அத்தியாயம் 11
அவள் வீட்டுக்கு வந்தநேரம், உதயனும் சயந்தனும் இல்லாமல் போனது வசதியாய்ப் போயிற்று!
“இன்னும் ஒருமாதம் தானேம்மா. அதுக்கு அங்கயும் இங்கயும் அலையாம இங்கயே நிக்கச்சொல்லி இவர்தான் சொன்னவர். அதுதான் உடனேயே வந்திட்டன்!” முகத்தை மலர்ச்சியாக வைத்தபடி தாயிடம் சொல்லிவிட்டு அறைக்குள் புகுந்தவளுக்கு அழுகையும் ஆத்திரமும் சேர்ந்து குமுறிக்கொண்டு வந்தது.
அவளைப் பேசியது கூடப் பெரிதில்லை. குழந்தையைப் பற்றிக் கதைக்கலாமா? அதுவும் யாரோடு யாரை? ச்சிக்! அவனும் சயந்தனும் அவளுக்கு வேறுவேறா என்ன?
தேவகி மீதிருந்த கோபத்தில் சீராளனுக்கு அவளாக அழைக்கவில்லை. ‘அங்க வீட்டுக்கு எடுத்து என்னைக் கேட்டால் சொல்லட்டும், ‘நான் இப்பிடிக் கேவலமாக் கதைசிட்டன், அதால மருமகள் அம்மா வீட்டை போய்ட்டாள்’ எண்டு. எனக்கு எடுப்பார் தானே. அப்ப கதைக்கிறன்’ பெரும் கோபத்தோடு காத்திருக்க அவன் எடுக்கவேயில்லை.
அங்கு வீட்டுக்கு அவன் வழமையாக அழைக்கும் நேரம் தாண்டியும் அழைப்பு வராததில் பரிதவித்துப் போனாள்.
எப்படியும் தினமும் மாலையில் அழைக்கும் கணவன் அழைக்காமல் இருந்திருக்கப் போவதில்லை. அவளை எங்கே என்று விசாரிக்காமல் விட்டிருக்கவும் போவதில்லை. இருந்தும் அவளை அவன் தேடவில்லை.
அவ்வளவுதானா? அவனுக்கு அவள் அவ்வளவேதானா?
‘நான் அந்தளவுக்கு முக்கியமில்லையா உங்களுக்கு? உங்கட அம்மா என்ன சொன்னாலும் என்னட்ட ஒரு வார்த்த கேக்கவேணும் எண்டு யோசிக்கவே இல்லையா?’ கணவனின் மதிப்பில் தான் முக்கியமிழந்து போனோம் என்பதைத் தாங்கவே முடியவில்லை.
சரியோ பிழையோ, குழந்தையோடு இருப்பவள் எங்கே போனாள் என்று கூட அவன் தேடவில்லையே! நேரம் போகப்போக, அவன் எடுக்காமலேயே இருக்க, என்னவோ மாமியார் சொன்னதை அவனும் ஏற்றுக்கொண்டது போன்றதொரு எண்ணம் உருவாகி அவளைக் குற்றுயிராக்கத் துவங்கியிருந்தது.
அவள்தான் வேண்டுமென்று ஒற்றைக்காலில் நின்று கட்டியபோது பெண்ணாய்ப் பெருமைகொள்ள வைத்த கணவன், அளவற்ற அன்பைத் தந்து அவள்தான் அவனுக்கு முதன்மையானவள் என்று சந்தோசமாய் உணரவைத்த கணவன், இன்று அவள் எங்கே என்று தேடவில்லையே.
சல்லிக்காசுக்கும் பெறுமதியில்லாமல் தூக்கி எறிந்துவிட்டானா?
வேலை முடிந்து வந்த சயந்தன், அவளையும் அருகில் இருந்த பெட்டியையும் கண்டுவிட்டுப் புருவங்களைச் சுருக்கினான்.
“என்ன ஷர்மி? ஏதாவது பிரச்சினையா?”
சிவந்திருந்த கண்களும், பொலிவிழந்திருந்த முகமும் அவள் எப்போதும் போலில்லை என்பதை ஒற்றைப் பார்வையிலேயே தமையனுக்குக் காட்டிக்கொடுத்திருந்தது.
“ஒண்டுமில்லை அண்ணா. அடுத்தமாதம் எப்பிடியும் சுவிஸுக்கு போய்டுவன்தானே. அதுதான் இனி அம்மாவோட இருக்கலாம் எண்டு வந்தனான்.” அவன் முகம் பார்ப்பதைத் தவிர்த்தபடி சொன்னாள்.
“அதென்ன திடீர் எண்டு? இண்டைக்கு முழுக்க இங்க இருக்கேக்க ஒண்டும் சொல்லேல்ல. இப்ப பெட்டியோட வந்து சொன்னா என்ன கதை இது? பொய் சொல்லாம சொல்லு, அங்க என்ன நடந்தது?” அவன் அதட்டியும் ஒன்றுமே இல்லை என்றுவிட்டாள் அவள்.
நம்பிக்கையில்லாமல் சயந்தன் சீராளனுக்கு அழைத்துக் கேட்டான்.
