என்றும் உன் நிழலாக 21 – 2

‘ஆங்… இத்தனை வருடங்களில், இதுமாதிரி எத்தனை பார்வைகளைப் பார்த்திருப்போம்….’ என்று கேலியாக நினைத்துக்கொண்டவளுக்கு, இப்போது தன் தாத்தாவும் பாட்டியும் தங்கள் உறவுக்காரரின் திருமணம் ஒன்றிற்காக பங்களூர் சென்றிருப்பது மிகவும் மன ஆறுதலைத் தந்தது.

‘இல்லையென்றால் இந்த அம்மாவே சரி சொன்னாலும் தாத்தா பாட்டி…ம்ம்..நோ சான்ஸ்…பிறகு எனக்கு வேலை கூடிவிடும்.‘ என்று நினைத்துக்கொண்டவள்,

“அம்மா நான் காலேஜுக்குப் போயிட்டு வருகின்றேன்.’’ தெளிவாக ஒரு பொய்யை அவிழ்த்துவிட்டவாறே ஸ்கூட்டி இருக்கும் இடம் நோக்கி நகர்ந்தாள்.

“இங்க பாரு ஜனனி…எங்கே போவதென்றாலும் சரி, முதலில் சாப்பிடு. ஏற்கனவே ரொம்ப நேரம் போயிடுச்சு, இனி என்ன ஒரேயடியா லேட்டாப் போ.’’ கடுப்புடனும் அதேநேரம் கடுமையாகவும் சொல்லி, தன் முறைப்பிலேயே சாப்பாட்டறைக்கு அவளை வர வைத்த ஜீவிதா, கடுகடுவென்று வந்தமர்ந்தவளுக்கு இரண்டு இட்லிகளை வைத்து அவளுக்கு மிகவும் பிடித்த தக்காளிச் சட்னியையும் வைத்தவர், அதை அரையும் குறையுமாக விழுங்கி உள்ளே அனுப்பும் வரை அறிவுரைகளைத் தாராளமாக அள்ளி வழங்கினார்.

அவர் சொன்னது அனைத்துமே அவள் காதுகளில் ஒன்றால் புகுந்து மறுபுறமாய் வெளியே வந்ததை உணராமல், ‘ஹப்பா…இப்பச் சரி நான் சொன்னதை வாயை மூடிக்கொண்டு கேட்டாளே! இனி அவளும் கொஞ்சம் யோசித்துப் பார்ப்பாள். அப்பப் புரியும்… நாம அவள் நல்லதுக்குத் தான் சொல்கின்றோம் என்று.‘’ மனதில் நிம்மதியாய் உணர்ந்தவாறே அவளை வெளியே செல்ல அனுமதித்தார்.

அவரும் தான் என்ன செய்வார். என்னதான் கணவர் கிருஷ்ணன் இந்த ஒரு விடயத்தில் தன் பக்கம் நின்றாலும், எந்த நேரத்தில் தன் அன்புத் தங்கையின் ஆசை இதுதான் என்று தங்கை வாயினால் கேட்டாலோ அல்லது இவரே தெரிந்து கொண்டாலோ, பிறகு அதை நிறைவேற்றி வைத்து விட்டே மறுவேலை பார்ப்பார்.

‘நானும் தான் இப்படி இவள் திடீர் என்று கண்ணனை விரும்புகிறேன் என்று சொல்லுவாளென்று நினைச்சேனா? எந்த நேரமும் அவனை வம்புக்கு இழுத்து.. முசுடு என்று பட்டம் கட்டி வைத்திருப்பவள்.. இன்று, கட்டினால் அவனைத் தான் கட்டுவேன் என்பாள் என்று ஜோசியமா பார்த்தேன்?’ என்று அலுத்துக் கொண்டார் ஜீவிதா.

தானாகத் தேடி வந்த நல்ல வரனை, பரம்பரை, அந்தஸ்தில் தமக்கு நிகரான வீட்டு மாப்பிளையை எப்படியும் மகளுக்கு முடித்துவிட வேண்டும் என்ற முடிவில் இவர்கள் உறுதியாக இருக்க, இது தெரிந்த நேரத்திலிருந்து வீட்டில் மகளுக்கும் மற்றவர்களுக்கும் ஒரே போராட்டம் தான்.

