இன்னும் இரண்டு மூன்று வருடங்களில் அவருக்கும் மங்கைக்கும் திருமணம் ஆகிவிடும். அதுவரை தான் நல்ல பிள்ளையாக நடந்து கொள்ள வேண்டும். ஒரு துளி சந்தேகம் வந்தால் கூட அவரது அம்மாவும் மற்றவர்களும் குண்டு கட்டாய் தூக்கி பாகமங்கலத்திற்கு சென்று விடுவார்கள்.
காலை உணவு சாப்பிடுவதற்காக டைனிங் டேபிளில் அமர்ந்தார் நாகேந்திரன். அவருக்கு வெள்ளி தட்டில் மூன்று நான்கு வகை உணவுகள் பரிமாறப்பட்டன. அதில் கருப்பாக அரிசியில் செய்த ஒரு இனிப்பு.அ தனை கார் அரிசி அல்லது கவுனி அரிசி என்று சொல்வார்கள்.
அந்த அரிசிக்கு மற்றொரு பெயர் அரசன் அரிசி. ஏனென்றால் அரச குடும்பத்தை சேர்ந்தவர் மட்டும்தான் அந்த அரிசியில் செய்த உணவு சாப்பிட வேண்டும் என்ற ஒரு சட்டம் முன்னொரு காலத்தில் இருந்ததாம். அந்த அளவுக்கு பலமும் சக்தியும் நிறைந்தது.
இரவு முழுவதும் கவுனி அரிசியை ஊற வைத்து, மண்சட்டியில் சோறாக வடித்து, அதில் நாட்டுச் சக்கரையும் நல்லெண்ணையும் கலந்து வைத்திருந்தான் சமையல்காரன்.
பிடிக்குதோ பிடிக்கவில்லையோ சில வகை உணவுகளை அவர்கள் குடும்பத்தில் கட்டாயம் சாப்பிட வேண்டும். அதில் ஒரு 15 வகைநாட்டு ரக அரிசிகளும் உண்டு. ஒவ்வொரு காலத்திற்கும் ஏற்றார் போல் அந்தந்த அரிசியில் உணவு சமைத்து வழங்கப்படும்.
உடல் நிலையை சீராக, பலமாக வைத்திருக்க வேண்டும். பலமான வாரிசுகளை பெற்றுக் கொள்ள வேண்டும். இதெல்லாம் ராஜ குடும்பத்தில் எழுதப்படாத சட்டங்கள்.
இவர்களெல்லாம் எவ்வளவோ பரவாயில்லை.வெளிநாட்டை சேர்ந்த சில அரச குடும்பங்களில் கடல் உணவு சாப்பிட கூடாது, உடுத்தும் உடைகளில் கூட எவ்வளவு குளிராக இருந்தாலும் சிறுவர்கள் அரைக்கால் டவுசரும் சிறுமிகள் ஸ்கர்ட் அல்லது கவுன் வகை உடைகளை மட்டுமே உடுத்த வேண்டும்.
ராஜ வாழ்க்கை என்றால் முள் படுக்கையா என்று கேட்டால் அதுதான் இல்லை. தங்க நகை உறுத்துகிறது என்று யாராவது அணியாமல் இருக்கிறோமா? கத்திரி வெயில் என்று விழாவிற்கு பட்டாடை உடுத்தாமல் இருக்கிறோமா?
பணமும், புகழும், மரியாதையும் ஒரு போதை. ஒரு முறை சுவைத்து விட்டால் வாழ்க்கையில் அதிலிருந்து விடுபடவே முடியாதுதான். அதே போன்ற ஒரு சூழலில் சிக்கிக் கொள்ளக் கூடாது என்று தான் முயல்கிறார். இருந்தாலும் விதி விடவில்லையே
தனக்குள் பேசிக் கொண்டே கல்லூரியை வந்தடைந்தார். காரினை பார்க் செய்தபோது தன்னை யாரோ உற்றுப் பார்ப்பது போன்ற ஒரு எண்ணம் வழக்கம் போலவே ஏற்பட்டது.
சில மாதங்களாகவே அடிக்கடி இப்படித்தான் தோன்றுகிறது. அதுவும் கல்லூரியில் காலடி எடுத்து வைத்த நிமிடங்களில் இருந்துதன்னை யாரோ கண்காணிப்பது போன்ற ஒரு உணர்வு. உற்றுப் பார்ப்பது போன்ற ஒரு எண்ணம் அவரைப் படுத்துகிறது.
என்னைக் கண்காணிக்க மாமா யாரையாவது ஏற்பாடு செய்திருப்பாரோ? இருக்கலாம், எனது பாதுகாப்பிற்காக ஏற்பாடு செய்திருப்பார்.
