நானா? மனைவியை வதைப்பேனா? என்ன சொல்கிறார்கள்?
காலம் நாகேந்திரனுக்கு மந்தாகினியை அடையாளம் காட்டியதுடன் நிறுத்தவில்லை. அவரைக் கட்டம் கட்டி மந்தாகினிக்குத் திருமணம் செய்து வைத்த சுதர்ஸனுக்கும் உண்மை தெரிய வேண்டிய சமயம் வந்தது.
ஒரு வேலையாக நாக்பூருக்கு சென்றவன் எதிர்பாராத விதமாக ஜம்புலிங்கத்தை சந்தித்தான்.
சுதர்சனுக்கு பல நாளாகவே குழப்பங்கள் இருந்தன. அவன் திருமணம் செய்து வைத்த மந்தாகினிக்கு அவன் எழுதிய கடிதங்கள் ஒன்றுக்கு கூட பதில் இல்லை. ‘பாவம் மந்தாகினி, அவளால் என்ன செய்ய முடியும் அந்த முரடன் நாகேந்திரனின் பிடியில் அகப்பட்டுக் கொண்டிருக்கிறாள்’.
இப்படித் தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டிருந்த சுதர்சனுக்கு உண்மை ஜம்புலிங்கத்தின் மூலம் விளங்கியது.
நாக்பூரில் எதேர்ச்சியாக கடைவீதியில் ஜம்புலிங்கத்தை சந்தித்தான் சுதர்சன். ஜம்புவும் சென்னையில் இருக்கும் நண்பர்கள் உடன் தொடர்பில் இல்லாத காலம். தமிழ் பத்திரிகைகள் படிக்கும் வாய்ப்பும் இல்லை. இருந்தாலும் நாகேந்திரனுக்கும் மந்தாகினிக்கும் திருமணம் நடந்து விட்டது என்பதை மட்டும் கேள்விப்பட்டிருந்தான்.
அதற்கு சூத்திரதாரி சுதர்சன் தான் என்பதைக் கூட அவன் அறியவில்லை. அவன் °டேய் சுதர்சன் எப்படி இருக்க” என்று அரவணைத்துக் கொண்டதை வைத்து சுதர்சனும் ஜம்புவுக்கு இன்னும் உண்மை தெரியாது என்பதைக் கண்டு கொண்டான்.
நண்பர்கள் இருவரும் நாக்பூரைப் பற்றி பேசிய பின்பு ஜம்புலிங்கம் ஆரம்பித்தான் “நம்ம நாகேந்திரன் எப்படிடா மந்தாகினியப் போய் கல்யாணம் பண்ணிக்கிட்டான்? அதுவும் காதல் கல்யாணம் என்று வேற சொல்றாங்க எப்படி காதல் பண்ணி இருப்பான்?”
“எல்லாரும் காதல் பண்ற மாதிரி தான். என்ன உயிர் நண்பன் உனக்கே தெரியாம காதல் பண்ணி இருக்கான்” என்றான் சுதர்சன் வெறுப்புடன்
“மந்தாகினி காதல் பண்ணான்னு வேணும்னா சொல்லு. நாகேந்திரன் அவளை காதலிச்சானு நான் சத்தியமா ஒத்துக்கவே மாட்டேன்”
“அது எப்படி அவ்வளவு உறுதியாக சொல்ற?”
“ஏன்னா… மந்தாகினி நாகேந்திரனுக்கு எழுதின காதல் கடிதத்தை நான் தானே படிச்சேன். அவனுடைய மறுப்பை மந்தாகினி கிட்ட சொன்னதும் நான் தானே”
அன்றைய சம்பவத்தை ஜம்புலிங்கம் சொல்ல சொல்ல, சுதர்சன் அதிர்ச்சியுடன் கேட்டுக் கொண்டே அமர்ந்திருந்தான்.
“பணக்கார வீட்டுப் பையன்னு தெரியும். ஆனாலும் பயங்கர சிம்பிளா இருப்பான். நாகேந்திரனுக்கு மாமா பொண்ணு கூட திருமணம் நிச்சயமாயிருந்துச்சு. அந்தப் பொண்ணுக்கு 18 வயசு ஆனதும் திருமணம் அப்படின்னு என்கிட்ட சொல்லி இருக்கான். அவனோட அப்பா பெண்களோட சகவாசத்தில் சொத்துக்கள் நிறைய இழந்துட்டதா தகவல்.அதனால பெண்களிடம் ரொம்ப ரொம்ப கவனமா இருப்பான்.
