நாகேந்திரன் தனது வீட்டை விட்டு சென்னைக்குப் படிக்க வந்ததே ஒரு கதை. பட்டாபிஷேகம் செய்வதற்கு முன்பு திக்விஜயம் அனுப்புவதைப் போல இவரை மதராஸ் கல்லூரியில் முதுகலை படிக்க அனுப்பி இருந்தார்கள். அதற்கு ஒரே காரணம் மங்கை இன்னும் திருமண வயதை அடையவில்லை என்பதே.
சில வருடங்களுக்கு முன்னர், நாகேந்திரன் இளங்கலை படிப்பினைத் தொடங்கிய சமயம், கல்லூரியிலிருந்து இருந்து அழைத்து வரப்பட்டார்.
“நாகேந்திரா உனக்கே நல்லா தெரியும் நம்ம என் அண்ணனை நம்பித் தான் இருக்கோம்னு. நாகமங்கலத்தில் இருக்கும் சொத்து எதுவுமே நம்முடையது இல்லை. பிடி மண் கூட இல்லாத, அதாவது ராஜ்ஜியம் இல்லாத ராஜாக்கள் நாம.
இதுக்கு யார் காரணம்? எப்படி உங்க அப்பா சொத்தை தொலைச்சாரு? இதெல்லாம் பத்தி இப்ப பேசி பயனில்லை.
இப்ப பேச வேண்டிய விஷயம் ஒன்னே ஒன்னு தான். எங்க அண்ணனுக்கு ஆண் வாரிசு இல்லை. அதனால உங்கள்ல ஒருத்தர அவரோட வாரிசா தேர்ந்தெடுக்கணும்னு ஆசைப்படுறார்.
மூத்தவன் உடல்நிலை காரணமா பட்டம் சூட்ட என்னால வற்புறுத்த முடியாது. அது நியாயமும் கிடையாது.
ஆனால் என்னோட அண்ணனுக்கு அப்புறம் அவருக்கு வாரிசா இருக்கிற தகுதி உனக்கு இருக்கு. அதை என் அண்ணனும் மனசார ஏத்துக்கிட்டாரு”
“மாமாவுக்கு அப்புறம் அவருடைய வாரிசா நானா? அது ரொம்ப பெரிய பொறுப்பும்மா”
நாகேந்திரனின் கண்களின் முன்பு பறந்து விரிந்த பாகமங்கலத்தின் சொத்துக்களும், ராஜ்யத்தை வழி நடத்த வேண்டிய கடமைகளும் விரிந்தது.
“வேற வழி இல்ல. இது நாங்க எல்லாரும் கலந்து பேசி எடுத்த முடிவு.
இந்த சமயத்துல நான் உன்கிட்ட வேண்டி கேட்டுக்கிறது ஒன்னு தான். என் அண்ணனோட பொண்ணு மங்கையர்க்கரசியை நீ கல்யாணம் பண்ணிக்கணும்”
“என்னமா சொல்றீங்க? மங்கை சின்ன பொண்ணும்மா….”
“உன்னை நாளைக்கே தாலி கட்டுன்னு சொல்லப் போறது கிடையாது. ஆனால் அவளுக்கு 18 வயசு முடிஞ்சதும் உங்க கல்யாணத்தை நடத்திடுவோம்”
அப்பாடி அதுக்கு இன்னும் சில வருடங்கள் இருக்கிறது என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டார் நாகேந்திரன்.
அவருக்கு மங்கை மேல் விருப்பும் கிடையாது வெறுப்பும் கிடையாது. மிகச்சிறு வயதில் அவளுடன் விளையாடி இருக்கிறார். அப்பொழுது மங்கையும் கூட மிக மிக சிறிய பெண் என்றே சொல்லலாம்.
அதன் பின்னர் படிக்கச் சென்று விட்டதால் அவளைப் பார்க்கும் சந்தர்ப்பமே குறைந்துவிட்டது. பண்டிகை நாட்களிலோ அல்லது அவர்கள் குடும்ப விழாவின் போதோ, உச்சி முதல் உள்ளங்கால் வரை தங்கத்தில் இழைக்கப்பட்டு, பட்டாடை உடுத்தி வரும் மங்கையின் முகமே அவருக்கு அவ்வளவாக நினைவில்லை.
அவளுக்கும் அப்படித்தானே இருக்கும் என்று நினைத்துக் கொண்டார். இந்த சோதனை எனக்கு மட்டும் தானா? நானாவது வெளியே சிறகடித்துப் பறந்து வருகிறேன். அந்த சிறு பெண்ணோ கூண்டுக்கிளியாக வளர்க்கப்படுகிறாள்.
மங்கைக்கு 18 வயதானதும் என்னுடன் திருமணம் என்று என்னிடமாவது அறிவிக்கிறார்கள். ஆனால் அவளுக்கு சாய்ஸே கிடையாது. ஒருநாள் மணவரை இழுத்து வந்து உட்கார வைத்து தாலி கட்டச் சொல்லப் போகிறார்கள். உண்மையிலேயே என்னை விட மங்கை நிலைமை தான் பாவம் என்று நினைத்துக் கொண்டார்.
