“ஆக மங்கை அவளுக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கை, சந்தோஷம், குழந்தை இது எல்லாம் தாரைவார்த்துக் கொடுத்துட்டு ஒரு உயிரற்ற ஜடமா வாழ்ந்து மடியணும்”
“அப்படி சொல்லலையே. அவளுக்கு இப்ப என்ன குறை. உங்களுக்கு மனைவின்னு ஒரு பதவி. மனசார என் கணவனை விட்டுத் தரும் நான். பெறாத பிள்ளையாய் அபிராம். அபிகிட்ட நீதான் மங்கையை கவனிச்சுக்கணும்னு சொல்லி வளர்க்கலாம். இன்னமும் பாகமங்கலத்து ராஜ குடும்பம்னு ஒரு கவுரவம். இப்படி அவளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கையை நினைச்சு சந்தோஷமா வாழலாம்”
“இதையே நானும் உன்கிட்ட சொல்லலாமே… உனக்கு ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கையை நினைச்சு நீ சந்தோஷமா வாழ்ந்திருக்கலாமே. ஏன் சுதர்சன் மூலமா எனக்கும் மங்கைக்கும் நடக்க இருந்த கல்யாணத்தைத் தடுத்து நிறுத்தின. சூழ்ச்சி செய்து என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்ட?”
திகைத்து போனாள் மந்தாகினி. இது பழங்கதை அல்லவா… இந்த உண்மை எப்படி நாகேந்திரனுக்குத் தெரிந்தது. இனி அவளது வாழ்க்கை…
“சுதர்சன்தான் மங்கையைக் காப்பாத்தி பிழைக்க வச்சது. உண்மை ஒரு நாள் வெளிய வந்தே தீரும் மந்தாகினி. ஒருவரை அழிச்சு இன்னொருத்தர் வாழ்ந்தா சரித்திரமே இல்லை. உன் முகத்தை பார்க்கவே வெறுப்பா இருக்கு. ஆனாலும் அபிராமிற்காக இந்த விஷத்தை விழுங்கி இருக்கேன். நான் கிளம்புறேன்”
“எங்க கிளம்புறிங்க? எனக்கும் என் மகனுக்கும் பதில் சொல்லுங்க”
“நீயே சொல்லிட்டேயே மங்கை என் மனைவின்னு. எனக்காகவே வாழ்ந்திட்டு இருக்க அந்தப் பெண்ணை உயிரோட நடமாட வைக்க இன்னும் ஏகப்பட்ட சிகிச்சை தர வேண்டியிருக்கு. என் மனைவி மங்கை உயிரோட இருக்கணும். நல்லபடியா குணமாகணும்னு வேண்டிக்கோ. அவளுக்கு உன்மூலமா இன்னொரு முறை ஏதாவது நடந்தது… அபிராம் அனாதை ஆயிடுவான்”
கடகடவென மாடிப்படியிலிருந்து இறங்கி இருளில் மறைந்து அவர் சென்ற திக்கை வெறித்து நோக்கியபடி நின்றாள் மந்தாகினி.
கண்விழித்துப் பார்த்த மங்கையின் முன் ஒரு பெண் சுடிதார் அணிந்து கொண்டு குட்டையாக முடியை வெட்டிக் கொண்டு நின்றாள். அவளது முகமும், கழுத்து எல்லாம் ஆழமாக வெட்டுக் காயம்.
“நீ… நீ… “
“மங்கை, நம்ம லீலாம்மா… “
“முகத்தில் என்ன காயம்?”
“ போன வாரம் பாகமங்கலம் போயிருந்தேன். அப்ப குடும்பத்தில் தகராறு. ஜெயன் வெட்டிட்டான். ”
ஜெயன் லீலாம்மாவின் கணவன்.
“அவ வீட்டில் இருந்தவங்க”
“அவங்களையும் வெட்டிட்டான். ஒருத்தர் கூட உயிரோட இல்லை. இவளை மட்டும்தான் என்னால காப்பாத்திக் கூட்டிட்டு வர முடிஞ்சது”
அவரது கண்களில் என்ன புரிந்து கொண்டாரோ…
“அவ வாழ்க்கை”
“இனி நம்ம கூடத்தான்மா…”
“நம்மன்னா… “
“நீ, நான், மாமா, நம்ம கூட இனி இவளும் ஒருத்தி”
“உங்க மனைவி…”
“மங்கையற்கரசி வீரபாகு நீதானே? அப்ப நீதானே என் மனைவி”
“வேண்டாம் அத்தான். நான் இப்படியே இருந்துடுறேன். படிப்பு, வேலை இது போதும்”
“உனக்கு உரிமையானதை நீ கேட்டு வாங்கணும் மங்கை”
“இருந்தாலும்…”
“மந்தாகினிக்குத்தான் பணம் மட்டும் போதும். ராஜாவா இல்லாத நான் தேவையே இல்லை. ஆனால் நீயும் அப்படியே சொல்றியே”
“நானா? எப்ப அப்படி சொன்னேன்?”