பெண்களிடம் தனியாக இருக்கிற மாதிரி சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்க கூட மாட்டான்.இந்த மந்தாகினி அவனைத் தனியா சந்தித்து பேச எவ்வளவோ முயற்சி செஞ்சா.
கடைசியா ஒருநாள் நம்ம எல்லாரும் பைவ் ஸ்டார் ஹோட்டல்ல விருந்துக்கு போனோமே… அன்னைக்கு கூட யாருமே தன்னைக் கூப்பிட வரலை அப்படின்னு சொன்னாளே… நானும் நாகேந்திரனும்தான் அவள் வீடு வரை கூட்டிட்டுப் போயி பாதுகாப்பா இறக்கி விட்டோம்.
அப்பவும்கூட அவ கூட தனியா போகல. ஹோட்டல்ல வேலை செஞ்ச ஒரு பெரியவங்களகூட அழைச்சிட்டு தான் போகணும்னு சொல்லிட்டான். அந்த அளவுக்கு முன்னெச்சரிக்கையா இருப்பான்.
அன்னைக்கு இந்த மந்தாகினி என்ன செஞ்சா தெரியுமோ? அவ வீட்டு வாசல்ல ராத்திரிஅவ்வளவு நேரம் கழிச்சு இறக்கி விடுறோம், இறங்கிட்டு நாகேந்திரன் கூட தனியா பேசணுங்குறா. கைல ஒரு பரிசும் லெட்டரும் கொடுத்து இந்த நீ மட்டும் தான் படிக்கணும் அப்படின்னு சொல்லி இருக்கா.
கடைசில அதை நான்தான் படிச்சேன். நாகேந்திரனுக்கு சுத்தமா அந்த பொண்ணு மேல விருப்பமில்லை. அவனே சொன்னா பிரச்சனை பெருசாகும் என்று நினைத்து நான் தான் அந்த பொறுப்பை கையில எடுத்துட்டேன். மறுநாள் அவகிட்ட சொன்னப்ப என்ன ஆங்காரமா கத்துனா தெரியுமா”
“ஒருவேளை மனசு கஷ்டத்தில் கூடஅப்படி கத்திருக்கலாம் இல்லையா” என்றான் சுதர்சன்
“உன்ன மாதிரி ஆளுங்க எல்லாம் எப்படிடா இவளை நம்புறிங்க? கல்லூரியில ரெண்டு வருஷம் அவ நமக்கு ஜூனியர் ஆக இருந்திருக்கா, அவளோட நடவடிக்கைகளை பார்த்தாலே உன்னாலே அவளைப் பத்தி புரிஞ்சுக்க முடியலையா?
காலேஜ்ல எத்தனை பசங்க அவ பின்னாடி சுத்துனாங்க தெரியுமா? அதில் பணக்கார பசங்க கூட மட்டும் தான் அவ பேசுவா. பலர் கூட நானே அவளை ஹோட்டலில் பார்த்து இருக்கேன்”
“நண்பர்களா இருக்கலாம் இல்லையா ஒரு பொண்ணு மேல அனாவசியமா பழி போடக்கூடாது”
“பொண்ணு மேல பழி போடக்கூடாது ஆனா மந்தாகினி பத்தின உண்மைய சொல்லலாம். உனக்கு ஏன்டா அவ மேல இவ்வளவு கரிசனம்?