மனதினை சமாதானப்படுத்திக் கொண்டே தனது வகுப்பறைக்கு சென்றார். ஒருவேளை நாகேந்திரன் சற்று உன்னிப்பாக கவனித்துப் பார்த்திருந்தால் மந்தாகினி மறைந்திருந்து அவரையே பார்த்துக் கொண்டிருப்பதை கண்டிருப்பார்
நாகேந்திரன் வகுப்பறைக்குள் சென்றதும் தூணுக்கு மறைவில் நின்ற மந்தாகினியும் ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு லைப்ரரி பக்கம் நகர்ந்தாள்.
“அவன் எட்டாக்கனி மந்தாகினி. உனது ஆசையை அழித்துவிடு” என்று சொல்லிய வண்ணம் அவள் முன்னே அமர்ந்தான் அவளது சீனியர் சுதர்சன்.
சுதர்சனின் தந்தை ஒரு உயர் போலீஸ் அதிகாரி. அவர் பதவி தந்த தைரியத்திலேயே முதல் வருட மாணவர்களை ராக்கிங் செய்வான். சில சமயம் அது எல்லை மீறியே இருக்கும்
மந்தாகினி முதல் வருடம் கல்லூரியில் சேர்ந்த போது, ஒருநாள் சுதர்சனிடம் வகையாகச் சிக்கிக் கொண்டாள். அவளை, பெட்டிக்கடையில் சென்று சிகரெட் வாங்கி வரச் சொன்னான்.
பயத்தில் வியர்த்து விறுவிறுத்து கடைக்குச் சென்று தொண்டை அடைக்க “அண்ணா, ஒரு சிகரெட் பாக்கெட்” என்று சொல்வதற்குள் அவள் கண்களில் இருந்து கண்ணீரே வந்து விட்டது.
அப்போதுதான் பக்கத்தில் இருந்த நாகேந்திரன் நிமிர்ந்து அவளைப் பார்த்தான்.
“யாராவது உன்னை வாங்கிட்டு வர சொன்னாங்களாம்மா?” என்று கேட்டான்.
ஆமாம் என்று பயந்து கொண்டே கண்களால் அந்த கும்பலைப் பார்த்தாள்.
“நீ போ… நான் பாத்துக்குறேன்” என்றபடி அந்த சிகரெட் பாக்கெட்டை எடுத்துக் கொண்டு ராகிங் கும்பல் இருக்கும் இடத்திற்குச் சென்றான்.
இன்னொரு பெண்ணை இழுத்து நிற்க வைத்து ‘நேத்து ராத்திரி அம்மா’ பாட்டை அதே ஹஸ்கி வாய்ஸில் பாடச் சொல்லி டார்ச்சர் செய்து கொண்டிருந்தான் சுதர்சன்.
“என்ன பிளாட்டா பாடுற? நடுவுல சங்கதி ஏதும் காணம். சிணுங்கல் வரணுமே” என்று சீண்ட, அந்தப் பெண் ஓ என்று அழுதது.
இதனைப் பார்த்தவுடன் நாகேந்திரனின் ரத்தம் கொதிக்க ஆரம்பித்தது. அந்தப் பெண் அழுவதை பார்த்து உரக்க சிரித்த சுதர்சனின் கன்னத்தில் இடி ஒன்று இறங்கியதைப் போன்று இருந்தது
“பெண்கள் கிட்ட நடந்துக்கிற முறையா இது? இன்னொரு முறை இந்த மாதிரி கேவலமான காரியத்தை செஞ்ச… அந்த இடத்திலேயே வெட்டிப் பொதைச்சிடுவேன்” கர்ச்சித்து விட்டு சென்றார் நாகேந்திரன்.
மாணவர்கள் முன்பு அடிவாங்கிய அவமானத்தை சுதர்சனால் தாங்க முடியவில்லை. தனது தந்தையின் வழியாக கல்லூரி முதல்வரிடம் புகாரினை எடுத்துச் சென்றான். நாகேந்திரனை கல்லூரியை விட்டு டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று ஒற்றை காலில் நின்றார் அவனது தந்தை.
ஒரு நாள் தந்தை மகன் இருவரையும் தனியாகப் பேச அழைத்தார் முதல்வர்.
“உங்க பையன் செஞ்சது பெரிய தப்புங்க. அதுக்காக அவனை வேணா டிஸ்மிஸ் செய்யலாம். ஆனா நாகேந்திரன் மேல கையே வைக்க முடியாது”
“அதெப்படிங்க எல்லாரு முன்னாடியும் ஒரு போலீஸ் உயர் அதிகாரி மகனைக் கை நீட்டிருக்கான். சுதர்சன் தப்பு செஞ்சிருந்தா, உங்க மூலமா என்கிட்டத்தானே கொண்டு வந்திருக்கணும். அதை விட்டுட்டு மாணவர்கள் முன்னாடி அடிக்கிறது எந்த விதத்தில் நியாயம்? என் மகன் அவமானப்பட்ட மாதிரியே அவனும் அசிங்கப்பட்டு இந்தக் கல்லூரியை விட்டே ஓடணும்”
“சார் நீங்க சொன்னது ஒரு விதத்தில் நியாயம். ஆனால் என் நியாயத்தையும் புரிஞ்சுக்கோங்க” குரலைத் தணித்தார்.
