வீட்டு வாசலில் தனது பச்சை நிற பஜாஜ் ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு வெளியே இருந்தே குரல் கொடுத்தார் சுகுமாரன்
“மந்தாகினி ரெடியா? காலேஜுக்கு லேட் ஆச்சு வா”
“வந்துட்டேன்”
அடி மேல் அடி எடுத்து வைத்து பூ மெத்தை போட்டு வைத்திருந்த வாச புஷ்பங்களின் மேல் நடந்தன அந்த முயல் குட்டி பாதங்கள். வெண்மையாய் மென்மையாய் இருந்த பாதங்களில் உள்ள நகங்கள் ஒவ்வொன்றும் நகப் பூச்சியின் உதவியால் இளஞ்சிவப்பு முத்தாய் சுடர் விட்டன. பாதத்திற்கு மேலிருந்து கழுத்து வரை ஷிஃபான் புடவை தழுவி அவளது அழகை எல்லாம் மறைத்திருந்தது.
மந்தாகினியின் முக அழகை வருணிக்காமல் இருக்க முடியவில்லை. சாண்டில்யனின் வருணனையில் ஒரு பெண்ணைப் பார்த்தால் எப்படி இருக்கும். அப்படித்தான் இருப்பாள்.
கிரேக்க நாட்டின் சலவைக் கற்களால் செதுக்கப்பட்ட தெய்வீக முகம் போன்றதொரு வதனம். அவளது கரிய புருவங்கள் வேண்டிய அளவுக்குத் திட்டமாக வளைந்திருந்தன. கண்ணிமைகள் சங்கு மலரின் மேல் மூடியைப் போல வெண்மையாக இருந்தன. இமை ரோமங்கள் மலரின் நுனிக் கருப்பைப் பெற்றிருந்தது.
கடல், போகிற போக்கில் விசிறி போல ஒதுக்கும் கிளிஞ்சல்களின் வேலைப்பாடு உயர்ந்ததா இல்லை இவளது இமைகளின் அழகு உயர்ந்ததா என்று பஞ்சாயத்து கூட்டி முடிவு செய்யலாமா?
கன்னங்களில் லேசாக ஆங்காங்கே எட்டிப் பார்த்து மறைந்த பவளங்கள் சிகப்பா இல்லை அவளது ரத்த ரோஜா இதழ்கள் சிவப்பா என்ற கேள்விக்கு கற்றறிந்த அறிஞர்கள் கூட பதிலளிக்க இயலாது திணறுவார்கள்.
“ராணி தேனீ வந்துடுச்சுடா” எங்கோ ஒரு குரல் ஒலிக்க பாட்டு மாறியது.
மானஸ மயிலே வரூ
மதுரம் நுள்ளித் தரூ!
மானே மதுர கரும்பே!
மலர் தேனீ மதன குழம்பே!
என்று ஒருவன் பாட, எங்கோ ஒரு ஸ்பீக்கர் அலறியது
சினோரீட்டா ஐ லவ் யூ
மை ஸ்வீட் ஹார்ட் யூ லவ் மீ
அழகோ அழகு அதில் ஓர் உறவு
அருகே இருந்து தவிக்கும் மனது
தலைக்கேறிய கோபத்தை எல்லாம் காட்டி ஸ்கூட்டரை ஓங்கி உதைத்து ஸ்டார்ட் செய்தார் சுகுமாரன்.
“இந்த இடத்தை மாத்தி வேற பகுதிக்குப் போகணும்”
“வேற பகுதின்னா” என்றாள் மந்தாகினி.
“கொஞ்சம் பாஷா… வெறிக்க வெறிக்க பாக்குற, பின்னாடி சுத்துற கூட்டம் இல்லாத பகுதிக்கு”
“போயஸ் கார்டன், திநகர் இப்படி”
“நிம்மதியா போகலாம்”
“பஸ்ஸில் போனா கூட இப்படித்தான். ஒரு நல்ல கார்”
“நான் ஸ்கூட்டரே போதும்னு நினைச்சேன். கார் அமைஞ்சா சூப்பர்”
“சமையலுக்கு ஆள், ட்ரைவர் இதெல்லாம்”
அவள் விளையாடுகிறாள் என்று அப்போதுதான் கண்டுகொண்டார் சுகுமாரன்.
