மந்தாகினி அடுத்து நேரே சென்றது சுதர்சனின் இருப்பிடத்திற்குத் தான். நாகேந்திரன் குடும்பத்தினர் தன் கன்னம் கன்றும் அளவுக்கு அளித்த பரிசினை சுதர்சனிடம் காட்டினாள்.
“உன்னை கை நீட்டி அடிச்சு வெளியே விரட்டிவிட்டு இருக்காங்க. ஒரு வார்த்தை சொல்லு நான் உனக்காக போய் பேசுறேன்” என்றான் சுதர்சன்
“எனக்கு பழிவாங்கும் எண்ணமில்லை. எனக்குத் தேவை நாகேந்திரன் மட்டும் தான். அவரை எப்படியாவது என்கூட சேர்த்து வச்சிருங்க சுதர்சன். நான் ஆயுள் முழுவதும் உங்களுக்கு நன்றி கடன் பட்டவளா இருப்பேன்.
உங்க கண் முன்னாடி நிக்கிற இந்த அபலையோட வாழ்க்கையைக் கூட உங்களால சீர்படுத்த முடியவில்லை என்றால் நீங்க ஐபிஎஸ் அதிகாரி ஆகி என்ன பயன்? நீங்களும் அதிகார வர்க்கத்துக்குக் கட்டுப்பட்ட சாதாரண மனிதரே” என்றாள் மந்தாகினி.
“கவலைப்படாதே நான் சொல்ற ஹோட்டல்ல போயி தங்கிரு. நாகேந்திரனிடம் எப்படியாவது பேசி அவனை உனது அறைக்கு வரவழைத்து விடலாம். அதன் பின் அவனால் உன்னை மறுக்கவே முடியாத அளவிற்கு செய்துவிடலாம்”
அடுத்தடுத்து காரியங்கள் மின்னல் வேகத்தில் அரங்கேறின.
நாகேந்திரனை, மந்தாகினி தற்கொலைக்கு முயன்றதாகவும், அது விஷயமாகப் பேச வேண்டும் என்று யாருக்கும் தெரியாமல் விடுதிக்கு வருமாறு அழைத்தான் சுதர்சன்.
அங்கு காப்பியினை அருந்தியதும் நாகேந்திரனுக்குத் தலை சுற்றி மயங்கி விழுந்தார். கண் விழித்த போது மேல் சட்டையில்லாமல் படுக்கையில் நாகேந்திரன். அருகில் யாரோ ஒரு பெண். அந்தப் பெண்ணைப் பார்த்தவருக்கு மேலும் அதிர்ச்சி. அவள் மந்தாகினி. மந்தாகினியும் கூட மயக்கத்தில் இருந்தாள்.
அது ஒரு மூன்றாம் தர லாட்ஜ். அவர் அதிர்ந்து நின்று கொண்டிருக்கும் போது சில நிமிடங்களில் கதவு தட்டப்பட்டது. வெளியே போலீசார் பத்திரிக்கை நண்பர்களை அழைத்துக் கொண்டு ரெய்டு வந்திருந்தனர். அந்த ரெய்டில் மாட்டியதாக மந்தாகினி நாகேந்திரனின் புகைப்படங்கள் காலை செய்தித்தாளில் முதல் பக்கத்தில் வெளிவந்தது.
சுதர்சன் தனது அதிகாரங்களை எல்லாம் பயன்படுத்தி, நாகேந்திரன் மந்தாகினி விடுதில் தனியே சந்தித்ததாகப் பத்திரிக்கையில் வரச் செய்தான். அடுத்தவர் அந்தரங்கங்களை வெளிச்சமிட்டு காண்பிக்கும் ஒரு மூன்றாம் தர வார பத்திரிக்கையில் ‘ராஜாவின் ஜல்சா’ என்ற பெயரில் மேல் சட்டையில்லாமல் நாகேந்திரனின் படமும் வெளி வந்தது.