“உனக்கும் படிப்பு மட்டும் போதும் இல்லையா? நான் வேண்டாமில்ல”
“அப்படியெல்லாம் இல்லை அத்தான். உங்க வாழ்க்கையை மந்தாகினியோட நான் பங்கு போட விரும்பல”
“ஆனால் காலம் இப்படித்தான் நடக்கணும்னு விதிச்சிருக்கே மங்கை. சரி, எதையும் யோசிக்காத… இப்ப படுத்துத் தூங்கு”
மங்கையைப் பார்க்க வந்த சுதர்சன் நாகேந்திரனிடம் கேட்டான் “மந்தாகினியை கைது செய்ய போதுமான ஆதாரம் இல்லை. இனி என்ன செய்யப்போற? அவளை விவாகரத்து செஞ்சுட்டு மங்கை கூட வாழப்போறியா?”
“இல்லை… அவ விவாகரத்து தரமாட்டா… “
“அப்பறம்”
“செல்லாத திருமணத்தில் இறுதிவரை வாழுறதுதான் மந்தாகினிக்கு நான் தரும் தண்டனை. எனக்காக நீ ஒரு உதவி செய்யணும் சுதர்சன். சுகுமாரன் மூலமா வீட்டில் அபிராமைப் பாத்துக்க நம்பிக்கையான ஆளை ஏற்பாடு செய்யணும்”
“அவர் மந்தாகினியின் அண்ணன் இல்லையா?”
“ஆமாம் ஆனாலும் எனக்குத் தெரிஞ்சு கொஞ்சம் மனசாட்சி இருக்கவர். அவளோட கொலை முயற்சி இதெல்லாம் அவரோட பங்கில்லாம இவளே செஞ்சுருக்கான்னு நினைக்கிறன். அது தவிர மந்தாகினி அவரை ஓரளவு நம்புவா… “
“சரி, நானே நேரில் போயி பாத்துட்டு வரேன். மந்தாகினியை சந்திச்சு தனிப்பட்ட முறையில் எச்சரிச்சுட்டு வர்றேன்.
ஆனால் மங்கையோட நிலை என்ன?”
“தெய்வாதீனமா மங்கைக்கு ஒரு ஓவரிதான் கத்திக்குத்தால் பாதிப்படைஞ்சிருக்கு.மற்றொரு ஓவரி காப்பாத்தப்பட்டிருக்கு. கர்பப்பைல கூட சில காயங்கள் இருக்கு. இந்த நிலமைல மங்கையே மனசு மாறி சம்மதிச்சாலும் அவளைத் திருமணம் செய்துக்க தகுதியான நபர்கள் முன் வருவது கஷ்டம்.
அதனால… “ சற்று இடைவெளி விட்டார்.
ஒரு பெருமூச்சுடன் “காலம் எப்படியோ எனக்கும் மங்கைக்கும் முடிச்சுப் போட்டு இணைச்சிருக்கு. அதை நான் அப்படியே ஏத்துக்கிறதா முடிவு செஞ்சுட்டேன். இனி மங்கையும் என் மனைவிதான்.
மங்கையை குணப்படுத்த லண்டனுக்குக் கூட்டிட்டுப் போறேன். எந்த மங்கைக்கு குழந்தை பிறக்கக் கூடாதுன்னு இத்தனை கிரிமினல் வேலை செஞ்சாளோ அந்த மங்கைக்கு ஒரு வாரிசு வேணும். என்னோட பிரச்சனைகளை எல்லாம் தீர்க்க ஒரு வாரிசு வருவான்”
லண்டனில் மகப்பேறு மருத்துவர்களின் முயற்சியால் அதி நவீன டெக்னாலஜியின் உதவியுடன் மங்கைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
நாகேந்திரனின் வாக்கு பலித்தது. மருத்துவர்களின் விடா முயற்சியால் மங்கைக்கு அழகிய மகன் பிறந்தான். எத்தனையோ சூழ்ச்சிகள், எதிர்ப்புகள் மற்றும் சதிவேலைகளைத் தாண்டி மங்கைக்கும் தனக்கும் பிறந்த மகனைத் தூக்கிக் கொஞ்சினார் நாகேந்திரன்.
“நீ எந்த சக்தியாலும் அழிக்க முடியாதவன்,தீமையை நாசம் செய்ய வந்தவன். அதனால உன் பெயர் அவினாஷ்”