“மந்தாகினி இது சரியான முட்டாள் தனம்.மந்திரத்தால மாங்காய் பழுப்பது எல்லாம் கதைல வேணா நடக்கலாம். மந்திரம் செஞ்சு ஒருத்தரோட மனச எப்படி காதலிக்க வைக்க முடியும்? அதுவும் அந்த நாகேந்திரன் உன்னை திரும்பிக் கூட பாக்க மாட்டேங்கிறான்”
மந்தாகினி நாகேந்திரனை காதலிக்க வைக்க என்று கங்கணம் கட்டிக் கொண்டு நாகேந்திரனின் புத்தகங்கள், நோட்டு, கைக்குட்டை இப்படி எதையாவது பொருளை எப்படியோ திருடிக் கொண்டு வந்து நம்பூதிரி ஒருவனிடம் பூஜை செய்து, வசிய மந்திரங்களை சொல்லி, அவன் மனதைத் தன் வசப்படுத்தத் துடிக்கிறாள்.
ஒரு காலத்தில் மக்கள் மூடநம்பிக்கையால் இவற்றை நம்பினார்கள். ஆனால் இப்பொழுது படிப்பறிவு பெற்ற மக்கள் இந்த மந்திரங்களை நம்புவதில்லை. ஆனால் இவளுக்கு மட்டும் எங்கிருந்து இந்த மாதிரி புதுப்புது யோசனைகள் தோன்றுகிறது என்பது அவருக்குப் புரியாத புதிர்.
“அதுதான் சுகுமாரன். அவரைப் பாத்து பேச பழக ஆரம்பிச்சா போதும் நான்தான் வேணும்னு அவரே சொல்வார். நீயே சொல்லு… யாராவது ஒரு ஆண்மகன் என்னை வேணாம்னு சொல்லுவானா? எத்தனை பேர் என் காலடியில் விழுந்து கிடக்க தயாரா இருக்காங்க. நாகேந்திரனும் வருவார் ஆனா அதுக்கு முதல்ல அவர் என் முகத்தை பார்க்கணுமே? அந்த ஃபர்ஸ்ட் ஸ்டெப்ப எடுத்து வைக்கத் தான் இத்தனை பாடு படுறேன்”
“நீ போற போக்கு சரியில்லை. இருக்கிறத விட்டுட்டு பறக்கிறத பிடிக்க ஆசைப்படற. ஜாக்கிரதையா இருந்துக்கோ” என்று எச்சரிக்கை செய்வதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை சுகுமாரனால்.
ஆனால் சுகுமாரன் சொன்னது உண்மை என்பதை விரைவிலேயே உணர்ந்தாள் மந்தாகினி.
நாகேந்திரன் கல்ச்சுரல்ஸ் செக்ரெட்டரி என்பதை தெரிந்து கொண்ட பின்பு தானும் ஒரு கலை விழாவில் கலந்து கொள்ள பெயர் கொடுத்தாள்.
நாடகத்தில் நடிக்க ஆர்வம் கொண்டவர்களுக்கு வசனத்தைக் கொடுத்து நடித்துக் காட்ட சொன்னார்கள்.
“கண்ணகி மறுப்பிலே வந்தூ, கறுப்பு தவறுனுல்லா “ என்று மந்தாகினி ஒப்பித்த வசனத்தைக் கேட்டு சிரிக்க ஆரம்பித்து விட்டார்கள் அனைவரும்.
“அம்மாடி அது கண்ணகி மரபிலே வந்தவள் கற்பிலே தவறுவதில்லை” என்று எடுத்து சொன்னான் நாடகத்தின் டைரக்டர்.
தனக்கும் நாடகத்தில் ஏதாவது ஒரு சிறிய வாய்ப்பு தருமாறு தொல்லை படுத்திய மந்தாகினியை தனது கல்ச்சுரல் செக்கரேட்டரி அறைக்கு அழைத்தான் நாகேந்திரன். அங்கு நாடகத்திற்குத் தேவையான பொருட்கள் மலைபோல ஒரு ஓரத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்தது. மக்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை எடுக்க உள்ளே வந்தும் சென்றும் கொண்டு இருந்தனர் ஆதலால் தனி அறை என்று சொல்வதற்கில்லை. மந்தாகினி மட்டுமல்ல வேறு எந்த ஒரு பெண்ணையும் தனியாக சந்திக்கும் வாய்ப்பினை நாகேந்திரன் உண்டாக்கிக் கொள்வதில்லை.
“மந்தாகினி, இங்க வா… நாடகத்தில் நடிக்க நல்லா தமிழ் பேசத் தெரிஞ்சிருக்கணும்” என்று அவளை தேர்ந்தெடுக்க முடியாததற்கான தன்மையான விளக்கம் தந்தான்.
“இந்தக் கலை நிகழ்ச்சியில் உங்க கூட இணைந்து நடிக்கலாம்னு ஆசைப்பட்டேன். அது முடியாதா?” அவளது கண்கள் கலங்கி விட்டன.
“என்னமா இது… எதுக்கெடுத்தாலும் கண்ணீர் சிந்துற?”