“அவளுக்கு விருப்பமானமாதிரி இருக்கட்டும் சயந்தன். நீங்க எதையும் கட்டாயப்படுத்தாதீங்க.” என்றான் அவன்.
கணவனோடு தமையன் கதைக்கிறான் என்று தெரிந்ததுமே பொங்கிய அழுகையை அடக்கிக்கொண்டு, குட்டி போட்ட பூனையாக அங்கேயே சுற்றிக்கொண்டிருந்தாள் ஷர்மினி.
‘என்னட்ட குடுக்கச் சொல்லுவார்.’ அசைக்க முடியாத நம்பிக்கையோடு நின்றவளை ஏமாற்றிவிட்டு, அழைப்பைத் துண்டித்திருந்தான் அவன்.
அதிர்ந்து தமையனையே பார்த்தபடி நின்றுவிட்டாள் அவள். தான் இங்கே வந்துவிட்டேன் என்று தெரிந்தும் தன்னோடு அவன் கதைக்க முனையவில்லை என்கிற நிஜத்தை உள்வாங்கிக்கொள்ளவே சற்றுநேரம் பிடித்தது அவளுக்கு.
உதயனுக்கு மட்டும் நடந்ததைச் சொன்னாள். கேட்டவனுக்கு அவள் மீதுதான் மிகுந்த கோபம் உண்டாயிற்று.
“நீ என்ன லூசா? இருக்கப்போறது இன்னும் ஒரு மாதம். பேசாம இருந்திட்டு நல்லமாதிரிப் போய்ச் சேருவம் எண்டில்லாம கொழுவிக்கொண்டு வந்து நிக்கிறாய்!” அவன் கடிந்துகொண்டபோதும் அவள் அசையவில்லை.
அதற்கு மாறாகக் கணவனை எண்ணி அழுகைதான் பொங்கிக்கொண்டு வந்தது.
‘அப்ப உங்கட அம்மா கதைச்சது எல்லாம் சரி எண்டுதான் நீங்களும் சொல்றீங்களா?’ மனம் அவனிடம் சண்டையிட்டுக் கொண்டிருந்தது.
“நீயும் நானும் எப்படி எண்டு எங்களுக்குத் தெரியும். உன்ர மனுசனுக்கும் நல்லாத் தெரியும். ஏன் உன்ர மாமிக்குக் கூடத் தெரிஞ்சிருக்கும். நான் அங்க வாறது பிடிக்காமத்தான் அவா இப்பிடிக் கதைச்சிருப்பா. முந்தியே(முன்னரே) என்னோட அபி கதைக்கிறது அவவுக்கு விருப்பமில்லை. எதச் சொன்னா என்னை நிப்பாட்டலாம் எண்டு யோசிச்சு திட்டம்போட்டு அவா கதைக்க, நீ மண்டைக்க ஒண்டும் இல்லாம வெளிக்கிட்டு வந்திருக்கிறாய். கொஞ்சமாவது பொறுமை இருக்கா உனக்கு? வெளிக்கிட முதல் எனக்காவது ஃபோன் போட்டிருக்கலாம் எல்லோ!” என்று, தேவகி அம்மாவின் மனதைப் படித்தவனாய் அவளை ஒரு வாங்கு வாங்கிவிட்டான் அவன்.
உண்மைதானோ என்று மனம் அதிர்ந்தது. எதற்காக என்றாலும் அவரின் பேச்சை நியாயப்படுத்த முடியாதே!
அதைவிட, விளக்கமே கேட்காமல் தண்டனை தந்துவிட்ட கணவனின் செயலில் நெஞ்சம் புண்ணாகிப்போனது.
அடுத்தடுத்த நாட்களில் வைத்தியரிடம் மட்டும் அவளைப்பற்றிக் கேட்டுக்கொள்கிறான் என்று தெரிந்தபோது, பெரும் பாரம் நெஞ்சில் வந்து அமர்ந்துகொண்டது.
கண்ணீரோடு காத்திருந்தாள். ‘நான் ஒரு பிழையும் செய்யேல்ல. அவரா எடுக்கட்டும். மாமி என்ன சொன்னாலும், என்னிலையே பிழை எண்டாலும் என்ன நடந்தது எண்டு என்னட்ட ஒரு வார்த்தை விசாரிக்காம எனக்குத் தண்டனை தாற அவர்தான் இறங்கி வரோணும்.’ தன்னைத் தேடி அழைக்காதவன் மீது கோபமும் கவலையும் உருவாகிற்று!
அந்த மாதம் கைச் செலவுக்கோ மருந்து மாத்திரைகளுக்கோ காசும் அனுப்பவில்லை. அவள் யாழ்ப்பாணம் வந்ததிலிருந்து தேவகியின் பெயரில்தான் பணம் வந்துகொண்டிருந்தது. அவரிடம் வாய்விட்டுக் கேட்டதில்லை. அவரும் நீயாகக் கேள் என்பதுபோல் இருந்துகொள்வார்.