முடிந்த அளவிற்கு அதன் பிரதிகளை வாங்கி கொளுத்தினர் பாகமங்கலம் குடும்பத்தினர். இருந்தாலும் நாகேந்திரன் மந்தாகினி என்ற பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாக, திருமணத்திற்கு முதல் நாள் கூட அவளுடன் விடுதியில் கழித்ததாக வந்த செய்தி காட்டுத்தீ போல் பரவியது.
கல்லூரியில் கூட அவர்கள் இருவரும் ஒரே நாளில் கல்லூரியை விட்டு நின்ற செய்தி தூசு தட்டி எடுக்கப்பட்டது.
சுதர்சன் தனது பழைய பகையை இப்படி சமயம் பார்த்து தீர்த்துக்கொண்டான். அவருக்கு விரித்த வலையில் இந்த அப்பாவி மந்தாகினியும் சிக்கிக் கொண்டாள் என்றே நாகேந்திரன் நம்பினார். மந்தாகினியும் அவ்வாறே சாதித்தாள். சுதர்சன் பயிற்சிக்காக சென்றது கூட அவளுக்கு நல்லதொரு வாய்ப்பாக அமைந்தது.
மந்தாகினி நினைத்தது போல திருமணம் நின்றுவிட்டது.
விதி வலியது என்று சொல்வார்கள். மந்தாகினியை ஏறெடுத்து பார்க்காமலேயே அவருக்கும் மந்தாகினிக்கும் வேறு வழியே இல்லாமல் திருமணம் நடந்தது.
ஆனால் நாகேந்திரனே அறியாதது ஒன்று இருந்தது திருமணத்திற்கு முன்பு பட்டாபிஷேகம் செய்து வைத்தால், நாகேந்திரன் மகன் முறை வந்து விடுவானே என்று எண்ணி, மங்கைக்கு 18 வயது பூர்த்தியானதும் வாளுக்கு மாலை சூட்டி அவரை நாகேந்திரனின் மனைவியாக்கி விட்டு, சட்டப்படி தனது மருமகனாக பதிவு செய்துவிட்டு, அதன் பின்னர் சம்பிரதாயத்திற்காகவே தாலி கட்டும் சடங்கு பட்டாபிஷேகம் முடிந்ததும் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
வாளுக்கு மாலை போடும் விழா என்றுதான் இள வயதினர் நினைத்தார்களே தவிர, அதனுள் இப்படி சட்டத்தால் நாகேந்திரனையும் மங்கையையும் பூபதி முடிச்சு போட்டு வைத்திருந்தது இவர்களுக்கே தெரியவில்லை.
தாய் தந்தை வாழ்த்துக்கள் இன்றி மந்தாகினியுடன் நாகேந்திரனின் வாழ்வு தொடங்கியது. அவன் பாகமங்கலத்திற்குள் காலடி எடுத்து வைக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் வடிவு.
“கடவுள் போட்ட முடிச்சு. அந்தப் பெண்ணை மருமகளா ஏத்துக்கோ வடிவு. இங்க வந்தா இப்ப என்ன குறைஞ்சு போச்சு” என்று தங்கையிடம் பதமாகச் சொன்னார் பூபதி.
“அண்ணா… உள்ளுணர்வு சம்பந்தப்பட்ட விஷயத்தில் ஆண்களை விட பெண்கள் சொல்வது சரியாக இருக்கும். அவ இந்த வீட்டுக்குள்ள அடி எடுத்து வச்சப்பவே ஒரு கெட்ட எண்ணத்தோட தான் இருந்திருக்கா… இந்த சின்ன குழந்தை மங்கை என்ன செஞ்சா? மங்கையை போய் பாருங்கண்ணா, கைல தழும்பு, முடில பின்னு குத்துறேன்னு தலை முழுசும் குத்தி புண்ணாக்கி இருக்கா… அவ கெட்ட எண்ணமே உருவானவ.
