த நிதிக்கு அண்ணாவைத் தவிர மற்றவர்களைக் கண்ணில தெரியுது இல்லை! அதுதான் எல்லாத்துக்கும் காரணம்; வேற ஒன்றுமில்லை.’ தொடர்ந்து நினைத்தவன், தன்னையறியாமலேயே ஒரு பெரிய பெருமூச்சை வெளியேற்றினான்.

“அப்பிடி எதை நினைச்சு இப்பிடிக் கவலைப்படுறீங்க?’’ எனக் கேட்ட மெல்லிய குரலில், வந்தவளை இனம் கண்டு இலேசான முறுவலோடு திரும்பியவன், “வாரும்…என்ன, இப்பவும் நிதி அங்க இருந்து உம்மைக் கலைச்சி விட்டுட்டாளா?’’ என்றான், வருத்தமிழையோடிய குரலில், அப்படித்தான் இருக்கும் என்ற வகையில்.

அவன் கேட்ட பாவனையில் இருந்த வருத்தத்தை உணர்ந்து கொண்டாள் காயா.

‘இவர் எப்பத்தான் இந்த நினைப்பில இருந்து மாறுவாரோ?’ என்று நினைத்து வருந்தினாலும், ‘நிச்சயம் மாறுவார்!’ என எழுந்த நம்பிக்கையைக் கெட்டியாகப் பற்றிக்கொண்டவாறே இலேசாய் புன்முறுவல் பூத்தாள்.

“இல்ல நானாத்தான் வந்தன். இங்க நல்ல காற்று வருது…நல்லாவே இருக்கு என்ன?’’ என்று தொடங்கி, மெல்ல அச்சுற்றுப்புறத்தை இரசித்துக்கொண்டே பொதுவாகக் கதைக்கத் தொடங்கினர்.

 

 

error: Alert: Content selection is disabled!!