கொழும்பில் நின்ற நாட்களில் அவன் தாராளமாகவே அனுப்பியதில், மிச்சமாக இருந்ததை வைத்துத்தான் செலவுகளைப் பார்த்துக்கொண்டாள். இதையெல்லாம் ஒருவிசயமாக அவள் சீராளனிடம் கொண்டும் போகவில்லை.
இப்போதோ கணவனிடமும் கேட்கத் தன்மானம் தடுத்தது. வெளிநாட்டில் கணவனை வைத்துக்கொண்டு தமையனிடம் எப்படிக் கேட்பாள்? அவளின் கல்யாணக் கடனே அவனை விழுங்கிக்கொண்டிருந்தது. இதில், அவளது சம்பளமும் இப்போது இல்லை. அம்மாவுக்கு மாதம் மாதமல்ல வாராவாரம் வைத்திய செலவுகள் வந்துகொண்டிருந்தன.
‘எல்லாத்தையும் நான் பாக்கிறன். உன்ர பொறுப்பும் இனி என்ர பொறுப்பு’ என்றவன் எல்லாவற்றையும் மறந்து போனான். நினைவுபடுத்த சுயகௌரவம் தடைவிதித்தது. வேலைக்காவது விட்டானா? இப்போதிருக்கும் மனநிலைக்கும் உடல் நிலைக்கும் அவளாலும் அது முடியாது.
கையில் இருந்த காப்பை அடவு வைத்துச் சமாளித்தாள். மனதில் ஒரே பாரம்! வாழ்க்கை கசந்து வழிந்தது.
இப்போதெல்லாம் வயது முப்பதைத் தொட்டும் கல்யாணம் ஆகாமல் அம்மாவைப் பார்த்துக்கொண்டு இருக்கும் தமையனைப் பற்றியும் யோசிக்கத் துவங்கியிருந்தாள்.
அவள் போனபிறகு தனியாக எத்தனை நாட்களுக்குச் சமாளிப்பான்? சுவிஸுக்கு போனபிறகு கணவனிடம் சொல்லி அண்ணாவுக்கும் வசதியான வீட்டுப் பெண்ணாய்ப் பார்க்கவேண்டும் என்று நினைத்திருந்தாள். அவனும் எத்தனை நாட்களுக்குத்தான் கஷ்டப்படுவான்? பாவம்தானே. அவள் மட்டும் நல்ல வாழ்க்கை வாழ அவன் நாளாந்தம் சிரமத்தோடு வாழ வேண்டுமா?
ஆனால், போகிற போக்கைப் பார்த்தால் அவள் இங்கு இருக்கும் வரைக்கும் தான் எதுவும் செய்ய முடியும் போலிருந்தது. அதைவிட, வசதியான வாழ்க்கையைவிடச் சந்தோசமான வாழ்க்கைதான் சிறந்தது என்று பட்டறிவு உணர்த்தத் துவங்கியிருந்தது. ஏற்றத்தாழ்வு உள்ள இரண்டு குடும்பங்கள் இணைந்ததால் அவள் படும்பாடு போதாதா? இனிமேலும் கணவன் என்ன செய்வான், எப்படி நடந்துகொள்வான் என்று தெரியாமல், அவளாக ஒரு திட்டத்தை வைத்துக்கொண்டு காத்திருப்பதில் அர்த்தமில்லை.
இவ்வளவு கடனுக்கும், அம்மாவின் நோய்க்கும் மத்தியில் சயந்தன் தன்னைப்பற்றியும் யோசிப்பான் என்கிற நம்பிக்கை அவளுக்கு அறவேவேயில்லை. இப்படியே ஒற்றையாய்க் காலத்தைத் தள்ளக்கூடியவனும் கூட. அதற்கு அவள் விடக்கூடாது.
அவளுக்கும் அம்மாவுக்கும் சக்திக்கு மீறிச் செய்கிறவனும் சந்தோசமாக வாழவேண்டும்.
உதயனோடும் உதயன் வீட்டினரோடும் கதைத்து, மறுத்த சயந்தனைப் படாத பாடுபட்டுச் சம்மதிக்க வைத்து ஏழ்மையான வீட்டு நல்ல பெண்ணாகப் பார்த்துப் பேசியும் விட்டாள். மனதுக்கு நிறைவாயிருந்தது.
அம்மாவுக்கும் ஒரு துணை வந்தமாதிரியும் இருக்கும், அண்ணாவும் சந்தோசமாக வாழ்வான். எப்படியாவது அம்மாவுக்கான செலவை மட்டும் அங்கிருந்து அனுப்பவேண்டும். விடுவானா? விடாமல் என்ன செய்வானாம்? கோபக்காரன் என்றாலும் அவள் கணவன் பாசக்காரன்!
அவனது நேசத்தை முழுமையாக அனுபவித்த நாட்களின் நினைவில் கண்ணோரம் கசிந்தது. அவனே இன்று அவளைத் தேடாமல் விட்டுவிட்டானே என்று அழுதாள்.
‘எல்லாம் அங்க போய்ச் சேருற வரைக்கும்தான். என்னைப் பாத்த பிறகும் கோபத்தை அவரால பிடிச்சு வச்சிருக்க ஏலுமா, என்ன?’ அவளே அவளுக்குச் சொல்லிக்கொண்டாள்.