“நல்ல வேளை…கண்ணன் ஒரே பதிலா இவளைக் கட்ட முடியாது என்று சொல்லி என் வயற்றில் பால் வார்த்தான்…’’ என்று நினைத்துக்கொண்ட ஜீவிதா, மதியச்சமையலுக்கான மெனுவை சமையல் செய்பவரிடம் கூறிவிட்டு, கடைக்குச் சென்று வருவதாகச் சொல்லிப் புறப்பட்டுச் சென்றார் .

தாயிடம் கல்லூரிக்குப் போவதாகப் பொய் சொல்லிவிட்டு வீட்டை விட்டுப் புறப்பட்ட ஜனனி, நேராகச் சென்ற இடம் தன் அத்தை விமலா வீடு!

‘இன்றைக்கு இருக்குடா உனக்கு. என்னை விட்டுட்டு வேற யாரையாவது நீ கல்யாணம் பண்ண நான் விடுவேனா? அதையும் தான் பார்ப்போமே!’ மனதில் தன் மாமாவின் அன்பு வாரிசு கண்ணனுக்கு வசைகள் பாடியவாறே கொதிக்கும் உள்ளத்துடன் தன் ஸ்கூட்டியை முறுக்கி விட்டாள்.

விமலா வீட்டு கேற்றில் இவள் சென்று நிற்க, தலையை வெளியில் நீட்டி எட்டிப் பார்த்த காவலுக்கு நிற்கும் தாத்தா வாயெல்லாம் பல்லாக வரவேற்றார்.

“வாங்க ஜனனிம்மா…என்ன இந்த நேரத்தில் இந்தப் பக்கம்? காலேஜ் போகலையாம்மா?’’

எப்போதும் தன்னுடன் அன்பாகக் கதைத்து, தன் பேரப்பிள்ளைகளின் படிப்புக்கு உதவிகள் பல செய்யும் ஜனனியில் தனிப் பிரியம் உடையவர் அன்பாய் வரவேற்றார்.

ஸ்கூட்டியை வாயிலின் அருகிலேயே நிறுத்தியவள், அவருடன் சிறிது நேரம் கதைத்துவிட்டு வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.

கண்ணணின் கைவண்ணத்தில், தனிப்பொலிவுடன் பூத்துக்குலுங்கும் நந்தவனமாய் காட்சி தந்தது வீட்டுத்தோட்டம். அதன் எழில், இவள் மனத்திலிருந்த கோபத்தீயைச் சிறிதே சிறிது குளிர்விக்க, அழகியமுறுவலொன்று அவள் அதரங்களை ஆக்கிரமித்துக்கொண்டது.

இதே மனநிலையில் வீட்டின் போர்டிகோவில் கால் வைத்தவள், உள்ளிருந்து வந்து மோதிய பேச்சொலியில் சிலையாக நின்று விட்டாள்.

“அதுதான் நான் முடிவாச் சொல்லிட்டேனேம்மா. ஜனனியை போய் அதுவும் நான்..’’ என்று சொல்லி சிறிது நிறுத்திய கண்ணன் தன்னையே ஓர் எதிர்பார்ப்புடன் பார்த்திருக்கும் தாயைத் தீர்மானம் மாறாது நோக்கினான்.

“நீங்களே சொல்லுங்கம்மா, ஜனனி எப்பவாவது… மரியாதையாகப் பேசுவதைக் கண்டிருக்கிறீங்களா? அவங்கள விட வயதில் பெரியவன் என்றாவது நினைத்துப் பேசிறவாவா? தான் வைத்தது தான் சட்டம்…கடவுளே! ஜனனியை நான் கட்டினால்?!…ம்ம்ம்… அடுத்தநாள் உங்க மகன் சொல்லாமல் கொள்ளாமல் சந்நியாசம் தான்…பிறகு நீங்க..’’ சொல்லிக்கொண்டு சென்றவன் தாயின் பேச்சில் நிறுத்தினான்.

