தமையனின் துள்ளலான சந்தோசசமோ, தாய் குளறலாகக் கொட்டிய பாசமோ, உதயனின் அழகான கேலியோ எதுவுமே அவளை ஆற்றவில்லை.
சீராளன் எவ்வளவோ சமாதானம் சொன்னபோதும், “அவா கோபத்தில எதையாவது சொல்லுவா, அதையெல்லாம் பெருசா எடுக்காத என்ன.” என்று ஆறுதலாய்ப் பேசியபோதும், “ம்ம்” என்று கேட்டுக்கொண்டாளே தவிர, அவர் கொட்டிய வார்த்தைகளை அவள் மனத்துக்குள்ளிருந்து அப்புறப்படுத்த முடியாமல் போயிற்று.
“வீட்டபோய் இருக்கப்போறியா?” சீராளன் அக்கறையோடு கேட்டான்.
“இல்லையில்லை. இங்கயே இருக்கிறன்.” விழுந்தடித்துக்கொண்டு சொன்னாள் அவள்.
பெரும் தொகை ப் பணத்தைக் கட்டிச் சேர்ந்த கோர்ஸ் இடையில் விட மனமில்லை என்பது மறுப்புக்கு ஒரு காரணமென்றால், யாழ்ப்பாணம் போனால் அவன் வீட்டில் தங்கவேண்டும் என்பது பெரும் காரணமாயிருந்தது. அந்தளவில் தேவகியின் கோபத்தை எண்ணி, அஞ்சினாள் ஷர்மினி.
“அபியை என்னோட வந்து இருக்கச் சொல்றீங்களாப்பா?” அருகில் வந்துவிட்டால் எத்தனை நாட்களுக்குக் கதைக்காமல் இருப்பாளாம் என்கிற மனக்கணக்குடன் மெல்ல வினவினாள்.
“நீ அங்க இருக்கிறதே எனக்கு இப்ப அவ்வளவா விருப்பமில்லை. இதில அவளும் வந்தா, உதயனால ரெண்டுபேரையும் பாக்கேலாது. அதோட, உதயன் உன்னைப்பாக்க வந்துபோவான். அங்க என்னெண்டு அவளையும் விடுறது. ரெண்டுபேரும் இளம் ஆக்கள் எல்லோ. பொறு எதுக்கும் அம்மாவோட கதைச்சிட்டுச் சொல்லுறன்.” என்றவன், சற்று நேரத்தில் மீண்டும் அழைத்து அதையேதான் சொன்னான்.
“அவள் இங்க வாறத விட உன்ன அங்க வரட்டாம். நாளைக்குக் கலியாணம் எண்டு வரேக்க, அபியைப் பற்றி ஒரு கதை வரக்கூடாது எண்டு அம்மா சொல்லுறா. எனக்கும் அதுதான் சரியெண்டு படுது.” என்றான் அவன்.
“ஏனப்பா உதயனுக்கு என்ன குறை?”
“அவனுக்குக் குறை எண்டு ஆர் சொன்னது? அபிக்குப் பிடிச்சாத்தான் எதுவும். அதைவிட அம்மா இதுக்கெல்லாம் சம்மதிக்க மாட்டா. எங்கட விசயமே இன்னும் ஒழுங்கா முடியேல்ல, இதில இன்னொரு புதுப் பிரச்சனை என்னத்துக்கு? நீ அங்க போ. பிறகு வந்து படி.” என்றான் அவன்.
அதற்குமட்டும் அவள் மறுத்தாள். “நீ உன்ன கவனிக்கமாட்ட ஷர்மி. பிள்ளையோட பயம்.” என்று, அவன் எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை.