“இதெல்லாம் சாத்தியமா? ஒண்டு குடுத்தனத்துக்கு வாடகையே தர ததிங்கினத்தோம் போட வேண்டியிருக்கு. நான் சொன்னதை யோசிச்சியா? பேசாம கல்யாணம் பண்ணிக்கோ”
“எனக்கு பசிக்குது. சாப்பாடு வேணும்” என்றாள் எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல். வீட்டிலிருந்து வருபவள் சாப்பிடாமலா வருவாள்?
பையில் நூறு ரூபாய் வைத்திருக்கிறார். அதுவும் அவசரமாக வீட்டு செலவுக்குத் தேவை. மந்தாகினி இப்படித்தான் நிலமை புரியாமல் பேசுவாள்.
“சாயந்தரம் போலாமா?”
“இப்பத்தான் பசிக்குது. பசிக்கிறப்பத்தானே சாப்பிடணும். பயப்படாம வண்டியை புகாரிக்கு விடு. என்னை சந்திக்க ஒருத்தர் அங்க காத்திருக்கார்”
புரியாமல் அவளுடன் சென்றார் சுகுமாரன். அங்கு பரிட்சை ரிசல்ட் பார்க்கும் பதட்டத்துடன் காத்திருந்தான் ஒருவன்.
காலை புகாரியில் மசாலா தோசை, பூரி, திருப்தியாய் பில்டர் காபி உண்டு முடிக்கும் வரை அவனிடம் பல கேள்விகளைக் கேட்டாள் மந்தாகினி.
பேசி முடித்ததும் “சாரி மோகன். நம்ம ரெண்டு பேருக்கும் திருமணம் சரிப்பட்டு வராது. உங்களுக்கே இது புரியும்னு நினைக்கிறன்” என்று சொல்லிவிட்டு கிளம்பினாள்.
“இதென்னது மந்தாகினி. யாரிவன்?”
“என்னைக் கல்யாணம் பண்ணிக்கனும்னு கேட்டான். திருச்சி பக்கம் ஒரு கிராமத்து மிராசுதாரர் மகன். ஒரு வாரமா தினமும் சாயந்தரம் சந்திச்சு பேசிட்டு இருக்கோம். இன்னைக்கு முடிவு சொல்றேன்னு சொல்லிருந்தேன். முடியாதுன்னு சொல்லத்தான் உன்னைக் கூப்பிட்டேன். ஆஜானுபாகுவா ஒரு அண்ணன் பக்கத்தில் இருக்கான்னு சொல்லணும் இல்லையா?”
பயத்தில் வேர்த்து உணவு தொண்டைக்கு அருகே வந்து விட்டது சுகுமாரனுக்கு.
“இதென்னது? வர வர உனக்கு அசட்டுத் துணிச்சல் அதிகமாயிருச்சு”
“இந்த ஊரை விட்டு எப்ப போவோம், எப்படி போவோம்னு தெரியாம வாழுற வேதனையை விட, இது அசட்டுத் துணிச்சல் இல்லை சுகுமாரண்ணா”
“மந்தாகினி, சொல்றதைக் கேளு என்னோட ஆடிட்டர் கூட உன்னைக் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறார். பணக்கார வாழ்க்கை வேணும்னா அவரைக் கல்யாணம் பண்ணிக்கோ”
“ஓ… நாப்பது வயசு கிழவனுக்கு இருபது வயசுப் பொண்ணு கேட்குதோ?”
“சின்ன வயசு பணக்காரன் நம்ம வீட்டில் சம்பந்தம் பண்ணிப்பானா? நீ புத்திசாலி மந்தாகினி. யோசிச்சுப் பாரு. நம்ம நிலைல கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை சரிப்பட்டு வராது”
“உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல். ஒரு கிராமத்து மிராசுதாரர் மகன் என்னைக் கல்யாணம் செஞ்சுக்குறேன்னு சொல்றான். உங்க ஆடிட்டருக்கு இவன் தேவலாமில்ல”
“ஆனா நீதான் வேண்டான்னு சொல்லிட்டியே”
“ராணித் தேனீ… இந்த ராணித் தேனீயை தன்னுடையவளா ஆக்கிக்கிறது அவ்வளவு சுலபமா சுகுமாரண்ணா?”
கல்லூரி வாசலில் இறக்கிய சுகுமாரன் கேட்டார்.
“உன் மனசில் என்னதான் இருக்கு? யாருதான் இருக்கா?”
மந்தாகினி கண்களைச் சுழற்றிக் காட்டினாள். அந்த திசையில் நண்பர்களுடன் பேசியவாறு தம்மடித்துக் கொண்டிருந்தார் நாகேந்திரன்.