“ஐயோ ராஜா! இப்படிக் கேலிக்குக் கூட என்னை விட்டுப் போகிறேன் என்று சொல்லாதேடா.’’ கண் கலங்கிய தாயின் அருகில் சென்றமர்ந்தான் கண்ணன்.

“ஹைய்யோம்மா! இதென்ன சும்மா கேலிக்குச் சொன்னால் அதைப் பெரிதாக நினைக்கிறதா? ஆனாம்மா நான் முடிவாச் சொல்கிறேன்.. ஜனனி பற்றி நான் ஒருகணம் கூட இப்படி நினைத்ததில்லை. இதை அவங்க புரிந்துகொண்டால் எல்லோருக்கும் நல்லது.’’ தீர்மானமாகச் சொன்னான்.

விமலாவும், ‘அவர்கள் வீட்டில அண்ணா கூட தன் பெண்ணை உனக்குத் தர விரும்பவில்லை. எனக்கு அது விருப்பம் என்று சொன்னால் கட்டாயம் செய்வார் தான். அதுக்குத்தான் நீயே அவளை விரும்பவில்லை என்ற பிறகு என்ன செய்வது? என் பிள்ளைக்கு என்ன குறை, அவனுக்குப் பெண்கள் வரிசையில நிற்கின்றார்கள்.’ என்று நினைத்துக்கொண்டே மகனின் முகத்தைப் பரிவாகத் தடவினார்.

“ராஜா! இந்த முறை எக்காரணமும் நீ சொல்ல முடியாது. எங்க மாதர் சங்கத்துச் செயலாளர் பரிமளா தன் தங்கச்சி பொண்ணுக்கு உன்னை கேட்கிறார். எல்லாம் விசாரித்து எங்களுக்கும் பிடிச்சிருக்கு. நீயும் ஒருதரம் பார்த்து உனக்கும் சரியென்றால்..’’ சொல்லிக் கொண்டிருந்தவர், குறுக்கே கதைக்கத் தொடங்கிய கண்ணனை கையமர்த்தித் தடுத்தார் .

“இங்க பாரு கண்ணா…நீ திருமணம் செய்தாய் என்றால் ஜனனியும் இந்த உளறல்களை எல்லாம் விட்டுவிட்டு, அண்ணா பார்த்திருக்கும் வரனுக்குச் சரி என்று சொல்லுவாள். நீ நல்லா யோசி ராஜா.’’ எனக் கெஞ்சிக் கொஞ்சிக் கூறினார்.

ஜனனி தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் என்று சொன்னதில் இருந்து, இவர்கள் குடும்பங்களிடையே இலேசாகப் பிரச்சனை உருவாகியுள்ளதை நினைத்து, ‘இதை எப்படிச் சீர் செய்யலாம்?’ என்று குழம்பிக் கொண்டிருந்த கண்ணனுக்குத் தாய் சொல்வதும் சரி என்றே தோன்றியது.

‘நான் திருமணம் செய்து விட்டால், அதன் பிறகு அவா என்னைச் சுட்டிக் காட்ட முடியாதே!’ என நினைத்துக்கொண்டவனோ, இதுவரை திருமணம் என்ற ஒன்றைப் பற்றிச் சிறிதேனும் கனவு கூட கண்டதில்லை! அந்த மன நிலையிலும் அவன் இல்லை!

ஆனாலும், ‘தற்போதைய பிரச்சனைக்கு ஒரே தீர்வு நான் திருமணம் செய்வதே! அதோடு எனக்காக எத்தனையோ செய்துள்ள அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நான் கொடுக்கக் கூடிய சந்தோசமும் இதுதான்.’ என்று நினைத்துக்கொண்டவன்,

“சரிம்மா நான் யோசிச்சிச் சொல்லுறேன். எனக்கு டைம் ஆகிட்டுது, போயிட்டு வாறேன்மா.’’ என்றவாறே அருகில் இருந்த மடிக்கணனியையும் எடுத்துக் கொண்டு எழுந்தவன், வாயிலில், கோபாவேசத்தில் காலி அவதாரத்தில் நிற்கும் ஜனனியைக் கண்டு அப்படியே சிலையாக நின்றான்!

 

 

error: Alert: Content selection is disabled!!