“இந்தக் கல்லூரியே அவரோடது தான். வெளியே தெரிஞ்சா மாணவர்கள் கூட இயல்பா கலந்து பழக முடியாதுன்னு யார்கிட்டயும் சொல்ல வேணாம்னு கேட்டிருக்கார்.
அவர் கல்லூரியில் படிக்கிற பிள்ளைங்க கிட்ட சுதர்சன் முறை இல்லாமல் நடந்ததுனால அவர் கண்டித்தார். இதில் என்ன தப்பு இருக்கு சொல்லுங்க? அந்தப் பொண்ணுங்க கம்பளைண்ட் தந்தா உங்க மகன் எதிர்காலம் என்னாகும் நினைச்சுப் பாருங்க”
அதன்பின் சுதர்சனின் அப்பா அமைதியாக அவனை இழுத்துக்கொண்டு வந்து விட்டார்.
சில நாட்களுக்குப் பின் அவர் சொன்ன விஷயங்கள் உண்மை என்று அறிந்து கொண்டு, கல்லூரிக்கு செல்லாமல் இருந்த மகனைக் கண்டித்தார்.
“ஒழுங்கா வாய மூடிட்டு டிகிரி வாங்கிட்டு வீட்டுக்கு வா. பெரிய மனுஷங்களை எல்லாம் பகைச்சுக்க கூடாது சுதர்சன். உன்னை ஒரு பெரிய போலீஸ் அதிகாரி ஆகணும்னு கனவு கண்டிட்டு இருக்கேன். சில்ரத்தனமான வேலை செஞ்சு அந்த கனவக் கெடுத்துறாதே”
அப்போதைக்கு கோபத்தீ அணைந்தது போல் தோன்றினாலும், பகை என்ற நெருப்பு சுதர்சனின் மனதில் கங்காய் கனன்று கொண்டிருந்தது.
அவன் ஒரு தலையாய் காதலித்த மந்தாகினி நாகேந்திரனை விரும்பியதைக் கண்டதும் குரோதம் பெருகியது.
“நிஜமா தான் சொல்றேன் மந்தாகினி. ஒவ்வொரு வருடமும் பீஸ் கட்டவே திணறுற குடும்பம் உன்னுடையது. இந்த கல்லூரியையே வச்சு நடத்துற குடும்பம் நாகேந்திரனோடது. அதனால தான் சொல்றேன் ஆசையை இப்பவே அழிச்சிடு”
நாகேந்திரன் ஜமீன் குடும்பம் என்பதை அப்போதும் தனது வாயால் பிரகடனம் செய்ய விரும்பவில்லை அவன்.
“எங்களை இணைக்கிற பாலமா அன்பும் காதலும் இருக்கும் பொழுது இந்த ஸ்டேட்டஸ் வித்தியாசம் எல்லாம் மறைந்துவிடும் சுதர்சன்” என்று அவனது வயிற்றெரிச்சலில் ஆசிட் ஊற்றினாள்.
“என்ன சொல்ற? நீயும் நாகேந்திரனும் காதலிக்கிறீங்களா? உன்ன அவன் திரும்பி கூட பாக்க மாட்டேங்குறான்”
“நீங்களே சொன்னிங்க இல்லையா? அவ்ளோ பெரிய பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர், எல்லாருக்கும் தெரிகிற மாதிரி வெளிப்படையா காட்டினா அவங்க வீட்டில் எங்க காதலுக்கே சமாதி கட்டிடுவாங்க. அதனால வெளியே தெரியாமல் பார்த்துக்கிறோம்”
சுதர்சனால் நம்பவும் முடியவில்லை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. ஆனால் ஓரளவாவது உண்மையாக இருக்க வேண்டும் என்று அவன் மனது ஓர் ஓரத்தில் சொன்னது. ஏனென்றால் நாகேந்திரனின் வீடு இருக்கும் அடையாறு பக்கம் சில முறை மந்தாகினியைப் பார்த்திருக்கிறான்.
என் வாழ்க்கையில் வந்த மிகப்பெரிய வில்லன் நாகேந்திரன். ‘டேய் ஒரு சந்தர்ப்பம் மட்டும் கிடைச்சது, உன்னைப் பழி வாங்காம விட மாட்டேன் டா’
அவன் மனதினுள் கறுவிக் கொண்டான்.