அவ இந்த வீட்டில் காலடி எடுத்து வச்சா இன்னும் என்ன செய்வாளோன்னு என் அடி வயிறு பதறுது. தயவுசெய்து அவளை இந்த பாகமங்கலத்தை மிதிக்க விட்டுறாதிங்க” கண்கள் கலங்க பதறிய தங்கையை சமாதானப்படுத்தி வாக்களித்தார்.
நாகேந்திரனை வேறு இடத்தில் தங்கிக் கொள்ளும்படி சொன்னார். அதன்படி குடும்பத்தை விட்டுவிட்டு கேரளத்தில் இருக்கும் அவர்களது கோடை கால அரண்மனையில் குடியேறினான் நாகேந்திரன்.
“வைராக்கியமா நீ நினைச்சபடியே ராணித் தேனீ ஆயிட்டா வாழ்த்துக்கள்” என்ற சுகுமாரனை கணக்கு வழக்கு பார்க்கச் சொல்லி தன்னருகே வைத்துக் கொண்டாள்.
சுதர்சனின் தொடர்பினை முதல் காரியமாகத் துண்டித்தாள். முறையற்று கை பற்றியதாலோ என்னவோ பூஜை மந்திரம் தந்திரம் இவற்றை மட்டும் கை விடவில்லை மந்தாகினி. அவைதான் நாகேந்திரனை தன்னுடன் இணைத்து வைத்ததாக முன்பை விட முழுமையாக நம்பினாள். மந்திரவாதிகள் சொன்ன சாங்கியம், சம்பிரதாயம் எல்லாவற்றையும் கண்மூடித்தனமாக கடை பிடித்தாள்.
அந்த கோடை அரண்மனை வாசம் தாண்டி அடுத்த கட்டத்திற்கு செல்ல ஆசைப்பட்டாள். பாகமங்கலத்தில் என்னை வேலைக்காரியுடன் உணவு சாப்பிடச் சொன்ன வடிவினை வேலைக்காரிகளுடன் தங்கச் செய்தால் எப்படி இருக்கும்? பழிக்குப் பழி.
கைகேயியிடம் தசரதன் கேட்டதைப் போல, ஒரு நாள் இரவு, தனது பிள்ளையை சுமந்து நிற்கும் மந்தாகினியிடம், அவள் ஆசைப்பட்டதைக் கேட்கச் சொன்னார் நாகேந்திரன்.
“ பாகமங்கலம் வீட்டுக்குப் போகணும். நீங்கதானே பாகமங்கலத்து ராஜா, நான் ராணி. எதுக்காக நம்ம அரண்மனையை விட்டுட்டு வெளிய தங்கணும்? நியாயப்படி பார்த்தா அவங்க எல்லாரையும் விரட்டிவிட்டுட்டு நம்மதான் அங்க தங்கணும்”
புரியாமல் பார்த்த நாகேந்திரன்
“மந்தாகினி உனக்கு உண்மை தெரியாதா, பெயரளவில் தான் நான் ராஜா. அந்த சொத்துக்களுக்கு எல்லாம் உண்மையான சொந்தக்காரி மங்கைதான். அவதான் ராணி. அவளைக் கல்யாணம் பண்ணிக்கிறவங்கதான் ராஜா. நான் கிடையாது”
மனைவிக்கோ பேரதிர்ச்சி..
“அப்ப இந்த அரண்மனை எல்லாம்”
“நம்ம வசிக்கிற இந்த ஒவ்வொரு அடிக்கும் சொந்தக்காரி மங்கைதான். அவளுக்கு கல்யாணமாகி, அவ வீட்டுக்காரன் வெளிய போன்னு சொன்னா நமக்கு போக இடம் வேணுமே? அதுக்காகத்தான் பிசினெஸ் எல்லாம் ஆரம்பிச்சு இருக்கேன்”
மந்தாகினிக்கு அதிர்ச்சி. ராஜா பட்டம் கட்டியவுடன் எல்லா சொத்துக்களும் நாகேந்திரனுக்கு உடமையாகிவிட்டன என்று நினைத்தாள்.