கடைசியில், “ப்ளீஸ்ப்பா. நான் இங்கயே நிண்டு படிக்கிறன். இப்ப விட்டுட்டுப் போனா, பிள்ளை பிறந்தபிறகு திரும்ப ஆறுமாத கோர்ஸ் செய்து நான் வாறதுக்கிடையில பிள்ளைக்கு ஒரு வயதாகிடும். அவ்வளவு நாளைக்கு நீங்க இல்லாம என்னால இருக்கவே ஏலாது. எப்ப பாஸாகி, எப்ப அங்க வருவன் எண்டு இருக்கு. அங்க வந்தபிறகாவது உங்களோடையே இருக்கவேணும். எங்கட பிள்ளை பிறக்கேக்க நீங்கதான் முதன் முதலா கைல தூக்கவேணும். ” என்று, குரல் கரகரக்க அவள் சொன்னபோது, மனைவி தன்னைத் தேடுவதை உணர்ந்து மனம் கனிந்துவிட்டதில், அவனாலும் வற்புறுத்த முடியாமல் போயிற்று.
“சரி சரி. அங்கேயே இருந்து படி. ஆனா, கவனமா இருக்கோணும் என்ன? உன்ன கஷ்டப்படுத்தாத. டொக்டர் சொல்லுறபடி கேட்டு நட ஷர்மி. நீயும் பிள்ளையும் வலு கவனம்!” அது இது என்று ஆயிரம் புத்திமதிகளைச் சொல்லிவிட்டு வைத்தான்.
உதயனுக்கும் அழைத்து நன்றாகப் பார்த்துக்கொள்ளும்படி சொன்னான்.
“நீங்க ஒண்டுக்கும் கவலைப்படாதீங்கோ! கவனமா பாத்து அவளையும் பிள்ளையையும் பத்திரமா உங்களிட்ட அனுப்பி வைக்கிறது என்ர பொறுப்பு!” என்று, தோழனாய் துணை நின்றான் அவன்.
தினமும் சீராளன் அழைத்தான். சயந்தன் மாலையில் கட்டாயமாக அவளோடு கதைத்தான். உதயன் எங்கும் நடந்து திரியாமல், அலையவிடாமல் கவனித்துக்கொண்டான். தேவகி மட்டும் அழைக்கவேயில்லை. அபி, தன் பிடியிலேயே நின்றாள். மாமா மட்டும் அவ்வப்போது எடுத்துக் கதைத்தார்.
யார் எப்படித் தாங்கினாலும் ஆழமாகக் காயம் பட்டுவிட்ட உள்ளம், ஆறாமல் கிடந்ததை யாருமே உணரவில்லை. அவளும் வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. தேவகி மற்றும் அபியின் விலகல் அதை மறக்க விடவுமில்லை. அதுவே, அவளின் மன அழுத்தத்துக்கு வித்திட்டது.
தலைசுற்றல், சோர்வு, உணவு சாப்பிட முடியாமைகளோடு அவனிடம் போய்விட வேண்டும் என்று மூச்சைப் பிடித்துக்கொண்டு கற்றது வேறு, அவளின் உடலையும் பாதித்தது. உடல் பலகீனத்துக்கும் காரணமாயிற்று.
அவளின் குழந்தை வேறு முடிந்தவரையில் அவளைப்போட்டு வாந்தி, தலைசுற்றல் என்று தன் பங்குக்குப் படுத்தி எடுத்தது.
நான்கு மாதங்கள் கடந்திருக்க ஒருவழியாக அவளின் பரீட்சையில் சித்தி அடைந்திருந்தாள். அனைத்துப் பத்திரங்களையும் அவன் அங்கேயும் இவள் இங்கேயும் ஒப்படைக்க, அவளுக்கு ஸ்பொன்சரும் சரியாக வந்தது.
எல்லோருக்குமே சந்தோசம். இன்னும் சில நாட்களில் தன்னோடு இருப்பாள் என்கிற நினைவே சீராளனுக்குத் தித்திப்பாய் இனித்தது.
‘இவ்வளவு நாளும் எப்பிடித்தான் அவள் இல்லாம போச்சுதோ தெரியாது…’ அன்று காலை கண் விழித்ததுமே மனைவிக்காக ஏங்கிய மனம், சுகமாய் எண்ணிக்கொண்டது.
அவள் வரப்போகிறாள் என்கிற நினைவு தந்த சுகத்தோடு எழுந்து, ‘சேவ்’ செய்து கொண்டிருந்தான்.
