மந்தாகினியின் அன்னை காலையிலிருந்து இரவு தாமதமாக வீட்டுக்கு வந்ததை சொல்லிச் சொல்லித் திட்டிக் கொண்டிருந்தார்.
“உங்கப்பன் என்னடான்னா ஊரெல்லாம் கடன் வாங்கிட்டு போற இடத்தில எல்லாம் பெட்டி தூக்க விடுறான். நீ என்னடான்னா என்னமோ மடத்தில் தங்கிருக்குற மாதிரி நினைச்ச நேரத்துக்கு போற வர. கேட்டா எல்லாரும் சேந்து விருந்துக்குப் போயிட்டு வரேன்னு கதை விடுற.
இதெல்லாம் சரிப்பட்டு வராது. நீ இனிமே காலேஜுக்கு போக வேண்டாம். பம்பாய்ல என் தங்கச்சிக்கு தெரிஞ்ச இடத்தில் வேலைக்கு ஆள் தேவையாம். நீ அவ வீட்டுக்குக் கிளம்பு”
பேசியதைக் காதில் வாங்கி கொண்டே வீட்டினுள் நுழைந்தார் சுகுமாரன்.
“ ‘ராணி தேனீ’ நேத்து ராத்திரி கிட்டத்தட்ட நடுராத்திரி வீட்டுக்கு வந்திங்களாமே? எங்க மந்தாகினி போயிருந்த?” மனதில் எழுந்த கோபத்தை அடக்கிக் கொண்டு மந்தாகினியிடம் கேட்டார்.
“ராணி தேனீக்கு ஏத்த ராஜாவைத் தேட வேண்டாமா?” என்றாள் சிரித்தபடி.
“ஓவரா போற மந்தாகினி. பேசாம உங்க சித்தி வீட்டுக்குக் கிளம்பு”
“ச்சூ காரியம் கை கூடி வர்ற நேரம் சுகமாரண்ணா. வெண்ணை திரண்டு வர்ற நேரம் தாழியை உடைச்சுடாதே”
“அந்த நாகேந்திரன் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டானா?”
“நேத்து தானே காதலே ஆரம்பிச்சிருக்கு. இனி விரைவில் கல்யாணமும் நடக்கும்”
நம்பிக்கையுடன் கிளம்பினாள் அதில் ஒரு பேரிடி விழப் போவதை அறியாமல்.
காலையில் கல்லூரி வாசலில் நாகேந்திரனை எதிர்பார்த்திருந்தவளுக்கு அவனைக் காணாமல் ஏமாற்றம். இங்கேதானே காலையில் நின்று தோழர்களோடு தம் அடித்துக் கொண்டிருப்பான். நேற்று தாமதமானதால் இன்று வரவில்லையோ?
ஏமாற்றத்தை மென்றவளின் கண்முன் வந்து நின்றான் ஜம்புலிங்கம்.
“என்ன மந்தாகினி நாகேந்திரனைத் தேடுறியா?”
என்னிடமே இன்னும் காதலைத் தெரிவிக்கவில்லை. அதற்குள் நண்பர்களிடம் சொல்லியாகிவிட்டதா? இருக்கட்டும் அடுத்த சந்திப்பில் பேசிக் கொள்கிறேன்.
மந்தாகினிக்கு தன்னை ஒருவன் மறுக்கக் கூடும் என்ற எண்ணமே இதுவரை இருந்ததில்லை. என் காலடியில் எத்தனை ஆண்கள் தங்கள் இதயத்தைக் காணிக்கையாக்கிக் காத்துக் கிடக்கின்றனர். அத்தகைய நானே மனமிரங்கி எனது காதல் வரத்தை ஒருவனுக்குப் பொழிந்திருக்கிறேன். மாட்டேன் என்றா சொல்லப் போகிறான்.
“உன்னுடன் பேச வேண்டுமே மந்தாகினி” என்றான் ஜம்புலிங்கம்.
“அவர் வரவில்லையா?”
“நாகேந்திரனுக்கு அவசரமாக ஊருக்கு செல்லும் வேலை வந்துருச்சு. நீ இப்ப பிரீயா இருந்தால் அந்த ஹோட்டலில் காப்பி குடிச்சுகிட்டே பேசலாம். உன் அண்ணன் கூட இறக்கிவிட்டுட்டு அங்க காத்திருக்கார் பார். அவரையும் அழை ஏன்னா நம்ம ரெண்டு பேரும் தனியா பேசினால் சரிவராது” என்றான்.
சுகுமாரனின் கேள்விப் பார்வைக்கு தனது கண்களால் பதில் அளித்தபடி அவனை அழைத்துக் கொண்டு ஜம்புலிங்கத்துடன் காபி அருந்தச் சென்றாள்.
காப்பி அருந்தும் வரை மனதில் பேச வேண்டியதை ஒத்திகை பார்த்துவிட்டு “மந்தாகினி நீ நாகேந்திரனுக்குத் தந்த பரிசு. இது அவனுக்குத் தேவைப்படாது” என்று அவளது பரிசினைத் திரும்பத் தந்தான் ஜம்புலிங்கம்.