அந்த அறைக்குள் எதையோ எடுக்க வந்த சுதர்சன் கண்ணீர் சிந்தும் மந்தாகினியையும், எதிரே அமெரிக்கையாக அமர்ந்திருந்த நாகேந்திரனையும் கண்டு திகைத்தான்.
“என் கண்ணீரையும் மனசையும் புரிஞ்சுகிட்டு வாய்ப்பளிப்பிங்கன்னு நம்புறேன்” என்றாள் கேவலுடன்.
சுதர்சனால் இந்தக் காட்சியை சகிக்க முடியாது அந்த இடத்தை விட்டு சென்று விட்டான்.
மந்தாகினியின் கண்ணீர் வேலை செய்ய, முதல் முறையாக அந்த நாடகத்தில் ஒரு பாடல் காட்சி இணைக்கப்பட்டு அதில் மந்தாகினியின் நடனம் இடம் பெற்றது.
ஆடாத மனமும் உண்டோ?
நடை அலங்காரமும் அழகு சிங்காரமும் கண்டு
ஆடாத மனமும் உண்டோ?
என்று வெண்ணிற உடை அணிந்து மேகத்தில் பூத்த வெள்ளை ரோஜாவாய் பார்க்கும் இளைஞர்களை எல்லாம் சுண்டி இழுத்தாள்.
முல்லைப் பூவில் ஆடும் கரு வண்டாகவே
முகில் முன்னே ஆடும் வண்ண மயிலாகவே
இருந்தும் கூட
“மந்தாகினி மிக அருமையாக டான்ஸ் பண்ண” என்ற பாராட்டைத் தவிர ஸ்பெஷல் கவனிப்பு எதுவும் நாகேந்திரனிடம் அவளுக்குக் கிடைக்கவில்லை.
இந்த வருடம் நாகேந்திரனின் படிப்பு முடிகிறது. கடந்த ஒரு வருடமாக அவரைக் கவர முயற்சித்தும் மந்தாகினியின் எண்ணம் பலிக்காத ஆத்திரத்தில் இருந்தாள். எப்படியாவது தனது மனதின் ஆசையை வெளிப்படுத்த தகுந்த சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்தாள்.
“கலைநிகழ்ச்சியில் கலந்துக்கிட்ட எல்லாரும் பார்ட்டி கொண்டாடறதா கேள்விப்பட்டேன். நானும் கலந்துக்கலாம்னு ஆசையா இருந்தேன்”
“மந்தாகினி. இது ஆண்கள் மட்டும் கொண்டாட ஏற்பாடு செய்த பார்ட்டி.முடிய நள்ளிரவாகும்”
“நாங்களும் நாலைஞ்சு பெண்கள் இருக்கோமே நாங்க கலந்துக்க ஏதாவது ஏற்பாடு செஞ்சிருக்கலாம்”
“இரவு உணவு முடிஞ்சதும் கிளம்புறதா இருந்தால் வாங்க. பாதுகாப்பா வீட்டில் கொண்டு விட யாராவது இருக்காங்களா?”
“நான் போன் பண்ணி சொல்லிட்டா என்னை அழைச்சுட்டுப் போக எங்க அண்ணன் வருவாரு”
“சரிம்மா ஆபிஸ் ரூமில் போன் பண்ணி சொல்லிடு”
நாகேந்திரனை நண்பர்கள் அனைவரும் கடிந்து கொண்டார்கள் “டேய் அவளுக்கு நீ ரொம்ப இடம் கொடுக்குற. ஆம்பளைங்க பார்ட்டின்னு சொல்லியும் எதுக்கு அவ வரணும்னு சொல்றா? இப்ப பாரு இவளால் இன்னும் நாலு தொல்லைகளை கூப்பிட்டுட்டு போக வேண்டியிருக்கு”
“சில நேரத்தில் சிலதை தடுக்க முடியாது, இப்ப என்னடா… சாப்பிட்டுட்டு கிளம்ப போறா. அதுக்கப்பறம் நம்ம ராஜ்ஜியம்தான்” என்று உறுதி மொழி அளித்தார்.
ஆனால் அது அவ்வளவு சுலபமானதாக இல்லை.
நெஞ்சம் பாடும் புதிய ராகம்
தாளம் உன்னைத் தேடுதே!
மெல்லிசைக் கச்சேரி ஒன்று நடக்க, பாடலைக் கேட்டுக் கொண்டே அந்த ஐந்து நட்சத்திர விடுதியில் அவள் உண்ட உணவு வகைகள் பலவற்றின் பெயர் அவள் அறியாதது.
இந்த பார்ட்டி முழு ஏற்பாடும் நாகேந்திரன்தான் என்று தோழிகள் கிசுகிசுத்தபோது சந்தோஷமாகவே இருந்தது. காலை உணவு அரிசிக்கஞ்சி என்பது மாறி திருமணத்திற்குப் பின் இதைப் போன்ற பெரிய விடுதிகளில் தயங்காமல் ஒவ்வொரு வேளையும் களிக்கலாம்.
தித்திக்க தித்திக்கப் பேசிக் கொண்டு,
திக்குகள் எட்டிலும் ஓடிக்கொண்டு
வரவை மறந்து செலவு செய்து
உயரப் பறந்து கொண்டாடுவோம்!