‘விசா குத்தினதும் கெதியா டிக்கெட்டைப் போட சொல்லோணும். சாமான் வாங்குறன், உடுப்பு வாங்குறன் எண்டு ஒண்டும் தேவையில்லை. இங்க எல்லாம் வாங்கலாம்,..’ அவன் எண்ணங்கள் அதுபாட்டுக்கு ஓடிக்கொண்டிருக்க, கை தன் வேலையைப் பார்த்துக்கொண்டிருக்க, ஃபோன் அழைத்தது.
“ஹேய் பொண்டாட்டி!” அழைப்பது அவள் என்று தெரிந்து உற்சாகமாய் ஏற்றான்.
“நான் இப்ப ஃபிளைட் பயணம் செய்யக்கூடாதாம். அதுவும் குறைஞ்சது ரெண்டு மாதத்துக்கு. உடம்பு வீக்காம்.” அவன் இருந்த மனநிலைக்கு முற்றிலும் எதிரான ஒன்றை, பெரும் சோகத்தோடு அவள் சொன்னபோது, அவன் சினம் சட்டென்று உச்சிக்கு ஏறிற்று.
“உன்னைக் கவனிக்கிறதத் தவிர வேற என்ன வேலை உனக்கு? வீட்டு வேலைக்கு, சமைக்க எண்டு ஆள் வச்சும் உடம்பக் கெடுத்து வச்சிருக்கிறாய். வீட்டை போயிரு எண்டு சொல்ல சொல்லக் கேக்காம நிண்டுட்டு… உன்ர கதையைக் கேட்டு ஓம் எண்டு சொன்னன் பார் என்னைச் சொல்லவேணும்.” ஏமாற்றம் கோபமாய் உருமாறியதில் அவன் கத்திவிட, கண்ணீர் உகுக்க மட்டுமே முடிந்தது அவளால்.
மனக்கவலைதான் அவளைப் பாதிக்கிறது என்று எப்படிச் சொல்வாள்? வாய் மூடி நின்றாள்.
அவள் தனியாக இருந்து வாடுகிறாள், கஷ்டப்படுகிறாள் என்று நேரம் காலம் பார்க்காமல், ஓடித்திருந்து அலுவல்களைப் பார்த்தால் இப்படித் தன்னைத் தானே கெடுத்து வைத்திருக்கிறாளே என்கிற கோபம் அவனுக்கு.
அவளும் டொக்டர் இப்படிச் சொல்லுவார் என்று எதிர்பார்க்கவில்லை. பலகீனமாய் இருக்கிறாய், சத்தாகச் சாப்பிடு என்று மருந்து மாத்திரைகள் தந்தார் தான். அவளும் தவறாமல் அதையெல்லாம் உட்கொண்டாள் தான். அவளின் மனப்புண்ணுக்கு மருந்தாகக் கணவனின் அருகாமை மட்டுமே இருக்கையில், எது அவளை ஆற்றும்?
“நான் அம்மா வீட்டப்போய் இருக்கவா?” அங்கிருந்தாலாவது தன் மனம் ஆறும் என்று மெல்லக் கேட்டாள்.
“எப்பப் பாத்தாலும் என்ன அது அம்மா வீடு? மாமியால உன்னப் பாக்கேலுமா? அந்த மனுசியே ஏலாம கிடக்கிறா. நீ எங்கட வீட்டப்போய் இரு. அதுதான் உனக்கு இனி வீடு. அதுவும் இப்ப இல்ல. டொக்டர் பயணம் செய்யலாம் எண்டு சொன்னபிறகு.” என்றவன், அவளை நம்பாமல் நம்பரை வாங்கி, அவரோடு தானே கதைதான்.
‘இத முதலே செய்திருக்க வேணும்!’ தன்னையே நொந்துகொண்டான் சீராளன்.
‘பக்கத்தில வச்சுப் பாப்பம் எண்டா, உடம்பக் கெடுத்து வச்சிருக்கிறாள்!’ கோபம் தீர மறுத்தது.
நாட்கணக்கில் கூட தள்ளிப்போடாமல் உடனேயே வரச்சொல்ல வேண்டும் என்று அவன் நினைத்திருக்க, குறைந்தது இரண்டு மாதத்துக்குக் கூடாது என்றால் என்ன செய்வான்?

