Skip to content
ஒரு வழியாக செம்பருத்திக்குப் பரீட்சை முடிந்தது. அவளுக்கும் ஓவியாவிற்கும் தேர்வு முடிந்ததும்தான் ஹனிமூன் கிளம்பினான் அபிராம். அதுவும் ராதிகா ஆசைப்பட்டதால் கொடைக்கானலில்தான் தேனிலவு.
“அபிராம், ராதிகாவை பத்திரமா பாத்துக்கோ… வயத்தில் பிள்ளை வேற, எங்க போனாலும் பத்திரமா போயிட்டு வா… சூசைட் பாயிண்ட் எல்லாம் ராதிகாவைக் கூட்டிட்டுப் போக வேண்டாம், மழை பெய்ஞ்சுட்டு இருக்கு, வழுக்கி கிழுக்கி விட்டுரப் போகுது” கவலையாக அவனுக்கு மட்டும் காதில் கேட்கும்படி மெதுவாகச் சொன்னார் லீலாம்மா.
“அதெல்லாம் பத்திரமா பாத்துக்குறேன் லீலாம்மா… இப்பத்தான் கல்யாணம் வேற முடிஞ்சிருக்கு. இவளுக்கு ஏதாவது ஒண்ணுன்னா நான் என்ன பண்ணுவேன்”
“இப்பயாவது புத்தி வந்ததே”
“ஆமா… பொண்ணு கிடைக்கிறதே கஷ்டமா இருக்கு. ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்க எங்க போயி பொண்ணு தேடுவேன். அந்தக் கல்யாணத்துக்கு வேற செலவு பண்ணனும். அதுக்காகவாவது ராதிகாவை பத்திரமா பாத்துக்கிறேன் ” பாவமாக சொல்ல
“டேய்… உனக்கு வாயிருக்கே… அபசகுனமா பேசாதே… அபிராம், இன்னும் நாலு மாசத்தில் வளைகாப்புன்னு சொன்னியே… இந்த சமயத்தில் இதெல்லாம் தேவையா?”
“வளைகாப்பா? அப்படி சொன்னதாலதானே உடனே கல்யாணத்தைப் பண்ணிங்க… “
“அதுவும் பொய்யா… “ லீலாம்மா அதிர்ச்சியுடன் திகைத்து நிற்க,
“அபிராம் லேட்டாச்சு. ஸெல்ப் ட்ரைவ் வேணாம். எங்க போகணும்னாலும் கோபன்தான் உன்னை கூட்டிட்டுப் போவான்” என்று தந்தை எச்சரித்ததை ஏற்றுக் கொண்டு
“எங்கயாவது போனாத்தானே… “ என்று ராதிகாவைப் பார்த்து கண்சிமிட்டியபடியே கிளம்பியவனை வழியனுப்பி வைத்தனர் குடும்பத்தினர் அனைவரும்.
அவர்கள் சென்று ஒரு சில நிமிடங்களில் அவினாஷின் கண்கள் செம்பருத்தியை சந்தித்து வில்லன் இன்னும் ஒரு மாசத்துக்கு எட்டிப்பாக்கமாட்டான் ‘மஞ்சள் பூவே கொஞ்சிடலாமா? காதல் தேசம் சென்றிடலாமா?’ என்று கேட்டது.
கண்களின் பாஷையைப் புரிந்து கொண்டு நழுவினாள் செம்பருத்தி.
செம்பருத்தியை அழைத்துக் கொண்டு சிலுசிலுவென்ற தூறலின் இடையில் பைக்கில் பறப்பது மிக மிக சுகமான அனுபவமாக இருந்தது அவிநாஷுக்கு. வழக்கம்போல் பக்கத்தில் இருந்த டீக்கடையில் ஒரு டீ வாங்கி, கப்பில் ஒருவரும் சாசரில் மற்றொருவருமாகப் பருகிய போதுஇதனை விட மகிழ்ச்சியான தருணம் அவர்கள் வாழ்க்கையில் இருக்குமா என்பது இருவருக்கும் தெரியவில்லை. சின்ன சின்ன சம்பவங்களின் இன்பங்கள் தானே வாழ்க்கையையே வண்ணமயமாக மாற்றுகின்றது.
ஆரஞ்சு வண்ணத்தில் மாறத்தொடங்கியிருந்த அந்த மாலை வேளையில் தாங்கள் வழக்கமாக அமரும் பாறையின் மேல் அமர்ந்து கொண்டு கடலின் அழகை ரசித்தபடி, தன் மனதில் உறுத்திக் கொண்டிருந்த சந்தேகத்தைக் கேட்டாள் செம்பருத்தி.
“என்னோட வாழ்க்கை ஒரு போராட்டம் நிறைந்த பயணம் அவினாஷ். நான் வாழ்க்கையில சந்திச்ச ஒவ்வொரு மனிதரும் ஜலப்பிரியாவிலிருந்து காளியம்மாக்கா வரை ஏதோ ஒரு வகையில என் லைஃப் நல்லா இருக்க, என்னை நானே செம்மைபடுத்திக்க எனக்கு உதவி இருக்காங்க.
இப்படி எல்லாம் இருக்கக் கூடாதுன்னு சிலரிடம் பாடம் கத்திருக்கேன். எந்தெந்த குணமெல்லாம் எனக்கு வேணும்னு பலரிடம் கத்திருக்கேன். எந்த வகையில் பார்த்தாலும் நான் முதல் முதலில் உங்களை பார்த்தப்ப நான் உங்களுக்கு பொருத்தம் இல்லாதவளாத்தான் நினைச்சேன். இப்பயும் அதுதான் நினைக்கிறேன். எதை வைத்து உங்களுக்கு என்ன பிடிச்சதுன்னு எனக்கு இன்னமும் தெரியல”
“நீ ஒவ்வொரு நாளும் மெருகேறுவதைநான்கவனிச்சுட்டு தான் இருக்கேன் செம்பருத்தி. உன்னை மாதிரியே நானும் ஒவ்வொரு நாளும் என்னை செதுக்கிட்டு இருக்கேன். உன் வயசுப் பொண்ணுங்க எல்லாருக்கும் மனசுல ஒவ்வொரு ஆணுக்கும் அழகான பெண்ணைத்தான் புடிக்கும் அப்படின்ற மாதிரி ஒரு நினைப்பில் இருக்கிங்க. அது சரி இல்லை.