அதிர்ந்தாள் மந்தாகினி. “அதை எப்படி நீங்க சொல்விங்க. நான் நாகேந்திரனிடம் பேச வேண்டும். இது வெறும் பொருள்னு நினைச்சிங்களா? என்னோட இதயம். என் முகத்தைப் பார்த்து என்னைப் பிடிக்கலைன்னு சொல்லி இதயத்தைத் திருப்பித் தரட்டும். வாங்கிக்கிறேன்” என்றாள் ஆத்திரத்தில் முகம் சிவக்க.
“ஏன் நாகேந்திரன் வரணும்? அவனோட பதில்தானே உனக்குத் தேவை. விருப்பமில்லாததை நேரில் சொல்லத் தயங்கித்தான் என்னிடம் சொல்லிருக்கான்”
“இதை நம்ப மாட்டேன். நான் அவரை நேரில் பார்த்துப் பேசியே ஆகணும். எத்தனை நாள் அவர் ஓடி ஒளியப் போறார். பரீட்சை எழுத வந்துதானே ஆகணும்”
“நாகேந்திரன் போன வருடம் பரீட்சை சமயத்தில் சிங்கப்பூரில் ஒரு வியாபாரக் கூட்டத்தில் கலந்துக்கப் போயிட்டான். புரிஞ்சுக்கோ மந்தாகினி உனக்கும் எனக்கும்தான் இந்தப் பரீட்சை, பட்டம் எல்லாம் முக்கியம். பட்டம் இல்லாம வேலை கிடைக்காது. வேலை தர்ற சம்பளம் இல்லாம வயிறு நிறையாது. ஆனால் நாகேந்திரன் மாதிரி பணக்காரர்களுக்கு இதெல்லாம் ஒரு அலங்காரக் காகிதம்.
நீ நாகேந்திரன் கிட்ட காதல் கடிதம் கொடுத்ததை எல்லாரும் இப்பவே மறந்துடலாம். இந்தக் காதல் எல்லாத்தையும் மறந்துட்டு படிக்கிற வழியைப் பார்” என்றவன் சுகுமாரனிடம்
“சார் நீங்க நேத்து வராததால தான் இத்தனை பிரச்சனையும். உங்க தங்கைக்கு நல்ல புத்தி சொல்லுங்க” என்று ஒரு வார்த்தையால் குத்திவிட்டுக் கிளம்பினான்.
நேத்து நான் வரவில்லையா? எங்கு போகவில்லை? சுகுமாரனின் மனதில் ஆயிரமாயிரம் கேள்விகள். விடையாக மனதில் பட்டது ஒன்றுதான் மந்தாகினி அவளது நாடகத்தில் அவருக்குத் தெரியாமலேயே அவரது பெயரைப் பயன்படுத்தி இருக்கிறாள்.
“என்ன நடக்குது மந்தாகினி” கண்களில் கனல் பறக்க சுகுமாரன் கேள்வி கேட்டார்.
அவள் திக்கித் திக்கி சொன்னதைக் கொண்டு நிலமையை அறிந்துக் கொண்டு “சரி, இது இத்தோட போகட்டும். அவன் நல்லவனா இருக்க போயி உன் பேரை எல்லாருக்கும் தெரிவிக்காம அமைதியா இதை விட்டுடலாம்னு சொல்லிருக்கான். நீயும் அவனை மறந்துட்டு உன் படிப்பை கவனி”
அவர்கள் எதிரே அவள் பரிசாகத் தந்த காதல் கிளிகள் அனாதையாக நின்றிருந்தன அவளது காதலைப் போல.
“முடியாது சுகுமாரண்ணா”
“கோவத்தைக் கிளப்பாதே”
“அவர் எனக்கு தனி நடனம் ஆட வாய்ப்பு தந்ததை வச்சு அவருக்கும் எனக்கும் ஒரு நல்ல புரிதல் இருக்கிறதா என் வகுப்புத் தோழிகள் கிட்ட சொல்லிட்டேன். கண்டிப்பா என்னை ஏளனம் செய்வாங்க” கேவினாள்.
“அதாவது அவன் சம்மதிக்கிறதுக்கு முன்னாடியே உங்களுக்கு காதல் இருக்கிறதா கதை கட்டிவிட்டிருக்க” என்றார் கடுப்போடு. என்னதான் பிரியம் என்றாலும் இவள் பொறுமையை அளவுக்கு மீறி சோதிக்கிறாளே.
“அவரைக் கல்யாணம் பண்ணிக்கிற எண்ணத்தில்தான் இந்த மாதிரி அழுத்தம் தந்தேன்”
“யானைத் தன் தலைல மண்ணை வாரிப் போட்டுக்கும்னு சொல்லுவாங்க. இன்னைக்குத்தான் நேரில் பார்க்குறேன். நீ வீட்டுக்கு வா…”
சுகுமாரனும் மந்தாகினியும் ஹோட்டலில் இருந்து வெளியேறுவதையும் மந்தாகினியின் கலங்கிய கண்களையும் தூரத்தில் இருந்து பார்த்த சுதர்சன் என்னவோ ஏதோ என்று தவித்து போனான்.