செம்பருத்தி – 39-3

ந்தாகினிக்கு மங்கைக்கு மகன் பிறந்ததே நம்பவே முடியவில்லை. நேரடியாக மங்கைக்கு எந்தவித கெடுதலும் செய்ய முடியாது. அப்படிச்  செய்தால் நாகேந்திரனின் நடவடிக்கை அபிராமுக்கு முற்றிலும் ஆபத்தாக முடியலாம்.எனவே மற்ற வழிகளை நாடினாள். ஒன்று, சட்டத்தின் துணை மற்றொன்று மந்திர மாயங்களின் துணை.

சட்டத்தின் துணையால் அவினாஷ் என்பவன் குடும்பத்திற்கு சம்பந்தமே இல்லாதவன். பாகமங்கலத்தின் ராஜா நாகேந்திரன். அதனால் அவருக்குப் பின்பு அவரது வாரிசாக அபிராம்தான் வரவேண்டும்.

 இந்த சொத்துக்கும் பதவிக்கும் உரியவன் அபிராம்தான்.மங்கைக்கு குழந்தை பெற முடியாது என்பதால் அவினாஷ் மங்கையின் மகனாக இருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை நாகேந்திரனுக்கு மகனாக இருந்தால் கூட முறையற்று பிறந்தவன்  என்பது போல் அவளது வாதம் நீண்டது.

அவினாஷ் தனக்கும் மங்கைக்கும் முறையாக பிறந்தவன். மங்கை பத்து மாதம் அவனை சுமந்து பெற்றெடுத்தாள் என்பதற்கான லீகல் டாக்குமெண்ட்சை நாகேந்திரனும் தாக்கல் செய்து அவளின் வாதத்தை முறியடித்தார்.

இதற்கே சில வருடங்கள் ஓடிவிட்டது.

மந்தாகினியின் செயலால் வெறுத்துப் போயிருந்தவர் சுகுமாரன்தான். ஊரே மந்தாகினியைத் திட்டிக் கொண்டிருக்க. இவரது மகள் காவ்யாவோ அத்தையை ரோல் மாடல் என்று சொல்கிறாள். இதனை எங்கு போய் சொல்வது.

இப்போது கூட மந்தாகினி சுகுமாரனை சட்டை செய்யாமல் காவியாவை மடியில் உட்கார வைத்து சாப்பாடு ஊட்டி கொண்டிருக்கிறாள்.

“சுகுமார் அண்ணா காவ்யாதான் என்னோட வாரிசு. எங்களுக்கு அப்புறம் பாகமங்கலத்துல ராஜாவும் ராணியும் அபிராமும் காவியாவும் தான். காவ்யா அத்தை பேரை காப்பாத்துவல்ல” என்றாள்

“ப்ராமிஸ் அத்தை. பெரியவள் ஆனதும் நான்தான் பாகமங்கலத்துக்கு ராணி”

“ராணியாகிறது லேசில்லை காவ்யா. அதுக்கு ஸ்பெஷல் தகுதிகள் நிறைய வேணும். அது எல்லாத்தையும் அத்தை உனக்குக்  கத்துத் தரேன்”

‘நாசமா போச்சு ஒரு மந்தாகினியே  சமாளிக்க முடியல. இதில் இவரது செல்லப் பெண் வேறு இன்னொரு மந்தாகினியாக வேண்டுமா’

“சாப்பிட்டது போதும் போய் விளையாடு நான் அத்தை கூட பேசணும்” என்றார் சுகுமாரன் கறார் குரலில்

“மாட்டேன் நான் அத்தை மடியில தான் உட்கார்ந்துப்பேன்”

“அவ மடியிலே உட்கார்ந்து கட்டும் நீங்க சொல்ல வந்தது சொல்லுங்க அண்ணா”

“அவள வச்சுட்டு சொல்ல முடியாதும்மா நிலைமையோட சீரியஸ்னஸ் உணர்ந்து அவளை அனுப்பி விடு. உன் கிட்ட நான் தனியா பேச வேண்டியது இருக்கு”

காவ்யா விளையாட ஓடியதும். 

“உனக்கு அறிவிருக்கா மந்தாகினி. கோர்ட்டில் நாகேந்திரன் தனக்கு முறையாகப் பிறந்தவன் அப்படின்னு மட்டும் நிரூபிச்சிருக்கார். இன்னும் அவரை சீண்டின, செல்லாத திருமணத்தில் பிறந்தவன் அபிராம்னு சொன்னால் என்ன செய்வ? இதெல்லாம் அபிராமுக்குத் தெரிஞ்சா என்னாகும்?” என்று நன்றாக தங்கையிடம் கத்தினார் சுகுமாரன். 

புத்திமதியை அப்படியே ஏற்றுக் கொண்டால் அது மந்தாகினியாக இருக்க முடியாதே.  சுகுமாரன் சொன்னதின் அர்த்தத்தை உணர்ந்து அதன் பின்னர் குறுக்கு வழியை நாடினாள். அவினாஷ்  என்று ஒருவன் உயிரோடு இருந்தால்தானே அபிராமுக்கு போட்டியாக வருவான். அவனையே  இல்லாமல் செய்து விட்டால்…

நம்பூதிரி சொல்லி இருக்கிறான். ஊடு என்று பொம்மைகளை வைத்து பூஜைகளை செய்தால் ஒருவன் கொஞ்சம் கொஞ்சமாக விபத்து போல் இறந்துவிடுவார்களாம் அல்லது தானே தற்கொலை செய்து கொள்வார்களாம். இந்த காரியத்திற்காக  இரவு பகலாக பூஜை செய்ய வேண்டியது இருக்கிறது.  அவளுக்கு வேண்டிய வாழ்க்கையைத் தந்த மந்திரவாதம் இதையும் நிறைவேற்றினால் அவினாஷ் என்ற ஒருவன் இல்லாமலேயே போய்விடுவான். 

அபிராமை விடுமுறைக்கு வீட்டிற்கு வரவேண்டாம் என்று சொல்லிவிட்டாள்.

வேலையாட்களை எல்லாம் அப்புறப்படுத்தினாள். பூஜைக்கான வேலைகளைத் தொடங்கினாள். 

 

error: Alert: Content selection is disabled!!