பாகமங்கலம் நாகமங்கலம் குடும்பத்தினர் திருமணம் செய்து கொள்வது இயல்பு என்பதால், அவர்களது பழக்கவழக்கங்களை பற்றி நன்றாக அறிந்திருந்ததால், இந்த திருமணம் பற்றிய பேச்சு ஒன்றும் நாகேந்திரனுக்கு வியப்பினைத் தரவில்லை.
அவர் மனதில் நினைத்தது ஒன்றுதான் அவரது பெரிய அண்ணன் யுகேந்திரன் உடல்நிலை சரியாக இருந்திருந்தால், அவனை வாரிசாக்கி இருப்பார்கள். அவரது தம்பி மகேந்திரன் கூட இதைப் போன்ற ஒரு பதவியையும் வாழ்க்கையையும் மிகவும் என்ஜாய் பண்ணுவான். தான் நடுவில் இருப்பதால் வேறு வழி இன்றி இந்த இடத்திற்கு அழைத்து வரப்பட்டேன்.
பாகமங்கலம் குடும்பத்திற்கு வாரிசு ஆவதற்கு ஆன முழு தகுதியும் திறமையும் அவரது தம்பி மகேந்திரனுக்கு மட்டுமே உண்டு என்பது அவரது அசைக்க முடியாத நம்பிக்கை.
‘ஏம்மா என்னை விட மகேந்திரன் தானம்மா இதுக்கெல்லாம் பொருந்துவான். அவனுக்கு தான் அரசாங்க விஷயங்களில் ஆர்வம் அதிகம். நான் இந்த ஊரிலேயே இல்ல. படிக்கிறேன் என்று வெளியூர் போய்ட்டேன்.அவனோ சின்ன வயசுல இருந்து மாமா கூடவே சுத்திக்கிட்டு இருக்கான்.அதனால அவனுக்கு பட்டம் கட்டினா என்ன?” என்று கேள்வி கேட்டார்
“டேய் வாய மூடுடா, உனக்காக பேசி முடிச்ச பொண்ண தம்பிக்குப் பார்க்க சொல்ற…. ஏன், ஊர்ல ஏதாவது பொண்ணு உனக்காக காத்துட்டு இருக்காளா?” என்று ஆத்திரத்துடன் கேட்டார் வடிவு.
“நீங்க வேற ஏம்மா, எனக்கு நம்ம குடும்பத்தை பத்தி தெரியாதா? காதலிக்க எனக்கு நேரமும் இல்ல. இன்ட்ரஸ்ட்டும் இல்ல.
அதுவும் நம்ம குடும்பத்தை பற்றி தெரிஞ்சா, கூடப் படிக்கிற மாணவர்கள் எல்லாம் என்னை விட்டுப் பத்தடி தள்ளியே நிக்கிறாங்க. அதனால படிக்கும் கல்லூரியில் என்னைப் பத்தின தகவல் யாருக்கும் தெரியாம பார்த்துக்கிறதே பெரும்பாடா இருக்கு”
மகனின் வார்த்தைகள் எதிலும் வடிவுக்கு நம்பிக்கை இல்லை. இந்த காலத்துப் பிள்ளைகளை மாதிரி ஏதாவது சேட்டைகளைச் செய்து அவளது அடம்பர அரச வாழ்க்கைக்கு வேட்டு வைத்து விட்டால், அதனை தனது மகனிடம் சொல்லிவிட்டார்.
“இந்த காலத்து பசங்களை நம்ப முடியாது. அதனால இனிமே நீ இங்கேயே மாமாவுக்கு துணையா இருந்துக்கோ. வெளியில எங்கேயும் போக வேண்டாம்”
அதன்பின் எப்படியோ தாயாரை சம்மதிக்க வைத்து, சத்தியம் செய்து கொடுத்துவிட்டு, மேற்படிப்பு படிப்பதற்காக சென்னையில் வந்து தங்கி இருக்கிறார்.
அவர் படிக்கும் கல்லூரி கூட பாகமங்கலம் ஜமீனின் நன்கொடையால் நடப்பது தான். முதல்வரிடம் அவர் ஜமீனின் வாரிசு என்று யாருக்கும் தெரியக்கூடாது என்று அறிவுறுத்தி இருக்கிறார்கள். கல்லூரியைப் பொறுத்தவரை அவர் ஒரு பணக்கார வீட்டுப் பிள்ளை அவ்வளவுதான்.
சென்னையிலேயே அடையாறில் ஒரு பங்களாவில், இவருக்கு சமையல் செய்ய, வீட்டு வேலை செய்ய என்று ஆட்களை நியமித்து விட்டுத்தான் அவனது மாமா சென்றிருந்தார்