ஓஹோ… அந்த லிஸ்ட்ல நீயும் ஒருத்தன? நிராகரிச்சிருப்பாளே…. அவ இருக்குறதுலயே டாப்பான ஒருத்தனைத் தேடிக்கிட்டு இருந்தா. நம்ம செட்டில் நாகேந்திரன் தானே அது. ஆனால் அவன் ஜமிந்தார்னு நம்ம கிட்ட வெளி காட்டிக்கிட்டதே இல்லையே… எப்படி இவ கண்டு பிடிச்சு போனா?°
ஜம்புலிங்கத்தை சந்தித்து விட்டு திரும்பிய பின் சுதர்சனுக்கு நடந்த சம்பவங்கள் எல்லாம் யோசித்தபோது, தான் ஏமாற்றப்பட்டு இருக்கிறோமோ என்ற சந்தேகம் துளிர் விட ஆரம்பித்தது. அவரது போலீஸ் புத்தியை வைத்து நன்றாக அவள் வேலை செய்த இடத்தில் விசாரித்துப் பார்த்து, தான் ஏமாற்றப்பட்டதை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டார்.
அதனை மேலும் உறுதி செய்யும் விதமாக அடுத்த மாதமே மும்பையில் ஒரு அதிர்ச்சியை எதிர்கொள்ள நேரிட்டது சுதர்சனுக்கு.
மும்பை தமிழ் சங்கத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் மங்கையர்கரசி என்ற பெண்ணை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள்.
வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் மக்களுக்கு, குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு கல்வி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி, இலவசமாக மாலையில் கல்வி கற்றுத் தருகிறாள் இந்த பெண் என்று சொன்னதும் மனமாரப் பாராட்டினான்.
“எனக்கு நண்பர்கள் பலர் அந்த ஏரியால இருக்காங்கம்மா. உனக்கு என்ன உதவி என்றாலும் தயங்காம என்கிட்ட கேளு”
ஆனால் மறுநாளே அவன் பைக்கில் சென்ற போது கண் முன்னே இருவர் அவளைக் கத்தியால் குத்தி விட்டு செல்ல, ரத்த வெள்ளத்தில் மிதந்த மங்கையைக் காப்பாற்றி, அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்க்க ஏற்பாடு செய்துவிட்டு, குத்திய ரவுடிகளை மடக்கிப் பிடித்து விசாரித்தான்.
அவன் பார்த்த வரை மங்கை நூல் போல சின்ன சங்கிலி மட்டுமே அணிந்த, கல்வியும் நற்பண்புகளும் மட்டுமே தனது அழகாகவும் ஆபரணமாகவும் கொண்ட பெண். எனவே இந்தக் கொலை முயற்சிக்குக் காரணம் வேறு ஏதோ…
பாலியல் தொழில் செய்து வரும் சிலரின் பெண்களுக்கு கல்வி கற்பிக்கிறாள் என்று சொன்னார்களே. அது பிடிக்காத யாரோ கொலை முயற்சியில் இறங்கினார்களோ?
இவர்கள் இருவரும் அம்புகள் என்று அவனுக்கு தெரியும். எய்தவன் பற்றி தெரிய வேண்டாமா?
எய்தவர் யார் என்று தெரிந்த போது அவனது இதயமே சுக்கல் சுக்கலானது. மந்தாகினிக்கு உதவி செய்வதாக நினைத்து, நாகேந்திரனைப் புதை குழியில் தள்ளி விட்டதை உணர்ந்துகொண்டான்.
மருத்துவமனையிலோ மங்கை அவசர சிகிச்சைப் பிரிவில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்க, மகளின் நிலை கண்டு மாரடைப்பு ஏற்பட்டு பூபதியும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மங்கைக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று நாகேந்திரனிடம் கையெழுத்து வாங்கினர். அதில் திருமதி மங்கையற்கரசி வீரபாகு என்று பெயர் எழுதி இருந்ததைக் கண்டு திகைத்து நின்றார் நாகேந்திரன். அவரது கைகளை ஆதரவாகப் பற்றிக் கொண்ட மகேந்திரன் விளக்கத்தைத் தர ஆரம்பிக்க, அவருக்கு மட்டுமில்லாமல் நாகந்திரனின் மன்னிப்பை வேண்டி வந்த சுதர்சனின் மனதிலும் பூகம்பத்தை உண்டாக்கியது.
சிலந்தி வலையில் சிக்கிக் கொண்டதை பூச்சிகள் உணர ஆரம்பித்தன. ஆனால் தப்பிக்கவே முடியாத இந்த வலையில் தான் மட்டுமல்லாது மங்கையும் வசமாக சிக்கிக் கொண்டதைக் கண்டு மீளும் வழியறியாது திகைத்தார்.