அழகு ஒவ்வொருத்தரின் பார்வையிலும் வேறுபடும். என்னைப் பொறுத்தவரை என்னோட போராட்டம் நிறைஞ்ச வாழ்க்கையில் இன்னொரு போராளிதான் அழகு. ஒரு பெண்ணை மதிக்கிறதுதான் ஆண்மை.
ஆணோ பொண்ணோ சைட் அடிக்கிறது வேற. அதை வச்சு அவங்களை எடை போடக்கூடாது. ஒவ்வொரு ஆணும் யாரு கூட தன் வாழ்நாள் முழுவதும் கழிக்க முடியுமோ அவங்க கிட்டத்தான் வாழ்க்கையை ஒப்புவிக்க ஆசைப்படுவான்.
ஒரு ஆண் ஒரு பெண் கிட்ட முழுமையா சரணடைஞ்சிட்டா அவளைத் தவிர வேற யாரும் அவன் கண்ணுக்கு அழகா தெரியவே மாட்டாங்க. அந்த வகையில் பார்த்தா நீ தான் எனக்குப் பேரழகி”
இன்னமும் முழுமையாக அவள் முகம் தெளிவடையாததைக் கண்டு, அவளது வதனத்தைக் கையில் ஏந்தியவன் மெலிதாக நெற்றியில் முதன் முறையாக அவனது இதழ்களைப் பதித்தான்.
“செம்பருத்தி, சந்தேகம் காதலோடு அஸ்திவாரத்தையே அசைச்சுடும். அது நமக்கு வேணாமே… உனக்குப் புரியுற மாதிரி ஒன்னு சொல்லுறேன். அதுக்கப்பறமாவது உன் மனசு தெளிவடையுதான்னு பாக்குறேன்.
இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொரு மனிதப் பிறவிக்கும் தனது இணைக்கான தேடல் இருந்துட்டே தான் இருக்கும்.
நான் கேள்விப்பட்ட நாடோடிக் கதை ஒன்னு சொல்லட்டுமா… முன்னொரு காலத்தில் ஆதியில் படைக்கப்பட்ட மனிதனுக்கு ரெண்டு முகங்களும் நாலு கைகளும், நாலு கால்களும் இருந்துச்சாம். இதனால அளப்பரிய ஆற்றலோடு இருந்தானாம். ஆற்றல் தந்த மமதையால தன்னைப் படைச்ச கடவுளையே மீறி நடக்கத் துணிஞ்சானாம். அதனால கடவுள் அவனை இரண்டா கிழிச்சுப் போட்டாராம்.
ரெண்டு காலோட இருந்த மனிதனால் தன்னோட கடமைகளை எல்லாம் செய்ய முடிஞ்சாலும் எதோ முழுமை அடையாத உணர்வோடேயே இருந்தானாம். அதுக்குக் காரணம் தன்னை விட்டுப் பிரிஞ்ச அந்த பாகம்தான்னு உறுதியா நம்ப ஆரம்பிச்சான்.
அதுக்கப்பறம் பிறந்த மனிதன் ஒவ்வொருத்தரும் தன்னோட அடுத்த பாதியைத் தேடி அலைய ஆரம்பிச்சானாம். எப்ப அவனோட அடுத்த பாதியை பாக்குறானோ அந்த வினாடியே அவன் அன்பு , நட்பு, காமம் இப்படி எல்லா உணர்வுகளாலும் தொலைஞ்சு போறான். அவங்களை விட்டுப் பிரிய முடியாம தவிக்கிறான். ஓருயிரா மாறத் துடிக்கிறான். ஏன்னா அவங்க ரெண்டு பேரும் வேறு வேறு இல்ல.
மொத்தத்தில் அவங்க ரெண்டு பேரும் சேர்ந்தால்தான் அவனோட வாழ்க்கை முழுமை அடையுது. அந்த உணர்வுக்குப் பெயர் உண்டு அதுதான் காதல்.
உன்மேல அதே மாதிரி ஒரு காதல்தான் எனக்கு. நீதான் என்னோட அந்த இன்னொரு பாதின்னு என் மனசு சொல்லுது. உன்னாலதான் என் வாழ்க்கை முழுமை அடையும்னு நம்புறேன். இதை உன்னால புரிஞ்சுக்க முடியுதா?”
மனம் மலர்ந்து தலை அசைத்தாள் செம்பருத்தி. மெல்லிய காற்று வீசிய அந்த மாலை மங்கும் வேளையில் அவினாஷின் மேல் சாய்ந்து கொண்ட போது முன்பு எப்போதும் இல்லாத நிறைவு அவளது முகத்தில்.
ஆரைக்குளத்தில் ஊராரின் உருவக் கேலியிலிருந்து தப்பிக்க வேண்டி ஆரம்பித்த இந்த மலரின் பயணம், பாகமங்கலத்தின் பட்டத்து இளவரசனின் காதலைக் கைப்பற்றியதோடு முடிந்து விடாது. இந்த செம்பருத்தி தன்னுடன் கை கோர்த்த தென்றலுடன் சேர்ந்து இந்த உலகையே வெல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை.
சுபம்
error: Alert: Content selection is disabled!!